புதிய கல்விக் கொள்கை- புரிதல்களும், புரட்டுகளும்…… வளவன்.

சுற்றுசூழல் மசோதா மீதான பொது வெளி விவாதங்கள், மறுப்புகள், விமர்சனங்கள் உச்சத்தில் இருந்த நேரத்தில், ‘தேசிய கல்விக் கொள்கை’ வரைவு 2019 மத்திய அமைச்சரவையினால் ஒப்புதல் வழங்கப்பட்டு அமலுக்கு வருவதற்கான ஆயத்தங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆளும் தரப்பு கல்வியியல் சீர்திருத்தம், மாணவர்களுக்கு இனிப்பு என்று சிலிர்க்க, மாற்று தரப்பினர் எதேச்சதிகார திணிப்பு என்று கருத்தியல் போர் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கொள்கையை கூராய்வு செய்தல் அவசியமாகிறது. திரு. கஸ்தூரி ரங்கன் அவர்களின் தலைமையிலான குழு அளித்த அறிக்கை, மத்திய அரசினால் ஆராயப்பட்டு, அதன் கரு மாத்திரம் சுருக்கி கொள்கை முடிவாக வெளியிடப்பட்ட 60 பக்க அறிக்கை தான் கூராய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. இனி கொள்கையும், நம்முடைய சந்தேகங்களுமாக ஒரு உரையாடலினைப் போல அமைக்கிறோம்‌.

வரைவு: நியாயமான (‘Equity’ – இட ஒதுக்கீட்டின் அடிப்படைத் தத்துவம்) முறையில் உயர்தர கல்வி எல்லா மாணவர்களுக்கும் அவர்களின் சமூக, பொருளாதார பின்புலம் கருதாமல் வழங்கப்படும். (கருத்து : 0.4, பக்கம் 3)

கேள்வி: சமூக பின்புலம் பாராவிட்டால் எஸ்.சி/ எஸ்.டி/ ஓ.பி.சி இட ஒதுக்கீடு இல்லை; பொருளாதார பின்புலம் என்று வரும் பொழுது ‘க்ரீமி லேயர்’ மறுப்பு மற்றும் ஏழை உயர்சாதியினருக்கான 10% என்ற இட ஒதுக்கீடு என்பதும் இல்லை எனலாமா.
‘Equity’ – எனும் சொல்லை கொள்கை விளக்க முதல் பக்கத்தில் வைத்துக் கொண்டு, 60 பக்கத்தில் ஒரு இடம் கூட இட ஒதுக்கீடு (Reservation) எனும் வார்த்தையே இல்லை என்பது தான் நகை முரண். (பி.கு 1: முதலிரண்டு பக்கங்களில் அரசின் சின்னமும், பொருளடக்கமும் உள்ளபடியால் இது மூன்றாம் பக்கமாயினும் கொள்கை குறிப்பில் முதல் பக்கமே; பி.கு 2 : Reservation இல்லை ஆனால் சமஸ்கிருதத்தை ‘Preservation’ செய்வதன் அவசியம் தொடர்ந்து வலியுறுத்தப் பட்டுள்ளது )

வரைவு: திருவள்ளுவர் போன்றவர்கள் இந்திய கல்வி முறையினால் உருவாக்கப் பட்டவர்களே (0.7, பக். 4)

கேள்வி: அவர் யாரிடம் கல்வி பயின்றார் என்பதற்கான சான்றுகள் இது வரை இல்லை; கல்வி பயின்றாரா, கேள்வி ஞானமா அல்லது சுயம்புவாக என்று எந்த குறிப்புகளும் இல்லை. அன்றைய கல்வியாளர்கள், குறள் வெண்பாவை ஒரு பொருட்டாய் மதியாது, பின் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றப்பட்டதாய் உள்ள செவி வழிச் செய்தி தான் அவர் வளர்த்தெடுக்கப் பட்டதா.?

நாங்கள் உலகப் பொதுமறை தந்த வள்ளுவரை சொல்லுகிறோம்; நீங்கள் அய்யருக்கும், தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கும் பிறந்ததால் அனாதையாய் வீசி எறிந்ததாய் கட்டவிழ்த்து விட்டு, அண்மையில் காவியுடன் பூணூல் மாட்டி விட்ட வள்ளுவரை சொல்கிறீர்கள்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறவர் பூணூல் மாட்டுவாரா? ; அரை வேக்காட்டு அபத்தங்கள்.

வரைவு: வரலாற்றுப் பூர்வமாக விளிம்புநிலையிலுள்ள, போதுமான அளவு பிரதிநிதித்துவப்படுத்தப் படாதவர்களுக்கும் உயர்தர கல்வி தரப்பட்டு அவர்கள் பள்ளியில் சேர்வதும், படிப்பதும் உறுதி செய்யப்படும் ( 0.9, பக். 4).

கேள்வி: இட ஒதுக்கீடு இல்லை; ஆனால் படிக்க வசதி ஏற்படுத்திக் தருவீர்கள், ஓரிலக்கமோ, ஈரிலக்கமோ நீங்களாக பார்த்து தருவதை, தந்தால் பெற வேண்டும்;
16/07/2020 வெளியான தமிழக 12ம் வகுப்புத் தேர்வில் கிருஷ்ணவேணி எனும் மாணவி 73 ஆண்டுகால சுதந்திர இந்தியா வரலாற்றில் இன்றுவரை ஒரே ஒருவர் கூட பத்தாம் வகுப்பு படித்திராத கிராமத்தில் முதல் முதலாக 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக வந்திருக்கிறாரே, அவர் ஒரு கிராமத்தின் நம்பிக்கை நாற்று; ஒரு‌ இனத்தின் கல்வி, வேலை, சமூக உரிமைக்கான கீற்று. இவருக்கான உயர்கல்வி இடம் இன்றைய இட ஒதுக்கீடு உரிமையாக உறுதிப்படுத்தியுள்ளது. சட்டம் என்ற ஒன்று இருக்கும் பொழுதே, ஓ.பி.சி மருத்துவ இடங்களை லபக்கி, விழுங்கி, ஏப்பம் விட்டு செரித்த, தகுதியும் திறமையும் உள்ள கள்வர்கள், இட ஒதுக்கீடு இல்லாமல் நீங்களாக பார்த்து தருவது எனும் பொழுது எத்தனை நேர்மையாக இருப்பார்கள்‌. அறிக்கை வெள்ளைத் தாளில் இல்லை ; வெள்ளை நூலில் பிணைக்கப்பட்டுள்ளது என்க.

வரைவு: உள்ளூர் மற்றும் உலக தேவைகளுக்கானவர்களாக, பல்வகைப்பட்ட பண்பாடும் , கலாச்சாரமும் கருத்தில் கொள்ளப்பட்டு, மாணவர்கள் இந்திய முறை மற்றும் நடையில் வளர்த்தெடுக்கப்படுவார்கள் (0.10, பக். 4)

கேள்வி: பன்மைத்தன்மை கருத்தில் கொள்ளும் அறிக்கையில் தான் சமஸ்கிருதம் எனும் சொல் 10 இடங்களிளும், தமிழ் 3 இடங்களிலும் இடம் பெற்றுள்ளதோ ? 2020 பட்ஜெட்டின் படி, 29 கோடி ரூபாய் ஐந்து செம்மொழிகளுக்கும், 643.84 கோடி ரூபாய் சமஸ்கிருதம் என்ற ஒற்றை மொழிக்கு. 22 மடங்கு கூடுதலாக தூக்கிப் கொடுப்பதுதான் பன்மைத் தன்மை பேணல் என்பது எத்தனை அருமை.
இந்திய நடை மற்றும் முறை என்பதற்கு இப்படியாக ஒன்றை தூக்கிப் பிடித்து, மற்றதை கீழ்மை செய்தல் என்பது என பொருள் கொள்ளலாமா?

வரைவு: சிந்தித்து செயலாற்றும் மாணவர்களை உருவாக்கி, அரசியலமைப்பு சொல்கிற நியாயமான (Equitable), எல்லாரையும் உள்ளடக்கிய (Inclusive), பன்மைத்தன்மையிலான (Pluralistic) சமூகம் கட்டமைக்க அவர்கள் உறுதுணை செய்யச் செய்வோம் (0.12, பக். 5)

கேள்வி: இது உங்களாலேயே மறுக்கப்பட்டு விட்டது; பக்கம் 34, கருத்து 11.7 ல் மாணவர்களுக்கு பண்புகளாக சத்தியம் (Truth) , சாந்தம் (Peace), அகிம்சை (Non violence), தர்மம், காதல் (Prem), குடிமக்கள் பண்புகள் (Citizenship values) போன்றன போதிக்கப்படும் என்கிறது. அரசியலமைப்பு Fundamental Rights – அடிப்படை உரிமையாக பேசுகிற சுதந்திரம் (Liberty), சமத்துவம்(Equality) , சகோதரத்துவம் (Fraternity) என்பன இல்லாமல் உள்ளடக்கியமை (Inclusiveness) எப்படி வரும். தர்மம் என்கிறீர்கள் , தர்மம் என்பது நீதி அல்ல, சுரண்டல்‌(“No dharma is a Justice, it’s exploitation”). இந்தியா கட்டப்பட்டது மனு தர்மத்தின் மீதும், சாணக்கிய தர்மத்தின் மீதும் இல்லை, அரசியலமைப்பின் மீது. தர்மங்கள் என்பன மற்றவரை சுரண்டுவதற்கான காரணங்களை நியாயப்படுத்தும் உளறல் தொகுப்பு; ‘தர்மங்கள் அறம் அல்ல; தர்மங்கள் நீதியும் அல்ல’ ; எம்‌ பிள்ளைகளின் மீது உங்கள் கருத்தியல் திணிப்புகள் வேண்டாம்.

வரைவு: பலதரப்பட்ட (Multi disciplinary) மற்றும் முழுமையான (holistic) கல்வியறிவு அளிக்கப்படும்.

கேள்வி: பல தரப்பட்ட என்பது என்ன? எந்தெந்த படிப்புப் பிரிவுகள் எல்லாம் ஒருங்கிணைந்து பலவாகும்? ‘பல்துறை’ அறிவு எனும் கருத்து ஏற்புடையதாயினும், உள்ளடக்கங்கள் சொல்லப்படாத வரை எப்படி ஏற்பது? ; வெள்ளி என்று செங்கல் அனுப்பப்படாதென யார் உறுதியளிப்பார். இதுவரை சொல்லப்படாமல் இருப்பதே உள்ளீட்டு அரசியல் எனலாமா?

வரைவு: தரம் வாய்ந்த கல்வி மற்றும் வளர்ச்சி அடைய, உச்சபட்ச தரமான ஆராய்ச்சி படிப்புகளை ஊக்குவித்தலே முதன்மை காரணியாகும். (0.13, பக். 5)

கேள்வி: 2008ல் பட்ஜெட்டில் 0.86% ஆக இருந்த ஆய்வு நிதி (அதுவே மிகக் குறைவு, அமெரிக்கா – 2.8% , சீனா 2.1% , தென்கொரியா 4.2%) இப்போது 0.67% ஆக வைத்து இருப்பவர்களுக்கான வலியுறுத்தலோ இது.

வரைவு: அங்கன்வாடிகள், ஆரம்ப குழந்தைகள் நலம் மற்றும் கல்வி நிலையங்கள் ஆக்கப்பட்டு ( Early Childhood Care & Education Institutes) 2030 முதல் குழந்தைகள் முதலாம் வகுப்புக்கு தயாராக உள்ளனரா என்று ஆய்வு செய்யப்படும் (1.1, பக் 6)

கேள்வி: முதல் வகுப்பு நுழைவிற்கான தகுதி தேர்வு ? ; எந்தெந்த காரணிகள் அடிப்படையிலான ஆய்வுகள், செய்பவர்கள் யார் ? மூன்று வயது பிள்ளைகளை அங்கன்வாடிக்கு அழைத்து வர சோதனை இல்லை; ஆனால் வெளியேற்ற ஆய்வுகளும் தேர்வுகளுமா ? M.B.B.S க்கு முன்பே பால்வாடி (அ) அங்கன்வாடிக்கான எக்ஸிட் டெஸ்ட் (EXIT TEST). தேசிய அளவிலான நிறைவுத் தேர்வுதானே ? ஒரே நாடு ஒரே தேர்வு திட்டமா, வாழ்த்துகள்.,

வரைவு: 3-6 வயதிலான பிள்ளைகளுக்கு சமூக குணங்கள், உணர்வுகள் கையாளல் மற்றும் நெறிகள் கைக்கொள்ளல் ( Socio – emotional ethical development) ஆகியவை ஊட்டப்படும். கலைகளாக நாடகம், பொம்மலாட்டம் நிகழ்த்தப்படும்.

கேள்வி: டீன்-ஏஜ் / வளரிளம் பருவத்தில், இரண்டாம் நிலை உடல் வளர்ச்சி அடைகிறவர்களுக்கு மனவெழுச்சி கையாளும் கல்வியை தராமல் 3 -6 வயது பிள்ளைகளை படுத்துதல் குழந்தைமைக் கொலை. நாடகம், பொம்மலாட்டம் என்று சமயவியல் (theology), புராணப் புரட்டுகளைப் போட்டு எங்கள் பிள்ளைகளை அறிவு பயன்படுத்தா மூடர்களாக்கி முடக்கும் சதி வேண்டாம்.

வரைவு: 0-3 வயது வரை குழந்தைகள் உள்ள வீடுகளில் பெற்றோர்கள் பிள்ளை வளர்ப்பது குறித்து என்.சி.இ.ஆர்.டி (NCERT) வழிமுறைகளை விரைவில் வெளியிடும் (1.3, பக். 6)

கேள்வி: என் தட்டுல என்ன இருக்கனும் என சொன்னீர்கள் (மாட்டிறைச்சி விவகாரம்), நான் யார் கூட முறையான சம்மதத்துடன் உடலுறவு வைக்கனும் என சொன்னீர்கள் (சட்டப்பிரிவு 377 வழக்கில் அரசு தரப்பு அபத்த வாதங்கள்), இப்ப பிள்ளை வளர்க்கவும் சொல்லித் தருகிறீர்களா ? வேலைக்குப் போகிற பெற்றோர், காப்பக பிள்ளைகள், புலம் பெயர் தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகள் இவர்களெல்லாம் என்ன பண்ணுவாங்க. அடுத்து என்ன அப்பா, அம்மாவாக பிள்ளை பெற்றுக் கொள்ள தகுதி, திறமை (Merit and Ability) சோதனையா?
முடிந்தால் பெண் கரு உண்டாகி முதல் மாதம் தொடங்கி, பிரசவ வரையிலான உடல் மற்றும் உளவியல் நலம் குறித்தவற்றை உரிய ஆய்வறிஞர்கள் கொண்டு அறிவியல் பூர்வமாக ஆய்ந்து, நலம் பேணும் வழிமுறைகளை கையேடாய் ஒவ்வொரு பெண்ணுக்கும், குடும்பத்தாருக்கும் கொண்டு சேர்ப்பதை மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் மூலமாக செய்யுங்கள். பாலியல் கல்விக்கு வழியில்லை; கணவனால் கட்டாயப்படுத்தப்பட்ட வன்புணர்வினால் பிறந்த பிள்ளையை வளர்க்க சொல்லி தருவதற்கு பதிலாக, வற்புறுத்தலற்ற பூரண சம்மதத்துடனான உடலுறவினைப் (Consensual Sex) பற்றி திருமணமான கணவன்களுக்கு கொண்டு சேருங்கள்.

வரைவு: மாணவர் ஆசிரியர் விகிதம் நாடு முழுவதும் 30:1 , சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளில் 25:1 ஆக காலி பணியிடங்கள் வெகு விரைவில் நிரப்பப்படும் (2.3, பக். 8)

கேள்வி: காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு என்ன அடிப்படை? மாநில அளவிலான தேர்வா அல்லது தேசிய அளவிலானதா? இட ஒதுக்கீடு குறித்த சமிக்ஞையே இல்லையே.

வரைவு: உள்ளூர்களில் வசிக்கிற பயிற்சி அளிக்கப்பட்ட தன்னார்வலர்களைக் கொண்டு‌ பிள்ளைகளுக்கு 1:1 என்கிற அளவிலான கல்வி அளிக்க மாநில அரசுகள் சோதனை செய்ய வேண்டும் (2.5 , பக். 8)

கேள்வி: அங்கன்வாடிகள் 10 பிள்ளைகள், 10 ஆசிரியர்களோடு இருந்து புழங்குகிற அளவிற்கு இட வசதி கொண்டனவா ? தன்னார்வலர்கள் என்றால் எப்படி ? பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பில் ‘சேவா பாரதி’ என ஊடுருவிய காவியினரைப் போலவா ? அவர்களுக்கான பயிற்சி காக்கி அரைக்காற்ச்சட்டையுடனா என்பதனை விளக்குதல் அவசியம்.

வரைவு: மதிய உணவினைப் போல பள்ளிகளில் சத்தான காலை உணவும் வழங்கப்படும் ( 2.7, பக். 9)

கேள்வி: மதிய உணவுத் திட்டத்தில் தன்னார்வ அமைப்பு எனும் பெயரில் புகுந்து, மத நம்பிக்கையினால் பூண்டும், வெங்காயமும் சேர்க்காமல் சோறு போட்ட உணவுப் பண்பாட்டு புல்லுருவிகளிடம் இந்த திட்டமும் போகுமா ? ஐந்தாம் வகுப்பு படிக்கும் என் வீட்டுப் பிள்ளைக்கு வெங்காயமும் பூண்டும் சேர்த்தால் காம உணர்ச்சி வருமென கவலையா ? உங்கள் நிறுவன துறவி/ சாமியார்மார்களோடு அதனை நிறுத்திக் கொள்ளுங்கள்.

வரைவு: 2035 ல் மேல்நிலைப் பள்ளிகளில் 100% மொத்தப் பதிவு விகிதம் அடைய இலக்கு (இடைநிற்றல் இல்லாமல் படிப்பைத் தொடர்தல்) வைக்கப்படும். (3.2, பக். 9)

கேள்வி: நாடு முழுக்க 50% பேர் உயர்கல்வி பயில்பவர்கள் ஆக்க இலக்கு வைத்து 26.3% அடைந்திருக்க, சிக்கிம் (மொத்தம் 16 கல்லூரிகள்) 53.9% , சத்தீஸ்கர் (யூனியன் பிரதேசம் ) 50.9% அடைந்திருக்க, மாநிலங்களின் பெரிய வரிசையில் முதலாக, தேசிய அளவில் மூன்றாவதாக 49% பேர் உயர்கல்வி கற்கிறார்கள் எனும் பொழுது , குறைவான மாநிலங்களின் பிரச்சனைகளை சரி செய்யாமல் ஒட்டு மொத்தத்தையும் கலைத்தல் என்பது எதன் பொருட்டு ?
ஒரு ஐந்து வருடம் ‘தமிழ்நாடு மாடல்’ தேச முழுமைக்கும் முயற்சி செய்யலாமே. இந்தியாவை ‘குஜராத் மாடல்’ ஆக்குவோம் என்றவர்கள், பள்ளி படிக்கும் 5 பேரில் 1 நபர் கல்லூரிக்கு போகிற 20% கொண்ட மாநிலத்தை தான் இத்தனை நாட்களாக வளர்ச்சியின் அடையாளமாய் தூக்கிப் பிடித்தனரோ ? வளர்ச்சி என்பது நாட்டு மொத்த உற்பத்தியில் (GDP) பங்களிப்பது மாத்திரம் இல்லை, மனிதவளக் குறியீடும் சார்ந்தது. 100 ல் 80 பேர் கல்லூரி சேராமல் வேலைக்குப் போகிற மாநிலம் நிதி பங்களிப்பு தருவதில் வியப்பில்லை.

வரைவு: மாற்று கல்வி நிலையங்களாக குருகுலங்கள், பாடசாலைகள், மதராசாக்கள், வீட்டிலிருந்தே பயிலுதல் ஆகியன துவக்கப் பட வேண்டும்(3.6, பக். 10)

கேள்வி: ஒன்றை மட்டும் உறுதி செய்யுங்கள், தாங்கள் யாரென்பதை மறைத்து பொய் சொல்லி சேருகிற கர்ணன்களை உருவாக்குகிற பரசுராமர்களும், மானசீகமாக கற்ற ஏகலைவன்களை ஏய்த்து வாய்ப்பு, வாழ்க்கை பறிக்கிற துரோணர்களும் இருக்க மாட்டார்கள் என்ற உத்திரவாதம் தாருங்கள். இவற்றுக்கான பாடத்திட்டம், பயிற்றுமுறை, பயிற்றுநர் தேர்வு, மாணவர் அனுமதி, உள்கட்டமைப்பு வரையறை, இயக்க அனுமதி, அனுமதி‌ புதுப்பிப்பு, மேற்பார்வை ஆகியன எப்படி நிகழும் என தெளிவு செய்தல் இன்றியமையாதது. மதக் கூடங்களாக மாறிடாமல் காத்தல் முதன்மை.

வரைவு: 10+2 இனி 5+3+3+4 (2+2) என்றாகும். விருப்பப்பட்டால் 10ம் வகுப்புக்கு பிறகு 11ம் வகுப்புக்கு தொடரலாம். 9வது முதல் முழு ஆண்டுத் தேர்வுகள் என்றல்லாது பருவத் தேர்வுகள் (Semester) தேர்வுகள் வைக்கப்படும் (4.1, பக். 10). கலை, உடற்கல்வி, கைவினைப் பொருட்கள் முதலியன பாடங்களாக சேர்க்கப் படும் (4.8, பக். 12).

கேள்வி: பருவத் தேர்வுகள் எனும் முறை மிக நல்ல வழிகாட்டல். இன்றைய கல்விமுறை பயிற்சி வகுப்புகளை (Coaching class) வளர்த்தெடுக்கிறது என்று சொல்லும் நீங்கள் (0.12, பக். 5) யோசிக்க வேண்டியது முழு ஆண்டுத் தேர்வுகளுக்கு மாத்திரம் தான் பயிற்சி வகுப்புகளும், டியூஷன்களும் நடத்தப்படும்‌ எனும் முடிவை எப்படி எடுத்தீர்கள். பொறியியல் கணிதம் (Engineering Maths) பருவத் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்பெடுக்கிறவர்களின் (Semester Tution) வருமானத்தை சரி பார்த்தால் புரிய வரும்‌. 100 மார்க் வாங்க வைக்கிறேன் என்று சொன்ன பயிற்சி நிலையங்கள் இனி O கிரேட் வாங்க வைக்கிறேன் என்று கடை விரிக்கப் போகிறார்கள். நீங்கள் சொல்கிற கலை பாடங்களில் எவையெல்லாம் வரும்.

பரதமும், குறத்தி ஆட்டமும் ஒரே இணையாகக் கொள்ளப்படுமா? கர்நாடக சங்கீதமும், கானாவும் ஒரே தளத்தில் வைத்து விடுவீர்களா ? பாவம்! இத்தனை வயதாகியும் ஒன்றுமே சங்கீதத்தில் தெரியாத ஞானசூன்யம் என்று தானே மார்கழி மாத சங்கீத சபாக்கள் இதுவரை இளையராஜாவை மேடை ஏற்றவில்லை. இரட்டை ஆஸ்கர் ஏ.ஆர்.ரகுமான் கர்நாடக சங்கீதத்தில் ஒரு இம்மியும் அறியாததால் மட்டும்தானே இன்று வரை மார்கழியோத்சவம் மேடை தரவில்லை. கலை, இசை, கைவினைப் பொருட்கள் பயிற்று ஆசிரியர்கள், வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் தந்து பதவிகள் நிரப்பப்படுமா ? இல்லை, இந்திய கிரிக்கெட் அணியைப் போல சிறப்பு தகுதி அடிப்படையில் நிரப்பப் படுமா?

வரைவு: எங்கெல்லாம் முடிகிறதோ, தாய்மொழி (அ) மாநில மொழி வழிக் கல்வியை பயிற்று மொழியாக, குறைந்தது 5ம் வகுப்பு வரை, ஆனால் முடிந்தால் 8 ம் வகுப்பு வரை வைக்க வேண்டும் (4.9, பக். 12)

கேள்வி: பலர் இதனைக் கட்டாயம் என்று சொல்லித் திரிகிறார்கள். இரு மொழிக் கொள்கையைத் தொடர்ந்து திட்டி, ஆங்கிலத்தை கோட்டை விட்டவர்களாக இருக்கலாம். . “Wherever possible, the medium of instruction until at least Grade 5, but preferably till Grade 8” என்பது அந்த வரிகள். ‘Wherever Possible’ என்றால் ‘Compulsory’ என்று அர்த்தமா என்பது ஆக்ஸ்போர்டு டிக்சனரிக்கே வெளிச்சம்.

வரைவு: ஆரம்பம் முதலே (3 வயது தொடங்கி) தாய்மொழி கற்கும் குழந்தைகள், 3ம் வகுப்பில் தாய் மொழி நீங்கலாக இரண்டு மொழிகளில் படிக்கவும் எழுதவும் கற்றிருத்தல் வேண்டும்.

கேள்வி: இரண்டாவது, மூன்றாவது மொழியை கற்பித்தல் என்பது மாநில உரிமை; இந்தி பிரச்சார் சபா போல எல்லா மொழிகளுக்கும் திறந்து வையுங்கள்; தேவைப்பட்டால் வருகிறோம்; பழைய தோற்கடிக்கப் பட்ட பல்லவியை புது ராகத்துல பாடிக்கிட்டு, நேர விரயம் வேண்டாம்.

வரைவு: அட்டவணை எட்டில் உள்ள 22 மொழிகளுக்குமான மொழியாசிரியர்களை அதிக அளவில் மத்திய, மாநில அரசுகள் பணியமர்த்த வேண்டும்.

கேள்வி: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 99 மொழிகள் எட்டாவது அட்டவணைக்கு வெளியே உள்ளன. அவற்றை தாய்மொழியாகக் கொண்டவர்களின் மீது மூன்று மொழிகளைத் திட்டமிட்டு, பகிரங்கமாக ஆளும் அரசு திணிக்கிறது. அந்த மொழிகளை பாதுகாக்கும் பொறுப்பு அரசுகளுக்கில்லையா ? ஒரு நூறு தொல் பழங்குடியினர் மொழிகள் ஒரு கடைசி கிழவனார்/ கிழத்தியின் மரணங்களுடன் மரித்துப் போனதை சமஸ்கிருதத்துக்கு சாமரம் வீசுபவர்கள் வேடிக்கை பார்த்த வரலாறுகள் வழிநெடுகிலும்.

2011 மக்கள் தொகைப் பதிவின்படி 24,821 பேர் சமஸ்கிருத தாய்மொழியினர், அது தேசம் முழுக்க கற்பிக்கப்படும்; ஆனால் திரிபுரி பேசுவோர் 10,11,294; குருக் மொழி தாய்மொழியாகக் கொண்டோர் 19,88,350 ; பிலோடி மொழி பேசுவோர் 1,04,13,637; மொத்தம் 1 கோடி பேர் பேசுகிற மொழியை தேசம் முழுக்க கொண்டு சேர்க்காமல், 25 ஆயிரம் பேருடையதை சுமந்துக்கொண்டு திரிகிறவர்களை கௌரவமாக எப்படி சொல்வது ?
மொத்தம் 87 மொழிகள் சமஸ்கிருதத்தை விட அதிகம் பேர் தாய்மொழியாகக் கொண்டிருக்க, வேதம் ஓதும் மொழி அரசியலின் பெயரால் இப்போது அம்மொழிகள் அழிக்கப்பட ஒரு வரைவுத் திட்டம் தயார். ஒரு நாட்டை அழிக்க சாணக்கியன் (மவுரிய அரசவையில் இருந்ததற்கான வரலாற்று சான்றுகள் தேவை, கட்டுக்கதை என்றும் கூறப்படுகிறது) குடுமியை அள்ளி முடிந்தது போல இப்போது யார் யாருடைய குடுமி இந்த வரைவுக்கு பின்னுள்ளதோ ?

வரைவு: மும்மொழிக் கொள்கையை நிறைவேற்ற ஒவ்வொரு மாநிலங்களும் தமக்குள் மொழிப்பாட ஆசிரியர்களை பகிர்ந்து கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டுக் கொள்ள வேண்டும் (4.10, பக். 12).

கேள்வி: தலைப்பு பன்மொழியியல் (Multi- linguistics) ஆனால், மும்மொழிக் கொள்கை (Three Language Formula) நடைமுறைப்படுத்துதலைத் துரிதப்படுத்தி ஆலோசனைகள். பிரமாதம்.

வரைவு: 6 முதல் 9 ம் வகுப்பு வரை கணிதம், அறிவியல் ஆங்கிலத்தில் , கூடுமான வரை இரட்டை மொழிகளில் (மாநில மொழி, ஆங்கிலம்) நடத்தப்படும் (4.12, பக். 12) ; 6 முதல் 8 வரை இந்திய மொழிகளின் ஒலிப்பு முறைகள், பொது சொற்கள், எழுத்து, இலக்கணம், சமஸ்கிருதம் மற்றும் பிற மொழிகளில் இருந்து பெற்ற சொல்வளம் போன்றவை, தேர்வுகளற்ற பாடங்களாக நடத்தப்படும் (4.15, பக். 13)

கேள்வி: 6 வது படிக்கிற பிள்ளை, இப்பொழுது தான் கணிதமும், அறிவியலும் கற்க தொடங்குகிற நேரத்தில் , 8 வருடங்களாக மொழியோடு படித்தது போதாதென இத்தனை மொழிகளை அறிமுகம் செய்வதால் திணித்தல் என்பது பழகிய மொழிகளூடே நின்று விட்டு, கணக்கு, அறிவியல் பக்கம் பிள்ளைகள் திரும்பா வண்ணம் செய்யும் சதி. அறிவியல் வகுப்புகளை இன்னும் கூடுதல் செயல்பாடு, செயல்முறைகளோடு வடிவமைத்தல் என்பதுதான் இவ்விடம் பிரதானம். பன்மொழிப் புலவர்களுக்கு தனி உயர்கல்வி நிலையம் அமைத்துக் கொள்க, விரும்பியவர் படிப்பர்.

வரைவு: சமஸ்கிருதம் மிக முக்கியமான நவநாகரிக மொழி. அதனை பள்ளியில் எல்லா வகுப்புகள் மற்றும் உயர்கல்வியிலும், தற்காலத் தொடர்புகளோடு சேர்த்து படிக்க வைக்க வேண்டும். மழலையர் பள்ளி (3 வயது) முதல் நடுநிலைப்பள்ளிகள் (14 வயது) வரை எளிமைபடுத்தப்பட்ட, தரமான சமஸ்கிருத கல்வி (Simple Standard Sanskrit – SSS), பின்னால் சமஸ்கிருதத்தால் சமஸ்கிருதம் சொல்லி பயிற்றுவிக்கும் அளவிற்கு அமைதல் வேண்டும் (4.16, பக் 13);
பிற செம்மொழி களை பயிற்றுவித்தலும் அவசியம், அவை இணைய வழி வாயிலாக விருப்பம் இருந்தால் கற்பிக்கப்பட வேண்டும்.

கேள்வி: இதை ‘காவி’ என்க. ஒரு வர்ணத்தை தூக்கிப் பிடித்து அது எல்லா வகையிலும் மேட்டிமை கொண்டதாய் இருக்க உரிய பாதுகாப்பு அளித்துவிட்டு மற்றவை யாவும் அதற்கு கீழ் என வைத்து, அவை ஒரு பொழுதும் எழுந்து மேல் வரா வண்ணம் பார்த்தல் வருணாசிரமம் என்றால் இது என்ன.?
ஆறு செம்மொழிகள். ஒன்று மட்டும் 11 வருடங்கள் மழலைப் பருவம் தொட்டே, 3 வயது முதல், நேரடியாக பக்கத்தில் உட்கார்ந்து, சௌகரியப்படுத்தி வழங்கப்படும்; மற்றவை விருப்பம் இருந்தால், இணைய வழியில் ஒளிப்படத்தை ஓட விட்டு விட்டு எழுந்து வேறு வேலை பார்த்தால் கூட ஓடி முடித்து சான்றிதழ் வாங்குமாறு கற்கலாம். இணைய வழி எனும் பொழுது வயது வரம்பு வைக்கப்பட்டு குறைந்தது 11 என்றாவது நிறுவலாம். என்றால் 7 ஆண்டுகள் கூடுதலாக சமஸ்கிருதம் ஓதப்பட்டு அவர்கள் இன்ன பிற மொழிகளின் தன்மை அறியாமல் இருட்டடிப்பு செய்தல் என்பது அப்பட்டமான காவித் தனம்.
சமஸ்கிருத ஆசிரியர்கள் அதிகமாக நாடு முழுவதும் பள்ளி தோறும் பணியமர்த்தப் பட்டு, இன்ன பிற மொழி ஆசிரியர்கள் மிகக் குறைவாக (ஒருவரின் ஒளிப்பட வகுப்பே நாடு முழுக்க பயன்படுத்தலாம்) வேலைக்கு எடுக்கப்படுவார்கள். இப்போது நாடு முழுக்க சமஸ்கிருதம் பயிற்றுவிக்குமளவுக்கு படித்தவர்களை சாதி வாரியாக விகிதம் பார்த்தால் இது எவரையெல்லாம் கல்வித் திட்டத்தில் நுழைக்க கச்சை கட்டப்பட்டது என விளங்கும்.
வரைவு சொல்கிறது: சமஸ்கிருதம் வகுப்பறையில் – ‘Be Offered’ (வழங்கப்படும்) , மற்ற மொழிகள் இணையவழியில் ‘As an option’ (விருப்பம் பொறுத்து). மொழி சமத்துவத்திற்கெதிரான போர் அறிவிப்பு இது.

வரைவு: 6-12 வரையில் அல்லது உயர்கல்வி சேர்த்தேனும், குறைந்தது 2 வருடங்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் (Compulsorily) ஒரு செம்மொழியை படிக்க வேண்டும் (4.19, பக். 14)

கேள்வி: விருப்பம் இருந்தால் என சொல்லப்பட்டதால், விரும்பாமல் செம்மொழி ஒன்றை இணைய வழியில் படிக்காத மாணவன், இப்போது எந்த மொழியை எடுப்பான்.
14 வருடம் வகுப்பறையில் சொல்லித் தரப்பட்ட ஒரு மொழியினை தேர்ந்துதெடுப்பதுதான் இயல்பான முடிவாக இருக்கும். எனவே, சமஸ்கிருத கல்லூரிகளுக்கு ஆள் சேர்க்கும் வேலையை அரசு பார்க்கப் போகிறது; பள்ளியில் மாத்திரமல்ல கல்லூரியிலும் பேராசிரியர் பணியிட இட ஒதுக்கீட்டை விழுங்கி ஓ.பி.சி க்கும், பிறருக்குமான ‘காதுகுத்து’ ஏற்பாடு.


வரைவு: இந்திய சைகை மொழி தரமானதாக முறைப்படுத்தப்படும். முடிந்த இடங்களில் உள்ளூர் சைகை மொழியிலேயே கற்பிக்கப்படும் (4.20, பக். 14)

கேள்வி: சைகை மொழி வல்லுநர்களை, ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு குழு அமைக்க வேண்டும். வேண்டப்பட்ட ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுக்க ஏற்பாடாய் இல்லாமல். அண்மையில் ஒரு அரசுப்பள்ளி இந்நாள், முன்னாள் ஆசிரியர்கள் கூட இல்லாமல் கல்வி முறை ஆராய குழு அமைத்த எங்கள் மாநில அரசு போல இருந்திட வேண்டாம். உள்ளூர் சைகை மொழிகள் எனும் பொழுது ஆதி பழங்குடியினர் பகுதி வாழ்வியலை பிரதிநிதித்துவப் படுத்த ஒருவர் அவர்களிடமிருந்தவராய் இருத்தலை கவனிக்க வேண்டும்.

வரைவு: 6 – 8 வரையிலான வகுப்புக்குள் ஓராண்டு படிப்பாக தச்சு வேலை, மின் வேலை, உலோக வேலை, தோட்ட வேலை, மண்பாண்ட வேலை  போன்றவற்றில் உள்ளூர் தேவைக்கேற்ப ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். (4.25, பக். 15)

கேள்வி: பல மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்த வரலாற்றைத் திணிக்கும் பொழுது தேர்வே வேண்டாம் அறிந்தால் மட்டும் போதும் என்று சொன்ன நீங்கள், இதில் ஏன் தேர்ச்சியை கட்டாயமாக்குகிறீர்கள் ?
பள்ளிகளில் இதற்கான தொழிற்கூடங்களை உருவாக்குங்கள்; உயர்கல்வி வரும் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் (Gross Enrolment Ratio) இதன் மூலம் கூடாது ; குறையும்.
வறிய, ஏழைகளாக இருக்கும் வீட்டுப் பிள்ளைகள் பொருளாதார காரணங்களினால் பள்ளியிலிருந்து இடைநிற்றல் செய்து, மிகக் குறைவான சொற்ப சம்பளத்திற்கு குழந்தைத் தொழிலாளர்களாக இப்போதும் போகிறார்கள். இந்த கொள்கை வந்தால், 5வது வரை படிக்கிறவர்களை ஒரு ஆண்டு கூடுதலாகி 6 ம் வகுப்பு வந்த பின்னால் ஒரு தொழிற்கல்வி தேர்ச்சி, அதற்காக தொழிற்கூடங்களில் பயிற்சி (Industrial Internship) என்பது, அவர்கள் இப்போது வேலைக்குப் போனால் கற்ற கல்வியை காரணம் காட்டி, கூடுதல் சம்பளத்தைக் வலியுறுத்திக் கேட்டுப் பெறும் (Demand the Salary for the qualification) வாய்ப்பை மாணவர்களுக்கு உருவாக்கும். பெற்றோர்கள், குடும்ப சூழலைக் காரணம் காட்டி, தொழில் தெரிந்த உடன் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் போக்கு அதிகரிக்கும்.
மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் (Gross Enrolment Ratio) குறைந்து, குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை மிகுதியாகும்.

சமூகம் சார்ந்த கேள்வி, இது தகப்பனாரின் தொழிலுக்கு மாற்றாக வைக்கலாமா? அந்தத் தொழிலை வீடுகளும், புதிய வேறு தொழிலை பள்ளிகளும் தேர்வு இல்லாமல் கற்பிக்கலாமா ? கோவிலில் அர்ச்சனை செய்பவர் பிள்ளைகள் சாக்கடை அள்ளுவதற்கு பயிற்சி பெறட்டும்; சாக்கடை சுத்தம் செய்பவர் பிள்ளைகள் அர்ச்சகராக பயிற்சி பெறட்டும்; அப்போது தான் ஒரு 20 ஆண்டுகள் கழித்து “என் மலத்தை அள்ளி தான் நீ சோறு சாப்பிடறே” என்று கொச்சையாக துப்புரவு தொழிலாளரிடம் ஒருவரும் பேச மாட்டார்கள், சாக்கடை துப்புரவு பணிக்கு அவர் பழகியவராய் இருந்தால், சட்டைக்குள் இடமிருந்து வலமுள்ள நூலும், மண்டைக்குள் நிரம்பிய ஆண்ட பரம்பரை எனும் அபத்தங்களும், அப்படி பேசும் அலட்சியத்தை தராது‌.
தகப்பனார் தொழிலைப் பழக்குதல் குலக்கல்வி; தவிர்த்த மற்றவற்றுக்குப் பழக்குதல் குழந்தைத் தொழிலாளர் உருவாக்கும் முயற்சி.

வரைவு: பாடத்திட்டம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், துணைப் பாடங்கள்  சொந்தமாநிலம் குறித்ததாகவும் இருக்கும் (4.28, பக். 15) . மாநில கல்வித்துறை தேவைக்கேற்ப திருத்தங்கள் செய்யலாம்; கூடுமானவரை மின்புத்தகங்களாக PDF ஆக கொண்டு வருதல் என்பது சுற்றுசூழலைப் பாதுகாப்பதுடன், தூக்கிச் செல்லும் சுமையைக் குறைக்கும்‌ (4.29, பக். 15)

கேள்வி: நாங்கள் எதை முதன்மையாக எடுக்க வேண்டுமென்பதை நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். உலக பார்வையும், மாநில பார்வையும் பிரதானமாய் வைத்து , வேண்டுமென்றால் இந்தியா குறித்த பார்வையினை சேர்க்கிறோம். தேசிய பார்வை என்று சொல்லி பிள்ளையார் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார் என்பதனை பிரதானமாய் வைக்காமல் உலகப் பார்வையாக ‘டோலி’ என்ற முதல் செயற்கை கருத்தரிப்பின் மூலம் ஆட்டுக்குட்டி பிறந்ததையும், மாநில பார்வையாய் கபசுரக் குடிநீர், நிலவேம்பு ஆகியவற்றின் சமகால பயனும், தேசிய அளவில் அதிக உடலுறுப்புக் கொடை, குறைந்த பிரசவ இறப்புகள் விகிதம் போன்றவற்றை பயிற்றுவிக்கிறோம். வலியுறுத்தல் அல்ல, நீங்கள் யோசனையாய் கூட சொல்ல வேண்டாம்.
ராணுவத்தினரிடம் திருக்குறள் மேற்கோள் காட்டுவார் பிரதமர் ஆனால் பாடக்குறைப்பாக திருக்குறளும், இராணுவத்தில் தமிழர்களின் பங்கும் நீக்கப்படும்; இதுதான் மாநிலங்கள் தேவைக்கேற்ப திருத்தம் செய்ய விடுகிற லட்சணமா ?
மின்புத்தகங்கள் PDF ஆனால் பள்ளிகளில் அவற்றை படிக்க, பயன்படுத்த திறன்பேசி, மடிக்கணினி பள்ளிக்கு கொண்டு வரலாமா?  திறன்பேசி (Smart phone) வாங்க வசதியில்லாதவர்கள் வீட்டுப் பிள்ளைகள் என்ன செய்வார்கள் ? ஓ! அதற்கு தோதாக தான் தொழிற்கல்வியோ?  சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு 2020 சட்ட வரைவினால் (EIA – Draft 2020) வராத கேடுகள், புத்தகங்களுக்காக மரம் வெட்டும் பொழுது வந்து விடுகிறதல்லவா? சுற்றுசூழல் பாதுகாப்பு முக்கியம் என்பது கார்ப்பரேட்களுக்கு கட்டி முடித்த பிறகு அனுமதி (Post Clearance) என்று திறந்து விடும் பொழுது ஏன் தோன்றவே இல்லை ? எங்கள் பிள்ளைகளில் கைகளில் புத்தகம் இருப்பது அவ்வளவு அச்சுறுத்தலாக இருக்கிறது உங்களுக்கு.

வரைவு: இன்றைய பொதுத்தேர்வு முறை மாணவர்களுக்கு பெரும் தீங்காகவும், பயிற்சி வகுப்புகள் (Coaching class) கலாச்சாரத்தை வளர்ப்பதாக இருக்கிறது (4.32, பக். 16).
மாணவர்கள் அவர்களின் விருப்பப் பாடங்களை எடுத்து பொதுத்தேர்வு எழுதலாம் (4.33, பக். 16). இரண்டு தேர்வுகள் வைக்கப்படும். ஒன்று பொதுத் தேர்வு, இரண்டாவது கூடுதல் மதிப்பெண் பெறும் தேர்வு (4.34, பக். 16)

கேள்வி: ஒரே பக்கத்தில் இத்தனை முரண்களா? பொதுத் தேர்வு மாணவர்களுக்கு தீங்காக (Do Much Harm) இருக்கிறது என்றால் எதற்கு 3,5,8 ம் வகுப்புகள் சேர்த்து 2 முறை இருந்ததை 5 முறையாக பொதுத் தேர்வு வைக்கிறீர்கள் ? 3,5,8 என்று தேர்ச்சி அடையாதவர்களை என்ன செய்வது ?
இது மாணவர்களை சோதிக்க அல்ல; தோல்வி அடைந்தோர் அடுத்த வகுப்பு போவார்கள், இது புதிய கல்விக் கொள்கை சரியாக அமலாகி உள்ளதா என்று சரிபார்க்க ஒரு ஆய்வாக எடுக்கப்படும் என்று ஒரு சாரார் பேசுகிறார்கள். ஆய்வுக்கு மதிப்பெண் வேண்டுமென்றால் நாடு முழுவதும், பள்ளியிலே நடக்கிற முழு ஆண்டுத் தேர்வு மதிப்பெண்களை வாங்கி வைத்து பார்த்துக் கொண்டால் போதாதா ? பிள்ளைகளைக் காட்டிலும் பெற்றோரின் உளவியல் தாக்குதலாக இது மாறும். சொந்தக்காரர்கள் இனி 3வது படித்த பையன் வீட்டுக்கு போன் செய்து துக்கம் விசாரிக்கப் போகிறார்கள்;

பொதுத்தேர்வு தீங்கினை குறைக்க உங்களின் ஆலோசனைகள் என்ன? விரும்பிய பாடத்தில் தேர்வெழுதலாம்.
தீங்கு பாடங்களால் வருகிறதா அல்லது உளவியல் பூர்வமாக பொதுத்தேர்வினை எதிர்கொள்ள தயாராவதில் வரும் சிக்கல்களினாலா \?
பாடத்தை விரும்பியபடி எடுத்தால் உளவியல் சிக்கல் வாராது, தீங்குகள் தீரும் என்பது கண்ணாடியை திருப்பி ஆட்டோவை ஓட வைக்கிற முயற்சி இல்லையா?
பயிற்சி வகுப்புகள் (Coaching class) கலாச்சாரம் இப்போது மாறிவிடுமா? கூடுதல் மதிப்பெண் தேர்வுகளுக்கு (Improvisation Exams) குறுகிய காலத்தில் தயார் செய்கிறோம் என்று கூடுதல் கட்டணம் வசூலிக்க போகிறார்கள்; அரசு வேடிக்கை பார்க்க போகிறது.
இன்னும் ஆழமாக போனால் இது விளிம்பு நிலை மாணவர்களை ஒழிக்கும் முயற்சி. மத்திய, மாநில அரசு தேர்வுகள் எல்லாவற்றிற்கும் திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (APTITUDE AND MENTAL ABILITY) அடிப்படை. 6-8 வரை 3 ஆண்டுகளில் கணிதம், அறிவியல் (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்) பாடங்களின் அடிப்படைகளை  நிச்சயம் முழுமையாக சொல்லித் தர இயலாது. கணிதமும், அறிவியலும் பெரும்பான்மையானவர்களுக்கு பிடிக்காத பாடங்களாக இருக்கும், அவர்கள் 9 ம் வகுப்பில் இவற்றை விடுத்து வேறு பாடங்களை எடுப்பதன் மூலமாக , அடிப்படை அறிவியல், கணிதங்களை முழுமையாக அறிந்திராமல் கடைநிலை அரசு ஊழியருக்கான தேர்வுக்கு கூட தகுதி இல்லாதவர்களாக அவர்களை மாற்றும் சதியினை இது.  ‘Making them Unfit for basic government services of last Cadre.’
பருவத் தேர்வு முறையோ (Semester), விருப்பப் பாடங்களோ (Elective) என்பன மேல்நிலையில் இருக்கட்டும். பத்தாம் வகுப்பு வரை இப்போது உள்ள கட்டமைப்பே தொடரட்டும். பாடங்களில் அடிப்படைகளை இன்னும் உறுதியாக்குங்கள்; மாறாக 3 வருடங்களில் , எந்த மூன்று வருடங்கள், இந்திய மொழிக்குடும்ப அறிமுகம், தொழிற்கல்வி பயில்தல், முதன் முதலாக ஆங்கிலம் அறிமுகம், அதன் வழி அறிவியல் கற்க வேண்டிய 3 ஆண்டுகள் மாணவர் எப்படி அடிப்படைகளை ஆழ உள்வாங்குவார்கள் என்று 8 வதோடு நிறுத்தும் உரிமை தருகிறீர்கள்?
இது வீடுகளில் பெற்றோர்களாலேயே ஆங்கில வழியில் பயிற்றுவிக்கக் கூடிய வசதி படைத்த, ஒடுக்கும் சாதியினர் (மேல்சாதி என்று சொல்லிக் கொள்வோர்) வீட்டுப் பிள்ளைகள் அரசுப் பணியை பிடிப்பதற்கான புறக்கடை வழி அல்ல, நேர் வழியாகவே பார்க்கிறோம்.

வரைவு: தேசிய தேர்வு நிறுவனம் வருடத்தில் குறைந்தது இரண்டு முறையேனும் தேர்வு, அதன் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே இளநிலை பட்டம், மேற் பட்டப் படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெறும் (4.38, பக்.16)

கேள்வி: இது எதேச்சாதிகாரம். மாநில உரிமை, தனியார் கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி உரிமையை பறிக்கும் செயல். கல்லூரிக்கு தனி நுழைவுத் தேர்வு என்றால் 5 பொதுத் தேர்வுகள் என்ன வெங்காயத்துக்கும், வெண்டைக்காய்க்கும் ?  உங்களின் 15 வருட பள்ளிக் கல்வி முறை மீதும், தேர்வுகள் மீதும் உங்களுக்கே நம்பிக்கை இல்லை.
3 வருடம்‌(6-8) கணித அடிப்படை படித்து பின் மொழி, இலக்கியம், கலைகள் என போனவருக்கும், 12 வது வரை ஆழமான பகுப்பு மற்றும் தொகுப்பு நுண்கணிதம் ( Differential and Integral Calculus) படித்தவருக்கும்  ஒரே படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் ஒரே கேள்வித் தாள் என்பது எத்தனை சமமான தன்மை. அப்படியென்றால் 8-வதிற்கு பிறகு தொழிற்கல்வி எடுத்தவன் தொழிற்கல்விக்கு உயர்படிப்பு, வேலைக்கு போக வேண்டும். கலை எடுத்தவர்கள் அதில் உயர்கல்வி, வேலை என்று போக வேண்டும் என்றாகி இது காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களை மருத்துவராக, பொறியாளராக, பட்டயக் கணக்காளராக மாறும் கனவுகளை பிடுங்கிச் செல்கிறது (Taking away the dreams of Professional Degree from oppressed by making them ineligible).

வரைவு: கூடுதலாக இருக்கும் ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்வது என்பது மோசமான நடவடிக்கையாக இருப்பதனால் அது நிறுத்தப்படும், ஏனென்றால்,  அவர்கள்  மாணவர்களோடு இயல்பான உறவுப்பாலம் அமைத்து முன்மாதிரியாக இருக்கவும், கற்றல் எளிதாக நடக்கும் சூழலியலாளர்களாக இருக்கிறார்கள். கற்றலின் தொடர்ச்சிக்காக இது நிறைவேற்றப்படும். “The harmful practice of excessive teacher transfers will be halted to ensure that teachers can build relationships with and become invested in their communities so that students have continuity in their role models and educational environments” ( 5.3, பக். 19)

கேள்வி: உங்கள் வரைவிலேயே எனது கேள்வி உள்ளது. 2016-17 கணக்கின் படி நாடு முழுக்க 1,19,303 ஓராசிரியர் பள்ளிகள் (Single Teacher Schools); அவற்றுள் 94,028 ஆரம்பப் பள்ளிகள் (Primary schools). கூடுதல் ஆசிரியரை இடமாறுதல் செய்யாமல்‌‌ இருப்போம் என்பது, இத்தனை கிராமப்புற பள்ளிகளிலும் இருக்கிறவர்களை காணாமல் விடுவதில்லையா ? கற்றல் சூழ்நிலை மாறுகிற பிள்ளைகள் ஒரு மாதம் கழித்து பழகிக் கொள்வார்கள்; ஆனால் அதனைக் காரணம் காட்டி கற்பிக்க ஆசிரியரே இல்லாமல் இருக்கிற பள்ளிகளை சேர்ந்த மக்களை மேலும் ஒடுக்குதல் தான் இந்த வரைவின் முதல் பக்கதத்தில் நியாயமான (Equity) கல்வி பகிர்வா? 2 வருடங்கள் முன்னால் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவி, தொலைக்காட்சியில் தான் 2 வருடங்களாக ஆசிரியரே இல்லாமல் தானாகவே படித்து, கணினி அறிவியல் பாடத்தில் 188/200 வாங்கியதாக சொன்னார். இப்படிப்பட்ட நிலையை இயல்பானதாக (Normalisation) மாற்றும் முயற்சி இந்த கூடுதல் ஆசிரியர் பணியிட மாற்றத் தடை.

வரைவு: ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு ஆகியன அவர்களுக்கான தொடர் பணிசார் வளர்ச்சியின் (Continuous Professional Development) மதிப்பீடுகளைப் பொறுத்ததே. மிகக் கடுமையான தகுதி அடிப்படையிலான உயர்வு இலக்கு வழங்கப்படும் (Robust Merit based tenure). – கருத்து 5.17, பக். 20.

கேள்வி: இந்திய அரசின் 89 செயலாளர்களில் (தகுதி அடிப்படையில் பதவி உயர்வு தரப்பட்ட ஐ.ஏ.எஸ்) 85 பேர் முன்னேறிய வகுப்பினர் (உயர்சாதி என சொல்லிக் கொள்வோர்), 3 எஸ்.சி, 1 எஸ்.டி அதிகாரிகள். முன்னேறிய வகுப்பினர் 95.5% ஐ.ஏ.எஸ் களாகவும்
95% மத்திய கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களாகவும், 93% இணைப் பேராசிரியர்களாகவும் இருக்கிறது தான் தகுதி எனும் போர்வையில் பார்ப்பனர்கள் தங்களுக்கு இணையாக தாங்கள் ஒடுக்கி வைத்திருந்தவர்கள் வந்து உட்காருவதை தடுப்பதுதான் இந்த நீண்டகால  திட்டமும். இந்தியாவில் 41% ஆக இருக்கும் ஓ.பி.சி. யினருக்கு தகுதி அடிப்படை பதவி உயர்வு சொல்லுகிறது, உங்களில் ஒருவருக்கு கூட இந்திய அரசின் செயலாளராக, மத்திய கல்வி நிறுவன பேராசிரியராக, இணைப் பேராசிரியராக தகுதி இல்லை என்று. காரணம் 0% ஓ.பி.சி.யினர் அந்த இடங்களில் எல்லாம் இருக்கிறார்கள். இனி பதவி உயர்வு, கல்வித்துறையில் அதிகாரப் பூர்வமாக பார்ப்பனர்களுக்கு மட்டும் தானா?

வரைவு: 2022 க்குள் தேசிய ஆசிரியர் தொழிற்சார் தகுதிகள் (National Professional Standards for Teachers) வகுக்கப்படும் (5.20, பக். 21); பி.எட்., முறையே 4/2/1 வருடத்து பட்டமாக வடிவமைக்கப்படும். பள்ளி முடித்து நேரடி ஆசிரியராக 4 ஆண்டு பி.எட்.,; இளநிலைப் பட்டதாரிகளுக்கு 2 ஆண்டு பி.எட்., ; முதுநிலை பட்டதாரிகளுக்கு 1 ஆண்டு பி.எட்., (5.23, பக் 22).
ஆசிரியர் கல்வி முறையின் இறையாண்மையை காக்க, நாடு முழுக்க உள்ள ஆயிரக் கணக்கான, தன்னாட்சி பெற்ற, அரைகுறை தகுதியுடைய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்கள் முடிந்தவரை வெகு விரைவாக மூடப்படும். “In order to fully restore the integrity of the teacher education system, the thousands of substandard standalone Teacher Education Institutions (TEIs) across the country will be shut down as soon as possible.” (5.27, பக். 23)

கேள்வி: பத்தாம் வகுப்பு வரையிலான பிள்ளைகளுக்கான பயிற்சி (Coaching Class), தனியார் நீட், ஜே.இ.இ., பயிற்சி மையங்களையும் மூடினால் நிச்சயம் கல்வி இறையாண்மையை காப்பாற்றலாம்; கல்வியை அரசுடைமை, பொதுத்துறையாக்கியும் காப்பாற்றலாம். கிராமப்புற மாணவிகள் D.T.Ed., படித்து தொடக்கப்பள்ளி ஆசிரியராக வருவது தடுக்கப்படுவதற்கான வழி இது. தரத்தை உயர்த்தி, வழிமுறை, நெறிமுறைகள் கொடுத்து கல்வித்தரத்தை மீட்டுரு செய்ய அரசுக்கு வல்லமை இல்லையா அல்லது மனம் இல்லையா?

வரைவு: பின்தங்கிய மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கி, நடந்து பள்ளி வருவதை தவிர்த்தால், இடைநிற்றல் குறையும் (6.6, பக் 24)

நாம்: இந்தத் திட்டத்துக்கு தமிழகத்தில் வயது 21. மானசீக குருவாக ஏற்றமைக்கு வாழ்த்து, பாராட்டு.

வரைவு: சிறப்பு கல்வி மண்டலங்கள் , அதிக அடர்த்தியாக, சமூக, பொருளாதார அளவில் பின்தங்கிய மக்கள் வாழும் இடங்களில் அமைக்கப்பட்டு, கல்வி கொண்டு சேர்க்கப்படும் (6.7, பக். 24); நவோதயா பள்ளிகளில் மாணவியர் விடுதிகள் சேர்க்கப்படும்; கேந்திரிய வித்யாலயாக்கள் சிறப்பு கல்வி மண்டலங்களில் அமைக்கப்படும் (6.10, பக். 25)

கேள்வி: சமூக, பொருளாதார அளவில் பின்தங்கிய மக்கள் வாழும் இடங்களில் அமைக்கப்படும் பள்ளிகளில் அந்த பகுதியிலுள்ள மக்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் வீட்டுப் பிள்ளைகள் தான் சேருவார்கள் என்பதற்கான உத்திரவாதம் என்ன? அவர்களுக்கான இட ஒதுக்கீடு, பள்ளி படிப்பிற்கான வங்கிக் கடன் முதலியன ஏற்பாடு செய்யப்படுமா? நகரங்களில் உள்ள பெருந்தனக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகள், அருகாமையில் உள்ள நவோதயா, கேந்திரிய வித்யாலயா வில் இடம் கிடைக்காமல் இங்கே வந்து தங்கிப் படிக்கத் தான் இந்தப் பள்ளிகள் பயன்படுமென்றால், ஒடுக்கப்பட்டோருக்கான சிறப்பு கல்வி மண்டலங்கள் என்பதற்கு பதிலாக கூடுதல் ‘கல்லா’ மண்டலங்கள் என்றே வழங்கப்படட்டும்.

வரைவு: சிறப்பு தனி நிதியம் (Gender Inclusion Fund) உருவாக்கப்பட்டு மாணவியர் மற்றும் திருநர்களுக்காக செலவிடப்படும். அவர்களுக்கான சுகாதாரம், கழிவறைகள், மிதிவண்டி போன்றவற்றுக்கு இதனை பயன்படுத்தலாம் (6.9, பக். 24)

கேள்வி: Transgender எனும் சொல் திருநங்கையர் மற்றும் திருநம்பியர் இருவருக்கும் சேர்த்த சொல்லாடலா?
அல்லது திருநம்பியரை சேர்த்திடாமலா? தனிப்பட்ட முறையில் கேட்டால் குறைந்தது பணியிடங்களில், பொது இடங்களில், பாலினப் பொதுக் கழிவறைகள் (gender neutral toilets) வேண்டுமென்க.
2019 கல்வி ஆண்டு நிலையறிக்கையின்படி (Annual status on Education Report) நாட்டில் 22.8% அரசு பள்ளி கழிவறைகள் உபயோகிக்கும் நிலையில் இல்லை எனவும் 11.5% பள்ளிகளில் பெண்களுக்கென்று தனி கழிவறை இல்லை எனவும் தரவுகள் தருகின்றன. ஆக, இது‌ புதிய கல்விக் கொள்கையில் இல்லாமலே மாணவர்களுக்கே செய்து தர வேண்டிய அடிப்படை உரிமை, அரசுகளின் கடமை. திருநர்கள் வீட்டை விட்டு வெளியேற, வெளியேற்ற கூடிய சூழல்கள் வாரா வண்ணம் இருக்க அரசு என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறது?  திருநர்களுக்கான உயர்கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு என்பதெல்லாம் பேசப்பட வேண்டிய பொருட்கள் இல்லையென தவிர்த்தவையோ?

வரைவு: 2025க்குள் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளைத் தொகுத்தல் வேண்டும் (7.5, பக். 26). ஒரு உயர்நிலைப் பள்ளியும், அதனைச் சுற்றியுள்ள 5 – 10 மைல் வரையிலான தொடக்கப் பள்ளிகளும் ஒன்று சேர்க்கப் பட்டு, ஆசிரியர்களும், கட்டமைப்புகளும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் (7.6, பக். 26).

கேள்வி: ஆசிரியர்கள் இடமாறுதல் தருவதற்கு பதிலாக, பிள்ளைகளை தேடிப் போய் படிக்க சொல்லும் முறையாகிறது. ஒரு ஆரம்ப பள்ளி மாணவன் வாரத்தில் ஒரு நாள் கலை வகுப்புக்கும், ஒரு நாள் இரண்டாவது மொழி வகுப்புக்கும், ஒருநாள் பெரும் மைதானத்துடனான உடற்கல்வி வகுப்புக்கும் என வாரத்தில் மூன்று நாட்கள், அந்தந்த வசதியுள்ள பள்ளிக்கு பயணிக்க வேண்டும். இவர்கள் நேராக அங்கே வர வேண்டுமா? ஆசிரியர்கள் எல்லோரையும் சேர்த்து அழைத்துப் போவார்களா? அப்படியானால் போக்குவரத்து வசதி, செலவு? அன்றைய தினத்துக்கான மதிய சத்துணவு என்னவாகும்? போகுமிடத்தில் பிள்ளைகளுக்கான சுகாதாரம், பாதுகாப்பு? ஆகிய அனைத்தும் கேள்விகளாகவே நிற்கின்றன. கட்டமைப்புப் பகிர்தல் என்பது சரி. ஆனால், நம்பகத்தன்மை?

அடுத்தது ஒரே அறிக்கையில் இரண்டு இடங்கள், உச்சபட்ச நகை முரண்கள்.

வரைவு: மாநில பள்ளிக்கல்வித் துறைகள், கூடுதல் அதிகார மையங்களாக செயல்படுவதால் (Excessive Centralised concentration of power), மிக மோசமான பிரச்சனைகளை சந்தித்து வருவதோடல்லாமல், திறம்பட நிர்வகிக்க திராணியற்று இருக்கிறது Ineffective Management – (8.2, பக் 27). பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நோக்கி செல்வதும், கல்வி வணிகமயமாதலும், பொருளாதார சுரண்டல் மையமாகவும் அவை செயல்படுகின்றன Commercialisation and Economic exploitation – (8.3, பக். 27). இதனை சரி செய்ய, மாநில கல்வித் துறையின் அதிகார குவியத்தை உடைத்து, 4 அலுவல்களை தனித்தனியாக நிர்வகிக்க வேண்டுமென வழிகாட்டப்படுகிறது. அவை, கொள்கை உருவாக்க அலுவல், செயல் அலுவல், தர கண்காணிப்பு மற்றும் மேம்பாட்டு அலுவல், பாட திட்ட அலுவல். (8.6, பக். 28)

நாம்: ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வேலைகள்; அதிகாரம் குவிதலாகாது, அப்படி குவிவது மோசமான விளைவுகளையும், திறமையற்ற நிர்வாகத்தையும் உருவாக்கும் என்று ஆணித்தரமாக பேசுகிறது. இனி அதே வரைவில் இன்னொரு இடம்.

வரைவு: இந்தியா முழுமைக்கும், எல்லா உயர்கல்வி துறைகளையும் சேர்த்து, ஒற்றை பொது ஒழுங்குமுறை அமைப்பு (One Common Regulator Regime) கொண்டு வரப்படும். அது தேசிய உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையம் (National Higher Education Regulatory Authority – NHERA) என்றாகும் – 20.4, பக். 47;
புதிய பொதுக் கல்விக் குழுமம் (General Education Council – GEC) அமைக்கப்பட்டு பட்டதாரிகளின் தகுதிப்பாடுகள் நிர்ணயிக்கப்படும் (20.6, பக். 48). மேலும், இன்றைக்கு உயர்கல்வி அதிகார மையங்களாக இருக்கிற இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் குழுமம் ICAR (விவசாயக் கல்வி) , இந்திய கால்நடை மருத்துவக் குழுமம் VCI (மருத்துவம்), தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் NCTE (ஆசிரியர் பயிற்சி) ஆகியன எல்லாம் இந்த புதிய பொதுக் கல்விக் குழுமம் (GEC) ல் உறுப்பினராக வேண்டும் (20.7, பக். 48).

கேள்வி: மாநிலத்தில் கல்வித்துறை அதிகாரம் குவிந்தால் நிர்வாகத் திறனின்மை ஆகும். ஆனால் மத்தியில், அதிகார மையங்களை (ICAR, VCI, NCTE) எல்லாம் சேர்த்து பெரும் அதிகார மையம் (GEC) ஒன்றை உருவாக்கி நீங்கள் நிர்வாகத் திறமையை காட்டப் போகிறீர்கள். இது மாநில சுயாட்சி மீதான வெளிப்படையான தாக்குதல். பொதுப்பட்டியலில் உள்ளதன் மீது எதேச்சாதிகாரம் எடுத்து, மீண்டுமொரு கூட்டாட்சி எதிர்ப்புப் போரினை தொடங்கி வைக்க வேண்டாம்.

வரைவு: தேசம் முழுக்க எல்லா விதமான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தொகுக்கப்பட்டு பல்துறை உயர்கல்வி நிறுவனங்களாக (Multi-disciplinary Higher Education Institution) ஒருங்கிணைக்கப்படும். குறைந்தது 3000 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் பயில்வதற்கான கட்டமைப்புகளோடு உருவாக்கப்படும் (10.1, பக். 31). இப்படிப்பட்ட பல்துறை உயர்கல்வி நிறுவனங்கள் மாவட்டத்திற்கு ஒன்று அல்லது பக்கத்து மாவட்டங்களுக்கும் சேர்த்து ஒன்று என அமைக்கப்படும் (11.11, பக். 35)

கேள்வி: அருகாமை மாவட்டங்களுக்கு ஒரு கல்லூரி எனும் பொழுது, இடைப்பட்ட தூரத்தை கடக்க 4 வருடங்களுக்காகும் நேரம், செலவீனம் எப்படி எதிர்கொள்வது? அரசு தற்போது வழங்கும் மாணவர் இலவச அனுமதி சீட்டுகள் மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு செல்லுமா? ஆறு வட்டங்கள் கடந்து மாவட்ட கல்லூரிக்கு போய்வர எத்தனை பேருந்துகள் மாற வேண்டும்? விடுதிகளில் என்றால் எத்தனை மாணவர்கள் தங்கி பயில முடியும்? பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு, கல்வி கட்டண சலுகைகள் இவற்றைப் பற்றிய எந்தக் குறிப்புமில்லை.

அடுத்த கணக்கு: மாவட்ட உயர்கல்வி நிறுவனங்களில் 3000 பேர் படிக்கலாம், இது 5000 வரை உயர்த்தப்படும் என்கிறது புதிய கல்விக் கொள்கை. அப்படியென்றால் தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 5000 பேர் வீதம் 1,90,000 பேர்  படிக்க முடியும். 8 லட்சம் பேர்  ராசரியாக 12வது தேர்வெழுதுகிறார்கள், 90% தேர்ச்சி என எடுத்தால் 7.2 லட்சம் பேர் தேர்ச்சி அடைகிறார்கள். அவர்களுள் கல்லூரி போவோர் 49% (மத்திய அரசு புள்ளிவிவரம்), அதாவது 3,52,800 பேர் சராசரியாக தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி பயில்வோர். இப்போது இடங்களோ 1,90,000 தான் (அதற்கும் குறைவாக, எல்லா மாவட்டங்களிலும் ஏற்படுத்துதல் கடினம்). என்றால் ஆண்டுதோறும் 1.62 லட்சம் தமிழக மாணவர்கள் கல்லூரிகளில் இடமற்று நிற்பார்களா? இல்லை மாநிலம் விட்டு மாநிலம் படிக்க போகலாம் என்றால் அதனை எந்த நிறுவனம் நடைமுறைப் படுத்தும். மருத்துவ இட ஒதுக்கீடு போலவே மத்திய தொகுப்பு இடம் வாங்கி ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இடமே தராமல் நாமம் சாத்துகிற திருப்பணி தொடருமா என்பதை மத்திய அரசு ரகசியமாக (சஸ்பென்ஸ்) வைத்துள்ளது.

வரைவு: பட்டப்படிப்புகளில் பல்வேறு நுழைவு மற்றும் நிறைவு காலங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. எல்லாமுமே சான்றிதழ் படிப்புகளாக கருதப்படும். இடைநின்றவர்கள் எப்போது வேண்டுமானாலும் தொடரலாம்.
1 ஆண்டு – டிப்ளமோ பட்டம்
2 ஆண்டு – அட்வான்ஸ்ட் டிப்ளமோ பட்டம்
3 ஆண்டு – இளநிலைப் பட்டம்
4 ஆண்டு – ஆய்வுடன் கூடிய இளநிலை
(11.8, பக். 35)

கேள்வி: நான் டேட்டா சயின்ஸ் (Data Science) பிரிவில் முதலாமாண்டு சேருகிறேன். ஒரு மொழிப்பாடம் (Language), ஒரு உளவியல் பாடம் (Psychology) , ஒரு யோகா பாடம் (Yoga), ஒரு கைவினைப் பொருள் பாடம் (Crafts), 2 டேட்டா சயின்ஸ் பாடங்கள் எடுக்கிறேன். ஒரு வருடத்தில் 4 டேட்டா சயின்ஸ் பாடங்கள் படித்து இடைநிற்கிறேன். எனக்கு டிப்ளமோ இன் டேட்டா சயின்ஸ் (Diploma in Data Science) என்கிற பட்டம் கிடைக்கும். வெறும் 33% சம்பந்தப்பட்ட பாடத்தை படித்து பெற்ற என்னுடைய டிப்ளமோவுக்கு பணி அமர்த்தும் நிறுவனங்கள் என்ன மதிப்பு அளிக்கும்.? அல்லது ஒரு நிறுவனத்தின் பணியாளர் தேர்வை எதிர்கொள்ளும் அடிப்படைகளை அந்த நான்கே 4 பாடங்களுடனான பட்டம் எனக்கு அளிக்குமா?
பல்துறைகள் இணைப்பு என்பது தேவை. ஆனால், உச்சபட்சமாக எதுவரை பிற துறை பாடங்கள் (Open non core elective) எடுக்கலாம்? பட்டமாக எடுத்த துறையில் கட்டாயமாக கற்க வேண்டிய அடிப்படை பாடங்கள் (Compulsory fundamental Subjects) எவை? என்பவை எல்லாம் வகுத்து , நிர்மாணிக்கப் போவது யார்? பரிட்சார்த்த முயற்சியில் பலியாகிறவர்களின் எதிர்கால உத்திரவாதங்கள் என்ன? என்பன எழுப்பப்பட வேண்டிய கேள்விகள்.

வரைவு: சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கான ஆதரவு மையங்கள் (Support Centres) தொடங்கப்பட்டு, அவர்களுக்கான நிதி மற்றும் பிற உதவிகள் கிடைத்து பட்டப்படிப்பு முடிப்பதை உறுதி செய்ய வேண்டும் (12.5, பக். 36)

கேள்வி: பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி நாடு முழுக்க எல்லா பல்கலைக்கழகத்திலும் 10 ஆண்டுகள் முன்பாக எஸ்.சி/எஸ்.டி குறைதீர் மையங்கள் (SC/ST grievance redressal cell) அமைக்கப்பட்டன. இன்று வரை மாநில வாரியாக கல்லூரிகளில் சாதிய வன்மம் குறித்த ஒரு ஆண்டறிக்கை கூட கிடைக்கவில்லை. என்றால் சாதியே இல்லாமல் போனதா? வாய்ப்பில்லையே.! அவை ஒருங்கிணைந்து மண்டலங்களாக இணைப்பில் இல்லை? இருப்பதை சரியான முறையில் கையாளல் மிகவும் அவசியம். பிறகு புதியதை சேருங்கள்.

வரைவு: தனியார் கல்வி நிறுவனங்கள் 25% முதல் 100% வரை கல்விக் கட்டண சலுகை வழங்க வேண்டும் (12.10, பக். 37). சமூக பொருளாதார பின்புலத்தால் ஒடுக்கப்பட்டவர்களில் 20% பேருக்கு முழுக்கட்டண சலுகையும், 30% பேருக்கு பிற கட்டண சலுகை வழங்க வேண்டும் (20.15, பக். 49).

கேள்வி: நிறுவனங்கள் வழங்க வேண்டுமா? இது வரை கட்டண சலுகை (Scholarship) என்பது அரசு செலுத்தி வந்தது. ஒரு நாளும் கட்டணம் வேண்டாமென தனியார் கல்லூரிகள் சொன்னதில்லை. பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கட்டண சலுகையை தொடர்ந்து வழங்குதல் வேண்டும்.
குறிப்பு: சமூக, பொருளாதார நிலையில பின்தங்கியோருக்கான கல்வி உரிமையை அடையச் செய்ய வரைவு அரசுகளுக்கு 7 வழிமுறைகளும், உயர்கல்வி நிறுவனங்களுக்கு 9 வழிமுறைகளும் வழங்கியுள்ளது (14.4, பக். 39). இவற்றில் ஒரு இடத்தில் கூட இட ஒதுக்கீடு எனும் சொல்லோ, அரசு கல்விக் கட்டணத்தை ஏற்கும் என்பதற்கான வழியோ இல்லை என்பது எதற்காக முன்னோட்டம் என்பது பதில் சொல்லப்படாத கேள்வி.

வரைவு: உயர்கல்வி நிறுவனங்கள் (Higher Education Institutions) தன்னாட்சி பட்டக் கல்லூரிகள் (Autonomous Degree granting colleges), ஆசிரியர் கல்லூரிகள் (Teaching Universities), ஆய்வுக் கல்லூரிகள் (Research Intensive Universities) என்று பகுப்புகளாக செயல்படும் (10.3, பக். 32)

கேள்வி: இன்றைக்கு இதே பகுப்பில் தானே தனித்தனியாக கல்லூரிகள் உள்ளன. தன்னாட்சி பட்டக் கல்லூரிகள் (Autonomous Degree granting colleges) – பாலிடெக்னிக், டிப்ளமோ, கலை, அறிவியல், பொறியியல் ஆகிய எல்லா இளநிலைப் பட்டங்கள். ஆசிரியர் கல்லூரிகள் (Teaching Universities) – ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் (D.T.Ed.,), கல்வியியல் கல்லூரிகள் (B.Ed.,), போன்றன. ஆய்வுக் கல்லூரிகள் (Research Intensive Universities) – ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்), முனைவர் ஆராய்ச்சி (பி.எச்.டி) பட்டங்கள், இளநிலை ஆராய்ச்சியாளர் (Junior Research Fellow) போன்றன இதற்கான படிப்புகள்.
இவற்றில் தரம் குறைவு என்றால் அவற்றை சரி செய்ய பாராமல், எல்லாவற்றின் அதிகாரத்தையும் களைத்து விட்டு, உயர்கல்வி நிறுவனங்கள் (Higher Education Institutions) என ஒன்றாக்கி, பின் பழையபடி தன்னாட்சி பட்டக் கல்லூரிகள் (Autonomous Degree granting colleges), ஆசிரியர் கல்லூரிகள் (Teaching Universities), ஆய்வுக் கல்லூரிகள் (Research Intensive Universities) என பிரிப்பதற்கு எந்த வகையான அனுகுமுறை?

வரைவு: தலைப்பு – கல்வி வணிகமயமாதலை தடுத்தல்: தனியார் நிறுவனங்கள், தங்களின் கட்டண விபரங்களை பள்ளி மற்றும் அரசின் இணையதளங்களில் பதிவேற்ற வேண்டும்; அந்தக் கட்டணம் தான் வசூலிக்கப் பட வேண்டும்; கூடுதலாக வசூலிக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.

கேள்வி: தனியார் கல்வி நிறுவனங்கள் சொன்னதை வசூலிக்கிறார்களா என்று பார்ப்பதால் கல்வி வணிகமயம் ஒரு போதும் நிற்காது. மாறாக, பள்ளியின் வசதிகளை ஆராய்ந்து, கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும். வருடத்திற்கு 10 ஆயிரம் பள்ளிகள் கட்டணம் ஏற்றி விட்டு, அதனை இணையதளத்தில் புதிய பதிலாக செய்தால், அந்தக் கட்டண உயர்வை திரும்பப் பெறச் சொல்லும் உரிமை அரசுக்கு இல்லை. குறைந்தது உச்சபட்ச கட்டண நிர்ணயத்தையாவது விதித்து, கட்டண ஏற்றக் கட்டுப்பாட்டு விதிகள், சட்டங்கள் இயற்றப்படுதல் இந்த நிமிடத்து இன்றியமையாமை. கட்டணங்களை கல்வி நிறுவனங்களே நிர்ணயிக்கிற வரை, பயிற்சி நிறுவனங்கள் (Coaching Classes) புற்றீசலாய் இருந்து கொண்டே இருக்கும் வரை வணிகமயமாதலை தடுக்க ஒரு போதும் முடியாது.

வரைவு: சிறப்பாக உள்ள இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டிலும், மிகச்சிறந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவிலும் கிளைகள் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்படும், அதற்கான சட்டப்பூர்வமான நடைமுறைகள் இலகுவாக்கப்பட்டு இரு நாட்டு நல்லுறவுகள் கல்வி மூலமாக பேணப்படும் (12.8, பக் 39).

கேள்வி: இந்தியாவில் ஒரு கார்ப்பரேட்டிலும் இட ஒதுக்கீடு இல்லை; ஆனால் பல நிறுவனங்கள் சாதி கேட்கிறார்கள். இந்த அரசியல் இப்படி இருக்க, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் கிளைகள் இந்தியாவிற்குள் வரும் பொழுது அது மேல்தட்டு, பொருளாதார வாய்ப்புள்ளவர்களுக்கு மாத்திரம் போய் சேரும். இந்த நிறுவனங்களையும் இட ஒதுக்கீட்டுக்குள் கொண்டு வருதல் இன்றியமையாதது.

வரைவு: தன்னார்வலர்களைக் கொண்டு சமூகத்தில் உள்ள இளைஞர்களுக்கான கல்வியறிவு (Adult Literacy) வழங்கப்பட்டு சமூகம் ஒரு நல்ல மாற்றமடைய வழிசெய்ய வேண்டும் (21.3, பக். 50). 100% இளைஞர் கல்வியறிவு என்பது நம் இலக்கு (21.4, பக். 50). பள்ளிகளில் வகுப்பு முடிந்த பிறகும், பொது நூலகங்களிலும் ஊரிலுள்ள கல்வியறிவு முழுமையாக பெறாதவர்கள் அழைத்து வரப்பட்டு உரிய முறையில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் (21.6, பக். 51). தன்னார்வலர்கள் தேசிய, மாநில, மாவட்ட அளவிலான பயிற்சிகள் பெற்றிருக்க வேண்டும் (21.7, பக். 51). தேசிய அளவிலான திட்டமாக அறிவித்து இதற்காக அரசு தன்னார்வ அமைப்புகளோடு இணைந்து பணியாற்ற வேண்டும் (21.9, பக். 51).

கேள்வி: தன்னார்வலர்கள் தேர்வின் அடிப்படை மற்றும் வெளிப்படைத்தன்மை பேணுக. பள்ளி வளாகங்கள் பயன்படுத்தப் படுகிற காரணத்தினால் கூடுதல் கவனம் தேவை. பொது சொத்து, மாணவர் நலன் பேணுதல் இதனினும் முதன்மையென கொள்ள வேண்டும். இதற்காக இடைநின்றவர்களை திரட்டி, தினசரி கொண்டு வந்து படிக்க வைப்பதற்கான திட்ட வரைவுகள் முறையாக செய்ய வேண்டியதன் அவசியம் உணர்க.

வரைவு: இந்திய மொழிபெயர்ப்பு மற்றும் பொருள்விளக்க நிறுவனம் (Indian Institute of Translation and Interpretation) தொடங்கப்படும் (22.11, பக். 53). மொழிகளுக்கான புதிய அகராதிகள் மற்றும் மொழிகளுக்கிடையேயான பொது வார்த்தை களஞ்சியங்கள் வெளியிடப்படும் (22.13, பக். 54).

கேள்வி: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தன்னாட்சி அதிகாரத்தை பறித்து மத்திய பல்கலைக்கழகத்துடன் சேர்க்கப் பார்த்ததைப் போல உள்ளடி அரசியல்கள் நடக்காமலிருக்குமா?

வரைவு: புதிதாக இந்திய கல்விப்பணி (Indian Education Service) எனும் பெயரில் அகில இந்திய குடிமைப் பணி பதவிகளுள் ஒன்று சேர்க்கப்பட்டு, சிறப்பு குடிமைப் பணி அதிகாரிகள் (Civil Service Bureaucrats) , பல்கலைக்கழக பதிவாளர்களாக (Registrar) இவர்கள் நியமிக்கப்படுவார்கள் (24.8, பக். 58).

கேள்வி: துணைவேந்தராக ஒரு தேர்ந்த, முதிர்ந்த கல்வியாளர் (Academician) இருக்கும் பொழுது, அவருக்கு அடுத்த நிலையில் ஒரு அரசு அதிகாரி (Bureaucrat) அமர்த்தப்படுதல் என்பது ஒரு தன்முனைப்பு அதிகார போட்டியை உருவாக்கும். ஒரு பல்கலைக்கழகத்தில் பாட அட்டவணை தயாரித்தல், பரீட்சை அட்டவணை தயாரித்தல், மாணவர் சேர்க்கை, கல்லூரி மாற்றம், மதிப்பெண் பட்டியல் வழங்கல் போன்றவற்றை எல்லாம் செய்ய ஒரு மாவட்ட ஆட்சியருக்கு சமமான ஒருவர் வேண்டுமா? கல்வியாளர்களுக்கு பழக்கமில்லாத ஒன்றல்லவே இது. அக்கறையா இல்லை அதிகார மைய ஊடுருவலா என நாட்கள் நகர நகர காண்போம்.

வரைவில் எனக்கு நல்லதென பட்ட சில கருத்துகள் (இவை புதிய கல்விக் கொள்கை என்று இல்லாமல் சமகால திருத்தங்களாக கூட செய்ய வேண்டியன, என் பார்வையில் )

 1. பள்ளி அல்லது பள்ளிகளின் தொகுப்பு வளாகத்தில் ஆலோசகர் ஒருவர் இருப்பார் (3.2, பக். 9)
 2. இந்திய சைகை மொழி வரையளவு (Standardisation) படுத்தப்படும் (4.20, பக். 14)
 3. தனித்திறமையுள்ள மாணவர்களுக்கு கோடைக்கால சிறப்பு ( National level summer camps) நடத்தப்படும்.
 4. பள்ளிகளில் அடுத்த நிலைக்கு மாற்றலாகும் பொழுது ( தொடக்கப்பள்ளியிலிருந்து நடுநிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளியிலிருந்து உயர்நிலை போன்றன) இடைக்கால பி.எட்., கல்வி, பயிற்சி பெற வேண்டும். – 5.26 பக். 23.
 5. எல்லா வகை கல்லூரி படிப்புகளோடும் தொழிற்கல்வி இணைக்கப்படும் (Professional & Vocational Merge). – 10.13, பக். 33.
 6. கலையில் அறிவியலும், பொறியியலில் கலையும் சேர்க்கப்படும் (11.4, பக். 34)
 7. ஆய்வு மாணவர்கள், கல்வி நிலைய ஆய்வகங்கள், அரசு ஆராய்ச்சி நிலையங்கள், தொழிற்சாலை ஆராய்ச்சிகள் ஆகிய மூன்று நிலைகளில் எதையேனும் தேர்ந்து கொள்ளலாம் (11.5, பக் 34)
 8. கல்வி நிறுவனங்கள், தொழில்துறை இணைந்து புதிய தொழில் தொடங்க புதுமுறைக்காணல் மையங்கள் (Start Up Incubation Hub) தொடங்கப்படும் (11.13, பக். 35)
 9. மாணவ பிரதிநிதிகள் நிர்வாக குழுக்களில் இடம் பெறுவார்கள் (12.9, பக். 37)
 10. ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் கல்லூரிகளோடு அருகாமையில் உள்ள தொழிற்சாலைகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தல் (16.4, பக். 42) குறிப்பு: இதே கருத்தில் உயர்நிலைப் பள்ளிகளுடனும் தொழிற்சாலைகள் இணைய வேண்டும் என்பதனைக் கடுமையாக எதிர்க்கிறோம்.
 11. விவசாய தொழில்நுட்ப பூங்காக்கள் தொடங்கப்பட வேண்டும் (17.2, பக். 43)

இவையெல்லாம் நாம் வரவேற்கிறோம் என்றாலும், இவற்றை கொள்கை முடிவாக இல்லாமல் நிர்வாக முடிவுகளாகவே செயல்படுத்த முடியும் (Not policy decisions but administrative decisions). இவை மேலே சுற்றியுள்ள ஜிகினா அட்டை தான். பிரித்து உள்ளே உள்ளதையும் பார்ப்போம்.

 1. தகுதி (Merit) எனும் சொல் 13 இடங்களில் இடம்பெற்றுள்ளது. இட ஒதுக்கீடு (Reservation) ஒரு இடத்திலும் இல்லை. இடங்களை மத்திய அரசினுடையது என்றால் வகுப்பு வாரியாக ஓ.பி.சி – 27%, எஸ்.சி – 15%, எஸ்.டி – 7% என பிரித்து, இதற்கு உள்ளாக தகுதி (Merit) என்றிருத்தல் தான் சமூக நீதி; இதுவே அந்தந்த மாநிலங்களில் அதற்குரிய இட ஒதுக்கீடு பொருந்தக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாதபடியால்
  இது சமூகநீதிக் கெதிரான பிரகடனம்.
 2. 6 செம்மொழிகளில் சமஸ்கிருதம் ஒன்றை மட்டும் வகுப்பில் மூன்று வயது முதல் கற்பிப்பார்களாம், மீதி எல்லாம் விரும்பினால் இணையவழியில் பார்த்துக் கொள்ளலாமாம்.
  இது மொழித் திணிப்பு, மொழி சமத்துவத்திற்கெதிரான அறைகூவல்.
 3. மாநில கல்வித் துறை, மத்தியின் வழிகாட்டுதல் படி செயல்பட வேண்டும்; மாநில கல்வித்துறையின் அதிகாரங்கள் உடைக்கப்பட்டு அது தீவுகளாக மாற்றப்படும். ஆனால் மத்தியில் அதிகார மையங்கள் குவிந்து புது பூரண அதிகார மையம் உருவாக்கப்படும். இது மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்கான சவால்.
 4. திருநர்களின் வேலைவாய்ப்புகள் பற்றியோ, அவர்களுக்கான ஊக்கத்தொகை, கல்வி நிறுவனங்களில் அவர்களுக்கான ஆதரவு மையம் (Support Centres),
  கட்டண செலவுகளை அரசே ஏற்றல் போன்ற அம்சங்கள் எதுவுமில்லை. இது திருநர்களின் பூரண கல்வி உரிமையைக் கருத்தில் கொள்ளாத வரைவு.
 5. பாலியல் கல்வி (Sex Education) மற்றும் பால் புதுமையினர் (LGBTQIAA+) நலன் குறித்த ஒரு எழுத்து கூட இல்லாததால் இது பாலின சமத்துவத்திற்கு எதிரான வரைவு.
 6. குழந்தைகளைத் தொழிலுக்கு பழக்குதலும், தொழிற்சாலைகளோடு தொடர்பு வைத்துக் கொள்ளுதலுமான அம்சங்கள் உள்ளபடியால் இது குழந்தைத் தொழிலாளர் ஊக்குவிப்புக் கல்வி.
 7. தன்னார்வலர்கள் எனும் பெயரில் வரையறுக்கப்படாத, தங்களின் திட்டங்களுக்கு தோதானவர்களை கல்வி முறைக்குள் கொண்டு வருவதற்கான சூழலியலைத் தருவதனால் இது சித்தாந்த ஊடுருவல் ஊக்குவிப்பு வரைவு.
 8. பொதுத்தேர்வு அழுத்தமென்று சொல்லி ஐந்து முறை வைப்பதும், பயிற்சி வகுப்புகள் (Coaching classes) தொழிலாவதனை கண்டித்து விட்டு, கூடுதல் மதிப்பெண் பொதுத் தேர்வு (Improvisation exams) வைப்பதும், கல்வி வணிகமயமாதலை சாடி, கட்டண நிர்ணயத்தை கல்வி நிலையங்களிடமே விட்டு வைத்தலும் சொல்வது இது தனியார் கல்வி பெருநிறுவன முதலாளித்துவத்துக்கு ஆதரவான வரைவு என்பதனை.

ஆக, சலுகைகளைத் தந்து உரிமைகளைப் பறிக்கும் வரைவாகவே இந்த புதிய கல்விக் கொள்கை இருக்கிறது.

உள்ளது தெளிவோம்; கவனமாய் இருப்போம்; பிரச்சாரம் செய்வோம்; மாற்று கருத்தினருடனான ஆக்கப்பூர்வமான உரையாடலுக்கு நகர்த்துவோம். திணிப்புகளும், எதேச்சாதிகாரமும் நம்மை உரிய இடம் நோக்கி செலுத்தும். அதற்கு ஆயத்தமாவோம்.

~ வளவன்.