நீதிமன்றங்கள் புனிதமானவையா..? – பிரதீப்

நீதிமன்றங்கள் புனிதமானவையா என்ற கேள்வி பலர் மனதிலும் தோன்றியிருக்கும்,ஆனால் பதில்கள்தான் கிடைத்திருக்காது, அதற்கான விடைகளை சில கோணங்களில் விவரிக்க எடுத்திருக்கும் முயற்சியே இக்கட்டுரை.

முதலில் புனிதம் என்ற சொல் இதற்கு முன்னர் எங்கெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போம். கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என குறிப்பிட்ட சில இடங்களை மட்டுமே புனிதமாக எண்ணினார்கள். சரி அந்த புனிதமான இடங்கள் இன்றும் புனிதமாக இருக்கின்றதா என்று கேட்டால் , இல்லை என்பது தான் அப்பட்டமான உண்மை. ஏனென்றால், புனிதமாக கருதப்பட்ட அந்த இடங்களில் இன்றல்ல, நேற்றல்ல, பழங்காலம் முதலே பல்வேறு விதமான அடக்குமுறைகளும் , பிரிவினைகளும் இருந்துகொண்டே தான் இருந்தது. குறிப்பிட்டு சிலவற்றை நினைவுகூர வேண்டும் என்பதால் சிலவற்றை உங்களுக்கு சொல்கிறேன். அமெரிக்காவில் முந்தைய காலகட்டத்தில் இனவெறி தலைதூக்கி நின்றபோது , அதில் மிகவும் கவனிக்கப்படவேண்டிய ஒன்றாக, வெள்ளையனுக்கு வெள்ளை தேவாலயமும் , கறுப்பர்களுக்கு கறுப்பு தேவாலயங்களும் என மிக மோசமான பிற்போக்குத்தனம் நிறைந்திருந்தது. இஸ்லாத்தில் பிரிவினைகளும் இருந்து வந்ததையும் நம்மால் மறுத்திட இயலாது.

இந்தியாவில் கோவில்களில் கடவுள் முன் அனைவரும் சமம் என்று சொன்னாலும் நடைமுறையில் சாதி பிரிவினைகளை பாராட்டி பாதுகாத்து வருவதே அதன் முதற்கொள்கையாக இதுவரை இருந்து வந்திருக்கிறது, இன்றும் அது தலைதூக்கி ஆடுவதை நம்மால் பார்க்க இயலும். அதேபோல் தான் இந்த நீதிமன்றங்களும். சமுகத்தில் சாதி பிரிவினை போன்று இங்கு அதிகார அரசியல் தலைவிரித்து ஆடும் ஒன்றாக உள்ளது.. எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ, அவர்களின் உத்தரவுக்கு இணங்க தீர்ப்பு வருவதும் , வழக்கு ஒத்திவைக்கப்படுவதும் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.ஆனால் ஒரு சாமானியனான நமக்கு நீதிமன்றங்கள் நீதி அளிப்பதில்லை, மாறாக நீதிமன்றத்தையோ அல்லது நீதிபதிகளையோ விமர்சித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும். நம்மை போல் சாமானியர்களின் கடைசி நம்பிக்கையாக விளங்கும் நீதித்துறை இன்று நிதித்துறையாக மாறிவிட்டது. சற்று எண்ணி பாருங்கள் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று. குற்றவாளி பணக்காரனாக இருந்தால் ஒரு நீதி, ஏழையாக இருந்தால் ஒரு நீதி என்ற நிலைமை தான் தற்பொழுது. அதில் சில நேரங்களில் சில மாற்றங்கள் போல அவ்வப்போது சிலருக்கு நீதி கிடைக்கின்றது.

மக்களை சுரண்டும் பன்னாட்டு நிறுவனத்தின் இன்னொரு ஆயுதம் நீதிமன்றங்களும், நீதிஅரசர்களும் தான். அதிலும் கடந்த சில ஆண்டுகளில் நிலைமை மிகவும் மோசமானதாக மாறியது. நீதிமன்றமாவது மயிராவது என்று பாஜக வை சேர்ந்த எச்.ராஜா விமர்சனம் செய்த போது நீதிமன்றம் என்ன செய்தது? பல முறை நோட்டீஸ் அனுப்பிய பின்னர் அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார் என்பதற்காக வழக்கை முடித்தது. எஸ்.வீ .சேகரை கைது செய்ய சொன்னபோது கைது செய்யாமல் மாறாக அவனுக்கு பாதுகாப்பு குடுத்த போலீசையும் எளிதில் மறந்து கடந்து விட முடியாது. இதை கண்டுகொள்ளாத நீதிமன்றத்தின் நடவடிக்கைகளும் வேடிக்கையே. இதை போல பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. முறையான விசாரணை கூட சில வழக்குகளில் நடப்பதில்லை என்று தெரிந்தும் கண்டுகொள்ளாத ஒன்றாக நீதிமன்றங்கள் மாறியுள்ளதை மனதில் கொள்ளவேண்டும்.

சிசுவை கொன்று பசுவை உயர்த்துகிற கூட்டத்தின் கூடாரமாக இன்று நீதிமன்றங்கள் மாறியுள்ளது. நீதிகள் தினம் தினம் மறுக்கப்பட்டு வருகிறதை நாம் தினந்தோறும் உணரும் படி, கொலை ,கொள்ளை ,கற்பழிப்பு என குற்றங்கள் பெருகிகொண்டே தான் இருக்கின்றது. இதன் காரணிகள் கையூட்டு மட்டுமே என்று சொல்ல முடியாது. சாதி மத பிரிவினைகளும், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடும், இதன் சில முக்கிய காரணிகளாக விளங்குவதை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். இப்படி பல கொடூர செயல்களை கன்டுகொள்ளாத நீதிமன்றம் எப்படி புனிதமானவையாக மாறும்…? நாம் யாரையும் வீண்பழி சுமத்த விரும்பவில்லை ஆனால் சில கசப்பான நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கும் வேளையில், இவைகளை புனிதமானவையாக எண்ணுவதை பாவச்செயலாக கருதுகிறேன்.

இந்த கட்டுரை நீதிமன்றங்களின் மற்றொரு முகத்தை பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டுகாட்டும் முயற்சியே.மக்களாகிய நாம் நமக்கான சட்டங்களை கற்றுணர்ந்து நம்மை நாமே பாதுகாத்து கொள்ள வேண்டிய அவசியத்தை இந்த நீதிமன்றங்கள் உருவாக்கியிருக்கிறது என்பதையும் ,நீதிமன்றங்கள்,சட்டங்கள், நடைமுறகள் குறித்து நாம் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதே என் போன்றவர்களின் விருப்பமாக இருக்கிறது.

பிரதீப்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here