மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். – ஹரிஷ் பாலா.

0
18

அக்டோபர் 21 ஆம் நாள் ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் தற்போது பாஜக ஆட்சி. மஹாராஷ்டிராவில் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலும் ,ஹரியானாவில் மனோகர் லால் கட்டார் தலைமையிலும் முதல் முறையாக பாஜக ஆட்சி அமைந்து அதன் ஆயுட்காலத்தை நிறைவு செய்து உள்ளன.

இந்த இரண்டு மாநிலங்களிலும் பலமுனைப்போட்டி ஏறக்குறைய உறுதி ஆகிவிட்டது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக- சிவசேனா கூட்டணி, காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆகிய பெரும் கூட்டணிகளுக்கு இடையில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் அவர்களின் வஞ்சித் பகுஜன் ஆகாதி கட்சியும் ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் ஒவைசி அவர்களின் எம் ஐ எம் கட்சியும் களத்தில் உள்ளன. இவை தவிர வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விதர்பா பகுதியின் கிராமப்புறங்களில் இடதுசாரி கட்சிகளுக்கும் கணிசமான வாக்குவங்கி உண்டு.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 41 லட்சம் வாக்குகளைப் பெற்று (14% வாக்குகள்) பிரகாஷ் அம்பேத்கர் கட்சி காங்கிரஸ் தேசியவாத சிங்கர்ஸ் கூட்டணியின் படுதோல்விக்கு காரணமாக அமைந்தது. எம் ஐ எம் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பிரகாஷ் அம்பேத்கர் கட்சி எந்தத் தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. ஆனால் எம் ஐ எம் கட்சி அவுரங்காபாத் தொகுதியை கைப்பற்றியது. பாஜக -சிவசேனா கூட்டணி 41 இடங்களிலும் காங்கிரஸ் -தேசியவாத காங் கூட்டணி 6 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன.

மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் பல இடங்களில் வெற்றி பெற்ற பாஜக சிவசேனா வேட்பாளர்களுக்கும் காங்கிரஸ் தேசியவாத காங் வேட்பாளர்களுக்கும் இடையே ஆன வாக்கு வித்தியாசம் ஒரு லட்சத்துக்கும் குறைவு. அங்கெல்லாம் பிரகாஷ் அம்பேத்கர் கட்சி ஒரு லட்சம் வாக்குகள் வாங்கி உள்ளது.

இதே போல தான் ஹரியானா நிலை. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பலமுனைப் போட்டி ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி, பாஜக, இந்திய தேசிய லோக்தளம் ஆகியவை தனித்தனியாகவும், இந்திய தேசிய லோக்தளக் கட்சித் தலைமை குடும்பத்தில் இருந்த சண்டையால் பிரிந்த ஜனநாயக ஜனதா கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி, பகுஜன் சமாஜ் கட்சியுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சைனி அவர்களின் லோக்தந்திர சுரக்‌ஷா கட்சி கூட்டணியும் என பலமுனைப் போட்டி. விளைவு மொத்தம் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளும் பாஜக வசம் போயின. எதிர்க்கட்சிகள் எல்லாம் பூஜ்யம். இங்கும் வாக்குப் பிளவில் குளிர் காய்ந்து கொண்டது பாஜக.

இப்போது நடக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் இதே நிலை தொடருமோ என்னும் அச்சம் மதவாத எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் என்னை போன்றவர்களிடம் எழுகிறது. மஹாராஷ்டிராவில் பிரகாஷ் அம்பேத்கர் கட்சியை கூட்டணிக்குள் இழுக்க காங்கிரஸ் கட்சி முயன்றது. ஆனால் தேசியவாத சிங்கர்ஸ் கட்சியை கூட்டணியில் இருந்து வெளி ஏற்றினால் நாங்கள் வருகிறோம் என்கிறார் பிரகாஷ் அம்பேத்கர். அதேபோல கேட்கும் தொகுதிகளை தருவதில் சிக்கல் என எம் ஐ எம் கட்சியும் அம்பேத்கர் கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது.

ஹரியானாவில் பகுஜன் சமாஜ்- எல்.எஸ்.பி கூட்டணி முறிவு, ஜே ஜே பி, ஆம் ஆத்மி கூட்டணி முறிவு என இடியாப்ப சிக்கல்கள் ஏராளம்.

மதச்சார்பற்ற இயக்கங்கள் பாஜகவிற்கு எதிராக ஒன்றிணைந்தால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும். மதச்சார்பின்மை மேல் நம்பிக்கை கொண்ட வாக்காளர்கள், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் என நம் தேசத்தின் பலதரப்பட்ட மக்கள் பாஜகவை எதிர்த்து வருகின்றனர். அது கண்கூடாக தெரிகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் கூட பாஜக 38% வாக்குகளை மட்டுமே பெற்று உள்ளது. எதிராக உள்ள 62% வாக்குகள் சிதறியதன் காரணமே பாஜக இன்று ஆட்சிக்கட்டிலில் அதிகாரம் செய்கிறது.

ஆகவே அனைத்துக் மதச்சார்பற்ற, ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை கொண்ட கட்சிகளும் ஒரே அணியில் நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் பிரகாஷ் அம்பேத்கருக்கும் உள்ள பிரச்சனைகளை எப்போது வேண்டுமானாலும் தீர்த்துக் கொள்ளலாம். இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா, ஜே ஜே பி கட்சி நடத்தி வரும் அவர் மகன் அஜய் சவுதாலா ஆகியோரின் குடும்பச் சண்டையை எப்போது வேண்டுமானாலும் தீர்த்துக் கொள்ளலாம்.

ஆனால் இனி நடக்கும் தேர்தல்கள் எல்லாம் ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை நோக்கி செல்லும் ஜனநாயக விரோத பாஜகவை வீழ்த்த வேண்டிய தேர்தல்கள் என்பதை கவனத்தில் கொண்டு எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழகத்தில் பாஜகவை ஓட ஓட விரட்டியது போல விரட்ட வேண்டும் என்பதே காலத்தின் தேவையும், ஜனநாயகவாதிகளின் எதிர்பார்ப்பும் கூட.

ஹரிஷ் பாலா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here