போராட்டம் ஒயப்போவது இல்லை- ஈவா மொரலஸ்.

இந்த கட்டுரையை தேசத்தின் குரலுக்காக மொழிபெயர்த்தவர் ஒமன் நாட்டில் ஆசிரியராக பணியாற்றும் ஆபிரகாம் தெய்வநாதன்.


பொலிவியாவின் நாடுகடத்தப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர், ஈவோ மோரலசு “போராட்டம் இங்கே நின்றுவிடபோவதில்லை” என்று நவம்பர் 10ஆம் நாளன்று நடந்த சதியில் தான் நாடு கடத்தப்பட்டதையும் மற்றும் தென் அமெரிக்க தேசத்தில் ஒரு வலதுசாரி அரசாங்கத்தை தன்னை நாடு கடத்தியவர்கள் நிறுவியதையும், மெக்சிகோவில், மாணவர்களுக்கென்று நடந்த ஒரு சந்திப்பில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

மெக்ஸிகோவில் புகலிடம் வழங்கப்பட்ட ஜனாதிபதி மெக்ஸிகோ தேசிய தன்னாட்சி பல்கலைக்கழக (யு.என்.ஏ.எம்) மாணவர்களுடன் உரை நிகழ்த்தினார். இதில் துணைத் தலைவர் ஆல்வாரோ கார்சியா லினெரா மற்றும் சுகாதார அமைச்சர் கேப்ரியெலா மொன்டானோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
“இழந்த பல குடும்பங்களை [பார்க்க] மனம் வலிக்கிறது, பொருளாதார விடுதலைக்காக நாங்கள் கட்டியெழுப்பியதை அவர்கள் [வலதுசாரி] எவ்வாறு அழிக்கிறார்கள்” என்று மொரலெசு, ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினரால் தன் நாட்டில் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளின் விளைவால் 30 க்கும் மேற்பட்டவர்களின் மரணத்தையும், எண்ணற்ற காயமடைந்தவர்களையும் குறித்து கவலையுற்றார்.

மேலும் தான்பதவியேற்றபோது, ​​நாட்டில் அதிக வறுமை விகிதம் இருந்ததாகவும், அடிப்படை சேவைகள் அனைத்தும் ஏறக்குறைய தனியார் மயமாக்கப்பட்டிருந்ததாகவும், பொருளாதார வளர்ச்சியில் தன் நாடு பின்தங்கி இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

தான் முதல் முறையாக தேர்தலில் வெற்றி பெற்றபோது 9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இன்று 49 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது என்று நினைவூட்டினார். இது பொலிவியர்களிடையே செல்வத்தை சிறப்பாக மறுபகிர்வு செய்ய உதவியதாக கூறினார்.
“எங்களின் 13 ஆண்டுகால ஆட்சியில், முதல் ஆறு ஆண்டுகளிலேயே பொருளாதார வளர்ச்சியில் தென் அமெரிக்க நாடுகளின் இடையில் முதல் நாடு பொலிவியா ஆகும்” என்று அவர் கூறினார்.

ஆட்சி கவிழ்ப்பை நடத்திய அரசியல் நடிகர்களின் புதிய தாராளமய நலன்களையும், பழங்குடி சமூகங்களுக்கு எதிரான வலதுசாரி அரசியல் பிரிவுகளின் “பாசிச மற்றும் இனவெறி” நடைமுறைகளையும், (தன் ஆதரவாளர்களான) சோசலிசத்தை சார்ந்த இயக்கத்திற்கு எதிரான வன்முறை தாக்குதல்களையும் அவர் தனது உரையில் கண்டித்தார்.

அமெரிக்காவில் பயின்ற பொலிவியாவின் முன்னாள் வலதுசாரி குடியரசுத் தலைவர்கள் தங்கள் மக்களை புதிய தாராளமயக் கொள்கைகளைப் (neo liberal policies) பின்பற்றவும், இயற்கை வளங்களைத் திருடவும், மக்களை ஆதிக்கம் செலுத்தி அடிபணியச் செய்வதன் மூலம் அமெரிக்க கொள்கைகளுக்கு தங்கள் மீது உள்ள பற்றுதியை வெளிப்படுத்தி வந்தனர்.
மொரலெசு தனது தொடர்ச்சியான மூன்று அரசாங்கத்தால் தன் நாட்டில் ஓரங்கட்டப்பட்ட (பழங்குடி இன) மக்களுக்கு எவ்வாறு அதிகாரத்தையும் கவுரவத்தையும் கொண்டு வந்தன என்பதை நினைவு கூர்ந்தார்.

அவர் ஆட்சியில் இருந்த 14 ஆண்டுகளில், நிலையான வளர்ச்சியையும் சமூக செலவினங்களில் அரசாங்க முதலீட்டையும் ஊக்குவிக்கும் கொள்கைகளை அவர் செயல்படுத்தினார்.
மொரலெசுவின் தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டங்களும் மற்றும் தேசியமயமாக்கல்களும் நாட்டின் வருவாயை தனியாரிடம் இருந்து அரசாங்கத்தின் கைகளுக்கு மாற்ற வழிவகுத்தன, அதனால் அந்த பணத்தை நாட்டின் பொது உள்கட்டமைப்பில் செலுத்த முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here