நிலமற்றவனின் ஆன்மா. அபராஜிதன்.

நிலமற்ற ஒடுக்கப்பட்ட சமுகத்தின் ஆன்மா நிலமில்லாமல் பிறந்து, யாருக்கோ சொந்தமான  நிலத்தினில் கட்டுண்டு, நிரந்தர அடிமையாக வாழ்ந்து தன்விதிப்பயனையும் , கடவுளின் பாரமுகத்தையும் நொந்துக்கொண்டு, இன்றளவும் நிலமற்ற சமுகமாக திரிந்துக்கொண்டிருப்பதைத்தான் பரவலாக பார்க்கிறோம்.

பெரும்பாலும் விவசாய கூலிகளாக இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை ஏதேனும் ஒரு இழிவான பெயரை சுமத்தி சமுகத்தில் இருந்து விலக்கி மூலையில் ஒடுங்கும்படி செய்தவர்தான் யார்?
நிலமற்றவர்களாகவும் , இழிவானவர்களாகவும் சமுகத்தில் தன்னுரிமைக்காக போராடிக்கொண்டிருக்கும் இந்த சமுகங்களின் வரலாறுதான் என்ன?

சாதி நிலவுடைமையோடு இறுக பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. ஆனால் தமிழ்நாட்டில் நிலவும் நிலவுடைமையின் வரலாறும்தான் என்ன?

வரலாறு நெடுக நிலங்களின் உரிமை இப்போது இருப்பவர்களிடம்தான் இருந்ததா?அல்லது இவர்களின் உரிமையை எங்கிருந்து பெற்றார்கள்?
இருக்கவுமில்லை,பெறவுமில்லை. பறிக்கப்பட்டவை.ஆம் நிலமற்று தன் சொந்த மண்ணிலேயே அடிமையாக இருக்கும் கூலி விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக கத்தி முனையில் பறிக்கப்பட்டவைதான்  நிலங்கள்தான் அவை.

இன்று தமிழ்நாட்டில் பலரும் வெளிகொணர விரும்பாத வரலாற்றின் உண்மை பக்கங்களை சிறிது பார்ப்போம்

மதுரையில் அரியணையை இழந்த பாண்டியர்களுள் ஒருவன் தனக்கு உதவி வேண்டி விஜயநகர அரசினை அணுகினான் .அவர்களும் வந்தார்கள். ஆனால் ஆட்சியில் இருந்தவனை வீழ்த்திவிட்டு அழைத்து வந்தவனையும் விரட்டி விட்டு ஆட்சியை தாங்கள் கைப்பற்றி கொண்டார்கள். இவர்களின் ஆட்சியின் போதுதான் தமிழ்நாடு மிகப்பெரிய அளவிற்கு நிலவுடைமை மாற்றத்தை சந்தித்தது.இன்று அவர்கள் கையில் உள்ள நிலங்கள் அனைத்தும் தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்டதே. பெரும் நிலங்கள் விஜயநகர நாயக்க அரசின் வழித்தோன்றல்களிடமும் அவர்களுக்கு பக்கபலமாக நின்ற அரியநாத முதலியாரின் சமுகத்திடம்  இருக்கிறது. இவர்களுடன் சமரசம் செய்துகொண்ட பிராமணர்கள்,நகரத்தார்கள்,வேளாளர்கள் போன்றவர்களிடமும் நிலங்கள் இருக்கிறது.

ராமநாதபுரம் சேதுபதி, புதுக்கோட்டை தொண்டைமான் , சிவகங்கை மருது சகோதரர்கள் நாயக்க அரசின் காலத்தில் ஏற்றம் பெற்றவர்களே.ஆனாலும் தமிழகம் முழுக்க குறிப்பிட்ட சில சாதிகளை தவிர பிற சாதிகளுக்கு நிலங்கள் கிடையாது என்பதே உண்மை.பின்னர் இவர்களுக்கெல்லாம் நிலம் 1820 க்கு பிறகு பிரிட்டிஷ் கம்பெனியால் வரி ஈட்டுவதற்காக அறிவிக்கப்பட்ட ரயத்துவாரி சட்டமும்  1956 ல் அறிவிக்கப்பட்ட நில உச்சவரம்பு சட்டமும்தான் தமிழகம் முழுவதும் பல்வேறு சமுக மக்களிடையே நிலம் குத்தகைக்கு அளிக்கப்பட்டதும் பின்னர் சொந்தமாக்க அனுமதிக்கப்பட்டதிற்கும் காரணமாக அமைந்தது.

ஏறத்தாழ 250 ஆண்டுகளுக்கு முன்னரே நிலங்கள் பறிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட தமிழ்க்குடிகளுக்கு நிலம் இந்தச்சூழலிலும் மறுக்கப்பட்டது.இவர்களுக்கு நிலம் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்வதில் அனைவரும் ஒன்றுபட்டு நின்றனர்.

1892 வாக்கில்தான் ஒடுக்கப்பட்ட மக்களின் கடும் வறுமையையும் கையறுநிலையையும் முன்னிட்டு பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்டன.அதுவும் ஒடுக்கப்பட்ட மக்களின் கையில் சென்று சேராமல் அடக்குமுறையாளர்களால் பறித்துக்கொள்ளப்பட்டன.
சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் நடைமுறைப்படுத்திய நில உச்சவரம்பு சட்டங்கள் சிறிய மாற்றத்தை கொண்டு வந்தனவே தவிர பெரும்பான்மையினர் தங்கள் சொத்துக்களை பாதுகாத்து கொண்டனர்.

இதில் முக்கியமாக பார்க்க வேண்டிய விடயம் என்னவென்றால் 1529 வாக்கில் இங்கே நிறுவப்பட்ட நாயக்க அரசு பூர்விக தமிழக விவசாயகுடிகளிடம் இருந்து நிலங்களை பறித்து தங்கள் இனத்தாரிடம் அளித்ததும்,தமிழக விவசாய குடிகளை அவர்கள் நிலத்திலேயே  அடிமையாக்கியதும் நிகழ்ந்து ஏறத்தாழ 500 வருடங்கள் ஆகியும் இந்த நிலவுடைமையில்  மாற்றங்கள் ஏதும் வந்துவிடவில்லை .

1529 ல் துவங்கிய நாயக்க அரசு 1736 வாக்கில் முடிவுக்கு வந்தது. 1736 -1751 ஆற்காடு நவாபின் ஆட்சி நடைபெற்றது.1751- 1947 வரை பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்றது.நவாபிடமிருந்து வரி வசூலிக்கும் உரிமையை முதலில் பெற்றிருந்த பிரிட்டிஷ் கம்பெனி பின்னர் முழுமையாக தன் ஆட்சியை செலுத்தியது.
இந்தக்காலகட்டங்களில் ஜமீன்தாரி,ரயத்துவாரி,பஞ்சமி நிலங்கள்,நில உச்ச வரம்பு சட்டங்கள் என்று பல சட்டங்கள் வந்தாலும் நாயக்க அரசின் வழிவந்தவர்களான நாயக்கர்கள்,ரெட்டியார்,நாயுடுக்களின் கையில் இருந்த சொத்துக்களில் எந்த மாற்றமும் வந்துவிடவில்லை. நாயக்க அரசின்  முடிவிற்கு பின் 1800 வாக்கில் ஜமீன்தாராக உருவெடுத்தவர்கள் 1960 வரைக்கும் நிலப்பிரபுக்களாக அதிகார மையத்தின் உச்சியிலேயே எந்த மாற்றமும் இல்லாமல் நீடித்து வந்தும் ,இன்றளவிற்கும் நிலவுடைமையில் பிரதான பங்கினை கொண்டவர்களாக விளங்குவதிலிருந்தே நாம்  புரிந்துக்கொள்ள முடியும்.

சொந்த நிலங்கள் ,கோவில் நிலங்கள் ,குத்தகைநிலங்கள் எப்படியாயினும் ஒரு தரப்பின் பக்கம் நிலங்கள் குவிந்திருப்பது உழைப்பின் காரணமாக அல்ல பறிப்பின் காரணமாகவே. அது மன்னன் பொருட்டு என்றாலும் சரி ,மகேசன் பொருட்டு என்றாலும் சரி குவிக்கப்பட்டவை ,பறிக்கப்பட்டவை அனைத்தும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.

இன்றைய சாதிய மோதல்களுக்கான அணிசேர்க்கையும் இந்த வரலாற்றின் படியே நிகழ்ந்து வருவதால் 1000-1500, 1500-2000 ஆகிய இரண்டு 500 ஆண்டுகள் தனித்தனியே ஆய்வுக்குட்படுத்தப்பட்டால் பல உண்மைகள் அவிழ்க்கப்படும்.

அதுஒரு பக்கமிருக்க இன்றைய சமுகநீதியை காக்கும் பொருட்டு ஏற்றத்தாழ்வுகளை களைய
நிலங்கள் மறுவிநியோகம் செய்யப்பட்டால்தான் நிலத்தை இழந்தவர்களுக்கு மீண்டும் நிலம் கிடைக்கும்.நிலத்தை இழந்த பின் எல்லாவற்றையும் இழந்தவர்கள் நிலத்தை மீட்பது மூலம் இழந்த அனைத்தையும் பெற முடியும்.

வரலாறு எடுத்துக்கொண்டதை வரலாறு மீட்கட்டும்.

அபராஜிதன்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here