நேர் கொண்ட பார்வை- விமர்சனம்.- மா.சிவக்குமார்.

No என்றால் Noதான். அதற்கு மேல் விளக்கம் எதுவும் இல்லை. வேண்டாம் என்றால் வேண்டாம்தான். அதற்கு மேல் ஒரு பெண்ணை வலுவந்தப் படுத்துபவன் குற்றவாளிதான்.

பணம் வாங்கினாலும் No என்றால் No தான் என்று படம் பேசுகிறது. பணம் வாங்கினார்களா இல்லையா என்ற விஷயத்தை மட்டும் இரண்டும் கெட்டானாக வைத்திருக்கிறார்கள். பணம் வாங்கியதாக ஒத்துக் கொண்டதாகவும், வாங்கவில்லை, வேறு வழியில்லாமல் அப்படிச் சொன்னேன் என்றும் இரண்டாகவும் புரிந்து கொள்ளலாம். விஷயம் என்னவென்றால், அப்படி பணமே வாங்கியிருந்தாலும், No என்றால் No-தான்.

அப்படி ஒற்றைத் திரியை எடுத்துக் கொண்டு 2 மணி நேர படத்தை எடுத்திருக்கிறார்கள். அஜித்தின் சண்டைக் காட்சியும், அவரது மனைவியுடனான முன்நினைவுக் காட்சியும் மட்டும்தான் இந்தப் படத்தில் ஒட்டாதவை. மற்ற அனைத்துக் காட்சிகளும், வசனங்களும், பாத்திரங்களும் என்னவாக இருந்தாலும் No என்றால் No தான் என்பதை அழுத்தமாகச் சொல்கின்றன.

முதல் காட்சியிலிருந்து அந்தப் பெண்களுடனும், ஆண்களுடனும் நாமும் சேர்ந்து பயணிக்கிறோம். யாருக்குமே என்ன நடந்தது, இந்தக் கேள்விக்கு என்ன பதில், இந்த வழக்குக்கு என்ன தீர்ப்பு என்ற கட் அண்ட் ரைட் தீர்ப்பு இல்லை, அப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை கொடுக்கும் படி திரைக்கதை அமைக்கப்படவில்லை.

போலீஸ், பக்கத்து வீட்டுக்காரர்கள், வீட்டுச் சொந்தக்கார தாத்தா, அஜித், அவரது உதவியாளர், டான்ஸ் நிறுவன அம்மா, ஐ.டி நிறுவன பாஸ், சலூன் கடை பெண்ணின் காதலன், ஐ.டி நிறுவன பெண்ணுடன் உறவில் இருப்பவர் என்று ஒவ்வொருவரின் முன்னரும் அந்தக் கண்ணாடி காட்டப்படுகிறது. அவர்கள் அதில் தங்களைப் பார்த்துக் கொள்கிறார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டம்மா, கான்ஸ்டபிள்கள், ஏன் போலீஸ் உயர் அதிகாரி, அந்தப் பையனின் மாமா இவர்களும் அந்தக் கண்ணாடியில் தெரிகிறார்கள். ரங்கராஜ் பாண்டே பாத்திரம், அந்த அய்யங்கார் பையன் பாத்திரம் என்று கண்ணாடியில் நிழலாடும் உருவங்கள் ஏராளம்.

எல்லோருக்குமே கண்ணாடியில் தெரிவது அவர்கள் கவனமாக மேல்பூச்சு போட்டுக் கொண்ட முகத்தின் பிம்பம் இல்லை. கண்ணாடியில் காட்டப்படுவது அவர்களது உள்ளத்தின் பிம்பம்.

படம் ஒரு பிரச்சனைக்கு மட்டும் விடை சொல்லி விட்டு, அதுவும் ஒரே ஒரு விடையைச் சொல்லி விட்டு முடிகிறது. அந்தத் தீர்ப்பு நீதிபதி பாத்திரத்தின் கண்ணாடி பிம்பத்தைத்தான் காட்டுகிறதே தவிர ஒவ்வொருவரும் அதில் குறை காணும்படிதான் இருக்கிறது.

அந்தக் கேள்வியை பார்வையாளர்கள் மத்தியிலும் போடுகிறது இந்தத் திரைப்படம். கேள்விக்கு பதில் சொல்லும்படி சவால் விடுக்கிறது. வழக்கில் தீர்ப்பு சொல்லுமாறு கை சொடுக்குகிறது. அதில் பார்வையாளர்களும் பக்கச் சார்பு எடுக்க வேண்டியது வருகிறது.

காசி ராஜன் எழுதிய விமர்சனம் அந்த வகையில் பயனுள்ளது. மூன்று தரப்பும் இதை எப்படி பார்க்கும் என்று பகுத்தாய்ந்து எழுதியது ஒரு intellectual leap. அது படத்தைப் புரிந்து கொள்வதற்கு உதவியது. இன்னொரு பக்கம் அப்படி 3-ஆக பிரிப்பதும், அதில் ஆண்களின் பார்வையை கடைசியில் சொல்வதும், படம் பற்றிய ஒரு போதனை செய்து முடிப்பதும் கலைப்படைப்பை குறுக்குவதாக முடிந்து விடுகிறது.

ஒரு நல்ல கலைப்படைப்பு நம்மை தொந்தரவு செய்கிறது. மேல்பூச்சுகளைத் தாண்டி நாம் சரி என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு அந்தரங்க இடத்தை வெளியில் கொண்டு வந்து அதன் அற்பத்தனத்தை போலித்தனத்தை அம்பலப்படுத்தி விடுகிறது. பரியேறும் பெருமாள் படத்தில் சாதிய மேட்டிமை உணர்வு ஒளிந்து கிடந்ததை கண்டுபிடித்து வெளியில் கொண்டு வருகிறது. பரியேறும் பெருமாள் படத்தில் பார்ப்பவர்களின் மனதுள் ஒழிந்து கிடக்கும் சாதிய உணர்வை அறுவை சிகிச்சை செய்து வகுந்து காட்டியது போல  இங்கு ஆணாதிக்க, பெண் அடிமை உணர்வை அறுவை சிகிச்சை செய்து காட்டுகிறார்கள்.

ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருந்தால் அவளுக்கு ஆபத்து இல்லை?

  • பெண் தனியாக வீடு எடுத்துத் தங்கக் கூடாது?
  • டேன்ஸ் ஆடி சம்பாதித்து வாழக் கூடாது?
  • முடி திருத்தும் சலூனில் வேலை செய்யக் கூடாது? கோலமாவு கோகிலா நயன்தாரா அப்படித்தான் சொல்கிறார், நாயகி அந்த வேலைக்குப் போய் விடக் கூடாதே என்று எனக்கும் பதறியது. அதாவது மசாஜ் பார்லரில் மசாஜ் செய்து விடும் வேலை செய்வது பிரச்சனை, அதில் வரவேற்பாளர் வேலை செய்யலாம்.
  • பெண் தனியாக ஒரு ஆணுடன் சாப்பிடப் போகக் கூடாது?
  • சிரித்துப் பேசக் கூடாது?
  • தொட்டுப் பேசக் கூடாது?

இது எல்லாமே பாலியல் ரீதியாக அவளை பார்ப்பதற்கு உரிமம் கொடுத்து விடுகின்றன என்பது சரியில்லை என்பது வரை பிரச்சனை இல்லை.

ஆனால், செக்ஸ் ஜோக் சொல்வது? அது உள்ளே ஒழிந்து கொண்டிருந்திருக்கிறது. ஒரு பெண் செக்ஸ் ஜோக் சொன்னால் அவள் வேட்டையாடுவதற்கான இரையாக மாறி விடுகிறாளா? அப்படி சொல்லியிருக்க மாட்டாள், சொல்லியிருக்கக் கூடாது என்று வேண்டத் தொடங்கினால் அது என்ன மாதிரி மனநிலை.

இந்தப் படத்தை தமிழக இளைஞர்கள் மத்தியில் கொண்டு போவதற்கு அஜித் என்ற மெகா நட்சத்திரத்தை தேர்ந்தெடுத்த இயக்குனருக்கும், அதை ஏற்றுக் கொண்டு நடிக்க முன் வந்த அஜித்துக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும். அவர் நடிப்பதற்காக அந்த சண்டைக் காட்சியும், முன்நினைவுக் காட்சியும் வைத்தது படத்தை சொதப்பினாலும் கூட, இந்த வணிக நோக்கத்துக்காக அதை மன்னித்து ஏற்றுக் கொள்ளலாம்.

(ஆனால், அந்த வணிக நோக்கம்தான் உளவியல் சிக்கல் பற்றிய தவறான சித்தரிப்புக்கும் காரணமாகிறது. உண்மையில் மனப்பிளவு நோய் உள்ளவர்கள் எல்லோரும் மாத்திரை சாப்பிடா விட்டால் வன்முறையாளர்கள் ஆகி விடுவார்கள், மனைவியை இழந்ததும் மனப் பிளவு ஏற்பட்டு விடுகிறது என்று படம் சொல்லவில்லை என்றும் சாதிக்கலாம். மாத்திரையை கொட்டி சாப்பிடுகிறார் என்று சொல்வது தவறான குற்றச்சாட்டு, மாத்திரையை பாட்டிலில் இருந்து கையில் தட்டி ஒரு மாத்திரைதான் சாப்பிடுகிறார். அஜித் என்ற நாயகன் வன்முறையாளனாக இருக்கிறான், மனைவி இறந்ததும் மன அழுத்ததுக்கு உள்ளாகிறான். அது மனப் பிளவு நோயாக வெளிப்படுகிறது என்று சொல்லலாம்.

ஆனால், குறிப்பான இந்த ஒரு பாத்திரம்தான் அனைத்து மனப்பிளவு நோயாளிகளையும் பொதுமைப்படுத்துகிறது என்பதை மறுக்க முடியாது. மனப்பிளவு நோயை எதிர்கொண்டு சிகிச்சை பெற்று வருபவர்களை இதுவரை சந்தித்திராதவர்கள் இப்படித்தான் புரிந்து கொள்வார்கள்.)

மொத்தத்தில் நம் உள்ளங்களை கீறி அறுவை சிகிச்சை செய்யும் ஒரு கலைப்படைப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here