பாதுகாப்பாக வாழக் கற்றுக் கொள்வோம்!- அ.லோகசங்கர்.


வழக்கம்போல சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறைந்தது .பகல் வெளிச்சமாகவும் இரவு இருட்டாகவுமே இருந்தது. ஆனால் வழக்கமான வாழ்க்கையை இழந்துவிட்ட இறுக்கம் மனதை கவ்விக் கொண்டே இருக்கிறது.
பல்கலைக்கழகங்கள் முதல் ஆரம்பப் பள்ளிகள் வரை இழுத்து மூடப்பட்டுள்ளன. தொழிற்சாலைகளின் சக்கரங்கள் சுழல்வதை நிறுத்திக் கொண்டன. ரயில்கள் ஓடவில்லை. சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.பெரும்பாலும் மிகப்பெரிய போராட்டங்களின் போதும், போர்களின் போதும் புழக்கத்துக்கு வரும் ஊரடங்கு முதல் முறையாக மக்கள் ஊரடங்கு என நாமகரணம் சூட்டப்பட்டு மக்களை தத்தம் வீட்டுச் சிறையில் அடைபட்டு இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.பகாசுர ஆயுத பலம் கொண்ட( அணு குண்டுகள் உட்பட) வல்லரசுகள் தங்களுக்குரிய வழக்கமான திமிர்த்தனத்தை காட்டிக் கொள்ள முன்வரவில்லை.
உலகமயம் மட்டுமே உலகம் உய்ய ஒரே வழி என உறக்கத்திலும் உளறிக்கொட்டியவர்கள்,
ஆடம் ஸ்மித் ஆரம்பித்துவைத்த வணிக சுதந்திரத்தை வாய்கிழிய முழங்கியவர்கள் ,நாட்டின் எல்லைகளை எல்லாம் தொல்லைகளாக கருதியவர்கள் ,அலிபாபா நாற்பது திருடர்கள் போன்று திறந்திடு சீசே என அனைத்தையும் தாராளமாக திறந்து விடுங்கள் எனக் கூவியவர்கள்,-என எல்லோரும் யாதொரு சலனமும் இன்றி அடங்கி விட்டார்கள்-அடக்கமாகி விட்டார்கள்.
‌‌ உற்பத்திகள் நிறுத்தப்பட்டுவிட்டன. வணிகம் முடக்கப்பட்டு விட்டது. நாட்டின் எல்லைகளில் எல்லாம் பெர்லின் சுவர்களால் அரண் அமைக்கப்படுவது போதாதென்று சீனப்பெருஞ்சுவர் எழுப்பப்படுகிறது.
ஒற்றுமை ,ஒத்துழைப்பு என்ற வார்த்தைகளின் பொருளெல்லாம் மாறிவிட்டது. ஒற்றுமை, ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடையாளமான செயல்பாடுகள் அனைத்தும் தடை செய்யப்பட்டு விட்டன. அத்தகைய செயல்களை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகின்றன. நேசத்தோடு கைகுலுக்குவதும், பாசத்தோடு ஆரத்தழுவுவதும், வந்தாரை வரவேற்பதும்
அபாயத்துக்கு உரிய செயல்களாக உருமாறி விட்டன.
கோவில்கள்,மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் நடை சாத்தப்பட்டு உள்ளன. புனித தலங்கள் எல்லாம் பக்தர்களுக்கும் சாமியார்களுக்கும் வர தடை விதித்துள்ளன. ஆளுவோர்களைப் போலவே ஆண்டவன்களும் மெளனித்து விட்டார்கள். எந்த ஆண்டவனாலும் ஆண்டவனின் எந்த ஒரு முகவராலும் உலகை ரட்சிக்க உத்திரவாதம் தர முடியவில்லை. ஆலைகளுக்கும் வேலைகளுக்கும் மட்டுமல்ல ஆன்மீகத்திற்கும் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.


இத்தனைக்கும் என்ன காரணம்?
சாதாரண கண்களுக்கு புலப்படாத கோவிட் 19 என்னும் வைரஸ் தான். வைரஸ் என்பது சாதாரண கண்களுக்கு புலப்படாத நுண்ணுயிரிகளில் மிகவும் நுண்ணியது. வைரஸ் என்பது உயிரற்ற பொருட்களில் இருந்து உயிர்கள் உருவாகியது என்பதற்கு நிரூபண சாட்சியாக விளங்கும் ஒன்று.இந்த பிரபஞ்சத்தில் நிலவும் உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளுக்கு இடைப்பட்ட தொடர்ச்சியின்அடையாளமும் ஆதாரமும் ஆகும்..தன்னிச்சையான சூழலில் செயலற்ற நிலையில் வைரஸ் படிக வடிவில் இருக்கும். சாதகமான சூழலின் போது செயல்படத் துவங்கும். உயிரினங்களின் செல்லுக்கு உள்ளே வாழ்ந்து பெருக்கம் அடையும்.
கொரானா என்னும் ஆட்கொல்லி நோயை உருவாக்கியுள்ள கோவிட் 19 என்ற வைரஸை கொன்று ஒழிக்க முடியுமா?
நிச்சயம் முடியாது. செயலற்ற நிலைக்கு தள்ளி விடத்தான் முடியும். அது ஒன்றே தீர்வு ஆகும். வைரஸ் வாழ்ந்து பல்கிப் பெருகிட இடமளிக்கக்கூடாது. அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றே தனிமைப் படுத்திக் கொள்ளுதல். வைரஸ் தாக்கப்பட்டவர்களிடம் இருந்து தொற்றாக பிறருக்கு பரவுவதை தடுக்க இதன் மூலம் மட்டுமே முடியும்.
இங்கிலாந்து பிரதமரையும் கொரானா விட்டுவைக்கவில்லை. தமிழகத்தில் கொரானாவுக்கு முதல் பலி ஒரு தொழிலதிபரே.சாதி மதம் இனம் நாடு என எந்த ஒரு பாகுபாடுமின்றி எல்லாத் தரப்பினரையும் கொரானா அடங்கச் செய்துள்ளது. சிந்தனையால் மாறுபட்ட சித்தாந்தங்களுக்கும் அதிகார வேட்கை கொண்ட அரசியல்களுக்கும் பொருளில்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை என்கின்ற பொருளாதாரத்திற்கும் கொரானாவுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.
ராஜாக்கள் காலத்து அரண்மனை புரட்சிகளின் மீது அளவுக்கு அதிகமாக லயிப்பு கொண்டுள்ள சிலர் பிதற்றுவதைப்போல
கொரானாவின் சதிராட்டம்
சதிவேலைகளின் சாகசம் அல்ல. ராஜ வம்சங்களின் மாடங்களுக்கு வெளியே
வீதிகளில் அரசியலை நிர்ணயிக்கின்ற மக்களின் ஜனநாயக இயக்கங்கள் உருவாகி நிலைபெற்று விட்ட 500 ஆண்டுகால மனித குல வரலாற்றை அறியவும் புரியவும் மறுக்கின்ற மனநோய்க்கு மருந்து ஏதுமில்லை.
நாம் வாழும் இந்த பூமிப் பந்து பாதுகாப்பானதாகவும் வாழ இனிமையானதாகவும் இருக்க மனித குலமே பாதுகாப்பாகவும் இனிமை நிறைந்ததாகவும் இருக்க வேண்டியது முன்நிபந்தனை மட்டுமல்ல. முதலும் முடிவுமான ஒரே நிபந்தனை என்பதை உணர்த்திக்கொண்டிருக்கும் வைரசுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்!
#லோக சங்கர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here