சர்வப்பொது உழைப்பு நேரம் அளவுரீதியான வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருக்கிறது. எனவே, அதன் புறவடிவமாக அங்கீகரிக்கப்படும் பொருள் வெறும் அளவுரீதியான வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருக்க வேண்டும். எனவே, அந்தப் பொருள் ஓரியல்பாகவும், ஒருசீராகவும் இருக்க வேண்டும். ஒரு சரக்கு மதிப்பின் அளவையாகச் செயல்படுவதற்கான முதல் நிபந்தனை இது.உதாரணமாக ஒருவர் எல்லாச் சரக்குகளையும் காளைகள், தோல்கள், தானியம் இன்னபிற மூலமாக மதிப்பிடுகிறாரென்றால் அவர் நடைமுறையில் இலட்சியச் சராசரி மாடுகள், இலட்சியச் சராசரித் தோல்கள் இன்னபிற மூலமாக சரக்குகளை அளவிட வேண்டும். ஏனென்றால், ஒரு மாட்டுக்கும் இன்னொரு மாட்டுக்கும் இடையே, ஒரு தோலுக்கும் இன்னொரு தோலுக்கும் இடையே, ஒரு தானியக் குவியலுக்கும் இன்னொரு தானியக் குவியலுக்கும் இடையே பண்பு ரீதியான வேறுபாடுகள் இருக்கின்றன. இதற்கு மாறாக, எளிய பொருள்களாக தங்கமும் வெள்ளியும் எப்பொழுதும் ஒரே சீராக உள்ளன. எனவே அவற்றின் சம அளவுகள் சம மதிப்புகளைக் கொண்டிருக்கின்றன.
சர்வப்பொதுச் சமதையாகச் செயல்படும் சரக்கு இன்னொரு நிபந்தனையையும் நிறைவேற்ற வேண்டும். தேவைப்படும் எண்ணிக்கையில் பகுதிகளாகப் பிரிக்கப்படும் தன்மையும், அவற்றை மீண்டும் ஒன்று சேர்க்கும் சாத்தியமும் அது கணக்குப் பணமாக பயன்படுவதற்கு அவசியமானது. தங்கமும் வெள்ளியும் இந்தப் பண்புகளை மிக அதிக அளவில் கொண்டிருக்கின்றன.
சுற்றோட்ட ஊடகம் என்ற வகையில் மற்ற சரக்குகளோடு ஒப்பிடும்போது தங்கமும் வெள்ளியும் ஒரு சாதகமான அம்சத்தைக் கொண்டிருக்கின்றன. அவற்றின் அதிக சார்பு அடர்த்தி (ஒப்பீட்டளவில் சிறிய பருமனில் கணிசமான எடை) அவற்றின் அதிக பொருளாதார சார்பு அடர்த்தியோடு (ஒப்பீட்டளவில் சிறிய பருமனில் அதிக உழைப்பு நேரம், அதாவது அதிக பரிவர்த்தனை மதிப்பு) பொருந்துகிறது.
இது ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கும், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கும் அவற்றை மாற்றும் போக்குவரத்தை எளிதாக்குகிறது. இதனால் தங்கமும் வெள்ளியும் சமூக சுற்றோட்டத்தில் திடீரென தோன்றுவதும், அதே போல திடீரென மறைவதும் சாத்தியமாகிறது. சுருக்கமாக, சுற்றோட்ட நிகழ்வின் நிரந்தர இயக்கப் பொருளாக செயல்புரிவதற்கு ஒரு சரக்குக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத தன்மையான இடம்பெயர்தலை இவை தருகின்றன.
உயர்நிலை உலோகங்களின் உயர் மதிப்பு, அவற்றின் நிலைத்தன்மை, ஒப்புநோக்கில் அழிக்க முடியாத தன்மை, காற்றுபடும் போது அவை துருப்பிடிப்பதில்லை என்ற உண்மை, குறிப்பாக தங்கம் ராஜதிராவகம் தவிர மற்ற அமிலங்களில் கரையாதிருப்பது ஆகிய இயற்பியல் பண்புகள் அனைத்தும் உயர்நிலை உலோகங்களை இயல்பாகவே பதுக்குவதற்கு ஏற்ற பொருளாக ஆக்குகின்றன.
பொதுவாக உலோகங்கள் உற்பத்திக் கருவிகளாகப் பயன்படுவதால் அவை நேரடி உற்பத்தி நிகழ்முறையில் மிகப்பெரிய முக்கியத்துவம் கொண்டிருக்கின்றன. தங்கத்தையும் வெள்ளியையும் (அவை அரிதாகக் கிடைப்பவை என்பதைத் தாண்டி) இப்படிப் பயன்படுத்த முடியாது. ஏனென்றால் இரும்புடன் ஒப்பிடும் போது, ஏன் பழங்கால மக்கள் பயன்படுத்திய கடினமாக்கப்பட்ட வடிவத்திலான தாமிரத்துடன் ஒப்பிடும் போது கூட அவை மிக மென்மையானவை. எனவே, பொதுவாக உலோகங்களுக்கு பயன் மதிப்பை கொடுக்கும் பண்பான கடினத்தன்மை இவற்றில் பெரும்பாலும் இல்லை. இவ்வாறு, உயர்நிலை உலோகங்கள் நேரடி உற்பத்தி நிகழ்முறையில் பயனற்றதாக இருப்பது போலவே வாழ்வுச் சாதனம் அதாவது நுகர்வுப் பொருள்கள் என்ற வகையிலும் தேவையற்றதாக உள்ளன. எனவே, உற்பத்தியோ நுகர்வோ பாதிக்கப்படாமல் சுற்றோட்டத்தின் சமூக நிகழ்முறையில் நாம் விரும்புகிற எந்த அளவிலும் அவற்றை பயன்படுத்தலாம். அதாவது, அவற்றின் தனிப்பட்ட பயன் மதிப்பு அவற்றின் பொருளாதாரச் செயலோடு மோதுவதில்லை.
தங்கமும் வெள்ளியும் எதிர்மறையில் மிகையாக, அதாவது ஒதுக்கி விடக் கூடிய பொருள்களாக உள்ளன. அது மட்டுமின்றி அவற்றின் அழகியல் தன்மைகள் அலங்காரம், ஆபரணம், ஆடம்பரம் போன்றவற்றுக்கு அவற்றைப் பொருத்தமானதாக்குகின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால் அளவு மீறிய செல்வத்துக்கும் வளத்துக்கும் நேரடி வெளிப்பாடாக அவை உள்ளன.
தங்கத்தையும் வெள்ளியையும் நாணயத்திலிருந்து உலோகப் பாளமாகவும் உலோகப் பாளத்திலிருந்து ஆடம்பரப் பொருள்களாகவும், அதே போல போல எதிர்த்திசையிலும் மாற்றுவது சாத்தியம் என்பதால், அவை ஒரு முறை அளிக்கப்பட்ட குறிப்பிட்ட பயனுள்ள வடிவத்திலேயே இருக்க வேண்டியதில்லை. இது மற்ற சரக்குகளுடன் ஒப்பிடும் போது அவற்றின் சாதகமான அம்சமாகும். எனவே, ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்துக்கு தொடர்ச்சியாக மாற வேண்டியிருக்கும் பணத்துக்கான இயல்பான பொருளாக அவை உள்ளன.
பணம் மாறாத மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்ற தேவையைத் தங்கமும் வெள்ளியும் நிறைவு செய்ய முடியாது. எனினும், மற்ற சரக்குகளுடன் ஒப்பிடும் போது சராசரியாக அவற்றின் மதிப்பு அதிக நிலைத்தன்மை கொண்டுள்ளது.
மார்க்ஸ் எழுதிய “அரசியல் பொருளாதாரத்தின் விமர்சனவுரைக்கு ஒரு பங்களிப்பு” என்ற நூலில் இருந்து.