புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை பொறுத்தவரை, பாஜகவுக்கு இதயம்தான் இல்லையெனில் மனசாட்சியும் இல்லை..


இந்த கட்டுரையை தேசத்தின் குரலுக்காக மொழிபெயர்த்தவர் முனைவர் சபுர் அலி.

இந்த வார தொடக்கம் நம் அனைவருக்கும் ஒரு கொடிய செய்தியை கொண்டுவந்தது. பதினேழு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவுரங்காபாத்திற்கு அருகில் சரக்கு இரயிலுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தனர். அவர்கள் மகாராஷ்டிராவிலிருந்து மத்திய பிரதேசத்தை நோக்கி நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள தங்களது கிராமங்களை அடைய  நடந்து கொண்டிருந்தனர். சோர்ந்துபோன அவர்கள் இரயில்வே தண்டவாளத்தில் அயர்ந்து தூங்கினர். அசதியின் காரணமாக இரயில் வரும் சத்தம் அவர்களின் காதுகளில் விழாமல்போனது. 

இந்த துயரமான அத்தியாயம் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது மத்திய அரசு காட்டிய பல வார கால அக்கறையின் உச்சக்கட்டமாகும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் நெடுஞ்சாலைகளில் கண்களில் பசி மற்றும் காலில் கொப்புளங்களுடன் நடந்து செல்வது போன்ற இதயத்தைத் உருக்கும் காட்சிகள் எந்த மனசாட்சியையும் அசைக்க போதுமானதாக இருந்தன. எது எப்படி இருப்பினும், மத்திய அரசு தனது கண்களை முடிக்கொண்டு அவர்களை பார்க்க மறுத்தது. 

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதற்கும், கட்டுப்பாடுகள் தொடங்கிய காலத்திற்கும் இடையில், விமானங்களில் ஏறி தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப வசதியாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் மற்ற குடிமக்களுக்கு, நான்கு மணிநேர அவகாசம் மட்டுமே கொடுக்கப்பட்டு  21 நாள் ‘இயல்பு வாழ்க்கை முடக்கம்’ அறிவிக்கப்பட்டது.  இந்த பாரபட்சத்திற்கான பின்புலன் பற்றி யாராவது பதிலளிக்க வேண்டும். இந்த திடீர் அறிவிப்பு இலட்சக்கணக்கான மக்களுக்கு பீதியையும் வீடு செல்வதற்கு ஏதேனும் ஒரு வழியைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தையும் ஏற்படுத்தியது.   
ஒரே இரவில் அனைத்து வேலைகளும் முடக்கப்பட்டுவிட்டதால், தொழிலாளர்கள் வறிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஓய்வுக்கு கூட இடமில்லாத அத்தகைய தொழிலாளர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை மட்டுமே கொண்டிருந்தனர்.

ஆனால் பல வாரங்களாக, இதுபோன்ற வேண்டுகோள்கள் செவிடன் காதில் விழுந்த சங்கு சத்தத்தை போன்று இருந்தது. மத்திய அரசு இந்த களநிலவரத்தை மறைத்து உச்சநீதிமன்றத்தில் மார்ச் 31 அன்று சோலிசிட்டர் ஜெனரல் மூலமாக ‘தெருக்களிலும் நெடுஞ்சாலைகளிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இல்லை’ என்று கூறியது.   நாடு முழுவதிலிருந்தும் அறிக்கைகள் மற்றும் படங்கள் புலம்பெயர்ந்தோர் மக்கள் பட்ட துன்பங்களை பற்றி பேசிய பிறகும் சாலிசிட்டர் ஜெனரலின் வார்த்தைகள் இங்கு  தீவிரமாக நம்பப்படுகின்றன.

திரிணாமுல் காங்கிரஸைப் பொறுத்தவரை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை எங்களை மிகவும் கவலை கொள்ள செய்துள்ளது. துன்பங்களை அனுபவித்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அல்லது ஒப்பந்த தொழிலாளர்களை நாங்கள் அழைக்க விரும்புவதால் ‘இயல்பு வாழ்க்கை முடக்கம்’ தொடங்கிய முதல் நாளிலிருந்தே அதற்கு தேவையான வேலைகளை செய்து கொண்டு இருக்கிறோம். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலை உட்பட பல்வேறு விஷயங்களில் தேசிய மற்றும் மாநில அளவில் கடந்த சில வாரங்களாக எங்கள் கட்சி பல டிஜிட்டல் பத்திரிகையாளர் சந்திப்புகளைச் செய்துள்ளது. மேற்கு வங்கத்திலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் மாநிலங்களில் கவனித்து கொள்ள  வேண்டும் என்று கோரி மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி 18 மாநில முதல்வர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதே போல மேற்கு வங்காளத்தில் சிக்கி கொண்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் போதுமான அளவு கவனிக்கப்படுவார்கள் என்றும் அவர் அம்மாநில முதல்வர்களுக்கு உறுதியளித்தார்.

வங்காளத்தில் உள்ள திரிணாமுல் அரசாங்கம் மற்ற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் சுமார் 100,000 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ .1,000 நிதி உதவி வழங்க ஸ்னேஹர் போரோஷ் திட்டத்தைத் தொடங்கியது. வங்காளத்தின் ஒப்பந்த தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் இரண்டு இரயில்கள் சில நாட்களுக்கு முன்பு மாநிலத்தை அடைந்தன. அடுத்த சில நாட்களில், இன்னும் பலரும் தங்களது மாநிலங்களுக்கு திரும்புவதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து இரயில்களில் ஏறுகிறார்கள். மொத்தத்தில், சுமார் 80,000 பேர் மீண்டும் வங்காளத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு மம்தா பானர்ஜி உறுதியளித்தபடி, எங்கள் ஹீரோக்களை மீண்டும் வரவேற்பதை அவர் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிடுவார். 

மற்ற நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீண்டும் அழைத்து வர பாஜக அரசு பட்டய விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது. இது பாராட்டப்பட வேண்டும், ஆனால் சமூகத்தின் ஏழ்மையான மற்றும் பலவீனமான பிரிவுகளை சார்ந்த பிற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த இலட்சக் கணக்கான மக்களை அவர்கள் சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும் என்ற குரல்கள் எழுந்த போது, அது பற்றி  ​​பாஜக அரசுக்கு எந்த தீர்வும் இல்லை, அதனை கருணையோடு அணுக இதயமும் இல்லை. இப்போக்கு பற்றி எதிர்க்கட்சிகளாலும், சிவில் சமூகத்தினாலும் கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்ட  பின்னர், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்ப இரயில்களைத் தொடங்க மத்திய அரசு முடிவு செய்தது.  இங்கு ஒன்றை நாம் கவனிக்க வேண்டும், மே 1, தொழிலாளர் தினத்தன்று இரயில் சேவையை மத்திய அரசு தொடங்கியது. இதன் மூலம் தங்களுக்கு தொழிலாளர்கள் மீது அக்கறை உள்ளது என ஒரு பிம்பத்தை ஏற்படுத்த பாஜக அரசு முயற்சிதது.
இங்கு நாம் நினைவில் வைக்க வேண்டியது யாதெனில் ‘இயல்பு வாழ்க்கை முடக்கம்’ தொடங்கப்பட்ட ஐந்து வாரங்களுக்குப் பிறகே இரயில் சேவை தொடங்கப்பட்டது என்பதுதான்.

அரசின் அறிவிப்பு நம்பிக்கையை கொடுக்கிறது என்று எண்ணிய புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் கண்கள் இரயில் நிலையங்களில் விரக்திக்கு திரும்பின. அவர்கள் தங்கள் இரயில் டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்பதை உணர்ந்தார்கள். முழு இரண்டாம் வகுப்பு கட்டணம் தவிர, ஒரு பயணிக்கு ரூ .50 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இரயில் டிக்கெட்டுகள் சராசரியாக 700-800 ரூபாய் வரை இருந்தன, மேலும் அவர்கள்  இரயில் நிலையங்களை அடைய பஸ் கட்டணமும் செலுத்த வேண்டி  இருந்தது.  இதற்கு இடையில் தங்கள் பயணத்தை தொடர தொழிலாளர்கள் மருத்துவ சான்றிதழையும் பெற வேண்டியிருந்தது.  ஒவ்வொரு புலம்பெயர்ந்த தொழிலாளியும் சுமார் 1,200 ரூபாய் செலவிட வேண்டியிருந்தது. அவர்களில் பெரும்பாலோர் பல வாரங்களாக ஒரு ரூபாய் கூட சம்பாதிக்காதவர்கள்.

விரக்தியில் இருக்கும் தொழிலாளர்களிடம் டிக்கெட்டின் விலையில் 85 சதவீதத்தை மத்திய அரசு செலுத்துவதாக கூறி தொழிலாளர்கள் மீது அரசுக்கு  அக்கறை  உள்ளது போன்று வடிவமைக்க முயற்சிகள் நடந்தது. உண்மையில் இதன் பொருள் என்ன? ரயில்வே எப்போதும் ஒரு பயணச்சீட்டிற்கு 45 சதவீத பணத்தை மானியமாக வழங்குகிறது. இது சரக்கு போக்குவரத்து குறுக்கு மானியமாகும். சமூக விலகல்  மற்றும் ஒரு பெட்டியில் குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் பயணிப்பதன் காரணமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் டிக்கெட்டுகளுக்கு அந்த கற்பனை மானியம் 85 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஆனால் உண்மையான டிக்கெட் விலையில் எந்த சலுகையும் இல்லை. அதற்கு பதிலாக, மத்திய அரசு சுமைகளையும் உண்மையான கட்டண வசூலையும் மாநில அரசுகளுக்கு மாற்ற முயற்சித்தது. மே 2 ம் தேதி, ரயில்வே அமைச்சகம் ஒரு கடிதத்தை வெளியிட்டது: அதில் கூறப்பட்டது யாதெனில்  “உள்ளூர் மாநில அரசு அதிகாரிகள் தாங்கள் அனுமதித்த பயணிகளுக்கு டிக்கெட்டுகளை ஒப்படைத்து டிக்கெட் கட்டணத்தை வசூலித்து மொத்த தொகையை இரயில்வேவிடம் ஒப்படைக்க வேண்டும்.”

இந்திய ரயில்வே ஒரு பொதுத்துறை நிறுவனம். இது பொருளாதார ஆணை அதிகாரம் மற்றும் ஒரு சமூக பொறுப்பு இரண்டையும் கொண்டுள்ளது. 2015ஆம் ஆண்டு  நேபாள பூகம்பத்தின் போது, ​​வெளியேற்றப்பட்டவர்களுக்கு சிறப்பு இரயில்களை ஏற்பாடு செய்து அவர்களுக்கு இலவச பயண வசதிகளை அது  வழங்கியது. ஆனால் இந்த கோவிட்-19 நேரத்தில் என்ன நடந்தது? PM CARES நிதி மார்ச் 28 அன்று அமைக்கப்பட்டது, இது கோவிட் -19 தொற்றுநோய்க்கு அர்ப்பணிக்கப்பட்டது. (வசதியாக , இது தணிக்கை எல்லைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது, ஆனால் அதைப் பற்றி இன்னொரு நாள் விவாதிப்போம்.) PM CARES இன் கீழ் சேகரிக்கப்பட்ட நிதியில் என்ன செய்யப்பட்டுள்ளது? புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ரயில் பயணங்களை ஆதரிக்க இந்த பணத்தில் சிலவற்றை ஏன் பயன்படுத்த முடியாது?

கோவிட் -19க்கு எதிரான நடவடிக்கை தேசிய கூட்டு முயற்சி என்றும் இது அரசியலுக்கு நேரம் இல்லை என்றும் பிரதமர் பலமுறை கூறியுள்ளார். திரிணாமுலும் மம்தா பானர்ஜியும் முற்றிலும் ஒப்புக்கொள்கிறார்கள் மற்றும் தொற்றுநோயை ஒரு பக்கச்சார்பற்ற அரசியலில் இருந்து பிரிப்பதன் மூலம் அதை சமாளிக்கும் சவாலில் பங்கேற்றுள்ளனர். நாம் அனைவரும் சம பங்குதாரர்கள், நாம் ஒன்றாக வேலை செய்ய வேண்டும். இவை உன்னதமான எண்ணங்கள், ஆனால் வெளிப்படையாக பாஜக எங்களை வீழ்த்தியுள்ளது. ஏதேனும் நல்லது நடக்கும்போதெல்லாம் நற்பெயரை வாங்குவதற்கும், ஏதேனும் விபத்து அல்லது தோல்விகளுக்கு மாநிலங்களை குற்றம் சாட்டுவதற்கும் இந்த முனைப்பை மத்திய அரசு காட்டியுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினையும் அத்தகைய ஒன்றே. தயவுசெய்து திரு பிரதமரே, நீங்கள் உயர்ந்த தலைமைத்துவத்தைக் காட்ட முடியுமா? அல்லது நீங்கள் ஒரு விளம்பர பிரதம அமைச்சரா!

பின்குறிப்பு, இந்த கட்டுரையை நான் பத்திரிக்கைக்கு அனுப்பும்போது, ​​உள்துறை அமைச்சர் 45 நாட்களுக்குப் பிறகு வெளிவந்த செய்தியை நான் கையில் எடுக்கிறேன். தேசிய சுகாதார அவசரத்தின் நடுவில் அவர் செய்யும் முதல் விஷயம் என்ன? அவர் எழுதிய ஒரு கடிதம் வெளியே வருகிறது  (பொய்களால் சிக்கியது). அது தெளிவாக கூறுகிறது இந்த இக்கட்டான தருணத்திலும் கூட அவர் தனது முக்கிய எதிரியான வங்கத்தை தாக்குவது பற்றியே சிந்திக்கிறார். அது எனது அடுத்த பத்தியின் பொருளாக இருக்கும்.

(Derek O’Brien, MP, leads the Trinamool Congress in the Rajya Sabha)
(எம்.பி., டெரெக் ஓ பிரையன், மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸின் தலைவராக உள்ளார்)