உலகிலேயே மிகவும் அமைதியான ,பாதுகாப்பான நாடு என்று சொல்லப்படும் நியூசிலாந்தில் 49 இசுலாமியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். அதுவும் கிறிஸ்ட்சர்ச் என்னும் இடத்தில் உள்ள மசூதியில் தொழுகை நடத்திக்கொண்டிருந்த சமயத்திலே துடிக்க துடிக்க கொல்லப்பட்டனர். வெள்ளையர்கள் மத்தியிலே விசம் போல பரவியிருக்கும் இனவெறியே இதற்கு காரணம். இசுலாமியர்களை அந்த கொலைகாரன் கொன்றதற்கு காரணமாக சொல்வது அவர்கள் “வந்தேறிகள் ” என்பதால் கொன்றேன் என்பதுதான்.
நியூசிலாந்தில் வாழும் வெள்ளையின மக்களுக்கே சொந்தமில்லாத நாடு அது. அங்கே வாழ்ந்த பூர்விக பழங்குடி மக்களை கொடுரமான முறையில் கொன்றொழித்தவர்கள்தான் அவர்கள். பொதுவாக அனைத்து மக்களும் நியூசிலாந்தில் அப்படி வேற்றுமை பாராட்டுவதில்லை என்றாலும் இது போன்ற இனவெறி குழுக்கள் அபாயகரமான முறையில் பரவி வருகிறது.அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதனை ஊக்குவித்தும் வருகிறார்.உலகிலேயே வேற்றின மக்கள் அதிகம் தாக்குதலுக்கு உள்ளாவது ஆஸ்திரேலியாவில்.
ஆப்கானிஸ்தான் ,சிரியா, ஏமன்,ஈராக்,லிபியா இன்னும் பல நாடுகளில் இசுலாமிய மக்கள் அமெரிக்க,மேற்குலக நாடுகளால் கொன்று குவிக்கப்படுகின்றனர். பல லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்படுவதை உலகம் கண்டும் காணாமல் அனுமதித்து கொண்டிருக்கிறது.
நியூசிலாந்து போன்ற நாட்டினில் கூட இசுலாமியர்களுக்கு அநீதி நடப்பது என்று அவர்கள் அமைதியாக வாழ விரும்பினாலும் இந்த உலகம் அனுமதிக்காது என்பது போல்தான் தோன்றுகிறது.
49 இசுலாமியர்கள் கொல்லப்பட்டது உலகம் முழுவதிலும் உள்ள இசுலாமிய சமுகத்தினர் மத்தியிலும் மனிதநேயம் கொண்டவர்கள் மத்தியிலும் கடும் சோகத்தையும் ,கோபத்தையும் விதைத்துள்ளது.
கொல்லப்பட்டது மனிதர்கள் மட்டுமல்ல ,மனிதநேயமும்தான்.
இளந்திரையன்.