நீட் தேர்விற்கு இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்கப்போகிறோம்?….அபராஜிதன்.

கீர்த்தனா ,மருத்துவராக வேண்டும் என்ற நம்பிக்கையில் இருந்த மாணவி இன்று சடலமாக மாறிவிட்டிருக்கிறாள். பெரம்பலூரில் பேருந்து நடத்துநராக இருந்த செல்வராசுவின் மகள்தான் கீர்த்தனா.

இரண்டாவது முறை நீட் தேர்வு எழுதியும் வெற்றி பெற முடியவில்லை என்பதால் தற்கொலை செய்திருக்கிறாள்.நீட் தேர்வு திணிக்கப்பட்ட போதே பலமான எதிர்ப்புகள் எழுந்தன.ஆனால் மோடியிடம் தாழ்பணிந்துவிட்ட தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் சுயநலமும், இயலாமையும், மக்கள் நல விரோத செயல்பாடும் நீட்டை கட்டாயமாக்கியது

10 ஆவது முடித்த பின்னரே நீட்டுக்கான பயிற்சியை துவங்குவது, 11,12 வகுப்பில் போலியான வருகைப்பதிவை செய்து தினமும் நீட்டுக்கான பயிற்சியை நடத்துவது என்ற அளவிற்கு பணக்கார தனியார் பள்ளிகள் செல்ல, ஐந்து லட்சங்களுக்கு மேல் பணம் வாங்கிக்கொண்டு நீட் பயிற்சி நடத்தும் கொள்ளை கல்வி நிறுவனங்கள் இன்னொரு பக்கம் அதிகரிக்க, இவர்கள் முன் ஏழை எளிய மக்கள் போட்டி போட இயலாது என்பதை பட்டவர்த்தனமாக எடுத்துரைத்தும் மோடி அரசாங்கம் நீட் தேர்வினை கைவிடுவதாக இல்லை.

அதற்கு ஒரு காரணம் இந்த பயிற்சி நிறுவனங்கள் அளிக்கும் பெரும்லஞ்சம்.அவர்களுடைய லட்சியம் பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட மாணவ மாணவியரை மருத்துவத்துறையில் இருந்து விலக்குவது. ஆணவசாதிகள் , பணம் படைத்தோருக்கு மட்டும் உயர்கல்வி கிடைக்க வேண்டும் ,மற்றவர்கள் அவர்களுக்கு எடுபிடிகளாக வேலை செய்ய வேண்டும் என்ற அவர்களின் சாதிய மனோபாவமே இத்தகைய நுழைவுத்தேர்வுகளை அவர்கள் கட்டாயாயமாக்குவதற்கு பின்புலமாக இருக்கிறது.

இப்போது பரிசீலனையில் இருக்கும் புதிய கல்விக்கொள்கையும் இதற்கு மேல் சென்று அனைத்து உயர்கல்விக்கும் இனி நுழைவுத்தேர்வு என்கிறது.12 ஆண்டுகள் பள்ளியில் அவர்கள் பெறும் கல்வியை ,அறிவை ஒரே ஓரு நுழைவுத்தேர்வில் செல்லாக்காசாக்கி விடுகிறார்கள்.12 ஆண்டுகள் பெறும் கல்வியை கொண்டு நுழைவுத்தேர்வில் வெற்றி பெற முடியாது ,சிறப்பு பயிற்சி மையங்கள் சென்றுதான் வெற்றி பெற முடியும் என்கிற போது (பு.க.கொ- 15)இனிமேல் அந்த 12 வருடங்களை பள்ளியில் செலவு செய்யாமல் நீட் மற்றும் இன்னபிற நுழைவுத்தேர்வு மையங்களில் குழந்தைகளை சேர்த்துவிடலாம்.

கல்வி வியாபாரமாக்கப்படுகிறது,எளிய மக்களிடமிருந்து விலக்கப்படுகிறது,நாட்டில் குறிப்பிட்ட பிரிவினர் மற்றும் முன்னேறும் வகையில் மாற்றப்படுகிறது என்று சொல்லிக்கொண்டே இருப்பவர்களை ஏளனமாக பார்த்து விட்டு நமக்கு எதுவும் நேராத வரை ஆபத்தில்லை என்று செல்பவர்களே , எல்லோரும் மருத்துவர் ஆகமுடியுமா? அதற்கெல்லாம் ஓரு தராதரம் தகுதி வேண்டாமா? என்று பேசுவோர் உங்களை வீழ்த்துவதற்காக விரித்த வலையில் நீங்களும் அகப்படும்போதுதான் உங்களுக்கும் புரியும்.

இவ்வுலகில் புழு போன்று உயிரை நீப்பவர்களே அதிகம் ,லட்சியத்திற்காக உயிரை விடுபவர்கள் சிலர்தான்.கீர்த்தனாவின் தற்கொலையை ஏற்க முடியவில்லை என்றாலும் அவள் தன் லட்சியத்தை அடைய முடியவில்லை என்பதற்காக உயிரை விட்டிருக்கிறாள்.

இனிமேல் ஒரு உயிரை கூட இந்த தேர்வுகளின் பொருட்டு நமது தமிழ்ச்சமுகம் இழக்கக்கூடாது என்பதையும் நமக்கு அறிவுறுத்தி சென்றிருக்கும் அனிதா, கீர்த்தனா போன்ற இன்னும் பலரின் லட்சியங்களை நிறைவேற்ற சூளுரைப்போம்.

அபராஜிதன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here