புதிய கல்விக்கொள்கை.-அஸ்வினி கலைச்செல்வன்

புதிய கல்வி கொள்கை வரைவு கடந்த ஆண்டின் இறுதியிலேயே தயார் செய்யப்பட்டிருந்தாலும் தற்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது. கடும் கண்டனங்களை பெற்றிருக்கும் இவ்வரைவானது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருப்பதும், 400க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட தரவு பதிப்பை படித்து கருத்து கேட்புக்கான நேர ஒதுக்கீடும் மிக குறைவாகவே உள்ளது. மேலும் ஆன்லைன் பதிவேற்றம் எனும் போர்வையின் கீழ் நடத்தப்படும் கண்துடைப்பும் கூடுதல் வேதனை. இந்தியை அறியாத ஆசிரியர்கள் மத்தியில் ஆங்கில புலமை வாய்ந்தவர்கள் வாசித்தே முடிக்க முடியாத நேர அவகாசத்தில் கருத்துகளை உள்வாங்கி அதை இணைய தளத்தில் பதிவேற்றுதல் சிரமமே. அப்படி பதியப்படும் பதிவுகளை முழுமையாக வாசித்து அதை நடைமுறை படுத்தப்படுதல் என்பது நடைபெற வாய்ப்பே இல்லாத பட்சத்தில் யாரை ஏமாற்றும் போக்கு என்பதை அலசி ஆராய்ந்து பார்த்தால் தெரியும். இதுவும் ஒரு வகை திட்டமிடப்பட்ட புதிய கல்வி கொள்கை திணிப்பே.

புதிய கல்வி கொள்கையின் திட்டங்களை பற்றி அறிதல் அவசியம் இதில் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமான பொதுத்தேர்வு. ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்ட பொதுத்தேர்வு. ஒன்பதாம் வகுப்பு தொடங்கி பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அவசியமாக்கப்பட்ட தொழிற்கல்வி என்பதே. 50 சதவீத மாணவர்கள் தொழிற்கல்வியை விருப்பப்பாடமாக தேர்வு செய்கிறார்கள் என்பதும் குறிப்பிட தக்கது.

அடிப்படை கல்வியானது ஒரு மாணவனை தேர்ந்த அறிவாளியாக மாற்றும் தன்மை கொண்டது. மூன்றாம் வகுப்பிலேயே பொதுத்தேர்வு கொண்டு வரப்படுவது ஒரு குழந்தையின் கல்வி ஆர்வத்தை தூண்டும் வகையில் இல்லாமல் மாறாக பயத்தையும் அதை தொடர்ந்த வெறுப்பையும் திணிப்பதாய் அமையும் பேராபத்து இருக்கிறது.ஒரு குழந்தையின் கற்றல் திறனை வெளிப்படுத்தும் ஆரம்ப கல்வியை முடக்குவதற்கான வழிவகைகளை புதிய கல்விக்கொள்கை கொண்டிருக்கிறது.(பக்கம் 107)

ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கொண்டு வரப்படுவது மன உளைச்சலை உண்டு பண்ணும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. தொடர்ச்சியாக பொதுத்தேர்வினை எதிர்கொள்வது மாணவர்கள் மத்தியில் சலிப்பையும் மன சோர்வையும் தரும். மன அழுத்தம் ,மன உளைச்சல் காரணமாக 70 சதவீதம் மாணவர்கள் தற்கொலை எண்ணங்களுக்கு தூண்டப்படுவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒன்பதாம் வகுப்பு தொடங்கி பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி வழங்குதல் நல்லது என்றாலும் வரலாறு, பொருளாதாரம் பற்றியும் சற்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கடமை இருக்கிறது.
இதுவும் ஒரு வகை திட்டமிடப்பட்ட குலக்கல்வி அடிப்படையை கொண்டது.பொறியியல் மருத்துவம் மட்டுமே தற்போதைய உயர் தொழிற்கல்வியாக பாவிக்கப்படுவதாக கூறி தையல், கட்டிடக்கலை,கைவினைப்பொருட்கள்,நீர்வள மேலாண்மை போன்ற துறைகளையும் இத்திட்டம் மூலம் கட்டாயமாக்க முனைகிறது.இதில் ஆராய்ச்சி கல்வியை பற்றி பேசவில்லை என்பதே இருட்டடிப்பு தான்.

நான்கு பாகங்களை கொண்ட புதிய கல்விக் கொள்கையானது கீழ்க்கண்ட வரைவுகளை அடிப்படையாக கொண்டது.
1.தொழிற்நுட்பம்
2.தொழிற்கல்வி
3.வயது வந்தோர் கல்வி
4.பிரதமர் தலைமையின் கீழ் கல்வி உருமாற்றத் திட்டம்

குழந்தையின் ஆரம்ப கல்வியானது அவரவர் தாய் மொழியிலேயே இருக்க வேண்டுமென வலியுறுத்தி வருவதைப்பற்றி இக்கொள்கை வரைவில் எதுவும் பேசப்பட வில்லை

இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டம் பன்னிரெண்டாம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
(பக்கம் 72)
இவ்வரைவுக்கு அரசுக்கு உதவும் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாகவும்(பக்கம் 71) பேசப்பட்டுள்ளது.

கூடுதலாக அனைவருக்கும் கல்வி என்பதே நமது அடிப்படை நோக்கம். ஒரே நாடு ஒரே பாடம் என்பதை கொண்டே NEET தேர்வு அமையப்பெறுவதாக கூறும் இக்கொள்கையின் படி நுழைவு தேர்வுக்குப்பின்னான 5 ஆண்டுகால படிப்பும் முடித்து EXIST தேர்வு எழுத வேண்டும் என கூறியிருப்பது மேலும் பல உயிர்களை இழக்க வழிவகை செய்யும்.
தரமான கல்வி வழங்குவதாக கூறி மீண்டும் மீண்டும் பல தேர்வுகளை நடத்தி பொருளாதார வகையிலும், தொழில் மற்றும் வேலைவாய்ப்பை குறைக்கப் பயன்படும் ஒரு கருவியாக அரசு செயல்படுகிறது.

ஒரே நாடு ஒரே பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (NCERT) முலம் பாடத்திட்டங்கள் வெளியிடப்படும். (பக்கம் 101)
மாநில கல்வி நிறுவனங்களுக்கு பாடங்களை தயாரிக்க அனுமதி வழங்கியதோடு மட்டுமல்லாமல் அவை தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவன பாடத்திட்டத்தின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும் என புதிய கல்விக் கொள்கையானது கூறியுள்ளது. கல்வியை முழுவதுமாக மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அலட்சியப்படுத்துவதாக இக்குறிப்பு உள்ளது. பலதரப்பட்ட மக்கள் கலாச்சாரத்தையும் மாறுப்பட்ட வரலாறு கொண்ட சூழலில் ஒரே நாடு ஒரே பாடம் என்பது வேற்றுமையில் ஒற்றுமை பேணுவதை அதிகார துஷ்பிரயோகம் என கொள்ளுதல் தவறேயில்லை.

புதிய கல்விக் கொள்கையானது மாநிலங்களின் இறையாண்மை மீது நடத்தப்படும் தாக்குதல். இந்தி திணிப்பு ,மும்மொழி கொள்கை என்பதெல்லாம் வெறும் வாயை கிளறுவதை போன்றதே. திசை திருப்பி அனுப்பி விட்டு இங்கே புதிய கல்விக் கொள்கையானது வளரும் கல்வியை களையறுக்க முயலும் போக்கு. கல்வி கொள்கை என்பது கல்வியில் சாதிக்கும் கனவுடன் காத்திருக்கும் மாணவர்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும்.மாறாக கனவுகளை மறுக்கும் கொள்கைகளை நாம் நிராகரிக்க வேண்டும்.

அஸ்வினி கலைச்செல்வன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here