பெண்களுக்கு அதிகாரமளிப்பதே நாட்டை கட்டமைக்க சிறந்த வழி – பரணி கிருஸ்ணரஜனி

பெண்களுக்கு அதிகாரமளிப்பதே நாட்டை கட்டமைக்க சிறந்த வழி - பரணி கிருஸ்ணரஜனி
“பிரான்சு நாட்டில் குடியேறி வாழும் புலம்பெயர் ஈழத்தமிழரான ஆய்வாளர் பரணிஅவர்கள், இனவழிப்பு போருக்கு பிந்தைய காலக்கட்டத்தில் தமிழ் பெண்கள் மீதும், சிறார்கள் மீதும் நடாத்தப்பட்ட வன்முறைகள் பற்றிய பாரிய ஆய்வை செய்து கொண்டு இருப்பவர் ஆவார்.

பாலியல் வல்லுறுவு என்பது தமிழ் மக்களிடையே பயங்கரவாத பீதியை உண்டு பண்ணும் ஒரு கருவயாக மட்டும் பயன்படவில்லை, அது இன்னும் பல படிகள் மேலே போய், இனவழிப்புக்கான பல உபாயங்களுள் ஒன்றாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதை சுட்டுகிறார் பரணி கிருஸ்ணரஜனி.”

கட்டவிழ்த்து விடப்படும் இந்த வன்முறைகள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றன என்று நமக்கு தெரிந்திருந்தாலும், இதனை கட்டவிழ்த்து விடவேண்டிய மூல காரணம் என்ன என்பதும், எப்படி கட்டவிழ்த்துவிடப்பட்டன என்பது குறித்தும், அப்படி கட்டவிழ்த்துவிடப்பட்டதால் என்ன மாதிரியான சமூக அவலங்களை நாம் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம் என்பது குறித்தும் எந்த விதமான புரிதலும் நம்மிடையே இல்லை.

பெண்களின் மீதான வன்முறையில் கூட இனவழிப்பு நோக்கம் பல கூறுகளை உள்ளடக்கியதாகவே இருக்கின்றது. புலிகளின் படையணியில் இருந்து வீரமாக போரிட்ட பெண்களின் நினைவுகளை ஒட்டுமொத்தமாக மறைக்கச் செய்வது, குடும்ப கட்டமைப்பை தகர்ப்பது, நேர்மறையான பல சமூக மாற்றங்களை நாம் ஆயுதம் ஏந்தி போராடிய காலத்தில் படைத்த நினைவுகளை தகர்ப்பது, போன்ற பலவாறான கூறுகளை பல முனைகளில் இருந்து தகர்ப்பதே இனவழிப்பின் பல கூறுகளாக இருக்கின்றன என்று பார்க்கவேண்டும். பாதிப்புகளை சுமந்து வெம்பும் பெண்களுக்கு குடும்பம் என்ற கட்டமைப்பை ஏற்படுத்த ஈழத்தமிழ் தேசியம் பெரிய அளவில் முயற்சிக்கவேண்டும்.

நம் இனம் சந்திக்கும் இந்த கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை எதிர்கொள்ள நாம் கொடுக்கக்கூடிய குடும்ப கட்டமைப்பே சிறந்த, பாதுகாப்பான எதிர்வினையாக இருக்க முடியும் என்று பெண்ணிய ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி கூறுகிறார்.

சிலர் இதனை பிற்போக்கான சிந்தனை என்று சொல்லி கடந்து போகலாம். இது பெண்ணியத்திற்கே எதிரானது என்ற நிலைப்பாட்டை கூட எடுக்கலாம். ஆனால் எவ்வாறெல்லாம் குடும்பகட்டமைப்பை சீர்குலைக்க இனவழிப்பு அரசு தொடர்ந்து செயல்படுகிறது?, எப்படி அரச இயந்திரத்தை அது பயன்படுத்துகிறது? என்பதும், எப்படி அது திட்டமிட்டு செய்யப்படும் இனவேறருப்பு என்பதையும் கூர்ந்து அவதானித்தவர்களுக்கு மட்டுமே புலப்படும் என்று பரணி கிருஸ்ணரஜனி எடுத்துரைக்கிறார்.

ஒரு சமுதாயத்தின் அடிப்படையே பெண்கள் தாம். அவர்கள் குடும்பம் என்ற கட்டமைப்பில் முக்கியமான ஒரு அங்கம் மட்டுமில்லை, ஒரு இனத்தின் பெருக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் அவர்கள்தாம் தூண் என்ற அடிப்படையில் ஒரு தற்காலிக பொறிமுறையாக இதை முன் மொழிகிறார்.

மே 2009 ஆம் ஆண்டு தமிழர்கள் வன்னி இனஅழிப்பு வதை முகாம்பகளில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும்போது, நம் மண்ணை ஆக்கிரமித்த சிங்கள படையினர் பெண்களை தனியாக பிரித்தெடுத்தது நினைவில் இருக்கலாம். ஆயுதம் ஏந்தி போரிட்ட பெண்களை தனியான சிறைகளில் அடைத்து வைத்தது நினைவிருக்கலாம். இந்த தனியான வதைமுகாம்களில் அப்பெண்கள் விசாரணை என்ற பெயரில் கொடுமை படுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.

இந்த உண்மைகளை தற்சார்புடைய உரிமைகள் குழுவான, சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் முறையாக ஆவணப்படுத்தியுள்ளது. இந்த குழு ஐநா அவையால் நியமிக்கப்பட்ட “Panel of Experts on Accountability in Sri Lanka” குழுவின் மூன்று உறுப்பினர்களுள் ஒருவரான யாஸ்மீன் சுக்கா என்ற வல்லுனரால் நடத்தப்படுவது.

இந்த குழுக்கள் ஈழத்தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை இனவழிப்பு என்று நியாயமாக வகைப்படுத்துமா என்று தெரியாது. ஆனால் இப்படியான வதைமுகாம்கள் இலங்கையில் இருக்கின்றன என்பதையும், தமிழ்ப்பெண்களுக்கு எதிராக பாலியல் வல்லுறுவு என்ற கொடுமையான ஆயுதத்தை பயன்படுத்தினார்கள் என்பதையும் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள் என்று எடுத்துரைக்கிறார் பரணி.

இனவழிப்பு நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் முதல், அதன் பிறகு உயிர்பிழைத்து வாழ்வதில் ஏற்பட்ட சிக்கல்கள் வரை மொத்தமாக 35-லிருந்து, 40 வகையான உளவியல் சிக்கல்களில் எமது பெண்கள் சிக்கியிருக்கிறார்கள் என்று பட்டியலிடுகிறார் பரணி. புலம்பெயர் தமிழ்ப் பெண்கள் மத்தியில் கூட குறைந்தபட்சம் 10 வகையான உளவியல் சிக்கல்கள் படிந்து இருப்பதாக அவர் மேலும் கூறுகிறார்.

மேலும் புலிகள் தோல்வி மனப்பான்மைக்குள் எப்படி தங்களை ஒருபோதும் உட்புகுத்திக்கொள்ளவில்லை என்பதையும் குறித்து நீண்ட ஆய்வு செய்து வருகிறார் புலம் பெயர் ஆய்வாளரான பரணி.

இப்படியான தோல்வி மனப்பான்மைக்குள் புலிகள் மே 2009-ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதி யுத்தத்தில் சிக்கிக்கொண்டனர் என்று புலிகளின் அனைத்து எதிரிகளும் அவர்களுக்கு எதிராக திட்டமிட்ட பரப்புரையை மேற்கொள்ளும் பொதுப்போக்கிற்கு எதிராகவே இந்த ஆய்வு என்கிறார் பரணி.

பிரபாகரன் தலைமையிலான புலிகள் தங்களது கோட்பாடுகளை எவ்விதத்திலும் விட்டுக்கொடுக்காது சரணடையாமல் மறத்துடனே போரிட்டனர் என்று வாதிடுகிறார்.

இவ்வாறான ஆய்வுகளை மேற்கொள்ளும் பரணி கிருஷ்ணரஜனி போன்ற ஆய்வாளர்களின் எழுத்துகள் ஈழத்தமிழர்களின் அரசியல் போக்குகளை தீர்மானிப்பதாக அமையவேண்டும். அவ்வாறான அரசியல் போக்குகள் நிகழ்காலத்திலும் சரி, எதிர்காலத்திலும் சரி, எந்தகட்டத்திலும், எந்தவிதமான சமரசங்களுக்கும் இடங்கொடுக்காமல், தங்களது அடிப்படை கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காமல் அமையவேண்டும்.

முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு துணையாக இருந்த எல்லா சர்வதேச சக்திகளும், அதே சக்திகள் புலம்பெயர்ந்த தமிழர்கள் மீது தொடர்ந்து தொடுக்கும் எதிர் அரசியல் போக்குகளையும் தோல்வியுறச் செய்யும் முகமாக இந்த ஆய்வுகளின் வெற்றி அமைய வேண்டும்.

நன்றி : தமிழ்நெற்.

(பெண்ணிய ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி அவர்களின் Women and Genocide – An assessment involving psychology, sex, violence, family and culture ஆய்வு குறித்து தமிழ்நெற் ஊடகத்தில் வெளிவந்த அறிமுகத்தின் தமிழாக்கம் இது.)

மூல இணைப்பு : https://www.tamilnet.com/art.html?catid=79&artid=38879

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here