நில மறுவிநியோகம்- தமிழ்நாடு தேசிய கட்சி.

நிலம்தான் செல்வம்,நிலம்தான் அதிகாரம் ,நிலம்தான் தேசம் , நிலம்தான் அனைத்து முரண்பாடுகளுக்கும் ஆதாரமாக இருக்கிறது. இந்திய சமுகத்தின் அடிப்படையில் நிலவுடைமைதான் சாதியத்தை பாதுகாக்கிறது. உலக நாடுகளில் முதலாளித்துவ புரட்சிக்கு பின்னர் நிலப்பிரபுக்கள் முக்கியத்துவம் இழந்தாலும், நிலம் தன்னுடைய முக்கியத்துவத்தை இழந்து விட வில்லை.அதுவும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த முதலாளித்துவ வளர்ச்சி காலத்திலும் நிலவுடைமை பலம் பொருந்தியதாகவே நீடிக்கிறது.அதாவது முதலாளியம் இந்தியாவில் நிலவுடைமையோடு கைகோர்த்து முன்னேறுகிறது.வர்க்கப்போராட்டம்தான் தீர்வு என்பதில் மாற்று கருத்து இல்லையெனினும் இந்தியாவில் வர்க்கப்போராட்டத்தை நீர்த்து போகச்செய்யும் அளவிற்கு ,அதாவது தொழிலாளி வர்க்கம், வர்க்கமாக ஓன்று சேர முடியாத அளவிற்கு சாதிய உணர்வு மேலோங்கி நிற்கிறது. அதனை உடைத்தெறியாமல் இங்கே மக்கள் ஒன்று சேரப்போவதில்லை.
சாதியத்தை பாதுகாப்பதில் இரண்டு அமைப்புகள் முனைப்பாக உள்ளன.ஒன்று அரசு ,இன்னொன்று நிலவுடைமை.

இந்தியாவிலும் நிலவுடைமைச்சமுகத்தை முதலாளித்துவம் தகர்த்துவிடும் என்று பலர் கருதி வந்தாலும் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் வளர்ச்சிக்காக மூன்றாம் உலக நாடுகளில் பிற்போக்கான விவசாய உற்பத்திமுறை பாதுகாக்கப்படுகிறது.இது அவர்களுக்கு மலிவான மூலப்பொருட்களை தொடர்ந்து அளித்து வரவேண்டும் என்பதற்கான அவர்களின் திட்டத்தின் ஒரு பகுதி.இந்தியாவிலோ விவசாயத்தில் சாதியை முன்னிட்டு உழைப்பு சுரண்டல் நடைபெறுகிறது. நிலமற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் பெரும்பாலும் கூலி விவசாயிகளாகவே இருக்கின்றனர். இவர்கள் மீதான சுரண்டலை சமுக அமைப்புகளான மதமும்,சாதியமும் நியாயப்படுத்துகிறது. இந்த மக்கள் ஒடுக்குமுறையிலிருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும் என்றால் இந்த நிலவுடைமை சமுகத்தில் இருந்து விடுபட வேண்டும். இவர்கள் விடுபடுவது என்பது இவர்களுக்கான வாழ்வாதாரம் சுயசார்பாக மாறினால்தான் சாத்தியம்.இல்லையென்றால் கூலித்தொழிலாளியாக மாறுவது ஒன்றுதான் அவர்கள் முன்னே இருக்கும் வழி.


ஆனால் வரலாறு நெடுக மன்னர்களால் ,நிலக்கிழார்களால் ,முதலாளிகளால் ,மதங்களால் ,சாதிய முறையால் வஞ்சிக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு நிலங்கள் மறுவிநியோகம் செய்யப்படுவதே சரியானது. அநீதியான முறையில் நிலவும் நிலவுடைமையை ஜனநாயக முறையில் உழைக்கும் மக்களுக்கு சீரான மறு விநியோகத்தின் மூலமாக மாற்றியமைப்பது .குறிப்பிட்ட சமுகங்களிடையே குவிந்து கிடந்த நிலத்தை வரிவருமானத்திற்காக ஜமீன்தாரி,ரயத்துவாரி,நில உச்ச வரம்பு சட்டங்களால் நிலங்கள் பிரித்து அளிக்கப்பட்டாலும் அது என்றுமே எல்லா மக்களையும் சென்று சேர்ந்துவிட வில்லை.நிலவுடைமையாளர்களிடமிருந்து நிலங்களும் அப்படியொன்றும் எடுக்கப்படவும் இல்லை.நில உச்ச வரம்பு சட்டத்தின் ஓட்டைகள் நிலவுடைமையாளர்கள் தங்கள் சொத்துக்களை பாதுகாத்து கொள்வதற்கு மிகவும் உதவியாக இருந்தது ,நிலம் கிடைக்கும் என நம்பிய கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை நாசம் செய்தது.

அந்த நில உச்சவரம்பு சட்டம் கூட இந்தியாவின் விவசாய உற்பத்தியை பெருக்குவதற்காக அமெரிக்காவின் நிர்பந்தத்தின் பேரில் இந்திய அரசாங்கம் செய்ததே.இந்திய அரசாங்கமும் கண்துடைப்புக்காக செய்ததே தவிர உண்மையில் நில உச்ச வரம்பு சட்டத்தினால் நிலமற்ற மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

இன்றைக்கும் வேறு வகைகளில் நிலங்கள் குவிக்கப்பட்டு வருவது நிலமற்றவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதோடு விவசாய பொருளாதார வளர்ச்சியையும் மட்டுப்படுத்துகிறது.குவிக்கப்படும் நிலங்கள் முழுமையாக விவசாயத்திற்கு உபயோகப்படுத்தப்படுவதில்லை.தரிசாக விடப்படும் நிலம்தான் அதிகம்.இந்த நிலங்களை சார்ந்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கும் நிலமற்ற கூலி விவசாயிகளுக்கு நிலங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டால், அவர்களின் வாழ்வாதாரத்திற்கான பொருள் அவர்களிடம் அளிக்கப்பட்டால் உற்பத்தி என்பது பன்மடங்கு பெருகவும் வாய்ப்பிருக்கிறது. இன்று நிலத்தில் இறங்கி உழைக்காதவர்களுக்கு அதனை சொந்தம் கொண்டாட என்ன நியாயம் இருக்கிறது.அது சமுகப்பொருளாதார முன்னேற்றத்தின் அங்கமாக மாறாமல் தனிநபர் சொத்துகுவிப்பின் பேராசையினால் விளையும் உற்பத்தி முடக்கத்தை ,அதாவது பொருளாதார முடக்கத்திற்கே காரணமாக இருக்கிறது. சமுகநீதியின் அடிப்படையிலும் வரலாறு நெடுக நிலமற்றவர்களாக வாழ்ந்தவர்களுக்கு ஜனநாயக நாட்டில் நிலத்தை பகிர்ந்து அளிப்பதுதானே நியாயம். இது எங்கள் முன்னோர் சொத்துக்கள் என்று யாராவது வழக்குக்கு வந்தால் அவர்களின் முன்னோர்களுக்கு இந்த சொத்துக்கள் எப்படி வந்தது என்று ஆராயப்படவேண்டும்.ஏனென்றால் யாரொருவரும் நியாயமான முறையில் தங்கள் நிலங்களை பெற்றுவிடவில்லை.

நிராயுதபாணிகளான மக்களை வாள்முனை கொண்டு அடிமைப்படுத்தி அபகரித்த நிலங்களின் மீது சொந்தம் கொண்டாடுவதும் அல்லது அநீதியான முறையில் நிலங்களை அபகரித்துக்கொண்டதும் (கடுவட்டி,பஞ்சம்,அதிக வரி) அவைகள் இந்த ஜனநாயக காலகட்டத்திலும் நீடித்து வருவதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.அதே போல் இத்தனை ஆண்டுகளில் அவர்கள் அடைந்த இன்னல்களுக்கு தக்க நியாயமும் கிடைக்க வேண்டியுள்ளது.

நவீன காலத்திற்கு ஏற்ப நிலவுடைமையிலும் மாற்றங்கள் கொண்டு வரவேண்டி இருக்கிறது.சீனாவில் மக்களுக்கு நிலம் பகிர்ந்து அளிக்கப்பட்ட பின் ஏற்பட்ட முன்னேற்றம் அவர்கள் தொழில்துறையை நோக்கி சீரான முறையில் முன்னேறுவதற்கு அடித்தளமாக மாறியது.

இந்தியாவில்,தமிழ்நாட்டில் நிலங்கள் மறுவிநியோகம் செய்யப்படுவது அதாவது அனைவருக்கும் (அனைவருக்கும் என்றால் அனைவருக்கும் அல்ல,நிலமற்ற கூலி விவசாயிகள்,குத்தகை விவசாயிகள்,சிறு, குறு விவசாயிகள் போன்றோர்களுக்கு )நிலம் அளிக்கப்பட வேண்டும் . வாய்ப்பிருந்தால் கூட்டுப்பண்ணைமுறைகளை கூட முயற்சி செய்யலாம்.இந்த நில மறுவிநியோகம் ஒருபக்கம் சாதிய நிலவுடைமை சமுகத்தை தகர்க்கும்,இன்னொரு பக்கம் தேச பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும்.

இப்பெருமுக்கியத்துவம் வாய்ந்த நில மறுவிநியோகம் அதிக கவனத்துடனும் , பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையிலும் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டமாகும்.

தமிழ்நாடு தேசிய கட்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here