பொருளாதாரம் பயில்வோம் 2: ராம்பிரபு

உழைப்புச் சக்தியை வாங்குவதும் விற்பதும்.

நமது சமூகத்தில் பல்வேறு வகையான சுரண்டல்கள் இருக்கின்றன. அதில் தொழிலாளர்களாகிய நாம் உழைப்புச் சுரண்டல் பற்றி அடிக்கடி பேசிக்கொள்வோம் அத்தகைய உழைப்புச் சுரண்டல் எவ்வாறு நடைபெறுகிறது ?

சந்தையில் ஒரு பொருளை அதாவது சரக்கை அதன் மதிப்புக்குச் சமமான பணம் கொடுத்து வாங்கிய உடன் அந்தச் சரக்கு அதை வாங்கியவரின் சொந்த உடைமையாகிறது. அதை அவர் தனது விருப்பம் போல பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, ஒருவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளியை ரூ 50 கொடுத்து வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். ரூ 50 என்பது அந்த தக்காளியை உற்பத்தி செய்வதில் செலுத்தப்பட்ட சமூக ரீதியில் அவசியமான உழைப்பு நேரத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தக்காளியை வாங்கியவர் அதை ஜூஸ் ஆக மாற்றுவதோ அல்லது சமையலில் பயன்படுத்துவதோ அல்லது சாஸ் செய்வதோ அவரது விருப்பம்.

பணவுடமையாளரான முதலாளிக்கு தொழிலாளர்கள் விற்கும் சரக்குதான் உழைப்பு சக்தி. இந்த உழைப்புச் சக்தியை அதன் மதிப்புக்கு ஏற்ற விலை கொடுத்து முதலாளி வாங்கி அதை உற்பத்தியில் பயன்படுத்துவதில்தான் உபரிமதிப்பின் தோற்றுவாய் உள்ளது. உழைப்புச் சக்தியின் மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்:

ஒரு சரக்கை வாங்கும்போதோ அல்லது விற்கும் போதோ உபரி மதிப்பு படைக்கப்படவில்லை என்பதை கடந்த பதிவில் பார்த்தோம். அதாவது, ஒருவர் மற்றவரிடமிருந்து மதிப்பை கைப்பற்றலாம்; ஒருவரது லாபம் இன்னொருவருக்கு நட்டம் ஆகலாம்; ஆனால், புதிய மதிப்பு அதில் படைக்கப்படுவதில்லை என்று சரக்கு சுற்றோட்டம் தொடர்பான சமன்பாடுகளில் பார்தோம். ஒரு நிகழ்வில் கூடுதல் மதிப்பிற்கு விற்கப்படும் சரக்கு மற்றொரு நிகழ்வில் குறைந்த மதிப்பிற்கு வாங்கப்படலாம், ஆனால், புதிய மதிப்பு படைக்கப்படுவதில்லை. அப்படியானால் ஒரு நாட்டின் முதலாளிகள் அனைவரும் பரஸ்பரம் சரக்குகளை வாங்கி விற்கும் போது அதிக மதிப்பைப் படைக்க முடியாது என்ற முரண்பாட்டை பார்த்தோம். எனவே, உபரி-மதிப்பு சுற்றோட்டத்துக்கு வெளியில்தான் படைக்கப்பட வேண்டும் என்று தெளிவாகிறது.

பணவுடமையாளரான முதலாளி மதிப்பைப் படைக்கும் சரக்கை சந்தையில் வாங்குகிறார். பிற சரக்குகளை சந்தையில் வாங்குவதும் விற்பதும் போலவே தொழிலாளியும் முதலாளியும் சந்தித்து உழைப்பு சக்தியை வாங்குவதும் விற்பதும் உழைப்புச் சந்தையில் நடைபெறுகிறது. தன்னிடம் விற்பதற்கு உழைப்புச் சக்தியைத் தவிர வேறு எந்த சரக்கும் இல்லாத ஒரு சுதந்திர மனிதனாகவே சந்தைக்கு தொழிலாளி சந்தைக்கு வருவதால் இது முதலாளிக்கு சாதகமாக அம்சமாக உள்ளது.

எல்லாச் சரக்குகளையும் போலவே உழைப்புச் சக்திக்கும் மதிப்பு உள்ளது. அது அதனை பராமரித்து மறுஉற்பத்தி செய்வதற்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பால் தீர்மானிக்கப்படுகிறது. விற்கப்படும் உழைப்புச் சக்தி அதன் மதிப்பிற்கே விற்கப்படுவதாக வைத்துக் கொள்வோம்.

உழைப்புச் சக்தியின் மதிப்பை எவ்வாறு நிர்ணயிப்பது? ஒரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்திக்கு தேவையான உழைப்பு நேரமே உழைப்புச் சக்தியின் மதிப்பைத் தீர்மானிக்கிறது. ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான உணவு, உடை, வீடு, போக்குவரத்து, பொழுதுபோக்கு, மற்றும் உழைப்பதால் ஏற்படும் உழைப்பு சக்தியின் தேய்மானம் அதாவது மருத்துவ செலவுகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் செலவுகள், உழைப்புச் சக்தி வயது காரணமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ சந்தையிலிருந்து நீங்கி விடும் போது புதிய உழைப்பு சக்திகள் தொடர்ந்து வந்து கொண்ட இருக்க வேண்டும் எனவே தொழிலாளியின் குழந்தையின் பராமரிப்பு மற்றும் கல்விச் செலவுகளும் இதில் அடங்கும்.

ஒரு தொழிலாளியின் உழைப்பு சக்தியின் மதிப்பின் ஒரு நாளைய அளவை கணக்கிடலாம்

உழைப்புச் சக்தியின் ஒரு நாளின் சராசரி மதிப்பு = 365A+52B+4C+ பிற செலவுகள்/365

இதில் A என்பது தினந்தோறும் தேவைப்படும் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் முதலானவை, B என்பது வாரம்தோறும் தேவைப்படும் எரிபொருட்கள், பொழுது போக்கு செலவு முதலானவை. C என்பது காலண்டுதோறும் தேவைப்படும் துணிகள், வீட்டிற்கு தேவையான பாத்திரங்கள் போன்ற பொருட்கள் மற்றும் பிற செலவுகள். இது போல இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இவ்வாறு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான இந்தப் பொருட்களின் திரள்களை உற்பத்திசெய்ய ஆகும் சமூக ரீதியில் அவசியமான நேரம் 4 மணி நேரம் என்று வைத்துக் கொள்வோம். இதன் மதிப்பை ரூ 1000 எனக் கொண்டால் பணவுடமையாளரான முதலாளி ஒருநாளைக்கு 1000 ரூபாய் கூலி/சம்பளம் என தொழிலாளியுடன் ஒப்பந்தம் செய்கிறார். இவ்வாறு உழைப்புச் சக்தியை சொந்தமாக கொள்ளும் முதலாளி தனது தேவைக்கேற்ப உழைப்பு சக்தியை பயன்படுத்துகிறார்.

உழைப்பு சக்தியை தவிர வேற எந்த உடமையும் இல்லாத தொழிலாளி தனது வாழ்வாதார தேவைக்காக உழைப்புச் சக்தியை விற்று விட்டு அதன் பயன்பாட்டை கொடுப்பதற்காக முதலாளியின் பின் செல்கிறார். உழைப்புச் சக்தியின் நுகர்வுதான் மதிப்பின் மற்றும் உபரிமதிப்பின் உற்பத்தியாகும்.

மதிப்பைப் படைப்பது இரத்தமும் சதையும் கொண்ட மனித உருவில் உள்ள உழைப்புச் சக்தி ஆகும். முதலாளி இந்த உழைப்புச் சக்தியை அதன் மதிப்புக்கு சமமான விலைக்கு வாங்கி உற்பத்தியில் ஈடுபடுத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். உழைப்புச் சக்தி என்ற சரக்கு உற்பத்தியில் ஈடுபடும் போது உற்பத்திப் பொருளுக்கு புதிய மதிப்பு சேர்க்கப்படுகிறது. அதாவது, மனித உழைப்புச் சக்தியே மதிப்பை படைக்கிறது, எனவே உபரி மதிப்பைப் படைக்கிறது, மூலதனத்தைப் பெருக்குகிறது.

மேலே சொன்னபடி தொழிலாளியின் வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய 4 மணி நேர சமூக உழைப்பு தேவைப்படுகிறது. எனவே, தொழிலாளி முதலாளியின் கட்டுப்பாட்டில் 4 மணி நேரம் உழைத்ததுமே அவருக்குக் கொடுக்கப்படவிருக்கும் கூலிக்கு சமமான மதிப்பை உருவாக்கிக் கொடுத்து விடுகிறார். ஆனால் முதலாளி அவரை 8 மணி நேரம், 10 மணி நேரம் என வேலை செய்ய வைப்பதால் அந்த கூடுதல் நேரத்தில் உழைப்பு சக்தியின் பயன்மதிப்பு முதலாளிக்கு கூடுதலாக மதிப்பை உற்பத்தி செய்கிறது. எனவே, சரக்கை சந்தைக்கு எடுத்துச் செல்வதற்கு முன்பாகவே உபரி-மதிப்பு பணவுடைமையாளரான முதலாளியால் தொழிலாளியிடமிருந்து கறக்கப்பட்டு விடுகிறது.

பணவுடமையாளர் உழைப்புச் சக்தியை சந்தையில் வாங்கி அதை உற்பத்தியில் ஈடுபடுத்தி, அதன் மூலம் மதிப்பு கூட்டிய புதிய பொருளை சரக்கு சுற்றோட்டத்தில் விட்டு மீண்டும் பணமாக எடுப்பதன் மூலமாக உபரி-மதிப்பை அவர் கைப்பற்றுகிறார்; அதனை மூலதனமாக மாற்றவும் செய்கிறார்.

தொழிலாளியை பொறுத்தவரையில் உற்பத்தி செய்வதற்கு முன் பின் என இரண்டு நிலைகளிலும் நுகர்வாளராக இருக்கிறார். உற்பத்திக்கு முன் தனது வாழ்வுக்கு தேவையான அத்தியாவசிய பண்டங்களை நுகர்கிறார் (உணவு பொருட்கள், உடை, வீடு முதலியன). இது அவரது சொந்த நுகர்வு. உழைப்புச் சக்தியாக முதலாளியால் வாங்கப்பட்ட பிறகு உற்பத்தியில் கச்சாப் பொருட்களையும் பிற உற்பத்திச் சாதனங்களையும் திறனுடைய முறையில் நுகர்கிறார். முதல் நுகர்வு உயிர் வாழ்வதற்கும் இரண்டாவது நுகர்வு தனக்குக் கொடுக்கப்பட்ட கூலிக்கு நிகரான மதிப்பை உற்பத்திப் பொருளில் சேர்க்கும் வகையிலும் அமைகின்றன.

உழைப்பு நிகழ்முறை என்றால் என்ன? என்பது பற்றியும் அதில் உள்ள அம்சங்கள் பற்றியும் அடுத்த பதிவில் வெளியாகும்.