மனிதர்களைத் தொலைத்த மரங்கள்!

Image result for tree

எங்கே அவர்? அழுக்கு வேஷ்டியை இறுக்கி கட்டிக்கொண்டு, கந்தல் துண்டை தலைப்பாகையாய்ச்சுற்றிக் கொண்டு, தள்ளாத வயதினிலும் குழி தோண்டி மரக்கன்றுகள் நட்டு நீர் தெளிக்கும் அந்த முதியவர், எங்கே அவர்?

ஆடுகள் மந்தையாய் வந்து கொழுந்திலைகள் பற்றி இழுக்கையில் ஆட்டு மந்தையை விரட்டியபடி முள் தட்டியை மரக்கன்றோடு அணைத்துக் கட்டும் அந்த மூதாட்டி எங்கே?

இன்று வெயில், வெயில் என்று வெக்கை தாளாமல் வெப்பத்தில் புழுங்கும் பொழுது உணர்கிறோம், தொலைந்து போயிருப்பது மரங்களா இல்லை மரங்களை மகன்களாய் நேசித்த மனிதர்களா, யார் யாரைத் தொலைத்திருக்கிறார்கள் என்று.

தென்னம்பிள்ளை என்று தம் மக்களோடு சேர்த்து மரங்களையும் பிள்ளைகளாய் எண்ணிய மனிதர்கள் எங்கே? கருவேலங்காட்டில் கூட மரங்களை வெட்டாமல் சுள்ளிகளை மட்டுமே பொறுக்கி வீடு திரும்பிய மனிதர்கள் எங்கே?

மரத்தடியில் கருங்கல்லுக்கு சந்தனக் குங்கும பொட்டிட்டு கடவுளோடு மரங்களையும் வழிபட்டு காப்பாற்றி வந்த மனிதர்கள் எங்கே?

எங்கே தொலைத்தோம் அந்த மனிதர்களை, முதலாளித்துவத்திலா இல்லை உலகமயமாக்கலிலா இல்லை மண் தெரிந்தால் மானக்கேடு என்று தாரும் சிமெண்ட்டும் ஊற்றி மூடும் பகட்டிலா? இல்லை பகுத்தறிவுப் பட்டிமன்றத்திலா?

இலவச புத்தகங்களோடு ஒரு மரக்கன்றையும் பள்ளிகளில் வழங்கினால் என்ன? சைன் θ காஸ் θ வோடு மரக்கன்று நட்டு மரம் வளர்த்ததுக்கும் மதிப்பெண் இட்டு குழந்தைகளை ஊக்குவித்தால் என்ன?

நம் வீதியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்காகவும் ஒரு மரக்கன்று நட்டு அந்த உயிரை பூமிக்கு வரவேற்றால் என்ன? பிறந்த நாள் விசேசங்களில் மரக்கன்றுகள் பரிசளித்தால் தான் என்ன?

நகரங்களில் நகரக்கூட இடமில்லை, மரங்கள் எங்கே நடுவது? சரிதான், உள்ளவைகளை வெட்ட விடாமல் கட்டிக் கொண்டால் என்ன?

கார்ப்பரேட் அமைப்புகளின் CSR எனப்படும் சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளின் மூலம் புறநகர் வீதிகளில் மரம் நட்டு நீர் ஊற்றினால் என்ன?

சில ஆண்டுகள் முன்பு அரசாங்கம் இலவசமாய் கொடுத்த மரக்கன்றுகளை வாங்கி நட்டோம். இன்று எங்கள் வீட்டின் பின்புறத்தில் பழுத்து விழுகின்றன பாதாம் காய்கள், பறிக்கத்தான் ஆள் இல்லை.

அரசும் மற்ற தன்னார்வ அமைப்புகளும் வழங்கும் இலவச மரக்கன்றுகளை வாங்கி நட்டால் என்ன? நடிகர்-நடிகையரின்  ரசிகர் குழுக்களும் நற்பணி மன்றங்களும், அரசியல் கட்சி சேவகர்களும், தொண்டர்களும் தங்கள் தலைவர்கள் பிறந்தநாளில் கடந்த ஆண்டு நட்ட மரங்களை தேடி நீர் ஊற்றினால் என்ன?

தினமும் ஒரு முன்னூறு பேருக்காவது நிழல் தருகிறது என் தாத்தன் நட்ட இரட்டை வேப்ப மரங்களும் என் தந்தை நட்ட அந்த இரண்டு கொன்றை மரங்களும்.

இன்று வண்டியை பார்க் செய்யக்கூட நிழல் இல்லாமல் மரத்தடி  தேடி தொலைதூரம் பார்க்கும் போதும், நீர் தேடி பூமியை பல அடிகள் தோண்டிக் களைக்கும் போதும், வானத்தை அண்ணார்ந்து வெகுநாட்களாய் வெறித்துப் பார்க்கும் போதும் சற்றே சிந்தித்துப் பார்ப்போம் நாம் தொலைத்திருப்பது மரங்களையா அல்லது அவற்றை நேசித்த மனிதர்களையா என்று.

-திருப்பூர், இர. மதிவதனி

டி.ஐ.எஸ்.எஸ், மும்பை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here