பொருளாதாரம் பயில்வோம்-1….ராம்பிரபு.

மூலதனமும் முதலீடும்: பணம் மூலதனமாக மாற்றமடைதல்
மூலதனத்தின் பொதுசூத்திரம்:

தொழிலாளர்களே!

“கொரோனா நோய்த்தொற்று காலங்களிலும் அதிமான முதலீடுகளை ஈர்த்துள்ளது தமிழகம்”;
“முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தளர்வுகளும் இந்தியாவில் செய்து தரப்படும்”;
“கூகுள் நிறுவனம் அடுத்த பத்தாண்டுகளில் 75,000 கோடி ரூபாய் இந்தியாவில் முதலீடு செய்யும்”;
“ஆலை நஷ்டத்தில் இயங்குவதாக இங்கிருந்து வெளியேறிய ஃபாக்ஸ்கான் நிறுவனம் மீண்டும் முதலீடு”

என முதலீடு தொடர்பான அல்லது மூலதனம் தொடர்பான பல செய்திகளை பார்க்கிறோம்.

இந்த முதலாளித்துவ உற்பத்தி முறையில் முதலாளிகளின் ஆரம்ப கட்ட மூலதனம் எப்படி கிடைத்தது? எங்கிருந்து கிடைத்தது? அது எவ்வாறு பெருக்கமடைந்து கொண்டே செல்கிறது என பல கேள்விகள் நமக்கு இருக்கும். இதற்கு மார்க்சின் மூலதன நூலின் பகுப்பாய்வு முறைகள் நமக்கு வழிகாட்டுகின்றன.

மூலதன நூலின் சரக்கு சுற்றோட்ட முறைகள் தொடர்பான சமன்பாடுகளை கற்பதிலிருந்து தொடங்கலாம்.

நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பிலிருந்து முதலாளித்துவ அமைப்பிற்கு மாறிய ஆரம்ப காலகட்டங்களில் கடல் வழி பயணம் வளர்ச்சியடைந்ததால் 16-ம் நூற்றாண்டில் உலகந்தழுவிய வாணிபம் வளர்ச்சியடைந்தது.

வணிகத்தின் மூலமாகவும் கடுவட்டியின் மூலமாகவும் திரட்டப்பட்ட மூலதனம் முதலாளித்துவ உற்பத்தியின் ஆரம்பகட்ட மூலதனத்தின் தொடக்கம். முதலாளித்துவ உற்பத்திக்குள் பணம் மூலதனமாக முன்னீடு செய்யப்படுகிறது, உற்பத்தியிலும் சுற்றோட்டத்திலும் மூலதனமாக இயங்குகிறது, அது வளர்ந்து மீண்டும் மூலதனமாக மாறுகிறது.

சரக்கு சுற்றோட்டத்தின் சமன்பாடுகள்:

  1. C – M – C சாமானிய சரக்கு சுற்றோட்டம் (சரக்கு – பணம் – சரக்கு)
  2. M- C -M மூலதனத்தின் சுற்றோட்டம் (பணம் – சரக்கு – பணம்)
  3. அரிசியை உற்பத்தி செய்யும் விவசாயி தனது அரிசியை சந்தைக்கு எடுத்து செல்கிறார். அரிசியை விற்று தனது வாழ்வுக்குத் தேவையான மற்ற சரக்குகளை வாங்குகிறார். உதாரணமாக சட்டை, பருப்பு, நாற்காலி ஆகியவற்றை வாங்குகிறார் எனக் கொள்வோம்.

அரிசியை விற்ற விவசாயியை போலவே தையல்காரர், பருப்பு விளைவிக்கும் விவசாயி, நாற்காலி செய்யும் தச்சர் என ஒவ்வொருவரும் தங்களது சரக்குகளை விற்று மற்ற பொருட்களை வாங்குகிறார்கள். இது ஒரு சங்கிலித் தொடர். தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.

தனக்குத் தேவையான சரக்குகளை வாங்கும் பொருட்டு தான் உற்பத்தி செய்த சரக்கை விற்பதுதான் இந்த சாமானிய சரக்கு சுற்றோட்டத்தின் இலக்கு C – M – C (சரக்கு – பணம் – சரக்கு)

  1. சந்தையில் 100 ரூபாய் கொடுத்து ஒரு சரக்கை வாங்கும் A என்பவர் அந்தச் சரக்கை B என்பவரிடம் ரூபாய் 110-க்கு விற்கிறார். இதில் விற்கும் பொருட்டு வாங்குவதுதான் நோக்கம் என்பதால் 100 ரூபாய்க்கு வாங்கிய நாற்காலியை 100 ரூபாய்க்கே விற்றால் அபத்தமாகவும் கூடுதலாக 10 ரூபாய் மதிப்பு கிடைத்தால் புத்திசாலித்தனமாகவும் இருக்கும். பணத்திற்கு பணம் கூடுதல் பணமாக இந்த நிகழ்வில் மாற்றப்படுகிறது M – C – M+ΔM (பணம் – சரக்கு – பணம்+கூடுதல் பணம்)

C – M – C மற்றும் M – C – M இந்த இரண்டிலும் ஒரு விற்றலும் ஒரு வாங்கலும் உள்ளன, வரிசை மட்டும் மாறியுள்ளது. அதனால் ஏற்படும் வேறுபாடுகள்:

C – M – C ல் சரக்கின் பயன்மதிப்பை பெறுவதுதான் பிரதான நோக்கம். பணம் சரக்கை பரிவர்த்தனை செய்யும் மதிப்பாக மட்டும் பயன்படுகிறது.
M – C – M ல் பரிவர்த்தனை மதிப்புதான் பிரதானமானது. பரிவர்த்தனை மதிப்பின் உருவமாகிய பணத்தை முன்னீடு செய்து கூடுதல் பணம் எடுப்பதுதான் நோக்கம் .

C – M – Cல் விற்பது தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தால்தான் பணம் மீண்டும் கைக்கு வரும். இன்று சட்டையை விற்று பணமாக மாற்றி அதைக் கொடுத்து அரிசி, பருப்பு வாங்கி நுகர்ந்து தீர்ந்த பின் மீண்டும் சட்டையை தைத்து மீண்டும் விற்றால்தான் பணம் கிடைக்கும். அதைக் கொடுத்து தேவையான சரக்குகளை வாங்க வேண்டும்.

M – C – M சுற்றோட்டத்தில் விடப்படும் பணம் கூடுதல் பணமாக திரும்பிப் பெறப்படுகிறது. அதாவது M – C – M’. இந்தக் கூடுதல் பணம் செலவு செய்யப்பட்டால் மூலதனம் என்ற பாத்திரத்தை இழக்கிறது. மீண்டும் சுற்றோட்டத்தில் விடாமல் சேமிக்கப்பட்டாலும் மூலதனம் என்ற நோக்கத்தை இழக்கும். பணத்தை பெருக்குவதுதான் நோக்கம் என்பதால் 100 ரூபாய் என்ற தொகையை 110 ரூபாய் ஆக்கியது போல அடுத்த முறை 120 ரூபாய் என அதிகரித்து செல்வதுதான் நோக்கமாக இருக்கும்.

சுற்றோட்டத்தில் பணம் செலவழிக்கப்படும் முறையில் பணம் கூடுதல் பணமாக பணவுடமையாளர் பைகளில் சேர்கிறது பணவுடமையாளர் முதலாளி ஆகிறார். வங்கிகளின் வட்டி மூலதனம், கந்துவட்டி போன்றவற்றில் இந்த M – C – M’ல் உள்ள இடைநிலை சரக்கு கூட இல்லாமல் போய் பணம் நேரடியாக பெருக்கமடைவதைப் போலத் தோன்றுகிறது.

மூலதனத்தின் பொது சூத்திரம் M – C – M’ என அறிகிறோம்.

M – C – M என்ற மூலதனத்தின் பொது சூத்திரத்தில் உள்ள முரண்பாடுகள்:

பணம் மூலதனமாக மாறும் நிகழ்வை M – C – M’ என பார்த்தோம்.

சரக்கு சுற்றோட்டத்தில் பணம் எப்படி பெருகுகிறது? M – C – M என்ற நிகழ்வில் மூன்று நபர்கள் இருப்பதாக கொள்வோம். A என்பவர் வாங்குபவர் B என்பவர் விற்பவர். இதில் C என்பவர் பணவுடமையாளராக உள்ளே நுழைகிறார். இவரின் நோக்கம் சரக்கை வாங்கி விற்பது. சமன்பாடு A – C – B எனக் கொள்வோம். A, B என இருவர் மட்டும் இருக்கும் போது 100 ரூபாய் மதிப்புள்ள பொருளை 100 ரூபாய்க்கு பரிமாறி கொள்கிறார்கள். எந்த உபரியும் கிடைக்கவில்லை. C என்பவர் A யிடம் 100ரூபாய்க்கு வாங்கி Bயிடம் 110ரூபாய்க்கு விற்கிறார். இந்தக் கூடுதல் பணம் புதிதாக படைக்கப்பட்ட உபரி மதிப்பு கிடையாது. B என்பவர் C யிடம் ஏமாந்ததால் நிகழ்ந்தது. இது தெரிந்த B என்பவர் A யிடம் நேரடியாக சென்று வாங்கும் போது C என்ற ஒரு நபர் நீக்கப்படுவார். எனவே சரக்குகளின் சுற்றோட்டத்தில் உபரிமதிப்பு புதிதாக படைக்கப்படவில்லை என்பதை கீழ்க்காணும் ஆய்வுகள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

  1. A என்பவர் சட்டையையும் B என்பவர் நாற்காலியையும் உற்பத்தி செய்வதாக கொள்வோம் இருவரும் நன்கு தேர்ச்சி பெற்று விளங்குகிறார்கள். குறைந்த உழைப்பு நேரத்தில் சரக்கை உற்பத்தி செய்து அவரவர் மதிப்பிற்கே பரிவர்த்தனை செய்துகொள்கின்றனர். இருவரும் மனநிறைவுடன் நுகர்வை அனுபவிக்கின்றனர். இதில் எந்த உபரியும் படைக்கப்படவில்லை .
  2. சந்தையில் அனைவரும் தங்களது சரக்கை அதன் மதிப்பை விட கூடுதலாகவோ குறைவாகவே விற்கலாம். அதன்படி A என்பவர் 100 ரூபாய் மதிப்புள்ள சட்டையை 90 ரூபாய்க்கு விற்று 100 ரூபாய் மதிப்புள்ள அரிசியை 90 ரூபாய்க்கு வாங்கிறார். 90 ரூபாய்க்கு அரிசியை விற்றவர் 100 ரூபாய் மதிப்புள்ள நாற்காலியை 90 ரூபாய்க்கு வாங்குகிறார் என கொண்டால் இதில் யாருக்கும் லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை.
  3. கூடுதல் மதிப்புள்ள சரக்கு குறைந்த மதிப்புள்ள சரக்குக்குப் பரிவர்த்தனை செய்யப்படலாம் எனினும் இரண்டும் மதிப்பு மாறாமல் இருக்கும். 100ரூபாய் மதிப்புள்ள சட்டையையும் 90ரூபாய் மதிப்புள்ள நாற்காலியும் (மொத்த மதிப்பு 100 + 90 = 190) பரிவர்த்தனை செய்யப்பட்டால் இதிலும் எந்த உபரியும் படைக்கப்படவில்லை. இதில் சமத்துவமற்ற பரிவர்த்தனை மட்டும் நடக்கிறது.
  4. சரக்கின் உற்பத்தியில் தன் நுகர்வுக்கு போக மீதம் உள்ளது இந்தச் சுற்றோட்டத்தில் நுழையும் போதும் உபரி படைக்கப்படவில்லை. எஞ்சியுள்ளது பணமாக மாற்றப்படுகிறது. சரக்குகளின் விலைகளில் மாற்றம் ஏற்படலாம் இதில் உபரி படைக்கப்படவில்லை.

இதுவரை நாம் பார்த்த சுற்றோட்ட நிகழ்முறைகளில் சமமான பரிவர்த்தனையிலோ சமதையற்ற பரிவர்த்தனையிலோ உபரி படைக்கப்படவில்லை. ஒருவரிடம் இருந்த மதிப்பை இன்னொருவர் கைப்பற்றுவது வேண்டுமானால் நடக்கிறதே தவிர புதிய மதிப்பு படைக்கப்படவில்லை.

சரக்கின் உடமையாளர் தனது சொந்த உழைப்பை கொண்டு உற்பத்தி செய்யும் போது உபரி மதிப்பை படைக்கவில்லை. உபரியோ மூலதன பெருக்கமும் அவரால் நிகழவில்லை. பணம் மூலதனமாக பெருக்கம் அடைய சுற்றோட்டம் அவசியம். ஆனால் சுற்றோட்டத்தில் உபரி படைக்கப்படுவதில்லை என இதன் மூலமாக நாம் அறிகிறோம்.

தோற்றுவாய் எதுவாக இருக்கும்? உழைப்பு சக்தியை வாங்குவதும் விற்பதும் என்பதே உபரி-மதிப்பின் தோற்றுவாய். இது தொடர்பான விபரங்கள் அடுத்த பதிவில் வெளியாகும்..

ராம்பிரபு.