மக்களை திரட்ட முடியாத புரட்சியாளர்கள்- சந்திரசேகரன்

மக்களை சரியான வழியில் அணிதிரட்ட தெரியாத நாம்தான் உண்மையான குற்றவாளிகள்.

இன்று போராடும் மக்கள் கம்யூனிஸ்டுகள் தலைமையிலா போராடுகிறார்கள் ஹைட்ரோகார்பன் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் அனைத்தும் மக்கள் தன்னெழுச்சியாக நடத்துவது உண்மையில் மக்களைவிட நாம் பின்தங்கி இருக்கிறோம் பல இடங்களில் பார்வையாளராய் அல்லது வால் பிடிப்போராய்.

ஆனால் நாம் தலை கனத்து உடல் சிறுத்த தாவரத்தை போல் மார்க்சியவாதிகளான நமக்கு எல்லாமே தெரியும் என்று எப்போதும் குட்டிமுதலாளிய அகங்காரத்துடன் உளறிக்கொண்டு இருக்கிறோம்.

மக்களுக்கான எந்த தேவைகளையும் ஊகித்து அல்லது ஆய்வு செய்து அறியத்தெரியாத முட்டாள்களாய் இருக்கிறோம் ஆனால் நம் ஆணவமோ அளவில்லாமால் பெருகிக்கொண்டு இருக்கிறது.

மார்க்சியம், தெரியாத மார்க்சிய வாதிகள் அறிவியல் தெரியாத அறிஞர்கள் நாம்தான்.

எந்த ஆய்வும் செய்யாத கற்கவும் கற்பிக்கவும் தகுதி அற்ற முட்டாள்களாய் இருந்து கொண்டு கட்டாயம் கம்யூனிசம் வந்தே தீரும் அது காலத்தின் கட்டாயம் என மதவாதிகள் கலியுகம் வந்து விட்டது கலிபுருசன் வருவான் அநீதியை அழிப்பான் என்று உளறித்திரிவதை போலவும்.

ஊரை ஏய்த்து வாழும் கிறித்துவ மதக்கூட்டம் ரட்சகர் இதோ வருகிறார் அதோ வருகிறார் என இரண்டாயிரம் ஆண்டுகளாய் உலகை ஏய்ப்பது போல் நாமும் 100 ஆண்டுகளாய் நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு இருக்கிறோம்..

கம்யூனிசம் தானாகவே வந்து விடுமா? சாதாரண மக்களின் ஜனநாயக கோரிக்கைகள் கூட மக்கள் போராடாமல் வந்து விடுமா?
நாம் கற்க வேண்டும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

கம்யூனிசத்தை யார் கொண்டு வருவது ஒரு சரியான திட்டத்தின் அடிப்படையில் அமைப்புகளை உருவாக்குவதும் அந்த அமைப்புகளின் அடைப்படையில் மக்களை திரட்டுவதும் நிகழவேண்டாமா?

உடனே எங்களிடம் கட்சி திட்டம் இருக்கிறது மக்களை திரட்டிக்கொண்டு இருக்கிறோம் ஆனால் மக்கள் ஓட்டுக்கட்சிகளை நம்புகிறார்கள் என்று கூறி மக்கள் மீது பழி போடுவீர்கள்.

சரி போராட தயாரில்லாத மக்கள் எப்படி ஜல்லிக்கட்டுட்டுக்கும், ஸ்டெர்லைட் எதிர்ப்புக்கும், ஹைட்ரோகார்பனுக்கு எதிராக அணிதிரண்டார்கள் உயிர்களை இழந்தார்கள்.

இன்று குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராடுகிறார்கள் காரணம் மக்கள் நம்மை விட தெளிவாக இருப்பதும் நாம் தெளிவற்று இருப்பதால் அவர்கள் போராடுகிறார்கள் நாம் வேடிக்கை பார்க்கிறோம் அல்லது ஆதரித்து போஸ்டர் ஒட்டுகிறோம்.

மொத்தத்தில் மக்கள் நம்மை விட மிகவும் முன்னேறி இருக்கிறார்கள் நாம் மிகமிக பின் தங்கி இருக்கிறோம்
எனவே கற்கவேண்டும் மக்களின் வாழ்வை புரிந்து கொள்ள வேண்டும்

நாம் கற்றால்தான் மக்களை எப்படி திரட்டுவது என்பது புரியும் .

நாம் கற்பது என்றால் உடனே மார்க்ஸ் எப்போது பிறந்தார் அல்லது இறந்தார் என மனப்பாடம் செய்வது அல்ல.
அவர்களின் வழிகாட்டலை புரிந்து கொண்டு இந்த நாட்டு மக்களின் வாழ்க்கை தேவைகளை புரிந்து கொள்வது அவர்களின் அடிமனத்தின் ஆழங்களை புரிந்து கொள்வது.

அவர்களின் வாழ்வாதார பொருளாதார பண்பாட்டு தேவைகளை புரிந்து கொண்டு அவர்களின் கலங்கரை விளக்காக மாறுவது போன்று கடமை ஆற்றுவது ஆகும்.

குறைவாக படியுங்கள் நிறைய விவாதியுங்கள் எதற்கு எடுத்தாலும் மார்க்ஸ் என்ன சொன்னார் லெனின் என்ன சொன்னார் என்று கூறுவதை நிறுத்துங்கள் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதற்கு முக்கியத்துவம் அளியுங்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் மார்க்சாக லெனினாக மாற முடியும் அதற்கு உங்கள் சொந்த மூளையை பயன்படுத்துங்கள் பிரச்சினைகளை முன் வைத்து தீர்வை தேடுங்கள் அக்கறையுடன் விவாதியுங்கள்.

மற்ற தோழர்களின் கருத்துக்கள் உளறலாக இருந்தாலும் காது கொடுத்து கேளுங்கள் அப்போதுதான் அவருக்கு என்ன தெரியும் தெரியாது என நாம்புரிந்து கொள்ள முடியும்.

நாமே பெரும் உளறுவாயர்கள் என்பதை உணருங்கள் வாய்ப்பு கிடைத்தால் கிடைப்பவர் அனைவரிடமும் வாய்க்கு வந்ததை எல்லாம் நாம் உளறுவதை சற்று சிந்தித்து பாருங்கள்.

தேவை அற்ற பேச்சை குறையுங்கள் அளவோடு பேசுங்கள் கூட்டங்கள் நடக்கும் போது தோழர் ஸ்டாலினை மனதில் கொள்ளுங்கள் அவர் அதிகம் பேசாமல் ஒவ்வொருவரின் கருத்தையும் ஒரு ஓரசீட்டில் அமர்ந்து கொண்டு உள்வாங்கிக்கொள்வார்.

கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது நாம் தோழர் ஸ்டாலினை காப்பி அடித்து பின்பற்றி நடக்கலாம் தவறில்லை.

தோழர்களே நீங்கள் ஒவ்வொருவரும் மார்க்ஸ்தான் , லெனின் தான்.ஸ்டாலின் தான் மாவோதான்.ஆனால் எப்போது? எப்போது நீங்கள் உங்கள் சொந்த மூளையை பயன்படுத்துகிறீர்களோ அப்போது. மக்களுக்காக எதையும் இழக்க தயாராக இருக்கிறீர்களோ அப்போது.

கற்போம் கற்பிப்போம் அமைப்பாக்குவோம் உண்மையான மக்களின் வழிகாட்டும் தத்துவமாக மார்க்சியத்தை மாற்றுவோம் மக்கள் தாமே தம் ஜனநாயக வாழ்வை உருவாக்கிக்கொள்ள வழிகாட்டுவோம்

சந்திரசேகரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here