பசித்தவன் வீடு

வீட்டு வாசல் ஏறிவரும்
வண்ணாத்திக்குச் சோறிடுவோம்
தெருக்கள் பலவாக முறைவைத்து
உச்சி வெயிலின் மடுத்துறையில்
ஊர்த்துணிகள்
துவைத்துத் துவைத்து
கூன் விழுந்துப்போன
வண்ணாத்தியின் மூச்சு வாங்கி
எதிரொலிக்கும் வானம்
ஏரிக்கோடி வரை
சோகத்தால் அதிரும்
சாமத்திலே வெள்ளாவி
மூட்டும் வண்ணாத்தி
இன்னார் இன்னார்
வீட்டுத் துணிகளுக்கென்று
இடும் அடையாளக்குறி
உதிராது மூட்டுவாள் வெள்ளாவி
கணவனின் இம்சை
மனசிலே கொப்பளிக்க
நெடும்நேரம் ஆகியும்
மூட்டுவாள் வெள்ளாவி
அனல் உருக்க
தீட்டுத் துணிகளின் அழுக்கு
நுரைத்துப் பொங்கி
நெஞ்சில் கமறும்
சாமத்துப் பின்னே
வண்ணாத்தியின் தூக்கம் கலைத்துச்
சொல்லிவிட்டுப்போவான்
ஊர்ப்பண்டாரன்
“செட்டிப் பிணத்துக்கு
நடைச்சேலை விரிக்க”
செத்தும் புழுதிப்படாமல் போக
சம்சாரிகளுக்கு உண்டு கொடுப்பினை
நடைச் சேலை விரிக்கும் வண்ணாத்திக்கு
வாழ்வெல்லாம் புழுதியாகும்
இரவு வேளைகளில்
எங்கள் வீட்டு வாசல் ஏறி வந்து
சோறு கேட்கும் வண்ணாத்திக்கு
தினைச் சோறும் கூழும்
வரகரிசி சோறும்
களி கம்பஞ்சோறும்
எப்போதாவது
நெல்லுச் சோறும் இடுவோம்
இதையெல்லாம் சகிக்காத அம்மா
நடைத் திண்ணையில்
குத்துக்காலிட்டு உட்கார்ந்து அழுவாள்
அழுதும் மாளாத வாழ்வுக்காக
வண்ணாத்திக்குச்
சோறிடவும் வக்கற்று
பல வேளைகளில் “நாளை வாம்மா”
என்பாள் அக்கா
பசி கிளைத்த அப்பாவின் வாழ்வு
வண்ணாத்திக்கு
ஒரு நாள் தெரிய
தெருத் திருப்பத்திலே
எங்கள் வீடு மனசில் உறுத்த
திரும்பிப் பார்க்காது போனாள்
எங்கள் வீட்டை
மறந்தே போனாள் வண்ணாத்தி
கடைசி வரையிலும்
பசித்த வீட்டில்
சோறு வாங்குவதும்
“பாவம்”என்று மனசில் தைக்க.
-ஆசு
என்றொரு மெளனம்
தொகுப்பிலிருந்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here