போர் வெறியும் ரஃபேலும்- லஜபதி ராய்

1998 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மென்மையான தலைவராக முன்னிறுத்தப்பட்ட வாஜ்பாய் கையாண்ட தேர்தல் தந்திரம் பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு. பாகிஸ்தானை அச்சுறுத்த நிகழ்த்தப்பட்ட அந்த அணுகுண்டு சோதனைகளின் பின் விளைவாக ஜப்பானும் அமெரிக்காவும் இந்தியா மீது பொருளாதார தடைகளை விதித்தன, மிகவும் சிரமப்பட்டே பொருளாதார பின்னடைவிலிருந்து இந்தியா மீண்டது.வாய்ச்சொல் வீரரும் வயதான கவிஞருமான வாஜ்பாய் தனது பிரச்சார உரைகளில் தவறாமல் குறிப்பிட்ட விஷயம் 1999 பிப்ரவரி மாதத்திற்குள் போக் (POK) எனப்படும் பாகிஸ்தான் வசமிருக்கும் கஷ்மீரை இந்தியா கைப்பற்றும் என்பதே. இன்று வாஜ்பாயை பாஜக வினரே மறந்து விட்டனர் .வருடங்கள் இருபதாகி விட்டன, ஐம்பத்தி ஆறு அங்குல மார்பழகன் ஆட்சியும் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் நிலையில் மறுபடியும் போர் ! போர் !! என ஊடகங்கள் ஆதரவுடன் போர் முழக்கங்கள் காதைக் கிழிக்கின்றன.

தமிழக பத்திரிகையொன்றில் தூள் ! தூள் என தலைப்பு செய்தி

உண்மையில் ஒவ்வொரு முறை போர் முழக்கங்கள் எழுப்பும் போதும் இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளுமே அமெரிக்காவின் உள்ளங்கையில் நின்று கொண்டுதான் சண்டையிடத் துடிக்கின்றன என்பதே உண்மை.

கடந்த 10 வருடங்கள் ஆயுத இறக்குமதி செய்த நாடுகளில் உலகில் முதல் நாடாக இந்தியா திகழ்கிறது , இத்தனைக்கும் 42 பொதுத் துறை நிறுவனங்களும் ஆயுத தயாரிப்பில் ஈடுபடுகின்றன.கிரிக்கெட் போட்டியோ திருவிழாவோ நடக்கும்போது அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரிப்பதைப் போல ஒவ்வொரு முறை தங்கள் அரசியல் இருப்பை வலிமைப்படுத்த ஐம்பத்தியாறு அங்குல மார்பழகன் கையை முறுக்கி, முட்டியை உயர்த்தி, நெஞ்சை முன் தள்ளி, குஜராத் படுகொலை இரத்தம் வெளியே தெரியாமல் மேக்கப் செய்து , கண்களை உருட்டி பலமுறை கண்ணாடிக்கு முன் நடித்து பார்த்து, மண்டபத்தில் யாரோ எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் எழுதிக்கொடுத்த வசனங்களை ஒப்புவிக்கும் போதெல்லாம் ரஷ்யாவும் , அமெரிக்காவும் , இஸ்ரேலும் மகிழ்ச்சி அடைகின்றன, இந்தியாவின் கடந்த பத்தாண்டில் நாம் ஆயுதம் வாங்க செலவு செய்த ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடியை மூன்று நாட்டு வணிகர்களும் 62%,15%,11% எனப் பங்கு போட்டுக்கொள்கின்றனர்.ஓய்வு பெற்று உயர் ராணுவ அதிகாரிகள் நடத்தும் ராணுவ தளவாடங்களை வாங்கும் ஆயுத தரகு நிறுவனங்களின் பங்கு இங்கு குறிப்பிடவில்லை.குழந்தைகளை பட்டினி போட்டு டாஸ்மாக் சரக்கடிக்கும் பொறுப்பற்ற தகப்பனை விளாசித்தள்ளும் நாம் போர்வெறி நாட்டுப்பற்றுக்கு முதல் பலி ஆகின்றோம்.

இந்தியா முழுமைக்கும் 100% கக்கூஸ்கள் கட்டப்பட்டதாக பீற்றிக்கொண்டாலும் ஐம்பது கோடி இந்தியர்களுக்கு ரோடும், தண்டவாளங்களும் , திறந்த வெளிகளுமே கக்கூஸ்களாக இருக்கின்றன

2003 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் இல்லை.! கேட்டால் அரசிடம் பணமில்லை.!!

தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதை நிறுத்த முடியவில்லை

சிறைச்சாலைகள் புது பொலிவுடன் கட்டப்படுகின்றன அரசுப் பள்ளிகள் இடிந்து விழுகின்றன

இந்தியாவிலேயே மிக உன்னதமான சுகாதார வசதி கொண்ட தமிழகத்தில் கூட சுத்தமான மருத்துவமனை நடத்த நாம் திணறிக் கொண்டிருக்கின்றோம், ஸ்கேன் வசதி செய்யக்கூட ஆனந்தராஜ்கள் அழகுமணிகள் மூலம் நீதிமன்றப் படியேற வேண்டியுள்ளது. பிமாரு எனப்படும் கல்வியிலும் சுகாதரத்திலும் பின்தங்கிய நோயுற்ற மாநிலங்களான பிகார்,மாட்டுக்கறி கொலைகள் புகழ் ராஜஸ்தான் ,மத்திய பிரதேசம் , ஆக்சிஜன் சிலிண்டர் சாவு புகழ் உத்தரப் பிரதேசம் ஆகியவற்றில் மக்களுக்கான அடிப்படை சுகாதார வசதி பற்றி நம்மால் கற்பனை கூட செய்ய முடியாது. அதற்கு தேவையும் இல்லை இராமர் கோவிலை வழிபட்டு, விண்ணுயர பட்டேல் சிலையை சுற்றி வந்தால் தேசபக்தி போதை இலவசம்.

கடந்த நான்கு வருடங்களில் தமிழகத்தில் மட்டும் இருபதாயிரம் பட்டியல் சாதி உயர்கல்வி மாணவர்களுக்கான உதவித்தொகை நடுவண்அரசால் இன்று வரை வழங்கப்படவில்லை. நீதிபதி மணிக்குமார் அமர்வு 2018 ஆம்ஆண்டு சென்னையிலும், நீதிபதி கிருபாகரன் மற்றும் எஸ்எஸ்சுந்தர் 2019 ஆம் ஆண்டு மதுரையிலும் உத்தரவிட்ட பிறகும் 1800 கோடி தர இயலாது கைவிரித்த நடுவண் அரசு ஐந்து வருட காலங்களில் கல்வி சுகாதார மேம்பாட்டிற்கு உருப்படியாக எதையும் செய்யவில்லை.மதுரையின் எய்ம்ஸ் கூட வாய்ப்பந்தல்தான்
பிறகெப்படி ஆதித்யநாத்கள் ஆட்சிக்கு வர முடியும்
ஹிட்லரின் சீடர்கள் போர் வெறி மூலம் ஆட்சிக்கு வர முடியும் எனத் தெரிந்து கொண்டதோடு சரி.

வேலைவாய்ப்பற்ற தொலைதூர கிராமங்களிலிருந்து இராணுவத்திலும், துணை ராணுவங்களிலும் பணியாற்றும் செலவளிக்க எளிதாக நாம் சில்லறை காசுகளாக கருதும் கடைநிலை காலாட்படையினருக்கு தேசபக்தி கொடியை போர்த்துவதன் மூலம் பாதிக்கப்பட்ட அவர்கள் குடும்பத்தை, வயதான அவர்கள் பெற்றோரை , தந்தையற்ற சிறு குழந்தைகளை, தனக்குள் அழும் இளம் மனைவியை நம்மால் சில நாட்களில் மறக்க முடியும்ஆனால் அது ஊடங்களுக்கு, குறிப்பாக விழிவழி ஊடகங்களுக்கு தங்கள் காட்சியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த இயலும்.

எது எப்படியோ !!!
ஸ்வீடன் நாட்டு எரிக்ஸன் நிறுவனத்திற்கு நீதிமன்றத்தில் வாக்களித்த 453 கோடி ரூபாய் பணத்தை தர வக்கற்று உச்ச நீதிமன்ற அவமதிப்பை செய்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனில் அம்பானிக்கு தட்டில் வைத்து பகிரங்கமாக வழங்கப்பட்ட 40000 கோடி ரஃபேல் விமான ஒப்பந்த ஊழல் இன்று போர்வெறி சூரியனை கண்ட பனியாக நீதிமன்றத்தில் மறைந்து போகும்

லஜபதி ராய்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here