பொன்பரப்பி சாதிய வன்முறை. காரணம் பா.ம.க வா? வன்னியர்களா?அபராஜிதன்

வழக்கம் போல் முற்போக்காளர்கள் அனைவரும் கலவரத்திற்கு காரணம் வன்னியர்கள்தான் என்று பேச துவங்கியிருப்பது மருத்துவர் ராமதாசின் விருப்பத்தை வலிந்து சென்று நிறைவேற்றுவது போல் உள்ளது. ” வன்னியர்கள் ,வன்னியர்கள் ” என்று பேசுவது கலவரத்திற்கே சம்பந்தமில்லாத வன்னிய சமுகத்து மக்களையும் சாதிய உணர்வுக்கு ஆளாக்கும்.

இது திட்டமிடப்பட்ட பா.ம.க ,இந்து முன்னணியினரின் செயல் என்பதைத்தான் நாம் வலியுறுத்த வேண்டும்.இந்த தாக்குதலுக்கு உண்மையான பின்னணியாக இருந்தவர்களை துல்லியமாக அடையாளம் கண்டு தாக்க வேண்டுமே தவிர பொதுமைப்படுத்துவது ஆரோக்கியமான செயல் அல்ல.
பானை உடைக்கப்பட்டது, உடைத்தவர்கள் தாக்கப்பட்டனர் ,அதற்காக ஒடுக்கப்பட்ட மக்களின் கிராமம் தாக்கப்பட்டது.
ஏன் பானையை உடைக்க வேண்டும்.ஒடுக்கப்பட்ட கிராம மக்கள் அனைவரும் பானை சின்னத்திற்கு வாக்களித்தனர் அதனால் தாக்கப்பட்டனர். அந்த குறிப்பிட்ட கிராம மக்கள் மட்டும் தாக்கப்படாமல் சுற்று வட்டாரத்தில் வேறு சில கிராம மக்களும் தாக்கப்பட்டுள்ளனர்.அனைவரும் ஒடுக்கப்பட்ட சமுகத்தை சார்ந்தவர்களே.
இது திட்டமிடப்பட்ட சதியே!.

ஏற்கனவே தருமபுரி கலவரத்தை நடத்தி அன்புமணியை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கியது போல இந்த தேர்தலிலும் கலவரத்தை நடத்தி வாக்குகளை அள்ளிவிட வேண்டும் என்பது பா.ம.க வின் திட்டம் .அது தேர்தல் பிரச்சாரத்தின் போதே அன்புமணியின் வார்த்தைகளில் பலமுறை வெளிப்பட்டது.அப்படி இந்த தேர்தலில் எந்த கலவரத்தையும் உருவாக்க முடியாததாலும் வாக்குகள் பெருமளவு பானை சின்னத்திற்கு விழுந்ததாலும் அடைந்த கோபத்தை வெளிக்காட்டுவதற்காக நடத்தும் கலவரமே இது. வாக்குகள் விழவில்லை என்பதற்காக மட்டும் இந்த வன்முறை எழவில்லை ,முன்பே திட்டமிடப்பட்டிருந்தது இப்போது வெளிப்படுகிறது.அவ்வளவுதான்.
பொன்பரப்பி மட்டுமல்லாமல் குமிழியம்,இரும்புலிக்குறிச்சி என்று இந்த கலவரம் நகர்வது தக்க சான்றாகும்.

பானையை உடைத்தவர்களை வி.சி.க வினர் தாக்கினர். தங்களை தாக்கியவர்களைத்தானே திருப்பி தாக்க வேண்டும்? அதுதானே சத்திரிய தர்மம்.

தொடர்பே இல்லாத கிராம மக்களை பெண்களை, இளைஞர்களை,வீடுகளை 120 நபர்களுக்கு மேல் திரட்டிக்கொண்டு சென்று தாக்குவதுதானே வீரம்.இதைத்தான் வீரம் என்று வேறு சொல்லிக்கொள்கிறார்கள்.

21 ஆம் நூற்றாண்டில் உலகம் எங்கோ சென்று கொண்டிருக்க இன்னும் அற்பமான சாதிய எண்ணங்களுக்குள் ,எல்லா சாதியிலும் ஒருசிலர் செய்வது போலவே வன்னிய சமுகத்தினுள்ளும் சாதிவெறியை விதைப்பதை மருத்துவர் ராமதாசு செய்து வருகிறார்.
சாதி ஓற்றுமை ,தமிழர் ஒற்றுமை என்று பல வேடம் போட்டு வந்த ராமதாசின் போலிமுகத்தை உலகறிந்த பின் அவர் கையில் எடுத்திருக்கும் ஆயுதம்தான் சாதிவெறி.இதற்கு வன்னிய சமுகத்தின் அப்பாவி இளைஞர்கள் பலி கொடுக்க அவர் தயங்குவதே இல்லை.
அவர் குடும்பத்தின் வளர்ச்சிக்காக ஒரு சமுகத்தையே பலி கேட்கும் இந்த அபாயகரமான போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஒரு நபரால்,ஒரு குடும்பத்தால் ஒட்டுமொத்த வன்னிய சமுகமும் பழி சுமக்க வேண்டுமா? வன்னிய சமுகம் சிந்திக்க வேண்டும்.பல சிறந்த அரசியல் தலைவர்களை தமிழகத்திற்கு அளித்த வன்னிய சமுகம் இவர்களால் தலைகுனிந்து அல்லவா? நிற்கிறது.

கலவரங்கள் விளைவிக்கும் வன்முறை ஆறாத ரணத்தை பாதிக்கப்பட்டவர்களிடையே விதைக்கிறது.இன்று வளர்ந்து வரும் உலக அரசியல் அறிவு அவனை அடிமையாக வைத்திருப்பதை காட்டிலும் கிளர்ச்சியாளனாய் மாற்றுவதற்கே முன்னுரிமை அளிக்கிறது. அதனால் இப்போர் இப்படியே நடந்து கொண்டிருக்கும் என்று இல்லை .அது அடுத்த கட்டத்திற்கு சென்றால் தமிழ்ச்சமுகம் மிகப்பெரிய பாதிப்பிற்குள்ளாகும்.தமிழகத்தின் தமிழ்குடிகளான மிகப்பெரிய இரு சமுகங்கள் மோதிக்கொள்வதால் யாருக்கு நன்மை இருக்க முடியும்,அப்படி யார் லாபத்தை அறுவடை செய்து வருகிறார்களோ அவர்கள்தான் இந்த கலவரத்திற்கு காரணம்.
அவர்கள்தான் தமிழ்ச்சமுகத்தின் எதிரி.

பா .ம.க வை அரசியல் அரங்கில் தனிமைப்படுத்துவோம்.
சாதி கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

அபராஜிதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here