‘பெண்மையை போற்றுவதே பேராண்மை’.

பெண்களைப் பற்றியும் அவர்களின் உடல் பற்றியும்
புனையப்பட்ட கட்டுக்கதைகள் தான் எத்தனை?
ஒரு பெண்ணுக்கே தன் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்கள் அதனால் ஏற்படும் மனநிலை மாற்றங்கள் பற்றிய விழிப்புணர்வில்லாத நிலையை என்னவென்று சொல்ல?

பெண்கள் படித்திருப்பதே விகிதாச்சார அடிப்படையில் மிகவும் குறைவாக உள்ள இந்தியநாட்டில் அப்பெண்களில் எத்தனைபேர் தன்னைப்பற்றி, தன் உடல்நிலை பற்றி படித்திருப்பார்கள் என்பதை ஆராய்ந்தால் இந்த விகிதாச்சாரம் இன்னும் குறையும் என்பது அசைக்க முடியா உண்மை. இந்தியாவில் எய்ட்ஸை விட அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்த கூடியவை கருப்பை நோய்கள் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது.

40வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 10ல் 4பேர் கருப்பையை நீக்கி விட்டு வாழ்கிறார்கள் அடிப்படையில் பெண்ணாக பிறந்த ஒரு ஜீவராசி முழுமையாக பெண்ணாக வாழக் கூட முடியாத நாட்டை நாம் எவ்வழியில் முன்னேற்றி கொண்டிருக்கிறோம்?பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொல்லிவிட்டு அவர்கள் பார்வையை பறிப்பது எவ்விதத்தில் நியாயம்.

பெண்ணின் ஆணிவேரில் ஏற்பட்டுள்ள பழுது சரிசெய்யப்படாவிட்டால் அழிவு அனைவருக்கும் தான்!
கருப்பையை பாதுகாப்பது
பெண்களுக்கு மட்டுமல்ல
பெண் சுமந்து பெற்ற ஒவ்வொரு கருவின்தலையாய கடமை
என்பதை கருத்தில் கொள்வோம்

சம்பிரதாய சடங்குகள் என்னும் பெயரில் பிறப்புறுப்பு சிதைப்பு விரைவில் பூப்பெய்த தாவணிவிழா, தொடைப்பகுதியில் சூடுவைப்பது என எத்தனையோ அத்துமீறல்கள் அவள் உடலின்மேலும் உள்ளத்தின் மீதும்…

இந்தியாவில் 10 இல் 8 பெண்கள் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்ட உடல் பலவீனத்தோடே வீட்டிலும் பணியிடத்திலும் அதிகபணிச்சுமையை சுமக்கிறார்கள் ஆணுக்கு சமமாக பெண்ணுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் ஊதியம் வேண்டும் என போராடும் பெண்கள் அமைப்புகள் கூட ஆணுக்கு நிகராக பெண்ணின் உடல்நலமும் பேணப்பட வேண்டும் என உரக்க குரலெழுப்பவில்லை.
‘பெண்மை போற்றுவதே பேராண்மை’ என்னும் புரிதல் இச்சமுகத்திற்கு தேவை.
இந்தியபெண்களில் 18% பெண்கள் மட்டுமே நாப்கின்கள்(பெரும்பாலும் தரமற்றவையும்சேர்த்து)உபயோகிக்கிறார்கள்.
இந்நிலையில் GST இல் நாப்கினை அழகுசாதன பொருட்களில் சேர்த்து 12% வரியும் குங்குமம் ,வளையல்களை பெண்களின் அத்தியாவசிய பொருட்கள் என்று வரிவிலக்கும் அளித்து உள்ள அரசின் நடவடிக்கை சொல்வது யாது? அரசின் உயர் பதவியில் இருக்கும் மெத்தபடித்தவர்களின் புரிதலே இவ்வளவுதான் என்றால் சாமானியன் புரிதல்?
எப்படி இருக்கும் இப்படி என்னுள் எத்தனையோ கேள்விகள் …
பெண்கள் பற்றி சங்கதிகள்

தங்கத்திற்கும் தகரத்திற்கும் வித்தியாசம் தெரியாதவனை தங்கத்தை பாதுகாக்க வலியுறுத்துவது அபத்தமன்றோ?

வீடுகளில் ஆண்களுக்கு தெரியவேகூடாத இரகசியமாய் பாதுகாக்கப் படுகிறது.
கல்வி நிறுவனங்களுக்கு இது பற்றி கவலையில்லை.
இச்சமுகத்தின் அங்கமாக ஆண்களோடு பயணிக்கும் பெண்கள் தங்களை தனித்தீவாய் தகவமைப்பதையே பிரமச்சரியமாக கருதுகிறார்கள்.

பெண்கள் பற்றிய புரிதலோ விழிப்புணர்வோ இல்லா ஆண் சமுகத்தை உருவாக்கிவிட்டு அது பெண்களை மதிக்கும் பாதுகாக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஒரு ஆணின் நிலையில் இருந்து யோசியுங்களேன்…
திடீரென்று தன் மீது கால்போட்டு தூங்கும் தங்கையை பிரித்து செல்வார்கள் ஏன் என்று புரியாது
பிரசவத்திற்கு வீட்டிற்கு வரும் அக்காவிடம் அம்மா அடிக்கடி ஏதோ பேசுவார்கள் என்னென்னவோ செய்வார்கள் என்னவென்று தெரியாது
இந்த இருட்டு பிரதேசத்தில் அப்பாவிற்கு கூட சில நேரங்களில் மட்டும் அனுமதி வழங்கப்படும் அண்ணன் தம்பிக்கு அனுமதி கிடையாது.

பின் அந்த ஆண்மகனின் வாழ்வில் மனைவி வருவாள் அரைகுறையாய் சில இரகசியங்களை அம்பலப்படுத்திவிட்டு அவளும் அம்மா வீடு எனச்செல்வாள்

அதிர்ஷ்டம் இருந்து அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தால் அவளோடு சேர்த்து அவனும் கற்றுகொள்வான் சில இரகசியங்களை…
கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பது போல் அம்மா,அக்கா,தங்கை தோழி,காதலி,மனைவி என தன் வாழ்வில் வந்து தனக்காக வலிகள் சுமந்த பெண்களை புரியாது புண்படுத்திய பாவத்திற்கு மகள்களின் பாதத்தில் பிராயசித்தம் தேடும் அப்பாகள் இங்கு அதிகம்!

நானும் தனிமையறையில் சிறைபடுத்தப்பட்டபோது என் தம்பி உள்ளேவராமல் கதவை மூட என் அம்மா முற்பட்ட போது நான் என் அம்மாவிடம் சொன்னேன்”அவனை உள்ளே அனுமதியுங்கள் அம்மா என் உடலும் அதன் உபாதைகளும் அவனுக்கு கிடைப்பதற்கரிய புத்தகங்கள் கொஞ்சம் படிக்கட்டுமே வாழ்க்கையை”என்றேன்.

YES LET HIM LEARN FROM MY BODY…
My body is a book. My dear brothers beware of every drop of clotted blood in this book because every drop has its own story.

Some people may ask why am i writing like this.I am writing because I have bleeded more my pen is filled with blood don’t value it unworthy just because it sounds different from yours. I know some faces of pain which will helpfull to men to understand and identify womenhood so I will write not because I want to write because I want all men to read.

பெண்களே! உங்கள் இரும்பு கோட்டையின் கதவுகளை கொஞ்சம் தகர்த்திக்கொள்ளுங்களேன் அதில் ஆண்களும் அடைக்கலம் கொள்ளட்டும். சேர்ந்து வாழத்தானே படைக்கப்பட்டோம்!
சேர்ந்தே வலிகளையும் கடந்து வருவோம் !

பெண்கள் ஏன் மாதவிடாய் காலத்தில் அதிகம் கோபம் கொள்கிறார்கள் பெண்ணுக்கே உரித்தான சுண்டுவலி, அதிக உதிரபோக்கு, பால்கட்டு, முலைத்துளையின்மை, முனைமழுங்கிய முலை(flat nipple breast)என சில அடிப்படை விசயங்களை ஆண்கள் வீட்டில் கற்று கொள்ளட்டும்.

என் அன்பு சகோதரர்களே

உங்கள் வீட்டில் பெண்கள்
தனிமை கட்டிலில் தவிக்கையில் தள்ளிச்செல்லாதீர்கள் சேர்ந்தே கடப்போம் எல்லாவற்றையும்!


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here