ஊழியர்களை பணிநீக்கம் செய்வதில் தீவிரம் காட்டும் முன்னணி ஊடகங்கள்.- அருண்காசி.

தேசிய பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு,தில்லி பத்திரிக்கையாளர்கள் சங்கம் மற்றும் பிரகான் மும்பை பத்திரிக்கையாளர்கள் சங்கம் ஆகியவை பல ஊடக நிறுவனங்களிலும் தங்கள் பணியாளர்களை பணிநீக்கம் மற்றும் ஊதிய குறைப்பு செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கை இன்று உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

தேசிய ஊரடங்கை முன்னிட்டு கடந்த 20-03-2020 அன்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தனியார் மற்றும் அரசுநிறுவனங்களுக்கு வழிகாட்டல்  ஒன்றை வெளியிட்டது. அதன்படி இந்த இக்கட்டான நிலைமையில் பணிபுரியும் தொழிலாளர்களை வேலைநீக்கம் மற்றும் ஊதிய பிடித்தம் செய்வதை தவிர்க்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ஆனால் வழிகாட்டல் வெளியிட்ட சில வாரங்களே ஆன நிலையில் பல முன்னணி ஊடகங்கள் தங்கள் பணியாளர்களை பணிநீக்கம் மற்றும் ஊதிய குறைப்பு  செய்து சுற்றிக்கை வெளியிட்டுள்ளது.

இதில் முக்கியமாக பார்க்க வேண்டிய விடயம் என்னவென்றால் இந்த தேசிய ஊடகங்களில், அச்சு ஊடகங்கள் மற்றும் தொலைகாட்சி நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் தினசரி மற்றும் ஒளிபரப்பை  தொடர்வதற்க்கு எந்த ஒரு தடையும் இல்லை. ஆனால் பல முன்னணி  ஊடக நிறுவனங்கள்  நிதி பற்றாக்குறை என்று கூறி பல தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது.

இந்த போக்கை கண்டித்து பல பத்திரிக்கையாளர் சங்கங்கள் கூட்டாக தொடுத்த பொது நல வழக்கை இன்று உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்தது.அதில் பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சாலவேஸ், “ஊடக நிறுவனங்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் பணியாளர்களை பணிநீக்கம் மற்றும் கட்டாய விடுப்பில்  அனுப்புவது சனநாயக கட்டமைப்பில் ஊடக துறையின் செயல்பாடுகள் மற்றும் அதன் சீரிய பங்களிப்பிற்க்கு தீங்கு விளைவிக்கும் என்று வாதிட்டார்”.

இந்த வழக்கு தொடர்பாக அதில் பணியாற்றிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சித்தார்த் நமது தேசத்தின் குரல் இதழுக்கு அளித்த பேட்டியில் ” தனியார் ஊடகங்களின் இந்த தன்னிச்சையான போக்கு இக்கட்டான பேரிடர் காலத்தில் மக்களுக்கு செய்திகளை  கொண்டு சேர்க்கும் பத்திரிக்கையாளர்கள் கடுமையான நெருக்கடியிலும் , பொருளாதார துயரத்திலும் தள்ளபட்டுள்ளனர் “, என்று கூறினார்.

மூத்த வழக்கறிஞரின் வாதத்தை கேட்டுக்கொண்ட உச்சநீதிமன்றம் மத்தியரசு இரண்டு வார காலத்தில் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டது.

அருண்காசி,வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம் ,தில்லி.