பின்லாந்தின் சிறப்பான கல்விமுறை- வளவன்

பின்லாந்து, வடக்கு ஐரோப்பாவில் இருக்கும் ஒரு குடியரசு நாடு. பரப்பளவில் நம் இந்தியாவில் 10% இடம் கொண்டதாக (ராஜஸ்தான் மாநிலம் அளவிற்கு) அதே சமயம், மக்கள் தொகையில் நம்மை விட 230 மடங்கு குறைவாக உள்ள நாடாக விளங்குகிறது. மக்கள் அடர்த்தி குறைவாக உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுள் இதுவும் ஒன்று. ‘பின்லாந்து’ எனும் நாடு நீங்கலாக உலக கல்வித் தரம் குறித்த எந்த ஒரு பார்வையையும் வைப்பது அத்தனை சுலபமல்ல. உலகின் ஆகச் சிறந்த கல்வி முறை கொண்டதாக பின்லாந்து தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருப்பதாலும், அண்மைக்காலத்தில் கல்விக் கொள்கை நம் நாட்டிற்குள் பெரும்  பேசுபொருள் ஆனதாலும், ஒப்பீடாக அல்லாமல் பின்லாந்து கல்விமுறை பற்றிய ஒரு சுருக்க வரைவு முயற்சி இந்தக் கட்டுரை. இதனை ஒப்பிட்டுக் கொள்ளுதல் என்பது தனிமனிதர்களின் முடிவு, விருப்பம் சார்ந்தது.

கல்வி முறை பின்லாந்தில் பின்வருமாறு இருக்கிறது.

Source: Education ministry website, Republic of Finland.

1. மழலையர் தொடக்கக் கல்வி மற்றும் பராமரிப்பு (Early Childhood Care and Education – ECEC)
2. முதனிலை ஆரம்பக் கல்வி (Pre-primary education)
3. அடிப்படைக் கல்வி (Fundamental Education)
4. விருப்ப அடிப்படைக் கல்வி (கூடுதல்) – Voluntary additional year of Fundamental Education.
5.  பொது உயர்நிலைக் கல்வி (General Upper Secondary school )
6.  தொழிற்கல்வி மற்றும் பயிற்சி  (Vocational Education and Training)
7.  பல்கலைக்கழகம் (Universities)
8.  பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் (Universities of Applied Sciences)
9.  இளநிலைப் பட்டம் (Bachelors degree)
10. முதுநிலைப் பட்டம் (Masters degree)
11.  முனைவர் பட்டம் / உரிமங்கள் வழங்கும் கல்வி நிறுவனங்கள் (Doctoral / Licentiate Institutions)
12. தொடக்கநிலை தொழிற்கல்வி (Initial Vocational qualification)
13. கூடுதல் நிலை தொழிற்கல்வி (Further Vocational qualification)
14. சிறப்பு தகுதிநிலை தொழிற்கல்வி (Specialised vocational Qualification)

பின்லாந்து அடிப்படை உரிமையாக இலவச மற்றும் கட்டாய கல்வியை தன் அரசியலமைப்பில் கொண்ட நாடு. பிள்ளைகள் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டிய வயது 6. 6 முதல் 15 அல்லது 16 (1+9 / 1+10) வயது வரை கட்டாயக் கல்வி என்பது சட்டம்.

இனி ஒவ்வொரு படிநிலையாக விரிவாக பார்ப்போம்.
1. மழலையர் தொடக்கக் கல்வி மற்றும் பராமரிப்பு (Early Childhood Care and Education – ECEC):
கிட்டத்தட்ட நம் ஊர் பால்வாடி அல்லது அங்கன்வாடி போன்ற அமைப்பு. பள்ளி செல்லும் வயதுக்கு கீழ் (0-6) உள்ள குழந்தைகளுக்கான  அமைப்பு. இதில் பிள்ளைகளை சேர்த்தல் என்பது பெற்றோர்களின் விருப்பம் சார்ந்தது. குழந்தை பிறந்து 10 மாதங்கள் வரை‌ பிள்ளை வளர்ப்புக்கான விடுமுறை (Parental Leave) அரசால் வழங்கப்படும். அதற்கு பிறகு அவர்கள் பிள்ளைகளை இந்த மையங்களில் விட்டுச் செல்லலாம் அல்லது 3 வருடங்கள் வரை வீட்டுப் பராமரிப்பு விடுமுறை (Home care Leave) எடுக்கலாம். இந்த மூன்று ஆண்டுகள் அவர்களுக்கான குறைந்தபட்ச பெற்றோர் மற்றும் பிள்ளை வளர்ப்பு படிகள் (Parental and Home care allowances) அரசால் வழங்கப்படும்.

பேறு முடிந்து 7 – 10 மாதங்களில் பணிக்கு திரும்புகிற பெற்றோர்கள், நகராட்சிகளால் நடத்தப்படும் மழலையர் மையங்களில் பிள்ளைகளை சேர்க்கிறார்கள். இவை கல்வி நிலையம் என்பதை விடவும் பகல் நேர குழந்தைகள் பராமரிப்பு  மையங்களாக  (day care centres) முதலில் இருக்கின்றன.

காரணம் 4 மணி நேர கற்றல் (அரைநாள்) மட்டும் வந்து போகிற பிள்ளைகளுக்கு இலவச மதிய உணவு உண்டு; கட்டணம் இல்லை. ஆனால் மாலை வரை பிள்ளைகளை பராமரிக்கவும் சேர்த்து விட்டுச் செல்லும் , பணியாற்றும் பெற்றோர்கள் அந்த பராமரிப்புக்கு மாத்திரம் பணம் செலுத்த வேண்டும். ஒரு குழந்தைக்கு, மாதத்துக்கு 289 யூரோ கட்டணம். ஒரு நேரத்தில் 2 பிள்ளைகள் என்றால் இரண்டாவது பிள்ளைக்கு பாதி கட்டணம் – 145 €. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகள் ஒரே நேரத்தில் மழலையர் பள்ளியில் இருந்தால், ஒருவருக்கு 289€, இன்னொருவருக்கு 145€, மற்ற ஒவ்வொருவருக்கும் 27 € கட்டணம்.
நகராட்சிகளினால் நடத்தப்படும் இந்த மையங்களுக்கான மொத்த நிதியில் 14% பணிக்கு செல்லும் பெற்றோர்கள் தரும் பராமரிப்புக் கட்டணம்.

குழந்தைகளுக்கான விளையாட்டுகளுடனான செயல்முறை கற்றல் (Playing activity based learning) என்பது எந்த வகையான இலக்குகளின்றி (non targeted) இயல்பாக பயிற்றுவிக்கப் படுகின்றன.
பிள்ளைகள் வயது சார்ந்தோ, வாழ்விடம் சாரந்தோ, உறவு முறை சார்ந்தோ குழுக்களாக பிரிக்கப் பட்டு கூட்டுணர்வுத் தன்மையோடு வளர்த்தெடுக்கப் படுகின்றன.
3 முதல் 5 கி.மீ க்குள் இந்த மையங்கள் உள்ளன. தூரத்தை பொறுத்து இலவச போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

முதனிலை ஆரம்பக் கல்வி (Pre- primary Education):
6 வயதானவர்களுக்கான முறைப்படுத்தப்பட்ட வகுப்புகள் இங்கு தான் தொடங்குகின்றன.  மழலையர் தொடக்கப் பள்ளி மற்றும் பராமரிப்பு (0-6) வயதுள்ளளவர்களுக்கான அந்த மையங்களில் 6 வயது வந்தவர்கள் தனிக் குழுவாக்கப்பட்டு பாடங்கள் தொடங்கப்படும். 6 வயது வரை வீட்டிலேயே இருந்தவர்கள் அருகாமையிலுள்ள அத்தகைய மையங்களிலோ அல்லது வகுப்பு 1-9 வரையிலான பள்ளிகளிலோ தங்கள் பிள்ளைகளை சேர்க்கலாம்.

நகராட்சிகள் தான் இவற்றை நடத்துகின்றன, கல்விக் கட்டணமில்லை. பிள்ளைகளுக்கு என்று தனித்தனியாக கற்க வேண்டிய அளவீடுகளை இடுகிறார்கள்.அவை, மதிப்பெண்களாக இல்லை. நகர அளவிலான பாட வடிவமைப்புகளையும் (Local curriculum), தேசிய அளவிலான வடிவமைப்புகளையும் (National curriculum) சேர்த்து ஒருங்கிணைந்த கற்றல் திறன் மதிப்பீடு செய்யப்படுகிறது; அது தேர்வு அல்ல. வகுப்பு ஆசிரியர்கள்,
பெற்றோர் அல்லது காப்பாளருடன் இணைந்து ஒவ்வொரு பிள்ளைக்குமான கற்றல் செயல்திட்டத்தை வடிவமைக்கிறார்கள்.‌ கூட்டுக் கற்றலாக அமையும் இதன் தொடர்ச்சியாக  பின்னாளில் மதிப்பீட்டின் பொழுதும் பெற்றோர், ஆசிரியர் இருப்பர்.

அடிப்படைக் கல்வி (Fundamental Education):
7 வயதில் பிள்ளைகள் இங்கே வருவார்கள். 1 முதல் 9 வகுப்புகள் (Grades) வரையிலான கல்வி நிலையம். நகராட்சி நிர்வகிக்கிறது. கல்விக் கட்டணமில்லை. உணவு, போக்குவரத்து, கற்றல் உபகரணங்கள், சாதனங்கள் முழுமைக்குமான செலவை அரசு ஏற்கும். இலவச மற்றும் கட்டாயக் கல்வியாக இது விளங்குகிறது. வீட்டிற்கு அருகாமையிலுள்ள பள்ளிகளில் தான் பயில வேண்டும். சில தவிர்க்க இயலாத காரணங்களிருப்பின் பள்ளி மாறலாம். தேசிய அளவில் பாட வரைவு (Syllabus draft) அறிவிக்கப்படும். தொடர்ந்து அவற்றை உள்ளீடாக்கி அந்தந்த நகராட்சிகள் தனித்தனியாக வட்டார இயல்பினோடு பாட புத்தகங்களை வடிவமைத்து வழங்கலாம்.

மொழிக் கொள்கை:
பின்லாந்து மற்ற எல்லா ஐரோப்பிய நாடுகளை விடவும் மிகப் பெரிய மொழி பெரும்பான்மைக் குழு கொண்ட தேசம்.  92% மக்கள் அங்கே பின்னிஷ்  மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள். பின்னிஷ் மற்றும் சுவீடிஷ் (சுவீடனின் மொழி) ஆகியன அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகள் (Official Languages). 2ம் வகுப்பு வரை தாய்மொழி வழிக் கல்வி. 3ம் வகுப்பில் முதல் அயல்நாட்டு மொழியை (இரண்டாம் மொழி) தேர்ந்தெடுக்க வேண்டும். 2016ன் படி 89.8% பேர் ஆங்கிலத்தையும் 1.1% சுவீடன் மொழியையும்  தேர்ந்தெடுக்கறார்கள்.
6வது வகுப்பில் முதல் விருப்ப மொழிப்பாடம் தேர்ந்தெடுக்க வேண்டும். பன்னாட்டுப் பள்ளிகளில் (சுவீடன்/பின்லாந்து மொழி அல்லாத பிற வழிக் கல்வி) பயில்வோர் நிச்சயமாக இந்த விருப்பப் பாடத்தை எடுத்தாக வேண்டும். அது நாட்டின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இருக்க வேண்டும். எனவே, படிக்கிற எல்லோரும் தேசிய அலுவல் மொழிகளில் ஒன்றேனும் அறிந்தவர்கள் ஆகிறார்கள்.
இதிலும் கூட 8.3% பேர் ஆங்கிலம் படிக்கிறார்கள்.
8ம் வகுப்பில் 2வது விருப்ப மொழிப்பாடம் படிக்கலாம். இதை பெரும்பாலும் யாரும் தெரிவு செய்வதில்லை. 2016ல் வெறும் 10% தான் இந்த நான்காவது மொழிப்பாடம் படித்தார்கள். 90% பேர் அறிவியல் மற்றும் இன்ன பிற பாடங்களுக்கு நகர்ந்தனர் என்பது கவனிக்கத் தக்கது.

சமயக் கொள்கை:
15 வயதினை அடைந்த பிள்ளைகள் கட்டாயமாக ஒரு சமய தத்துவ பாடம் பயில வேண்டும். இது தேர்வு அல்லது மதிப்பீட்டுக்குரிய பாடம் அல்ல.
பாடங்கள் தத்துவங்களாய் இருக்க வேண்டுமல்லாது பிரசங்கங்களாய்  இருக்கக் கூடாது (Non Confessional) என்பது அடிப்படை.15 வயதடைந்தோர் பெற்றோரின் கடிதத்துடன் விரும்பிய பாடம் படிக்கலாம்.
இவாஞ்சலிக்கல் லூத்தரன் திருச்சபையின் கீழ் இருக்கும் கிறித்துவம் (Lutheranism) இங்கே பெரும்பான்மையானவர்கள் (89%) தேர்ந்தெடுத்து படிக்கும் பாடம். மதம் சார்ந்து போக விரும்பாதவர்களுக்கான மதச்சார்பின்மை தர்மம் (Secular Ethics) எனும் தத்துவப் பாடம் உண்டு. வேடிக்கை என்னவென்றால், இரண்டாவது அதிகம் பேர் படிப்பது (6.6%) இதனைத்தான். பெரும்பான்மை மதம், அதற்கடுத்த தேர்வாக மதச்சார்பின்மை. இசுலாம் 2.1%, பாரம்பரிய கிறித்துவம் (Orthodox Christianity) 1.6% மற்றவை இன்னும் குறைவாக உள்ளன. குறைந்தது ஒரு பள்ளியில் 3 மாணவரேனும் ஒரே மதத்தை தெரிவு செய்தால் ஒரு ஆசிரியர் அமர்த்தப்படுவார். இல்லையேல் பள்ளிக்கு வெளியே, குறிப்பிட்ட மணி நேரம் ஒரு மதத்தின் தத்துவ வகுப்புக்கு போனதாக சமய நிறுவனம் உறுதியளித்தல் போதுமானது.

அடிப்படை பள்ளிகளில் 1-6 ம் வகுப்பு வரை ஒரு ஆசிரியரே எல்லா பாடங்களையும் எடுப்பார். 7-9 வகுப்புகளில் பாட வாரியாக ஆசிரியர்கள் வகுப்பு எடுப்பார்கள்.

அடிப்படைக் கல்வி (வகுப்பு 9) முடித்தவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் என்று எதுவுமில்லை. அந்த மாணவர் உயர்நிலைக் கல்விக்கு தகுதியானவர் என்று சான்றளிக்கப் படும்.

விருப்ப அடிப்படைக் கல்வி (கூடுதல்) – Voluntary additional year of Fundamental Education :
இது அந்தந்த பிள்ளைகளின் விருப்பம் சார்ந்தது.  கூடுதலாக ஓராண்டு அடிப்படைக் கல்வியில், ஆழப் பயில விரும்புபவர்கள் ஒரு ஆண்டு கூடுதலாக (1+10) பயிலலாம். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து மதிப்பீடு செய்யும் பொழுது கற்றலுக்கான நேரம் கூடுதலாக எடுக்கும் குழந்தைகள் (Slow learning) மற்றும் கற்றல் குறைபாடுடையவர்களுக்கான (Learning difficulties) பிரத்தியேக தனித் திட்டங்களுடன் இந்த ஒரு ஆண்டு , தேவையை பொறுத்து 2 ஆண்டுகள் வரை கூடுதலாக அடிப்படைக் கல்வி கற்பிக்கப்படும்.

பொது உயர்நிலைக் கல்வி (General Upper Secondary education):
அடிப்படைக் கல்வி (வகுப்பு 9) முடித்த யார் வேண்டுமானாலும், எந்த வயதினராயினும் இதற்கு விண்ணப்பிக்கலாம்‌. 3 வருட படிப்பு இது. இது பல்கலைக்கழக படிப்புகளுக்கான தயாரிப்பு போன்றது. 3வது ஆண்டினுடைய இறுதியில் (18/19 வது வயதில்) பொதுத்தேர்வு இருக்கும். அதில் தேர்ச்சி பெறுதல் ஒருவரை பல்கலைக்கழகத்தில் படிக்க தகுதியுடைவராக்குகிறது.
நேரடி மற்றும் தொலைதூரக் கல்வி முறை உள்ளன. இடைநிற்றல் இல்லாமல் வருகிறவர்களுக்கு 3 ஆண்டுகளில் 75 பாடங்களும் (ஒவ்வொன்றும் 38 மணி நேரம்), நடுத்தர வயதான பின் சேர்கிறவர்களுக்கு 44 பாடங்களும் (ஒவ்வொன்றும் 28 மணி நேரம்) எடுக்கப் படுகிறது.
இலவச உணவு, போக்குவரத்து, பாட புத்தகம், கற்றல் உபகரணங்கள், அரசினுடைய கல்வி உதவித்தொகை வழங்கப்படும். வெகு சில (விருப்பப்) பாடங்களுக்கு மட்டும் பொதுத் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளியும், தனது சுற்று வட்டாரங்களில் உள்ள அடிப்படைக் கல்வி நிலையங்களொடு இணைந்திருக்கும். இதன் மூலம் வகுப்பு 9 முடித்தவர்களை கண்டறிதல் மற்றும் தொடர்பு கொள்ளுதல் எளிதாகும். அரசினுடைய நிதியுதவி ஒவ்வொரு பள்ளியில் பயிலும் மாணவர் எண்ணிக்கை மற்றும் தனி நபருக்கான கல்வி உதவித் தொகை அளவீட்டைப் பொறுத்தது.
தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (Vocational Education and Training):
அடிப்படைக் கல்வி (வகுப்பு 9) முடித்து உயர்நிலைப் பள்ளியில் சேருவதற்கு மாற்றாக தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வகுப்புகளிலும் சேரலாம். மூன்றாண்டுகளுக்கான படிப்பு. அறிவுடன் சேர்ந்த வேலைக்கான திறன் மேம்பாடு உயர்த்துதல் இந்த பயிற்சியின் நோக்கம். அடிப்படைக் கல்வி முடிக்கிறவர்களில் சராசரியாக 50% பேர் தொழிற்கல்விக்கு வருகிறார்கள். ஐரோப்பிய கண்டத்தில் தொழிற்கல்வி முடித்து வேலைக்கு போகிறவர்கள் விகிதமும், மேற்படிப்பு போகிறவர் விகிதமும் பின்லாந்தில் மிகக் கணிசம், முதன்மையானதும் கூட.

பிற படிப்புகளைப் போல அரசு நிதிகள், பொது நிதி உண்டு. உணவு, போக்குவரத்து இலவசம். கற்றல் உபகரணங்களுக்கு பணம் கட்ட வேண்டும். முழு நேரமாக படிக்கிறவர்களுக்கு வங்கிக் கடன், அரசு உதவித் தொகை உண்டு.
ஏழு பேருக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட்டு ஒரு குறிப்பிட்ட காலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் படிப்பு, பயிற்சி அளிக்கப்படுகிறது. இது உலக சந்தை குறித்த புரிதலுக்கு வழிவகுக்கும்.
ஒவ்வொரு மாணவருக்கும் தனியாக ‘போட்டித் திறன் வளர்ப்பு திட்டம்’ (Personal Competence Development Plan) உருவாக்கப்படும். படிப்பில் ஒரு பெரும் பகுதி பணியிட கற்றல் (Workplace Studying) எனும் தன்மையானது. பயிற்சி ஒப்பந்தம் (Apprenticeship / training agreement) தொழிற் நிறுவனங்களுடன் செய்யப்பட்டு, மாணவர்கள் சம்பளத்துடனான முழுநேர ஊழியர்களைப் போலவே இருப்பார்கள். இது பயிற்சியின் ஒரு பகுதியாகவோ அல்லது முழுப் பயிற்சியாகவோ அமையும். உயர்நிலைக் கல்வியைப் போலவே வகுப்பு 9 வரை முடித்த எந்த வயதினரும் இதில் சேர்ந்து படிக்கலாம். 3 ஆண்டுகளுக்குள் தொடக்கநிலை தொழிற்கல்வி(Initial Vocational qualification) , கூடுதல் நிலை தொழிற்கல்வி(Further Vocational qualification) , சிறப்பு தகுதிநிலை தொழிற்கல்வி (Specialised vocational Qualification) என மூன்று படிநிலைகளாக பயில்வர்.

இவற்றிற்கான நிதி இப்படி பகுத்து அளிக்கப்படும். 50% – மாணவர் எண்ணிக்கை, படிக்கும் ஆண்டை பொறுத்தது (Student grant). 35% – கல்வி நிறுவனத்தின் செயல்திறனைப்  பொறுத்தது (Performance based). 15% – படித்து முடித்தவர்களின் எதிர்காலம் சார்ந்தது (பணி செல்வோர், மேற்படிப்பு செல்வோர் விகிதம்).
ஒவ்வொரு ஆண்டும் இப்படி பல அளவீடுகளை வைத்து அரசு நிதியினை வழங்கும்.

பட்டப் படிப்பு நிறுவனங்கள்:

பின்லாந்தில் பட்டப்படிப்பு நிறுவனங்கள் இரண்டு வகையாக உள்ளன.

(அ.) பல்கலைக்கழகங்கள் (Universities)
(ஆ.) பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகங்கள் (Universities of Applied Sciences)

பல்கலைக்கழகங்கள் சட்டத்திற்குட்பட்ட தன்னாட்சி பொருந்திய அமைப்பாக (Independent Legal entity) திகழ்கின்றன. அடிப்படைக் கூறுகளின் மீதான கல்வி நிலைய ஆராய்ச்சிகளை (Academic Research) தொடர்ந்து மேற்கொண்டு அவற்றை வலுப்படுத்துகின்றன. சமூகம் சார்ந்த கலை, இலக்கியம் போன்றவற்றின் பரிணாமங்களில் புது பரிமாணம் செய்வதாய் அமைந்துள்ளன.
வழங்கப்படும் பட்டங்கள்: இளநிலை, முதுநிலை, நுண்கலை மற்றும் ஆராய்ச்சி முனைவர் ஆகியன. மேலும் பணியிட சிறப்பு தகுதி (Professional specialisation) வகுப்புகளும் நடைபெறுகின்றன.

பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகங்கள் பொதுத்துறை நிறுவனங்களாக (Public Ltd company) செயல்படுகின்றன. ஆராய்ச்சிகள் அனைத்தும் சமகால தேவைகள் (Present life needs) குறித்ததாகவும், புதுமை நிறைந்ததாகவும் (Innovation), உள்நாட்டு கட்டமைப்புகளை (internal infrastructure) மேம்படுத்துவதாகவும் இருக்கும் வகையிலான படிப்புத் திட்டம் இருக்கும். இங்கேயும் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி முனைவர் பட்டங்கள் வழங்கப்படும். கூடுதலாக தொழில்முறை ஆசிரியர்  கல்வி  (Professional teaching education) இங்கே வழங்கப்படும்.

பின்லாந்தில் பட்டப் படிப்பானது, ஐரோப்பிய ஒன்றியம் (European Union), ஐரோப்பிய பொருளாதார மண்டல நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு (European economic area) economic area) கட்டணமற்ற சேவை. பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கல்விக் கட்டணம் (Tution fees) உண்டு.

பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகங்களில் முதுகலை படிக்க (Masters in University of applied sciences) கட்டாயம் 3 ஆண்டுகள் வேலை செய்த அனுபவம் தேவை. அப்போது தான் சமகால தொழிற்சாலைகளின் அமைப்பு, உற்பத்தி, நிர்வாகம் குறித்த புரிதல் வரும் என்பதனாலும், பின்னாளில் மக்களின் தேவைகளோடு அதனைப் பொருத்தி இடைவெளியை இட்டு நிரப்பும் திட்ட வரைவு அமைக்கப் பயன்படும் என்பதனாலும் இந்த பணி அனுபவம் அவசியம். 2020 ஜனவரி முதல் இது 2 ஆண்டு அனுபவமாக குறைக்கப்பட்டுள்ளது.

திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் (Open universities):
வகுப்பு 9 க்கு பின் படிக்காமல் நின்றவர்கள் பின்னாளில் கல்லூரிகளில் சேர விரும்பினால், அதற்கான ஆயத்த வகுப்புகள் (Preparatory Crash course for higher education) திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும். கல்விக் கட்டணம் உண்டு. பணிபுரிவோர் தமது தொழில்துறையின் புதிய தொழில்நுட்ப அறிமுகம், பயிற்சி பெறுவதற்குமான வகுப்புகளும் (Technological Updation for Professionals) கட்டணத்துடன் நடத்தப்படுகின்றன.

கல்விக்கான அரசு நிதி:
தேசிய அரசு நிதிநிலை அறிக்கையில் தனித்தனியாக நிதி ஒதுக்கும். இந்த 2020ம் ஆண்டு பட்ஜெட்டில் 618 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் 5,200 கோடி ரூபாய்) கல்விக்காக மாத்திரம் பின்லாந்து அரசு ஒதுக்கியுள்ளது.
மேலாண்மை மற்றும் நிர்வாகத்திற்காக நகராட்சிகளும் ஒரு குறிப்பிட்ட தொகையை தமது பங்கிற்கு  ஒதுக்கும். பின் வரும் பல்வேறு பணிகள் மாணவர்களுக்கான நிதியுதவியாக, திட்டங்களாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
1. கல்விக் கட்டணம் இல்லை (அரசே செலுத்தும்)
2. பள்ளிகளில் இலவச உணவு, கல்லூரிகளில் குறைந்த விலையில் உணவு (பாதி கட்டணம் அரசு செலுத்தி விடும்).
3. போக்குவரத்து கட்டண சலுகை. வகுப்பு 9 வரை இல்லை; பின்னர் அரசு மானியம் வழங்கும்.
4. நகராட்சி மாறி பட்டப்படிப்பு படிக்கிறவர்களுக்கான வீட்டு வாடகை கட்டண சலுகை.
5. படிப்பிற்கான வங்கிக் கடன். இவ்விடம் குறைந்த குடும்ப வருமானம் உள்ளவர்களுக்கு அரசே வங்கி கடனுக்கான வட்டியை செலுத்தும்.
6. வெளி நாடுகளில் படிக்கும் பின்லாந்து மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் ஒரு பகுதியை அரசே செலுத்தும்.
7. மேலும், வெளிநாடுகளில் தங்கிப் படிக்கும் பின்லாந்து மாணவர்களின் வீட்டு வாடகையிலும் ஒரு பங்கினை அரசு செலுத்தும். இதற்கு குடும்ப வருமானம் குறிப்பிட்ட அளவுக்கு குறைவாக இருக்க வேண்டும்.

பிற சிறப்பு அம்சங்கள்:
இளைஞர் சட்டம், 2017 (Youth Act,2017):
இதன்படி தேசிய இளைஞர் கழகம் (State youth council) தொடங்கப்பட்டு , நகராட்சி தோறும் அதன் கிளைகள் அமைக்கப்பட்டு, தேசிய அளவிலான இளைஞர் ஒருங்கிணைப்பு நிகழ்ந்துள்ளது.
தற்போதைய இளைஞர் நலத் திட்டங்களின் தரம், நிலை, வீச்சு குறித்த கருத்துக்கள் அறியப்பட்டு தொகுக்கப்படுகின்றன.
இளைஞர் வாழ்வாதார நிலைகள் குறித்த சமகால தகவல்கள் சேர்க்கப் படுகின்றன.
மேலும், அரசின் ‘இளைஞர் கொள்கை’ வகுப்பதற்கும் இந்த கழகம் களத்திலிருந்து துணை புரிகிறது.

இந்த இளைஞர் கழகம், தொடர்ந்து இளைஞர் பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் திறன் வளர்ச்சி, கல்வி உதவி, வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்கள், நிர்வாக திறன், சமூக பார்வை, தன்னாட்சி முதலியனவற்றை இளைஞர்களிடம் பெருக்கிட முனைந்து இயங்கி வருகிறது.
தேசிய உடலுறுதி பேணல் கொள்கை:
விளையாட்டு மற்றும் உடலுறுதி மேம்படுத்துதல் சட்டம், 2015 ன்படி (Promotion of Sports and Physical Activity act, 2015), எல்லா வயதினருக்கும் சமமான வாய்ப்புகள் உருவாக்க உறுதி எடுக்கப் பட்டுள்ளது. நகராட்சி தோறும் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி கட்டுமானங்கள் அமைக்கவும், அவற்றை பொதுமக்கள் எல்லாருக்குமான பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், தடகளம் மற்றும் விளையாட்டு அமைப்புகளில் பொதுமக்கள் பங்கேற்கவும் சமூக விவகாரம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. 2017ல் ஒரு ஆண்டுக்கு 149.6 மில்லியன் யூரோ (1,250 கோடி இந்திய மதிப்பில்) பணம் ஒதுக்கியது. நகராட்சிகள் தங்கள் ஆண்டு நிதியில் 25% இதற்காக ஒதுக்கின.  310 நகராட்சிகள் உள்ள பின்லாந்தில் 36,000 த்துக்கும் மேலான அங்கீகாரம் பெற்ற உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு நிலையங்கள் இருக்கின்றன (75% அரசு +25% தனியார்).
தேசிய உடற்செயல்பாடு மேம்பாட்டு திட்டம் (National Program for promoting physical activity) என்ற பெயரில் வயது வாரியாக கொள்கை முழக்கங்கள் தந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

“செயல்பாட்டில் இன்பம்” (Joy in motion) – மழலையர் பள்ளியினருக்காக; “பள்ளிகள் நகர்கின்றன” (Schools on the move) – அடிப்படைக் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு கூடுதலாக தினம் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி வகுப்பு வழங்கப்பட்டு இம்முழக்கம் கொண்டு சேர்க்கப் பட்டது‌; “வாழ்க்கைக்கான உறுதி” (Fit for life) – வயது வந்தோருக்கான முழக்கம்; “முதுமைக் காலத்து பலம்” (Strength in old age) என்பது மூத்த குடிமக்களுக்காக என முழக்கங்களும், திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. அவர்களின் பங்களிப்பும் உறுதி செய்யப்பட்டது.

இத்தகைய கல்வி சிறப்புடைய தேசத்தில் பொது நூலகத்தின் பங்கு நிச்சயம் இன்றியமையாததாக இருக்கும். அது குறித்த தகவல்கள்.
தேசத்தில் நகராட்சி மற்றும் ஆய்வு நூலகங்கள் எல்லாரும் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பொது நூலகச் சட்டம், 2017 ன் படி நூலக வசதிகளைத் தொழில்நுட்ப மயமாக்கவும், நூலகப் பயன்பாட்டில் சமத்துவம், சம வாய்ப்பு உருவாக்கவும், நூலக இணைப் பின்னல் (Network of Libraries) உருவாக்கமும் செய்யப்பட்டன. பின்லாந்தில், நூலகம் தான் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் நகராட்சி (அரசு) சேவை ஆகும். 720 பொது மற்றும் கிளை நூலகங்கள் உள்ளன. நாட்டில் 70% பேர் 3 கி.மீ. சுற்றளவில் நூலகம் கொண்டுள்ளனர். 93% பேர் 10 கி.மீ. சுற்றளவில் நூலகம் கொண்டுள்ளனர். 135 நகரும் நூலகங்கள் உள்ளன. இவை ஒரு நாளைக்கு ஒரு இடம் வீதம் வாரம் வெவ்வேறு 7 இடங்களில் நிறுத்தி வைக்கப்படும்.

2019ல் உலக அளவில் நூலக பயன்பாட்டில் பின்லாந்து முதலிடத்தில் இருந்தது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வருடத்தில் குறைந்தது பத்து முறை நூலகத்தை நாடியுள்ளனர், 16 புத்தகங்கள் சராசரியாக ஒவ்வொரு வீட்டிலும் எடுக்கப்பட்டுள்ளது.
பொது நூலகம் இல்லாமல் வருடம் தோறும் 20 மில்லியன் நூல்கள் விற்கப்படுகின்றன. ஓர் ஆண்டில் சராசரியாக ஒவ்வொரு குடிமகனும் 4 புத்தகங்கள் வாங்குகின்றனர்.
அரசினுடைய நிதியுதவி ஒவ்வொரு நூலகத்திற்கும் அதன் சுற்றுபுறத்திலுள்ள மக்கள் தொகை (பயன்பாட்டாளர்) அடிப்படையில் வழங்கப்படும்.

தேசிய இலக்கிய கழகம் வருடந்தோறும் உள்நாட்டில் அச்சடிக்கப்பட்ட 500-600 நூல்களை பரிந்துரை செய்யும். அவை எல்லா நூலகங்களிலும் புதிதாக வாங்கி சேர்க்கப்படும். இவற்றை மொத்தமாக வாங்கி, நூலகங்களுக்கு பிரித்தளிக்கும் பணியை செய்யும் நிறுவனம், நான்காண்டுகளுக்கு ஒரு முறை பொது ஏலம் விடப்பட்டு தேர்வு செய்யப்படும்.

எல்லாரையும் உள்ளடக்கியமையும், சமத்துவமும் (Inclusiveness and equality) கொண்டதாக நூலகம் இருக்கிறது. பின்லாந்து பூர்வீகமல்லாத பிற மொழியினருக்காக பன்மொழி நூலகங்கள் (Multi lingual Libraries) சிறப்பு நூலகங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒவ்வொருவரும் தன் இருப்பிடத்திற்கு அருகே உள்ள பொது நூலகத்தின் மூலமாகவே இணைய வழியில் பயன்படுத்தலாம். இதற்கான சிறப்பு நிதியம் அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கது.
பின்லாந்து கல்வி முறை அமைப்பில் என்னை கவனிக்க வைத்தவைகள்:
1. அரசுத் துறையாக கல்வி. மிக சொற்பமான தனியார் எனினும் அவற்றுக்கான வணிகமயமாதல் தடுப்பு சட்டங்கள்.
2. மதிப்பெண்களைத் துரத்தும் முறையின்மை.
3. ஒவ்வொரு மாணவருக்குமான தனித்தனி திறனடைவு இலக்குகள்.
4. பெற்றோர் – ஆசிரியர் இணைந்த மதிப்பீடுகள்
5. அழுத்தமில்லாத ஒரே ஒரு பொதுத் தேர்வு (அது பட்டப் படிப்பிற்கான ஒரு அடிப்படை தேர்வு தாம்).
6. வலுவான உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் தேசிய அரசின் அதிகாரத் தலையீடின்மை.
7. முறைப்படுத்தப்பட்ட வரி வசூல் மற்றும் மேலாண்மை.
8. உடல்நலம், அறிவு நலம் மீதான சமரசமற்ற கொள்கைகள்.
9. 2 ஆண்டு பணிக்கு பிறகு முதுநிலைப் பட்டப்படிப்பு. (தேவைக்கும், கண்டுபிடிப்புக்குமான இடைவெளி இட்டு நிரப்பல்).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here