படிப்பை நிறுத்து,பிழைப்பை நடத்து – அ.லோகசங்கர்.


“டிரிங்ங்ங்…. என்ற பள்ளிக்கூட மணியோசை பள்ளி துவங்குவதை அறிவிக்கும் போது,மாணவர்கள் சாரை சாரையாக பள்ளியை நோக்கி விரைந்துகொண்டிருந்தனர்.குளித்ததால் உண்டான குளுமை,வாரி சீவப்பட்ட தலை,துவைத்து போடப்பட்ட சீருடை என்பது போன்ற புற அலங்காரங்களை மீறி அவர்களின் முகங்களில் சோர்வும்,கவலையும்,பயமும் கவிந்திருந்தது.
மாலை பள்ளி முடிவதை அறிவிக்கும் மணியோசைக்காக ஏங்கும் காதுகளோடு பள்ளி நேரத்தை கஷ்டப்பட்டு கடத்தியபின், கூண்டு திறக்கபட்ட பறவைகளைப்போல இறக்கை விரித்து,விடுதலை உணர்வோடு வீடு திரும்புகிற மகிழ்ச்சி..
அன்றாட பள்ளி மாணவர்களின் இந்த நிலை,அணிவகுப்புக்கு அழைக்கப்படும் கைதி மற்றும் விடுதலையாகும் கைதியையே நினைவூட்டுவராக உள்ளன.
பள்ளிக்கூடம் குழந்தைகள் விரும்பும் இடமாக மாறவே இல்லை… மாற்றப்படவே இல்லை… என்கிற கசப்பான உண்மையை நமது முகத்தில் அறைந்த வண்ணம் சுட்டுகின்றன.
6 வயது முதல் 14 வயது வரையான குழந்தைகளை , குழந்தைகளாக பார்க்கின்றன, அவர்களின் குழந்தை தன்மையை மதிக்கின்ற அணுகுமுறை கல்வித்துறையிடம் கடுகளவு கூட இல்லை.
நெருக்கடி நிலையின் போது மாநிலப்பட்டியலில் இருந்த கல்வியை பொதுப்பட்டியலுக்கு கடத்தியதை , நெருக்கடி நிலைக்கு எதிராக முழக்கமிட்டு ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி சரி செய்யவில்லை இன்றுவரை சரி செய்யப்படவும் இல்லை.
ஏராளமாக கற்பிக்கபடுகின்றன மாணவர்கள் புரியாமல் பரிதவிக்கின்றனர்.சிறிதளவே கற்க்கின்றனர்.. கிலோக் கணக்கில் புத்தகங்களையும் குறிப்பேடுகளையும் சுமக்கின்றனர். பெரும்பாலும் பாடங்கள் அவர்களுக்கு புரியாத அந்நியப்பட்ட மொழியிலேயே உள்ளன. “-இந்த நிலையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை”.
மாறக கல்வித்துறை தனக்குள்ள சிக்கல்கள், தன்னுடைய அவமானகரமான தோல்விகள்,சந்திக்க அஞ்சிகின்ற சவால்கள் ஆகியவற்றிக்கான தனது பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டு பழிபாவம் அனைத்தையும் குழந்தைகள் மீது சுமத்த முயற்ச்சிக்கிறது.
புத்தகச் சுமைகளாக வடிவெடுக்கின்ற பாடச்சுமையை குறைத்து குழந்தைகளை குதுகலிக்க செய்வதற்க்கு பதிலாக “பொதுத் தேர்வு” என்ற வெட்டரிவாளுடன் கல்வித்துறை,குழந்தைகளை – அவர்களின் குழந்தைமையை சின்னா பின்ன மாக்க கிளம்பியுள்ளது.
2009 ஆம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டம் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கற்க்கும் வாய்ப்பை உறுபடுத்துகிறது. அடிப்படைக் கல்வி என்பது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது.
கல்வி உரிமைச் சட்டத்தின் முக்கிய கூறு “ எட்டாம் வகுப்பு வரை தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில் குழந்தைகளை அதே வகுப்பில் நிறுத்தி வைக்ககூடாது” என்கிறது.இதை ஒழித்து கட்டும் விதமாகவே, 5 மற்றும் 8 ஆம் வகுப்பில் பொதுத்தேர்வுகள் திணிக்கபடுகின்றன.
தரமான கல்வியை உறுதி செய்கிறது என்கிற பட்டுக் குஞ்சத்தை கட்டினாலும்,”பொதுத் தேர்வு” குழந்தைகளை வடிகட்டி,பள்ளிக் கல்விக்கு
வெளியே தள்ளுகின்ற கழுதை வாலாகவே உள்ளது.
குழந்தைகளுக்கு “பொதுத்தேர்வு”
-கூடுதல் சுமையாகிறது.
-கற்றலில் அச்சத்தை அதிக்கரிக்கிறது
– படிப்பை பாதியில் விட்டு வெளியேறுவதை அதிகரிக்க வழிவகுக்கிறது.
மனப்பாடக் கல்வியில் முடக்கி, அச்சுறுத்தும் தேர்வுகளால் ஒடுக்கி குழந்தைகளை எத்தகையவா்களாக உருவாக்க விரும்புகிறார்கள்?.
“நாலு வார்த்தை தெரிந்தால் நானும் மனிதன் “ என விழிப்பு மிக்க குடிமக்கள் உருவாகுவதை எண்ணி அஞ்சுகின்ற ஆட்சியாளர்கள்,தங்களிடம் கண்மூடித்தனமான விசுவாசம் காட்டுகின்ற அடிமைகளை உருவாக்க விரும்பினார்கள் – இன்றும் விரும்புகிறார்கள்.
வராலாற்றில் மக்களுக்கு கல்வி மறுக்க பட்டதில் வேறென்ன காரணகாரியம் இருக்க முடியும்?.
ஒடுக்குமுறை தேர்வுகளின் மூலம் பள்ளி விட்டு விரட்டபடும் குழந்தைகளிடமிருந்து மலிவான உடலுழைப்பாளிகளை உருவாக்குவதை மனச்சாட்சியுடைய எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது.
குழந்தைகளை கொடுமைபடுத்துவது ,பல தலைமுறைகளுக்கும் தொடர்ந்து நீடிக்கின்ற கொடுமையாக உருவாகி எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாகிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here