பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த பயங்கரம்…….. – கிருஷ்

நாம் அனைவரும் வெட்கப்படத்தக்க கொடூர சம்பவம் பொள்ளாச்சியில் அரங்கேறியுள்ளது.கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக அரங்கேறிவரும் இந்த கொடூரம் சமீபத்தில் வழக்காக பதிவாகி தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் என்னவென்றால் 2012 முதல் பொள்ளாச்சியில் வசதி படைத்த ஒரு இளைஞன் கல்லூரி காலம் முதலே பல பெண்களின் செல்பேசி நம்பர்களை திருடி நயவஞ்சகமாக பேசி தன் வலையில் சிக்க வைத்து பின் அவர்களை பொள்ளாச்சி அருகிலுள்ள பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று மிரட்டி ஆபாச வீடியோக்களை எடுத்து அதை வைத்து அப்பெண்களை தன்னுடைய நண்பர்களுக்கு இறையாக்குவதும் ,நகை பணம் பறிப்பதும் என துவங்கி உச்சகட்டமாக பல பெரும்புள்ளிகளுக்கு சப்ளை செய்வதுமாக தொடர்ந்து அரங்கேறி வந்துள்ளது. இதுவரை இதுமாதிரி 250 மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த பிப்ரவரி 25 அன்று பதிவான வழக்கின் மூலம் வெளி உலகிற்கு இந்த கொடூர கும்பலின் செய்கைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது .இரண்டு மாதங்களுக்கு முன் பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்த அந்த கும்பலின் தலைவன் திருநாவுக்கரசு என்பவன் அதையே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பேஸ் புக் நட்பாகி சிலநாட்களுக்கு முன்பு தன நண்பர்களை அறிமுகம் செய்வதாக கூறி காரில் அழைத்து சென்று தனது பண்ணை வீட்டில் வைத்து அடித்து ஆபாச வீடியோ எடுத்து பின் நகைகளை பறித்து கொண்டு வேண்டும்போதெல்லாம் வரவேண்டும் என்று கூறி விரட்டி அடிக்கப்படுகிறாள் .பின் நடந்தவற்றை தன் அண்ணனிடம் சொல்ல அவரும் அந்த கும்பலில் இருந்த மூன்று கொடூரர்களை பிடித்து அவர்களிடம் செல்போனில் இருந்த வீடியோக்களை பிடுங்கி காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். அந்த போனில் மேலும் 40 மேற்பட்ட பெண்கள் சம்மந்தப்பட்ட விடியோக்கள் அடங்கியிருந்தது. உடனடியாக நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு காவல்துறை அதிகாரிகள் கொடூரக்கும்பலுக்கு தகவலை சொல்லி அலெர்ட் செய்திருக்கிறார்கள். உடனடியாக ஆளுங்கட்சி பின்புலம் கொண்ட கொடூரக்கும்பல் சம்பந்தப்பட்ட பெண்ணின் அண்ணனை மூர்க்கத்தனமாக தாக்குகிறார்கள். பின் உறவினர்களின் உதவியுடன் தாக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் காவல்நிலையத்தை முற்றுகையிட விஷயம் பூதாகாரமாவதை உணர்ந்த காவல்துறை சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்தது.

முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு என்பவன் தலைமறைவாகிறான் இதற்கிடையில் முக்கிய குற்றவாளி ஒரு ஆடியோவை வெளியிட்டு திடுக்கிட வைத்தான். அதில் முக்கிய அரசியல் புள்ளிகள் இதில் சம்மந்தப்பட்டிருப்பதாகவும், உயிர்போனாலும் உண்மைகளை சொல்வேன் என்று பதிவு செய்திருந்தான்.இதிலிருந்து இந்தக்கொடூர சம்பவத்தில் பல அரசியல் புள்ளிகள் சம்மந்தப்பட்டிருப்பது தெளிவாகிறது .மேலும் அவசர அவசரமாக திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டு இதில் எந்த அரசியல் பின்புலமும் இல்லை என்று காவல் துறையிலிருந்து தகவல் அளிக்கப்படுகிறது. இதிலிருந்தே எந்த அளவு அரசியல் தலையீடு இருக்கிறது என்பது புலனாகிறது. மேலும் சென்னை சேந்த டாக்டர் ஒருவர் இந்த கும்பலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது இந்த கொடூர கும்பலின் கொடூரங்கள் இன்னும் வெளிவரும். இந்த செய்தியால் பெற்றோர்கள் பயத்தின் உச்சத்தில் உள்ளார்கள். சமூக ஆர்வலர்களும், மக்களும் இவர்களுக்கு மரண தண்டனை தரவேண்டும் என்றும் அப்போதுதான் இது போன்ற குற்றங்கள் இனி நடக்காது என்றும் கூறி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே குற்றம் சொல்லும் நியாயவாதிகளும் நிறைய இருக்கின்றனர்.அவர்கள் இந்த குற்றத்தை செய்த கொடூரன்களை விட ஆபத்தானவர்கள்.பொது மக்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

எதுவாயினும் பெண்கள் விழிப்புடன் இருப்பதும் இது போன்ற கும்பலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதும் மிக அவசியம் ,மேலும் பெண்களை கவர்ச்சி பொருளாக சித்தரிக்கும் தொலைக்காட்சி சினிமா போன்றவை மாறவேண்டும் .பெற்றோரும் பிள்ளைகளுக்கு சமூகம் சார்ந்த விழிப்புணர்வை புகட்டுவதும் மிக மிக அவசியம்.

கிருஷ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here