பேய் அரசாளும் நாடும் பிணந்தின்னும் சட்டங்களும்!

[காஷ்மீருக்கு உள்ளேயும் வெளி இடங்களுடனும் ஆன தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. இணைய இணைப்பு, செல்போன், லேண்ட் லைன், மற்றும் கேபிள் டி.வியும் தடைசெய்யப்பட்டிருக்கிறது.]

காஷ்மீர் பல ஊரடங்குகளை பார்த்திருக்கிறது, ஆனால், அது எதையும் போல இல்லை இந்த முறை!

காஷ்மீர் அளவிலான ஒரு கேள்விக்குறி காஷ்மீர் மக்களின் தலைக்கு மேல் தொங்குகிறது. வெறிச்சோடிய தெருக்களில் ராணுவப் படையினர் ரோந்து வருகின்றனர். இரண்டு முன்னாள் முதலமைச்சர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர், இன்னொரு முன்னாள் முதல் அமைச்சர் வீட்டுக் காவலில் உள்ளார். முக்கியமான பெரிய கட்சிகளின் தலைவர்கள் பலர் வேட்டையாடப்படுகின்றனர்.

அரசியல் சட்டப் பிரிவு 370-ல் திருத்தம், ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றம் என்று நாடாளுமன்றத்தால் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ள இந்த மாற்றங்களை புரிந்து கொள்ள முயற்சித்து அதிர்ந்து போயிருக்கின்றனர், காஷ்மீர் மக்கள்.

பெயர் வெளியிட விரும்பாத ஒரு தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர், “இது ஒரு பலத்த அடி, இதன் வலி இன்னும் முழுமையாக இறங்கவில்லை. 1846-ல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும் ராஜா குலாப் சிங்குக்கும் இடையே போடப்பட்ட அமிர்த்சர் ஒப்பந்தத்தின்படி காஷ்மீரிகள் அவர்களது நிலங்களோடும், நீரோடும், தலைக்கு மேல் இருக்கும் வானத்தோடும் விலை பேசப்பட்டனர். அதன் பிறகு காஷ்மீர் மக்களின் அதிகாரம் பறிக்கப்பட்ட மிகப்பெரிய நிகழ்வு இது. இந்த ஒரு பட்சமான நடவடிக்கைக்கு நிச்சயம் எதிர்வினை இருக்கும்”

வரலாற்றின் சுமை எப்போதுமே கனமாக அழுத்தும் காஷ்மீர் தேசத்தில் எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மை இதற்கு முன் எப்போதும் இதைவிட மோசமாக இருந்ததில்லை.

காஷ்மீருக்கு உள்ளேயும் வெளி இடங்களுடனும் ஆன தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. இணைய இணைப்பு, செல்போன், லேண்ட் லைன், மற்றும் கேபிள் டி.வியும் தடைசெய்யப்பட்டிருக்கிறது. தாம் வசிக்கும் பகுதிகளுக்கு வெளியில் போக யாருக்கும் அனுமதி இல்லை. மாநில அரசு ஊழியர்களுக்குக் கூட ஊரடங்கு பாஸ்கள் வழங்கப்படவில்லை. அரசு ஊழியர் என்ற அடையாள அட்டைகளை பாஸ்களாக ராணுவம் ஏற்றுக் கொள்வதில்லை.

பத்திரிகையாளர்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி இல்லை. செய்தி சேகரிக்க பறந்து வந்திருக்கும் பத்திரிகையாளர்களில் பெரும்பாலானவர்கள் ஜீரோ பிரிட்ஜ் பகுதியின் 1 சதுர கி.மீ பரப்பளவில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். விமான நிலையத்திலிருந்து ராஜ்பாக்-ஜவகர் நகர் சாலையில் மட்டும் பாதுகாப்பு சிறிதளவு தளர்த்தப்பட்டிருக்கிறது. இந்தச் சாலையைத்தான் தொலைக்காட்சியில் காட்டுகின்றனர். பிற இடங்களில் சாலைகளில் வேலி கம்பிகளால் தடுப்பரண்கள் இடப்பட்டு ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. போலீசும், ஆயுதம் ஏந்திய துணை ராணுவப் படைகளும் ரோந்து செல்கின்றன. போலீஸ் படைகளின் கையில் லத்தி மட்டுமே உள்ளது, துப்பாக்கிகள் இல்லை [மோடி அரசால் காஷ்மீர் போலீசைக் கூட நம்ப முடியாதாம்]

ஆற்றின் மறுகரையில் ஊரடங்கை படம் எடுக்க முயற்சித்த ஒரு பத்திரிகையாளரை ஒரு போலீஸ் அதிகாரி அடித்துத் துரத்துகிறார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர்கள் இரண்டு நாட்களாக அவர்களது அலுவலகத்தில் முடங்கியிருக்கிறார்கள். அங்கிருந்து வெளியில் நடந்து சென்று பகுதி மக்களை சந்தித்து விட்டு திரும்புகின்றனர். அந்த அலுவலகக் கட்டிடத்திலேயே தாழ்வாரங்களில்தான் போலீஸ்காரர்களின் தற்காலிகக் குடியிருப்பு. ஏனென்றால், இடம் பற்றாக்குறையாக உள்ளது. பெரும்பாலான அரசு கட்டிடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள் ஆகியவை மாநிலத்துக்கு வெளியிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள துணை ராணுவப் படைகளால் நிரம்பியிருக்கின்றன. செவ்வாய்க் கிழமை அன்று ராஜஸ்தானில் இருந்து 6 பேருந்துகளில் வந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் நகர மையத்தில் உள்ள ஒரு காலியான வாகன நிறுத்தும் இடத்தில் தங்கியிருக்கின்றனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர்கள் பல அரசு அலுவலர்களிடமும், பகுதி மக்களிடமும் பேசினார்கள். கடும் விரக்தியையும், கோபத்தையும் வெளிப்படுத்திய அவர்களில் ஆகப் பெரும்பான்மையானவர்கள் மாநிலத்தை மறு சீரமைப்பு செய்வது, “ஜம்மு & காஷ்மீரின் தன்மையை மாற்றி மக்கள் தொகையில் முஸ்லீம்களின் பங்கை குறைக்கும்” நோக்கத்திற்காக செய்யப்பட்டுள்ளது என்று கருதுகின்றனர்.

“அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று எங்களுக்குத் தெரியும். அது முதலில் முதலீடு என்ற பெயரில் உள்ளே வரப் போகிறது” என்கிறார் ஶ்ரீநகரின் அபி குசார் பகுதியைச் சேர்ந்த 30 வயது மனிதர் ஒருவர் (பெயர் சொல்ல விரும்பவில்லை).

பிரிவினைவாதிகள், “நாங்க அப்பவே சொன்னோம்” என்று ஒரே குரலில் சொல்கின்றனர். அதே நேரம் இந்திய ஆதரவு அரசியல் சூழலே கலகலத்துப் போயிருக்கிறது.

மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒரு தலைவர், “தமது சொந்த மக்களிடமிருந்து வேறுபட்ட கருத்தை கொண்டிருந்ததோடு மட்டுமின்றி, இந்திய அரசின் மதச்சார்பின்மையில் நம்பிக்கை வைத்து, ஜம்மு&காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் நாங்கள். அதற்காக இரத்தம் சிந்திய முஸ்லீம் குரல்கள் இப்போது அவமதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கட்சிகளுக்கு இனிமேல் எதுவும் மிச்சமில்லை. தேசிய மாநாட்டுக் கட்சியானாலும் சரி, புதிதாக உருவான ஷா பஸல் கட்சியானாலும் சரி அதே நிலைமைதான்” என்கிறார். இந்த அரசியல்வாதிகள் இந்த “சவாலை” எதிர்த்து நின்று, “கூட்டாக எதிர்ப்பு” தெரிவிக்க முன் வர வேண்டும் என்று பலர் சொல்கின்றனர்.

காஷ்மீர் பல்கலைக் கழக மாணவர் ஒருவர் “70 ஆண்டுகளாக அவர்களது அரசியலை உயிர்ப்போடு வைத்துக் கொண்டிருந்த தர்க்கம் நாடாளுமன்றத்தில் 15 நிமிடங்களில் சுக்கு நூறாக்கப்பட்டிருக்கிறது. இனிமேலும் அவர்களால் எதுவும் பேச முடியாது. மக்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு இந்திய அரசை எதிர்த்து நிற்பதுதான் ஒரே வழி” என்கிறார்.

ஒரு தேசிய மாநாட்டுக் கட்சித் தொண்டர் (அவரது தந்தை தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்), “என் அப்பா இந்தியா என்ற கருத்துக்காக உயிரைக் கொடுத்தார். அதே கருத்துக்காக நான் அரசியலில் சேர்ந்தேன். மதச்சார்பில்லாத இந்தியாவில்தான் காஷ்மீர் பாதுகாப்பாக உள்ளது என்று நினைத்ததால் அவர் தீவிரவாதிகளின் குண்டுகளுக்கு பலியானார். இப்போது, அவரது அறிவையும், எனது அறிவையும் நானே கேள்விக்குள்ளாக்குகிறேன். என் கட்சி இதற்குப் பிறகும் இதை எதிர்க்க முன் வராவிட்டால், எனது எதிர்காலம் பற்றி நான் வேறு முடிவு எடுக்க வேண்டியிருக்கும்”. என்கிறார்.

நான்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அதிகாரபூர்வமற்ற முறையில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள் என்று ஒரு மூத்த மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் தெரிவித்தார். மாநிலத்தை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கையை “ஒரு அரசியல் சட்ட மோசடி” என்று அவர் அழைக்கிறார்.

“[ஜம்மு&காஷ்மீர் இந்தியாவுடன் சேர்வதற்கான] இணைப்பு ஒப்பந்தத்துக்கு எந்த மரியாதையும் இல்லை. இனிமேல் தேர்தல்களில் நாங்கள் பங்கேற்றால் அது எங்களுக்கு நாங்களே மரண தண்டனை விதித்துக் கொள்வதாக அமையும். ஒரு கூட்டு எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்குவதுதான் மேற்கொண்டு செய்யக் கூடிய ஒன்று என்ற உணர்வு அதிகரித்து வருகிறது” என்கிறார் அவர்.

“ஆரம்பத்தில், தேசிய புலனாய்வு ஆணையம், அமலாக்க ஆணையம் மற்றும் பிற அமைப்புகளை பயன்படுத்தி பிரிவினைவாதிகளை அச்சுறுத்தி துன்புறுத்தினார்கள். பிரிவினைவாதிகளை ஒழித்துக் கட்டுவதற்காக அதைச் செய்கிறார்கள் என்று நினைத்தோம். கடந்த 70 ஆண்டுகளாக மூவர்ணக் கொடியை தூக்கிப் பிடித்த, காஷ்மீரில் இருக்கும் உண்மையான இந்தியர்களான எங்களை நோக்கியும் அவர்கள் வருவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை.”

சாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன, பல ஏ.டி.எம்களில் பணம் இல்லை, பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன, வீடுகளில் அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

நவ்காமில் 22 வயதான ஒரு இளைஞர் வேகமாகச் சென்ற ஒரு வண்டியால் அடிபட்டு விட்டார். ஒரு மாருதி வேன் ஓட்டுனர் அவரை ஏற்றிக் கொண்டு ஶ்ரீ மகாராஜா ஹரிசிங் (SHMS) மருத்துவமனையை நோக்கி விரைந்தார்.

“ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் எங்களை நிறுத்தினார்கள், தொடர்ந்து செல்ல அனுமதிக்கவில்லை. கெஞ்சி கூத்தாடிய பிறகு போக விட்டார்கள். இங்கு (ஜஹாங்கீர் சவுக்) வந்து சேர எங்களுக்கு இரண்டரை மணி நேரம் பிடித்தது.” என்கிறார் அந்த வண்டி ஓட்டுனர். வண்டி ஜஹாங்கீர் சவுக்கிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு மேலே செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஒரு ஆம்புலன்ஸ் வந்து காயமடைந்த இளைஞரை ஏற்றிக் கொண்டு சென்றது, ஆனால் அதற்குள் அவரது உயிர் பிரிந்திருந்தது.

மாநிலத்துக்கு வெளியிலிருந்து கோடை விடுமுறைக்காகவும், ஈத்-ஐ முன்னிட்டும் காஷ்மீர் வந்திருந்த பல மாணவர்களும், வெளியில் வேலை செய்பவர்களும் திரும்பிச் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். இணைய இணைப்பு இல்லை என்பதால் விமானப் பயணத்துக்கு முன்பதிவு செய்ய முடியாது. ஒரே வழி விமானநிலையத்துக்குச் செல்வதுதான். ஆனால், விமான நிலையத்துக்குச் செல்லும் சாலை ஒவ்வொரு 300 மீட்டரிலும் தடுப்பரண் கொண்டு மறிக்கப்பட்டிருக்கிறது. அப்படியே விமான நிலையத்துக்குப் போய்ச் சேர்ந்தாலும் விமானப் பயணச் சீட்டு இல்லாமல் விமான நிலையத்துக்குள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

“SMHS மருத்துவமனை மருந்துச் சீட்டு இதோ. நாங்க மருத்துவமனைக்கு போக வேண்டும். ஆனால், எங்களை போக விட மாட்டேன் என்கிறார்கள். பிரிவு 144-ன் கீழ் ஊரடங்கு உத்தரவு என்கிறது அரசு, ஆனால், அதற்காக மருத்துவமனைக்குப் போவதைக் கூட ஏன் தடுக்கிறார்கள்? ஊரடங்கு பாஸ் வாங்கி வரும்படி சொல்கிறார்கள். ஆனால், அதை வாங்குவதற்குக் கூட எங்களால் போக முடியவில்லை” என்கிறார் ஒருவர்.

ஊரடங்கு பாஸ்கள் கேட்டு போகும் நபர்களுக்கு ஶ்ரீநகர் துணை ஆணையர் ஷாகித் சவுத்ரியின் அலுவலகத்தின் கதவுகள் இழுத்து மூடப்பட்டிருக்கின்றன.

காஷ்மீர் பல வேலை நிறுத்தங்களை, பல ஊரடங்கு உத்தரவுகளை பார்த்திருக்கிறது. ஆனால், இந்த முறை ஒரு முக்கியமான வித்தியாசத்தைப் யாரும் தவற விட முடியாது. நகரின் வெவ்வேறு பகுதிகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரித்து வைக்கப்பட்டிருக்கின்றன. காஷ்மீர் வெளியுலகத்திற்கு மட்டுமில்லை, காஷ்மீருக்கு உள்ளேயும் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டு விட்டிருக்கிறது.

— முசாமில் ஜலீல் (Muzamil Jaleel), பஷாரத் மசூத் (Bashaarat Masood), அடில் அக்சர் (Adil Akhzer), ஶ்ரீநகரிலிருந்து.

மொழிபெயர்ப்பு- மா.சிவகுமார்

இந்தியன் எக்ஸ்பிரசில் வெளியான ஆங்கிலச் செய்தியின் மொழிபெயர்ப்பு (https://indianexpress.com/article/india/valley-has-seen-many-a-lockdown-but-why-this-time-it-is-so-different-article-370-kashmir-amit-shah-5884129/)

https://www.facebook.com/photo.php?fbid=167898561036889

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here