மத்திய அரசு பணிகளில் தமிழர்களின் வேலைவாய்ப்பு உரிமைகள் பறிப்பு – கு. அன்பு

மு ஜே தமிழ் நகி மாலும், இந்தி மே போலோ (எனக்கு தமிழ் தெரியாது, இந்தியில் சொல்). இன்று தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், ரயில்வே பயணச்சீட்டு பெறும் இடங்கள், வாழ்நாள் காப்பீடு, பொதுக்காப்பீடு மற்றும் பொதுத்துறை வங்கி வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களிடம் தமிழர்கள் இவ்வார்த்தைகளை எதிர்கொள்கிறர்கள். கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசுத்துறைகளில் தமிழர்களுக்கான வேலைவாய்ப்பு உரிமையை தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது.

இது மத்திய அரசு அலுவலகங்கள் மட்டுமல்லாது தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசின் தொழில் துறைகளான (Factories & Enterprises) என்.எல்.சி (NLC), பி.எச்.இ.எல் (BHEL), துப்பாக்கி தொழிற்சாலை, டாங்கி தொழிற்சாலை, ராணுவ உடை தயாரிப்பகம் (Defence Factories) , இணைப்பு பெட்டி தொழிற்சாலை, கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகிய தொழிற்சாலைகளில் இந்த நிலை தான்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் Staff Selection Commission, மத்திய அரசு நிறுவனங்களில் ஏற்படும் பணியிடங்களை நிரப்பும் இந்திய அரசின் சட்டபூர்வ மத்திய அரசு நிறுவனமாகும் (Statutory Body). இவ்வாணையம் 145 ற்கும் மேற்பட்ட மத்திய அரசு நிறுவனங்களுக்கு பலகட்ட தேர்வுகளை நடத்தி ஊழியர்களை பணியமர்த்தும் பணிகளை மேற்கொள்கிறது. இந்திய அளவில் 7 மண்டலங்கள், 2 துணை மண்டலங்களுடன் இவ்வாணையம் செயல்பட்டு வருகிறது.

1996 வரை மண்டல அளவிலேயே இப்பணியமர்த்தும் நடவடிக்கைகளை இவ்வாணையம் மேற்கொண்டு வந்தது. இதனால் மத்திய அரசின் துறைகளில் எல்லா மாநில மக்களுக்கும் அந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்புகள் கிடைத்து வந்தது.

இவ்வாறு அகில இந்திய அளவில் தேர்வுகள் நடத்தப்படுவதால் மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் பணியமர்த்துவது முற்றிலுமாக பறிக்கப்பட்டுள்ளது. பீகார், உத்திரப்பிரதேசம் மாநிலங்களை சேர்ந்தவர்களே தமிழகத்தில் அதிகளவு பணியமர்த்தப்படுகின்றனர். இதை கண்ணுற உணவு இடைவெளியில் சென்னையிலுள்ள வருமானவரி உணவகத்திற்கு சென்று பார்த்தால் நீங்கள் இருப்பது தமிழ்நாடா அல்லது வடநாடா என்றளவிற்கு பீகார், உ.பி.யை சேர்ந்தவர்கள் நிரம்பி இருப்பார்கள்.

மோசடிகள் நிரம்பிய தேர்வுகளும் பணியிட நியமங்களும்:

பீகார், உ.பி., இராஜஸ்தானை சேர்ந்தவர்கள் தமிழர்களை விட அதிக மதிப்பெண்கள் நுழைவுத்தேர்வுகளில் பெறுகிறார்கள் என ஒரு பொய்யான காரணம் கூறப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. அம்மாநிலங்களில் நிலவும் அளவுகதிகமான வேலைவாய்ப்பின்மையை பயன்படுத்திக்கொண்டு லக்னோ, பாட்னா, கோட்டா (இராஜஸ்தான்) மற்றும் சிறு நகரங்களிலுள்ள பயிற்சி நிறுவனங்கள் லட்சக்கணக்கில் பணம் பெற்று கொண்டு ஆணையத்திலுள்ள அதிகாரிகளையும், ஊழியர்களையும் போட்டுக்கொண்டு குறுக்கு வழியில் மோசடி செய்ய தொடங்கின.

நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள்களை தேர்வுக்கு முன்னரே வெளியிட்டு விடுவது. தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு எழுதுபவர்களுக்கு கால அளவை கூடுதலாக அளிப்பது, பணி நியமனத்திற்கு பணம் அளித்தவர்களை ஒரு குறிப்பிட்ட மையங்களில் மட்டுமே தேர்வெழுதவைத்து அவர்களுக்கு வினாக்களின் விடையை அளித்து தேர்வில் தேர்ச்சி பெற வைப்பது என பல முறைகேடுகளை இப்பயிற்சி நிறுவனங்கள் அரங்கேற்றியுள்ளன. இதற்கு சாட்சியாக ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய பலர், ஒரே வீதியை சேர்ந்த பலர் பீகாரிலிருந்தும் உ.பி. யிலிருந்தும் முறைகேடாக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்திலுள்ள மத்திய அரசு துறைகளில் இன்றும் பணியாற்றி வருகின்றனர் என்பது நமக்கு தெரியவந்துள்ளது.

மோசடித்தனத்திற்கு ஒரு உதாரணமாக பல்வேறு பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட CGLE & 2013 (Combined Graduate Level & 2013) தேர்வுகளின் முடிவுகள் பீகாரிலுள்ள 7 மையங்களின் வினாத்தாள்கள் வெளியானதால் ஒரு வருடத்திற்கு முடிவுகள் அறிவிக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இத்தேர்வெழுதிய பலர் நீதிமன்றத்தை அணுகியதால் முறைகேடுகளை விசாரித்த நீதிமன்றம் இந்திய முழுவதும் நடத்தப்பட்ட இத்தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டு ஏப்ரல் 2014 ல் இத்தேர்வுகள் மீண்டும் நடத்தப்பட்டன என்பதே எவ்வளவு முறைகேடுகள் இதற்கு முன்னர் வெளிச்சத்துக்கு வராமல் போயிருக்கும் என்பதற்கு சாட்சி. இத்தேர்விலும் முறைகேடுகள் நடந்து 2015 ஆம் ஆண்டில் மூவர் காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மாநில மொழி அறியாததால் மக்களும் நிர்வாகங்களும் கடும் சிக்கலுக்கு உள்ளாகின்றன. இவ்வாறு இந்தி பேசும் வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் சிறுநகரங்களிலும், மாவட்ட தலைநகரங்களிலும் பணியமர்த்தப்பட்டு பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசின் சேவையை பெற வேண்டுமானால் இந்தி தெரிந்தால் மட்டுமே இவ்வலுவலகங்களுக்குள் செல்ல முடியும் என்ற நிலை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது கண்கூடு.

அதுமட்டுமல்லாமல் இவ்வாறு இந்தி பேசும் பணியாளர்களை வைத்து கொண்டு நிர்வாகத்தை நடத்துவதிலும் தமிழகத்திலுள்ள மத்திய அரசு நிறுவனங்கள் பல சிக்கல்களை சந்திக்கின்றன. வேற்று மாநிலத்தில் இருந்து பணியாற்ற வரும் ஊழியர்கள் மீண்டும் தமது மாநிலத்திற்கே செல்ல பணியிட மாற்ற விண்ணப்பம் செய்து, அப்பணியிடமாற்றத்திலேயே குறியாக இருப்பதால் இம்மாநிலத்திலுள்ள பணிகளில் சுணக்கம் காட்டுகின்றனர். பணியிடமாற்றம் கிடைத்த பின்பு காலியாகும் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதில்லை. இதனால் நிரந்தரமாக காலியிடங்கள் தமிழகத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு நிரப்பப்பட்டாலும் அதிலும் இந்தி பேசுபவர்களே மீண்டும் வருகிறார்கள். இவற்றை களையக்கோரி சம்பந்தப்பட்ட மத்திய அரசின் தலைமை நிர்வாகிகளும், சங்கங்களும் பலமுறை இந்திய அரசிற்கு கோரிக்கை வைத்தும் இவை செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here