பா.ஜ.க தலைவர்கள் மீதான 62 வழக்குகள் தள்ளுபடி.

இந்த செய்தியை தேசத்தின் குரலுக்காக மொழிபெயர்த்தவர் ஒமன் நாட்டில் ஆசிரியராக பணியாற்றும் ஆபிரகாம் தெய்வநாதன்.”

கர்நாடக பாஜக தலைவர்கள் மீதான 62 குற்றப்பிரிவு வழக்குகள் இதுவரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இது வழக்கமாக நடப்பதுதான் என்று அக்கட்சியின் சட்ட அமைச்சர் கூறுகிறார்.

தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளில் மாநில சட்ட அமைச்சர் ஜே.சி.மதுசாமியும் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சி.டி.ரவியும் அடங்குவர்.

பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கர்நாடக அரசு, தற்போது பதவியில் இருக்கும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் உட்பட அதன் கட்சியின் பல தலைவர்கள் மீது தொடுக்கப்பெற்ற 62 குற்றப்பிரிவு வழக்குகளை நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக நியூஸ் 18 ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான துணைக் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும், மாநில காவல்துறை தலைமை இயக்குநரும், காவல்துறை இயக்குநரும், அரசு வழக்குகள் இயக்குநர் மற்றும் சட்டத்துறை இயக்குநர் ஆகிய அனைவரும் இந்த வழக்குகளை நீக்கம் செய்வதற்கு எதிராக பரிந்துரை செய்துள்ளனர்.

தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளில் மாநில சட்ட அமைச்சர் ஜே.சி. மதுசாமி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சி.டி.ரவி ஆகியோருக்கு எதிரான வழக்குகளும் அடங்கும். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 143 (சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல்), 147 (கலவரம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கு நவம்பர் 2015 இல் மைசூரு மாவட்டத்தின் ஹுன்சூர் நகரில் இரு சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலுடன் தொடர்புடையது.

2017-ம் ஆண்டு ஹொஸ்பேட் எம்எல்ஏ ஆனந்த் சிங் மீது தொடுக்கப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இவர் 300 பேர் உள்ளூர் கும்பலை கொண்டு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கல்வீசி சூறையாடினார். இந்த சம்பவத்தால் ரூ .3 லட்சம் மதிப்புடைய சொத்து சேதமாயிற்று. அப்போது காங்கிரஸ் கட்சியுடன் இருந்த இந்த அரசியல்வாதி, மிரட்டல், அரசு அலுவலர்கள் மீது தாக்குதல் மற்றும் அவர்கள் பணியாற்றுவதற்கு இடையூறு விளைவித்தல் என பல குற்ற செயல்களை செய்து வந்தார்.

பிள்ளையார் சிலை மூழ்கியது தொடர்பான 2012 வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கர்நாடக வேளாண் அமைச்சர் பி.சி. பாட்டீல் மீதான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளில் ஒன்றாகும்.

வழக்கைத் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக சட்ட அமைச்சரின் துறை பரிந்துரைத்த போதிலும், இது ஒன்றும் வழக்கத்திற்கு மாறானது அல்ல என்று மதுசாமி கூறினார். இந்த 62 வழக்குகள் குறித்த முடிவு முன்னரே எடுக்கப்பட்டது என்றும் “கடந்த காலங்களிலும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள (ஜே.டி எஸ்) தலைவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை கூட நாங்கள் தள்ளுபடி செய்துள்ளோம். ஆனால் பெங்களூரு பட்டணத்தில் நடந்த கலவரம் மற்றும் கொள்ளை போன்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் இதை காட்டி தப்பித்து கொள்ள முடியாது,” என்று நியூஸ் 18 ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

தனிமனித உரிமைக்காகப் போராடிய வழக்குகள் மட்டுமே இதுவரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்று மதுசாமி மேலும் கூறினார். தங்கள் தொகுதி மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடியவர்களுக்கும், பொது நலன் தொடர்புடைய வழக்குகளுக்காக பெரிய பெரிய நிறுவனங்களுக்கு எதிராக போராடியவர்களுக்கும்,காவல் துறை தானாக முன் வந்து பதிவு செய்த வழக்குகளில் இருந்து தான் விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

மேலும் அவர், துணைக்குழு இதுபோன்ற வழக்குகளை நன்றாக ஆராய்ந்து மதிப்பீடு செய்த பின்னரே நீதிமன்றத்தின் சுமையை குறைக்க, அவற்றுள் பல வழக்குகளை நீக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளது என்றார். தள்ளுபடி செய்யப்பட்டதில் பலவும், மற்றும் தள்ளுபடி செய்யப் பரிசீலிக்கப்படும் வழக்குகளில் பலவும் வெறும் சில்லறை வழக்குகளேயாகும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here