பிஹெச்.டி படிக்கும் முதல் இருளர் பெண்!- ரோஜா.

“அப்பாவின் அறிவுதான் என் ஆராய்ச்சிக்கு விதை போட்டுச்சு”

பழங்குடி இருளர் சமுதாயத்தின் முதல் முனைவர் பட்டம் பெறப் போகும் பெண் என்னும் பெருமையைப் பெற்றிருக்கிறார் மாணவி ரோஜா. திண்டிவனம் அருகே மரூர் இருளர் குடியிருப்பைச் சார்ந்த ரோஜாவின் பெற்றோர் இருவருமே செங்கல் சூளையில் கூலி வேலை செய்பவர்கள். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு பிஹெச்.டி பெறப்போகும் ரோஜா.

நான் ஸ்கூலுக்குப் போனதே பெரிய சாதனையாகத்தான் நினைக்கிறேன். என் வீட்ல அம்மா, அப்பா இருவருமே செங்கல் சூளையில் வேலை பார்ப்பவங்க. ஆறு மாசம் வேற ஊரில் தங்கி வேலை பார்க்கணும். அப்புறம் சில மாதங்கள் எங்களோட இருப்பாங்க. அதுவரைக்கும் நான் எங்க சொந்தக்காரங்க வீட்ல இருப்பேன். நான் பக்கத்து வீட்ல பிள்ளைங்க பள்ளிக்குப் போறத பார்த்துட்டு அவங்களோடவே நானும் போய்டுவேன். அப்படியே பத்தாவது வரைக்கும் படிச்சிட்டேன். பத்தாம் வகுப்பில் 50%-க்கும் குறைவான மதிப்பெண்தான் எடுத்து பாஸ் ஆனேன்.

ஒரு கட்டத்துல என் பள்ளிப் படிப்பை நிறுத்திட்டு கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சாங்க. நான் படிக்கணும்னு அடம் புடிச்சேன். பள்ளி முடிக்கவே இவ்வளவு போராட்டம். அப்புறம் ப்ளஸ் டூ முடிச்சிட்டு கல்லூரியில் சேர முயற்சி பண்ணும்போது சாதிச் சான்றிதழ் இல்லைன்னு பிரச்னை வந்துச்சு. சாதிச் சான்றிதழ் வாங்க போனப்போ உங்கள பார்க்க இருளர் சமூகம் மாதிரியே இல்லையே, எப்படி சான்றிதழ் கொடுக்கணும்னு கேட்டு அவமானப்படுத்தினார்கள். இருளர் சமூகம்னா இப்படித்தான் இருக்கணும்னு ஏதாச்சும் இருக்கா? நான் கல்லூரியில் சேரப் போறேன் அதற்கு ஏற்ற மாதிரி என்னை நான் மாத்திக்கிட்டேன். இதில் என்ன தப்புன்னு கேட்டேன். இன்னும் நிறையா அவமானப்படுத்தி பேசினாங்க. அப்புறம் பேராசிரியர் கல்யாணி அய்யா உதவியோடு சாதிச் சான்றிதழ் கிடைச்சது.

அதன் பிறகு விழுப்புரம் அரசுக் கல்லூரியில் பி.எஸ்ஸி தாவரவியல் படிச்சேன். அப்போ எனக்கு சுத்தமா ஆங்கிலம் வராது, தெரியாது. அதனால படிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். அரியர்ஸ் வேற வெச்சிட்டேன். அந்தச் சமயத்துல வீட்ல வேற பணக்கஷ்டம். அதனால வேலைக்குப் போகலாம்னு முடிவு பண்ணி லேப் டெக்னீஷியன் வேலையில் சேர்ந்தேன். வேலை பார்க்கும்போதும் எனக்கு எப்படியாச்சும் மேல படிக்கணும். எம்.எஸ்ஸி படிக்கணும்னு ஆசையா இருந்துச்சு. அப்புறம் அம்மாகிட்ட கேட்டேன். அவங்களும் சம்மதிச்சாங்க. நான் எம்.எஸ்ஸி அப்ளை பண்ணேன். ஆனால், என் அப்ளிகேஷன் ரிஜக்ட் ஆகிடுச்சு. அப்புறம் ராஜேஷ் சார் உதவியோட திரும்பவும் சீட் கெடச்சது. போராடி கெடச்ச சீட். அதனால தீவிரமா படிச்சேன். எம்.எஸ்ஸியில் கல்லூரியிலேயே முதல் மாணவியா தேர்ச்சி பெற்றேன்.

சின்ன வயசுல வீட்ல ஒரு கல்யாண பத்திரிகையில் மாப்பிள்ளை பெயரின் பின்னாடி பிஹெச்.டி-ன்னு போட்டிருந்தது. அப்படின்னா என்னன்னு கூடத் தெரியாது. ஆனா, அது பெரிய படிப்பு, நாமும் பி.ஹெச்.டி படிக்கணும்னு ஒரு கனவு இருந்துச்சு. எம்.எஸ்ஸி முடிச்சதும் அந்தக் கனவு மீண்டும் துளிர்க்க ஆரம்பிச்சது. கல்யாணி அய்யா, ராஜேஷ் சார் வழிகாட்டுதலோடு லயோலாவில் கடந்த ஜனவரி மாதம் பிஹெச்.டி சேர்ந்தேன். என் கல்லூரியிலும் நிறையா உதவி பண்ணாங்க.

என் அப்பாவுக்கு மூலிகைகளை வெச்சி மருத்துவம் பார்க்க தெரியும். எங்க ஊர்ல இருக்கவங்க அப்பாகிட்ட வந்து மருத்து வாங்கிட்டு போவாங்க. நம்மள சுத்தியிருக்கச் செடி கொடிகளோட மருத்துவ குணங்கள அப்பா சொல்லிக் கேட்டிருக்கேன். அந்த ஆர்வம்தான் என்னை தாவரவியல் படிக்க வெச்சது. அதுமட்டுமல்ல நான் எங்க வீட்டு செடி மரம் கொடி கூடலாம் பேசுவேன்.

நீங்க சொன்னா நம்ம மாட்டீங்க. என் வீட்ல ஒரு மாமரம் ரொம்ப வருஷமா காய்க்காம இருந்துச்சு. என் அம்மா அது ஆண் மரம் வெட்டிடலாம்னு சொன்னாங்க. நான் வேணாம்னு சொல்லிட்டு தினமும் அந்த மரம் பக்கத்துல போய், ப்ளீஸ் ஒரே ஒரு காய் கொடு போதும்னு கேட்பேன். நிறையா பேசுவேன். சில மாதங்களில் பூ பூத்துக் காய் கொடுக்க ஆரம்பிச்சுடுச்சு. மரங்களுக்கும் உயிர் இருக்கு. அத நான் ஆழமா நம்புறேன். இப்போ பிஹெச்.டி-யிலும் தாவரங்களோட மருத்துவ குணங்கள் பத்திதான் ஆராய்ச்சி பண்ணப் போறேன். என் அப்பாவோட வழிகாட்டுதலின் பேரில் தான் ஆராய்ச்சிக்கான முன்னுரையே தயார் பண்ணேன். அவரோட அறிவு அவரோட போகக்கூடாது.

எங்க சமூகத்துல ஒரு பொண்ணு பிஹெச்.டி வரை படிக்கிறதுலாம் பெரிய விஷயம். என் தங்கைக்கே கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு. என் உறவினர்கள் என்னைப் பத்தி தப்பா பேசினாங்க. இப்போ புரிஞ்சிக்கிட்டு சப்போர்ட் பண்றாங்க. என் அப்பா அம்மா இப்பவும் செங்கல் சூளையில கூலிகளாகத்தான் வேலை பார்கிறார்கள். அவங்களுக்காகக் கண்டிப்பா முனைவர் பட்டம் வாங்குவேன்’’ என்கிறார் தன்னம்பிக்கையுடன்.

வாழ்த்துகள்_ரோஜா!

குறிப்பு- அ.இ.அழகுமுத்து அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here