நீதிக்கட்சிக்கும் வகுப்பு வாரி ஒதுக்கீட்டுக்கும் தொடர்பில்லையா தோழர்.பெ.ம அவர்களே ? பகுதி – 2

// வகுப்புவாரி இட ஒதுக்கீட்டை முதல் முதலில் செயல்படுத்தியது ஆந்திரர் தலைமையிலான நீதிக்கட்சி அல்ல; தமிழ்நாட்டுத் தமிழரான சுப்பராயன் தலைமையிலான ஆட்சியே என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளோம்.// தோழர்.பெ.ம

மாண்டேகு செம்ஸ்போர்டு அரசியல் சீர்திருத்தங்களின் விளைவாக இந்திய அரசுச் சட்டம், 1919 இயற்றப்பட்டு, சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இம்முறையின் கீழ் 1920ம் ஆண்டு முதலில் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி பங்கேற்று வெற்றி பெற்றது.

5-ஆகஸ்ட் 1921 அன்று ஓ.தணிகாசலம் செட்டியார் ஒரு புதிய மசோதாவைக் கொண்டு வந்தார்.அனைத்து சமூகத்தினரும் ஏற்றம் பெறும் வகையில் வேலை வாய்ப்பில் மக்கள் தொகை அடிப்படையில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதே அந்த மசோதா . அங்கிருந்த பிராமண உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி முதல்வராய் இருந்த ‘பனகல் அரசர்’ ராமராய நிங்கார் அதை நிறைவேற்றி வரலாற்றின் முதல் கம்யூனல் G.O (MRO Public Ordinary Service GO 613) வெளியிட்டார் !

இதன் படி வகுப்பு வாரியாக வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வழி செய்யப்பட்டது !
இரண்டாவது வகுப்புரிமை ஆணை எண் 652 நாள் 15.08.1922இல் பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையின் படி வகுப்புரிமை அடிப்படையில் பணியிடம் நிரப்பப்படுவதை உறுதி செய்யும்படி துறைத் தலைவர்கள், உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் ஆறுமாதத்திற்கு ஒருமுறை அரசுக்கு அளிக்க வேண்டும் என்று ஆணை இடப்பட்டது.

1921 – 22 இல் வகுப்புரிமை ஆணைகள் பிறப்பிக்கப் பட்ட போதிலும், பார்ப்பனர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து அதை நடைமுறைப் படுத்தாத வண்ணம் இடையூறு செய்து வந்தனர். அதே போல் இரட்டையாட்சி முறை நடைபெற்று வந்ததால் கவர்னர் (ஆளுநர்) தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிக் கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவிடாமல் தடை செய்தார்.

இதைத் தான் நீதிக் கட்சி ஏதோ திட்டமிட்டு நடைமுறைத்த விரும்பாதது போல் “செயல்படுத்தவில்லை ” என தோழர் பெ.ம எழுதுகிறார்.

இன்றைய காலகட்டத்தில் கூட ஆளுநரின் அதிகாரத்தின் வேதனையை ஏழு தமிழர் விடுதலையில் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அன்றைய காலகட்டத்தில் இன்னும் கூடுதல் அதிகாரம் மிக்கவராக ஆளுநர் இருந்தார்.சட்டமன்றத்திற்கு நியமன உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் கொண்டவராக இருந்தார்.

1926 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், நீதிக்கட்சி தோற்று, சுயாட்சிக் கட்சி (இந்திய தேசிய காங்கிரசின் அரசியல் பிரிவு) வென்றது. ஆனால் இரட்டை ஆட்சி முறையின் கீழ் ஆட்சி அமைக்க விருப்பமில்லாமல், சுயாட்சி கட்சி பதவி ஏற்க மறுத்து விட்டது. சுப்பராயன் இத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றிருந்ததால் சுயாட்சி கட்சியின் மறைமுக ஆதரவுடன் சென்னை ஆளுநர் ஜார்ஜ் கோஷன் சுப்பராயன் தலைமையில் சுயேச்சைகள் மற்றும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அரசவை ஒன்றை உருவாக்கினார்.

இந்த அரசு ஆளுநரின் கைப்பாவையாகச் செயல்படுவதாகக் கருதிய நீதிக்கட்சியினர் சுப்பராயனுக்கு ஆதரவளிக்க மறுத்து விட்டனர். அதே வேளை 1927 ஆம் ஆண்டு சைமன் கமிஷன் சென்னைக்கு வந்த போது அதைக் காங்கிரசும் சுயாட்சிக் கட்சியும் எதிர்த்தது.

ஆனால் முதல்வராக இருந்த சுப்பராயன் சைமன் வருகையை ஆதரித்தார். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்து அவரது அமைச்சரவையிலிருந்த ரங்கநாத முதலியாரும், ஆரோக்கியசாமி முதலியாரும் அதனை எதிர்த்தனர். அமைச்சரவையில் இருந்த குழப்பத்தால் சுப்பராயன் பதவி விலகினார்.

நீதிக்கட்சியினரும் சைமன் கமிசனை வரவேற்றதால் ஒத்த கருத்தின் அடிப்படையில் சுப்பராயனுக்கு ஆதரவளித்து, அவரது பதவியைக் காப்பற்றினர் .

நீதிக் கட்சியின் ஆதரவோடு ஆட்சிக் கட்டிலில் மீண்டும் அமர்ந்த சுப்பராயன் நீதிக் கட்சியின் வழிகாட்டுதலில் தமிழகத்தில் முதன் முறையாக அரசாங்க வேலைகளில் தலித்துகளுக்கும், பிற்படுத்தப் பட்டோருக்கும் இட ஒதுக்கீடு வழங்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ அரசாணை (Communal G. O. 1071) அமல் படுத்தினார்.

இதன்படி அரசு வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளில் பன்னிரெண்டில் ஐந்து பங்கு (5/12) பிராமணரல்லாதோருக்கு ஒதுக்கப்பட்டது. பிராமணர், ஆங்கிலோ இந்தியர், முஸ்லீம்கள் ஆகியோருக்கு தலா 2/12 பங்கும், தாழ்த்தப் பட்டோருக்கு 1/12 பங்கும் ஒதுக்கப்பட்டது. இதை முன்னின்று நடைமுறைப்படுத்தியவர் முத்தையா முதலியார் .

// முதலமைச்சர் சுப்பராயனும் , அமைச்சர் முத்தையா முதலியாரும்தாம் முதன் முதலாக 1928 இல் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டை
செயல்படுத்திக்காட்டினர். நீதிக்கட்சி வகுப்புவாரி இடஒதுக்கீட்டைச் செயல் படுத்தவில்லை.// என்று பெ.ம எழுதுகிறார்.

இவர் நீதிக் கட்சி தொடங்குவதற்காகக் கூடிய முதல் கூட்டத்திலேயே கலந்து கொண்டு அறிக்கை தயாரித்த மூலவர்களில் ஒருவர். அதனால் தான் வகுப்பு வாரி இட ஒதுக்கீட்டுச் சிந்தனையைப் பெற்றவராக இருந்தார்.

நீதிக் கட்சியின் ஆதரவோடு. ஆளுநரின் ஆட்சியாக இது நடந்து வந்ததால் வகுப்பு வாரி இட ஒதுக்கீட்டு தீர்மானத்தை முத்தையா முதலியாரால் நடைமுறைப்படுத்த முடிந்தது என்பது கவனத்திற்குரியது .இதைத் தான் // வகுப்புவாரி இட ஒதுக்கீட்டை முதல் முதலில் செயல்படுத்தியது ஆந்திரர் தலைமையிலான நீதிக்கட்சி அல்ல; தமிழ்நாட்டுத் தமிழரான சுப்பராயன் தலைமையிலான ஆட்சியே என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளோம்./ என்று கூறுகிறார் தோழர் பெ.ம . முத்தையா முதலியாருக்கும் நீதிக் கட்சிக்கும் தொடர்பில்லாமல் சுயம்புவாக இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது போல ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க விரும்புகிறார் தோழர்.பெ.ம

தோழர்.பெ.ம வின் கூற்றுப்படி நீதிக் கட்சி இட ஒதுக்கீடு எதையும் தங்களுடைய ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தவே இல்லை என்பது உண்மைதானா ?

1924 இல் அரசுப் பணிகளில் வேலைக்கு ஊழியர்களை அமர்த்துவதற்காக ஒரு ஆணையம் உருவாக்கப்பட்டது.
‘Staff Selection Board ‘ என்று அதற்குப் பெயர். அது தான் இப்போது T.N.P.S.C ஆக மாறியுள்ளது. 1925 முதல் அரசாங்க ஆண்டறிக்கைகளில் வகுப்பு வாரியாக அரசு ஊழியர்கள் விவரம் காலாண்டுதோறும் வெளியிடப்பட்டு வந்தது.
பனகல் அரசர் ஆட்சிக்காலத்தில் 1927-1926க்குள் ஆதித்திராவிடர்கள் காவலர் பணியில் 382 பேரும், தலைமைக் காவலர் பணியில் 20 பேரும், துணை ஆய்வாளர் பணியில் ஒருவரும் அமர்த்தப்பட்டனர்.
1935இல் துணைக் கண் காணிப்பாளர் வரை ஆதித்திராவிடர் பதவி உயர்வு பெற்றனர். 1927 இல் தான் ஆதித் திராவிடர் ஒருவர் இன்ஸ்பெக்டராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். (‘Staff Slection Board அறிக்கை பக் 120.) அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஆதி திராவிடர்களைக் காவல் துறையில் காவலர்களாக கூடச் சேர்த்துக் கொண்டதில்லை என்று எம்.சி ராசா 1928 இல் மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியுள்ளார். (எம்.சி. ராசா வாழ்க்கை வரலாறும் எழுத்தும் பேச்சும் ஜெ. சிவசண்முகம் பிள்ளை, பக் 42)

‘Staff Slection Board ‘ இல் 7.2.1925 சி. நடேச முதலியார் கொண்டு வந்த சட்ட மன்றத் தீர்மானத்தின் படி, 1.பார்ப்பனரல்லாத இந்துக்கள் 44
2. பார்ப்பனர்கள் 16
3. முகமதியர்கள் 16
4. ஆங்கிலோ இந்தியர், இந்தியக் கிறித்துவர் 16
5. ஆதி திராவிடர்கள் 8 என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதனால் முதன் முதலாக பார்ப்பனரல்லா தாரிலும், ஆதித்திராவிடர்களிலும் பலர் அரசு வேலைக்குச் செல்ல முடிந்தது.(தோழர் வாலாசா வல்லவன் கட்டுரையிலிருந்து )
– நீதிக்கட்சியின் இத்தகைய இட ஒதுக்கீட்டுச் செயல்பாடுகள் தோழர்.பெ.ம வுக்குத் தெரியாதா ?

அரசுப்பணிகளில் தாழ்த்தப்பட்டோருக்கும், மற்ற பார்ப்பனரல்லதார்களுக்கும் முதன் முதலில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது நீதி கட்சி ஆட்சிதான் என்ற உண்மை தோழர் பெ.ம.வுக்கு நிச்சயமாகத் தெரியும். பிறகு ஏன் பாதி உண்மை பேசுகிறார்.

முழு உண்மையைப் பேசினால் அவரது கூற்றுப்படி தெலுங்கர்கள் தலைமையிலான நீதிக்கட்சி தமிழகத்திற்கு சிறப்பான ஆட்சி வழங்கியது என்று எழுத வேண்டி வரும். அப்படி எழுதினால் தெலுங்கர்களை வெளியேற்ற வேண்டும் என்று சொல்லுகிற தமது முழக்கம் கேள்விக்குள்ளாகும். எனவே , கட்சி உறுப்பினர்களைத் தக்க வைத்துக் கொள்ள பாதி உண்மை என்னும் புது வகை எழுத்தை தோழர்.பெ.ம கைக்கொள்கிறார்.

(தொடரும்)

க.இரா.தமிழரசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here