பாதுகாப்புத் துறைக்கு இந்த அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.
2019-20 நிதியாண்டின் பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு 3,05,296 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2018-19-ல் இந்த ஒதுக்கீடு 2,82,733 கோடி ரூபாயாக இருந்தது. பின்னர் அது 2,85,423 கோடி ரூபாயாக திருத்தியமைக்கப்பட்டது என்று மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் நிகழ்த்திய பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
பாதுகாப்புத் துறைக்கு இந்த அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை என்றும், நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கவும், உச்சபட்ச தயாரிப்பு நிலையை பராமரிக்கவும், தேவைப்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
முந்தைய அரசுகள் கடந்த 40 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ‘ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்’ பிரச்னைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். முந்தைய அரசுகள் மூன்று பட்ஜெட்டுகளில் இதுபற்றி அறிவிப்பு வெளியிட்டபோதும், 2014-15 இடைக்கால பட்ஜெட்டில் வெறும் 500 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போதுள்ள அரசு பாதுகாப்பு சேவைப் படியை கணிசமாக உயர்த்தியுள்ளது. மிகவும் ஆபத்தான பணிகளில் ஈடுபட்டுள்ள கப்பற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கு சிறப்புப் படிகள் வழங்கப்படுகின்றன என்று அமைச்சர் கூறினார்.