பட்டினி போடப்பட்ட 11 கோடி புலம் பெயர் தொழிலாளர்கள்.

டெல்லியில் கட்டிடக் கலைஞராக வேலை செய்யும் என் நண்பர் எழுதுகிறார் …..

நம் நாட்டின் ஏழைகளிலும் ஏழைகளுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வது சிரமம் இல்லை [ஆட்சியாளர்களைத் தவிர]. ஆனால், உண்மையில் களத்திற்குச் சென்று அவர்களை சந்திக்கும் போதுதான் அவர்களது நிலையை நீங்கள் உண்மையாக உணர முடியும்.

என் மகள் ரீஹாமின் வயதில் ஒரு சிறுமி; செருப்பில்லாமல் மூன்று நாட்கள் நடந்து கொண்டிருக்கிறாள்; தலையில் ஒரு மூட்டையைப் பிடித்துக் கொண்டு நடக்கிறாள்; பசியுடனும், வியர்வையில் குளித்து தூசியால் சூழப்பட்டும் நடக்கிறாள்; வறண்டு போன உதடுகளோடு முகத்தில் வேறு எந்த உணர்ச்சிகளும் இல்லாமல் உங்களை நேருக்கு நேராகப் பார்த்து “ரொம்ப பசிக்குது மாமா” என்று சொல்கிறாள். இது உங்கள் ஆத்மாவுக்கு விழும் சவுக்கடி.

  • தங்கள் வீடுகளுக்குப் போக ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் இப்படி பயணிக்கலாம் என்ற தீவிரமான முடிவை ஏன் எடுத்தார்கள்?
  • இவ்வளவு கொடூரமான பயணத்தை சரியான மனநிலையில் இருக்கும் யாராவது மேற்கொள்வார்களா?
  • நோய்த்தொற்று காலத்தில் அவர்களது உயிரையும் குடும்பத்தினர் உயிரையும் இப்படி ஆபத்துக்குள்ளாக்குவார்களா?
  • ஒருவர் இல்லை, நூற்றுக்கணக்கானவர்கள் இல்லை, ஆயிரக்கணக்கானவர்கள் இல்லை, நாடு முழுவதும் கோடிக் கணக்கான மக்கள் ஏன் இந்த முட்டாள்தனமான செயலில் ஏன் இறங்கியுள்ளார்கள்?

இதைத் தெரிந்து கொள்ள சாலையில் போகும் சிலரிடம் போய்ப் பேச வேண்டும்.

நாமோ வீட்டை விட்டு வெளியே போவதில்லை, நமது குழந்தைகளை பாதுகாத்துக் கொள்கிறோம், ஒவ்வொரு மணி நேரமும் கைகளை கழுவச் சொல்கிறோம், சமூக விலக்கலை கண்டிப்பாக கடைப்பிடிக்கிறோம். கதவு கைப்பிடிகள், பாக்கெட்டுகள், ஏன் காய்கறிகளைக் கூட கிருமி நீக்கம் செய்கிறோம்.

இந்த மக்களின் நிலையோ படு மோசமாக உள்ளது. சிலர் முகத்தை மறைத்துள்ளார்கள், மற்றவர்கள் அழுக்குத் துணியை கட்டியிருக்கின்றனர், சிலருக்கு அதுவும் இல்லை, சமூக விலக்கலைப் பற்றி பேச்சே வேண்டாம். லாரிகளிலும், பேருந்துகளிலும், ரயில்களிலும் மீன்களைப் போல பொதியப்பட்டுள்ளனர். பல நாட்கள் தொடர்ச்சியாக பயன்படுத்துவதற்கு கழிப்பறை வசதி இல்லை.

நாம் குழந்தைகளின் படிப்பு பற்றி கவலைப்படுகிறோம். இணைய வழி கல்வி நல்லதுதானா என்று யோசிக்கிறோம். இந்தக் கோடிக்கணக்கானவர்கள் தங்களுக்கு அடுத்த வேளை சோறு, தண்ணீர் எங்கிருந்து கிடைக்கும் என்று தெரியாமல் நடக்கிறார்கள்.

அவர்களின் துயரத்தைப் புரிந்து கொள்வதற்கு பெரிய அளவு முயற்சி தேவையில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அரசியலை ஒதுக்கி வைக்க வேண்டும். அரசியலை ஒதுக்கிய உடன் அவமானமும், குற்ற உணர்வும், கோபமும் விரக்தியும் பொங்குகின்றன. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை அழிவுக்கு உள்ளாக்கியிருக்கும் ஆட்சியாளர்களின் பேரிடர் போன்ற நிர்வாகச் சீரழிவின் யதார்த்தத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

நாடு முழுவதிலும் புலம் பெயர் தொழிலாளர்களின் இடம் பெயர்வு மிகப்பெரிய அளவிலான துயரம். அவர்கள் ஏன் வெளியேறுகிறார்கள்? அவர்களால் தாங்க முடியாமல் போய் விட்டதால் வெளியேறுகிறார்கள், அரசுகளால் சமாளிக்க முடியாமல் போய் விட்டதால் வெளியேறுகிறார்கள்.

நான் இது வரை சிறிது சிறிதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நன்கொடைகள் கொடுத்து வந்தேன். ஆனால், பணம் எங்கே போனது என்று உறுதியாகத் தெரியவில்லை.

எனவே, நாமே நேரில் போய் பார்ப்போம் என்று முடிவு செய்தேன். இது நேற்று நடந்தது.

மதியம் 2.30 மணி. நானும் எனது நண்பரும் புறப்பட்டோம். கோல்ஃப் கோர்ஸ் சாலை வழியாக சைபர் ஹப் வரை டெல்லி-குர்கான் நெடுஞ்சாலை என்.எச் 48 இல் ஜெய்ப்பூர் திசையில் சென்றோம்.

வழியில், பல குடும்பங்களும் தனிநபர்களும் நடந்து கொண்டிருப்பதைக் கண்டோம். சிலர் முதுகில் பைகளை சுமந்திருந்தார்கள், சிலர் கையில் வாளிகள், சிலர் துணிப் பைகளை வைத்திருந்தார்கள், வேறு சிலர் சூட்கேஸ்களை சுமந்து கொண்டிருந்தார்கள்.

வெயில் கடுமையாக அடித்துக் கொண்டிருந்தது, சுமார் 40 டிகிரி இருக்கும்.

நாங்கள் காரை நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தினோம். முதலில் வரும் குடும்பத்துடன் பேசக் காத்திருந்தோம். அந்தக் குடும்பத்தில் மூன்று சிறு குழந்தைகள் (5 வயது முதல் 10 வயது வரை, இரண்டு பெண்கள், ஒரு பையன்) இருந்தனர். தாய், தந்தை மற்றும் மூத்த மகள் தங்கள் முழு வாழ்க்கை உடைமைகளையும் கொண்ட துணிப் பைகளை தலையில் சுமந்து கொண்டிருந்தனர். அவர்கள் பஞ்சத்தில் அடிபட்டவர்களாக தோற்றமளித்தார்கள்.

நான் அவர்களிடம் நிறைய கேட்க விரும்பினேன், அவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், ஏன் வெளியேறுகிறார்கள், எங்கே போகிறார்கள், இன்னும் பலப் பல கேள்விகளை கேட்க வேண்டும்.

ஆனால் அவர்களின் முகங்களைப் பார்த்தால், கேட்பதற்கு மனம் வரவில்லை. எனக்கும் இப்போது சூட்டில் வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது.

எனவே நான் அவர்களிடம், “பய்யா, ஊருக்கு எப்பிடி போவீங்க, நடந்தேவா அல்லது பஸ் அல்லது டிரெயின்லையா?” என்று கேட்டேன். அந்த நபர் என்னையும் நிறுத்தப்பட்டிருந்த என் காரையும் வெறுமையாக பார்த்தார். உயிரற்ற புன்னகை புரிந்தார். “பார்க்கலாம் சார், ஏதாவது டிரக், டெம்போ கிடைச்சா போயிடுவோம்” என்றார்.

நான் என் சட்டைப் பையில் வைத்திருந்த சில சாக்லேட் பார்களை எடுத்து இரண்டு சின்ன குழந்தைகளிடம் கொடுத்தேன். அவர்கள் என்னைப் பார்த்தார்கள். அவர்களது அம்மாவைப் பார்த்தார்கள்… அம்மா சம்மதித்து தலை அசைத்த பிறகுதான் வாங்கிக் கொண்டார்கள்

நான் மூன்று 500 ரூபாய் நோட்டுகளை எடுத்து தந்தையிடம் கொடுத்தேன். “பய்யா, கொஞ்சம் பைசா வைச்சுக்கோங்க” என்றேன். அவர் உடைந்து விட்டார். பொங்கிய கண்ணீரைத் தடுக்க முயற்சித்தார். “சார், நீங்க பகவான்!” என்று குனிந்து என் காலைத் தொட்டார்.

நான் திகைத்துப் போனேன், அவரது தோள்களைப் பிடித்து மெதுவாக நகர்த்தினேன்.

அந்த நேரத்தில் நான் எவ்வளவு அவமானமடைந்தேன், குற்றவாளியாக உணர்ந்தேன், சோகமாக உணர்ந்தேன் என்பதை சொல்ல முடியாது

நண்பர் தனது கண்ணாடியை கழற்றி விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தார். நாங்கள் மீண்டும் காரை அடையும் வரை அவர் என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை. அவர் எதை மறைக்கிறார் என்பதை யூகிக்க வேண்டியதில்லை. நாங்கள் இருவரும் சிறிது நேரம் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை.

ஒருவருக்கு பணம் கொடுப்பது சின்ன விஷயம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது ஒரு பயங்கரமான உணர்வு என்பதை இன்று கற்றுக்கொண்டேன். ஒரு நபரின் சுய கவுரவம் பறிக்கப்படுவதைப் பார்க்க… ஒரு சில நூறு ரூபாய்களுக்காக தங்கள் குழந்தைகளின் முன்பே ஒருவரின் கால்களைத் தொடுவதைப் பார்க்க…. நாங்கள் மனம் உடைந்து போனோம்.

அவர்களுக்கு இன்னும் பணம் கொடுக்க விரும்பினேன். ஆனால், முடிந்தவரை நிறைய பேருக்கு உதவி விரும்பினோம். அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் சாப்பாட்டுக்கு அந்தப் பணம் போதுமானதாக இருக்கும் என்று நிறுத்திக் கொண்டேன். ஆம், அவர்களை ஈவு இரக்கமின்றி தாக்கி அடிக்கும் போலீஸ்காரர்களுக்கு லஞ்சம் கொடுத்து பாதுகாத்துக் கொள்ளவும் அது தேவைப்படும்.

அங்கிருந்து புறப்பட்டோம். …

ஒரு 407 வேனில் தொழிலாளர்களை ஏற்றுவதற்கு பேரம் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் இந்த வேனில் உருளைக் கிழங்கு மூட்டைகள் போல அடைத்துச் செல்லப்பட்டு அவர்களது கிராமங்களுக்கு அருகில் நெடுஞ்சாலைகளில் இறக்கி விடப்படுவார்கள்.

நான் அவர்கள் அருகில் போனதும் பலர் சந்தேகமாக பார்த்தார்கள். ஒரு குடும்பம் சோர்ந்து போய் ஒரு தூணின் பக்கத்தில் அமர்ந்திருந்தது. மனைவி சிரமத்துடன் தூணில் முதுகைச் சாய்த்து உட்கார்ந்திருந்தாள். நான் அவர்கள் அருகில் போனேன்.

அவர்களிடம் என்ன பேச வேண்டும் என்று குழப்பமாக இருந்தது. நேராகப் போய் பணம் கொடுக்கப் போகிறேன் என்று நண்பரிடம் சொன்னேன். என்னால் பேச முடியவில்லை, அதனால் என் பையில் இருந்த பணத்தை எடுத்து ஒவ்வொருவருக்கும் 500 ரூபாய் நோட்டை வினியோகிக்க ஆரம்பித்தேன். அவர்கள் முகங்களில் நன்றியும், பல கண்களில் வழிந்த கண்ணீரும் எதையும் பேசுவதை அவசியமற்றதாக்கின. இதைக் கவனித்த மற்றவர்களும் வரத் தொடங்கினார்கள். 407 க்குள்ளும் மக்கள் இருந்தனர், எனவே நான் டிரக்கின் பின்புறம் சென்று இன்னும் சில நோட்டுகளை விநியோகித்தேன்.

அதற்குள், என்னிடம் இருந்த பணம் முழுவதும் தீர்ந்து விட்டது. காருக்குத் திரும்பிச் சென்று பர்சில் இருந்த சில நூறு ரூபாய் தாள்களையும் எடுத்து வந்தேன். வேனுக்குள் உட்கார்ந்திருந்த தொழிலாளர்கள் தங்கள் கைகளை வெளியில் நீட்டி 100 ரூபாய்க்கு மன்றாடினார்கள். நான் மேலே பார்த்தேன், அவநம்பிக்கை நிரம்பிய முகங்களைப் பார்த்தேன். அவர்கள் முகங்களை எதிர்கொள்ள முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு கையில் பணத்தை கொத்தாக பிடித்து உயர்த்தினேன். அவர்கள் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டேன். நோட்டுகள் என் கையில் இருந்து பறிக்கப்பட்டன, அவற்றை யார் எடுத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை

சிலர் சத்தமாக நன்றி தெரிவித்தனர், மேலும் பலர் மெல்லிய குரலில் “நன்றி, பாபுஜி…”, “நீங்க கடவுள் போல சார்…” என்று கிசுகிசுத்தனர்.

வெட்கத்தினால் பொங்கிய கண்ணீரை என்னால் தடுக்க முடியவில்லை. அங்கிருந்து விலகி நடக்க ஆரம்பித்தோம். இந்த மக்கள் பிச்சைக்காரர்கள் அல்ல, திடமான, உழைத்து வாழும் மனிதர்கள். அவர்கள் மிகக் குறைந்த கூலிக்கு கடினமாக உழைப்பவர்கள். உங்களையும் என்னையும் போல புலம்பிக் கொண்டிருப்பவர்கள் அல்ல. இதை விட கௌரவமாக நடத்தப்பட வேண்டியவர்கள், அவர்கள்.

அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு வீடு நோக்கிப் போகும் போது ஒரு பையில் ஐந்து 500 ரூபாய் தாள்கள் இருப்பதைப் பார்த்தேன்.

கோல்ஃப் கோர்ஸ் விரிவாக்க சாலையில் போய்க் கொண்டிருந்த சுமார் ஏழெட்டு பேர் குழந்தைகளுடன் நடந்து செல்வதைப் பார்த்தோம். அவர்களின் தலையில் மூட்டைகள் இருந்தன. காரை நிறுத்தி காரில் இருந்து இறங்கி, சிறு குழந்தைகளுடன் மல்லாடிக் கொண்டிருந்த மூன்று பெண்களுக்கு தலா ஒரு நோட்டைக் கொடுத்தோம். ஆண்கள் திரும்பி ஓடி வந்து என்னிடம் ஏதாவது உதவி கோரினர்.

நான் அவர்களுக்கு என்னிடம் இருந்த கடைசி இரண்டு நோட்டுகளைக் கொடுத்தேன்.

அங்கிருந்து அமைதியாக நகர்ந்தோம். நண்பரை அவரது வீட்டில் விட்டு விட்டு நான் வீட்டுக்கு வந்தேன்.

இதெல்லாம் பெரிய விஷயமா? …

‘இவர்கள் எல்லாம் தினசரி சம்பாதித்து தினமும் சாப்பிடும் சில விபரமில்லாத தினக் கூலிகள். அவர்களுக்கு மாதச் சம்பளம் கிடையாது. அவர்கள் சேமிப்பில் ஒரு பைசா கூட இல்லை. அவர்கள் ஒரு கவளம் உணவுக்காக 4-5 மணிநேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலை இப்போது.

அவர்களது வீட்டு உரிமையாளர்கள் அவர்களை வெளியே தூக்கி எறிந்துள்ளனர். அவர்கள் நண்பர்களிடமும் பக்கத்தில் இருப்பவர்களிடமும் கடன் வாங்கி முடித்து விட்டார்கள். ஒரு வேளை உணவுக்குக் கூட வழி இல்லாததால் தங்களது ஊருக்குப் புறப்பட்டு விட்டனர். அடுத்து வேலை எப்போது கிடைக்கும், அடுத்த வேளை உணவு எப்படி கிடைக்கும் என்று அவர்களுக்குத் தெரியாது.

எப்படியிருந்தாலும், மையமான விஷயம் என்னவென்றால் இவர்களைப் போன்ற கோடிக்கணக்கான மக்கள் நம்பிக்கையின் விளிம்பில் உள்ளனர். அவர்களது குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பாடு போடவோ, தங்களுக்கும் வயதான பெற்றோருக்கும் மருந்து வாங்கவோ முடியாமல் உள்ளனர். இதுதான் இன்றைய நிலவரம்

இதற்காக யார் யார் என்னென்ன செய்கிறார்கள், நிலைமை இதைவிட மோசமாக இருந்திருக்கலாம், என்னவெல்லாம் தேவையோ அதெல்லாம் செய்யப்படுகிறது என கதை விட்டுக் கொண்டிருக்கும் எல்லோரும் போய்ச் சாகுங்க.

சாலைகளில் 383 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்ததாக பதிவாகியுள்ளது. (துரதிர்ஷ்டவசமாக இந்த எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கலாம்) ஏனெனில் எந்த விதமான முறையான திட்டமிடலும் பின்விளைவு ஆய்வும் இல்லாமல் 135 கோடி மக்களுக்கான ஊரடங்கு அறிவித்து செயல்படுத்தப்பட்டது.

135 கோடி பேரில் 383 எல்லாம் பெரிய விஷயமா?

மனிதநேயம் என்பது இருக்கிறதா என்ன? பேராசையும், நேர்மையின்மையும், பாசாங்கும் உணர்வின்மையும்தான் நிரம்பிக் கிடக்கின்றன.