பொதுத்துறை வங்கிகள் இணைப்பு- ஒரு அலசல்- அஸ்வினி கலைச்செல்வன்.

நாடுமுழுவதும் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்த நிலையில் பல வங்கிகளை இணைத்து இனிமேல் 12 வங்கிகளாக செயல்படும் என அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். மேலும் பொதுத்துறை வங்கிகளுக்காக பல்வேறு சீர்திருத்த அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்படுவது நாம் அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் 27 வங்கிகளை இணைத்து 12 வங்கிகளாக செயல்படும் என்ற அறிவிப்புக்கான காரணங்களை நாம் அறிந்து கொள்வது அவசியமாகிறது.

ஏன் இந்த வங்கிகளை இணைக்க வேண்டும்?

இந்த நடவடிக்கைகள் எல்லாம் Prompt Corrective Action Framework (PCA) என்ற பாரத ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையின் கீழ் செயல்படுகிறது.அவை

1.முதலீட்டு விகிதம்
2.சொத்துகளின் தரம்
3.லாபத்திற்கான வாய்ப்புகள்

ஆகிய அளவீடுகளின்படி, சிக்கலான நிலையில் உள்ள வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படும்.

இந்த அளவீடுகளில் ஒரு வங்கி சிக்கலான நிலைக்கு செல்லும்போது ரிசர்வ் வங்கி கண்காணித்து அந்த வங்கிக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கும். லாபம் எடுப்பதைத் தடுப்பது, புதிய கிளைகளைத் திறப்பதைக் கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். நிலைமை மிகச் சிக்கலானால், அவை வேறு வங்கிகளுடன் இணைக்கப்படும். அல்லது கலைக்கப்படும்.

உதாரணமாக ஒரு வங்கியானது வாகன கடன்களை அதிக அளவில் குறைந்த வட்டியுடன் வழங்கும் பட்சத்தில் பொதுமக்களின் நுகர்வு தன்மை இயல்பாகவே அந்த வங்கியை நோக்கி நகரும்.இந்நிலையில் வங்கியின் இருப்புத்தொகையை சமன் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு வங்கியானது பொருளாதார பின்னடைவில் வலுவாக சிக்கும் அபாயத்தின் போது ரிசர்வ் வங்கியானது அந்த வங்கியின் வட்டி விகிதத்தை அதிகரிக்கும்.இதன் மூலம் கடனாளிகளின் நுகர்வு தன்மை இயல்பாகவே குறையும். இருந்தும் அடைந்த பின்னடைவை சரிசெய்ய முடியாத நிலையில் வங்கி இணைப்பை மேற்கொள்ளும்.

பொதுத் துறை வங்கிகள் பலவற்றில் வராக்கடன்களின் அளவு வெகுவாக அதிகரித்ததால்,இந்த PCA கட்டுப்பாட்டின் கீழ் கடந்த ஆண்டு 11 பொதுத் துறை வங்கிகள் வந்தன. ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைட்டட் பேங்க், அலகாபாத் பேங்க், கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை இதில் அடக்கம். பிறகு இவற்றில் சில வங்கிகள், இந்த ஆண்டுத் துவக்கத்தில் அந்த கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டன.

இந்த நிலையில், வங்கிகளுக்கு லாபம் வரும்போது, அவற்றுக்கு உள்ள வராக்கடன்களை அதன் மூலம் சரிசெய்ய அரசு விரும்பியது. ஆனால், ரிசர்வ் வங்கி அதற்கு முழுமையாக அனுமதிக்கவில்லை. இந்த நிலையில்தான் நஷ்டத்தைச் சந்திக்கும் வங்கிகளை லாபமீட்டும் வங்கிகளுடன் இணைக்க அரசு முடிவுசெய்திருக்கிறது.

மாற்று ஏற்பாடு :

ஒரு வங்கி நஷ்டத்தைச் சந்திக்கிறதென்றால், அதன் வராக்கடன்களை வசூலித்து, தேவையான சிக்கன நடவடிக்கைகளை எடுத்து லாபமீட்டும் வங்கியாக மாற்றுவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும்.

வங்கிகளை இணைப்பதால் ஏற்படும் விளைவுகள் :

கடந்த ஆண்டு பொதுத் துறை வங்கிகளின் லாபம் ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடி. ஆனால், வராக்கடன்களைச் சரிசெய்வதற்காக பொதுத்துறை வங்கிகளின் இழப்பு 60,000 கோடி என கணக்குச் சொல்லப்படுகிறது.

இப்போது வங்கிகள் இணைக்கப்பட்டிருப்பதால் மட்டும் உடனடியாக எந்த லாபமும் கிடைத்துவிடாது. அதிகம் உள்ள வங்கிக் கிளைகளை மூட வேண்டும், ஊழியர்களைக் குறைக்க வேண்டும். ஆனால், ஊழியர்களைக் குறைக்கப்போவதில்லை என இப்போது சொல்கிறார்கள். பிறகு அந்த நடவடிக்கையில் இறங்கினால் கடும் எதிர்ப்பு ஏற்படும்.

வங்கிக் கிளைகளை மூடும்போது, கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள வங்கிக் கிளைகள் மூடப்படும் அபாயம் இருக்கிறது.

இதுகுறித்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் பேசுகையில்,பெரிய வங்கிகள்தான் பலமான வங்கிகள் எனச் சொல்லிவிட முடியாது. பெரிய வங்கிகளால் ஆபத்துகள்தான் அதிகம்.எனவே இது தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவு என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

வளர்ச்சி நோக்கமானது, தன்னை விட பொருளாதாரத்தில் உயர்ந்த நாடுகளோடு ஒப்பிட்டு செயல்படுவதே சரியானதாக இருக்கும். நிர்மலா சீதாராமன் சீனா போன்ற நாடுகளை ஒப்பிடும்போது வளர்ச்சி நிலையில் இருப்பதாகக் கூறியிருப்பது எதன் அடிப்படையிலானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அஸ்வினி கலைச்செல்வன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here