நிசான் தொழிலாளர்கள் போராடுகின்றனர்…..

தொழிலாளர்களே,
ரெனால்ட் நிசான் தொழிலாளர்கள் தங்கள் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்கை எதிர்த்து போராடுகின்றனர். இது அவர்களுக்கான போராட்டம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தொழிலாளர் சமுகத்திற்கான போராட்டம்.

தங்களுக்கு பிரச்சனை வந்தால் மட்டுமே போராட்டம் என்ற வழக்கமான நிலைப்பாட்டை விடுத்து சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் இதில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம்.

நிசான் தொழிலாளர்கள் விடுத்திருக்கும் பத்திரிகை செய்தி.

நாங்கள் பணி புரியும் ரெனால்ட் நிசான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட்
லிமிடெட் நிறுவனமானது ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்களுக்கான கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும்.
எங்களது நிறுவனத்தில் 3600 தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுமார் 2600 தொழிலாளர்கள் ஒன்றுபட்ட தொழிலாளர்
கூட்டமைப்பு சங்கத்தில் உறுப்பினர்களாக இணைந்து எங்களது நிறுவனத்தில்
ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பின் கிளை சங்கம் உருவாக்கப்பட்டது.
மேற்படி எங்களது நிறுவனத்தில் பெரும்பான்மையான தொழிலாளர்கள்
ஒன்றிணைந்து முதல் சங்கமாக அமைத்த ULF கிளை சங்கத்தை நிர்வாகம் ஏற்றுக்
கொள்ளவில்லை. மாறாக அதே ஆண்டில் டிசம்பர் மாதத்தில் நிர்வாகமே
தன்னிச்சையாக தொழிற் சங்கத்தை உருவாக்கி அதற்கு தேர்தலை நடத்தியது.
மேற்படி தேர்தலை பெருவாரியான சுமார் 2600 தொழிலாளர்கள் புறக்கணிக்கும்
விதமாக முறைப்படி அறிவிப்பு கொடுத்து அன்றைய தினம் விடுப்பு எடுத்துக்
கொண்டனர்.

மேற்படி நிர்வாகம் நடத்திய தேர்தலில் சுமார் 900 தொழிலாளர்கள் பங்கெடுத்துக்
கொண்டனர் அவர்களில் சுமார் 600 தொழிலாளர்கள் PROBATION PERIOD இல் இருந்ததால் வேறுவழியின்றி அவர்களும் தேர்தலில் பங்கெடுத்துக் கொண்டனர்.
ULF கிளை சங்கத்தை கலைக்க வேண்டும் தொழிலாளர்களை தாங்கள் ஏற்படுத்திய
ரெனால்ட் நிசான் இந்தியா தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக இணைக்க
வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயல்பட்ட சுமார் 63 தொழிலாளர்கள் மீது
உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களை சுமத்தி பணி நீக்கம், தற்காலிக பணிநீக்கம் உள்ளிட்ட செயல்களிலும் நிர்வாகம் ஈடுபட்டது.

ULF கிளைச் சங்கத்தின் மூலமாக ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கை மீதான
பேச்சுவார்த்தை தொழிலாளர் துறையில் சமரச அதிகாரி முன்பு நிலுவையில்
இருந்தபோது நிர்வாகம் தான் ஆரம்பித்த ரெனால்ட் நிசான் இந்தியா தொழிலாளர்
சங்கத்துடன் 2016 ஆம் ஆண்டில் 18/1 ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
பிறகு அப்போது இருந்த மனித வளத்துறை அதிகாரி ULF சங்கத்தின் நிறுவனரும், மூத்த வழக்கறிஞர் ஆகிய தோழர் V. பிரகாஷ் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு
வெளித் தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமை நிறுவனத்தில் இருப்பதால் தொழிலாளர்கள் அனைவரும் ஒரே சங்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்று
கேட்டுக் கொண்டதற்கு இணங்க சங்கத்திற்கு நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்ட 63 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து
பெருவாரியான தொழிலாளர்கள் பெருந்தன்மையுடன் முடிவெடுத்து 18/1 ஒப்பந்த சரத்துக்களை அடக்கிய 12/3 ஒப்பந்தம் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஏற்படுத்தப்பட்டது.

அதன் பிறகு மேற்படி பிரச்சனைகளுக்கு தீர்வுகளை எடுத்து முன்னெடுத்துச் செல்ல
முயன்ற மனித வளத்துறை அதிகாரி பணியை தொடர இயலவில்லை, அதே நேரத்தில் மேலே கூறியுள்ளது போல பெருவாரியான தொழிலாளர்கள் சங்கத்தில் இணைந்த
பிறகும்கூட தேர்தலை நடத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் ஜனநாயக ரீதியாக தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற பொதுக்குழுவை கூட்ட
வேண்டுமென்றும் பல்வேறு முறை பெருவாரியான தொழிலாளர்கள் சார்பாக
கோரிக்கை வைக்கப்பட்டு அதனை நியாயமற்ற முறையில் தேர்வு செய்யப்பட்டிருந்த முன்னாள் நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் பெருவாரியான தொழிலாளர்களால் நிறைவேற்றப்பட்டு சங்கத்திற்கு
தேர்தலை நடத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத்தொடுக்கப்பட்டது.

மேற்படி முன்னாள் நிர்வாகிகள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்த நிலையில் பெருவாரியான தொழிலாளர்கள் தங்களது பிரச்சனைகளை
நிர்வாகத்துடன் பேசி தீர்த்துக்கொள்ள இடை காலமாக ஐவர் குழுவை உருவாக்கினர்.

அதே நேரத்தில் நிர்வாகம் தொழிலாளர்களை Deputation பணியிட மாற்றம், ஆட்குறைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கையில் எடுக்கத் துவங்கியது மேற்படி நடவடிக்கைகளுக்கு எதிராக ஐவர் குழு மூலமாக தொழில் தாவா எழுப்பப்பட்டது. மேலும் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த தேவையான ஊதிய கோரிக்கை மற்றும் போது கோரிக்கை பட்டியலும் ஐவர் குழு மூலமாக நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.
மேற்படி தொழிற்சங்க தேர்தல் தொடர்பான வழக்கில் ஓய்வுபெற்ற நீதியரசர் திரு அரிபரந்தாமன் அவர்கள் தலைமையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து 2019 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெற்றது. மேற்படி தேர்தலில் சுமார் 3500 தொழிலாளர்கள் கலந்து கொண்டு வாக்களித்ததில் சுமார் 3200 மேற்பட்ட தொழிலாளர்கள் மேற்படி ULF கிளை சங்கத்தில் முன்னணியில்
செயல்பட்டு வந்த பிரதிநிதிகளுக்கு வாக்களித்து வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிபெற செய்தனர். மேற்படி கிடைக்கப் பெற்ற வெற்றியில் மூலமாக பெரும்பான்மையான தொழிலாளர்களின் ஆதரவு நிலைப்பாடு தெளிவாக வெளிப்பட்டது.

மேற்படி பெருவாரியான தொழிலாளர்களால் தேர்வு செய்யப்பட்ட தற்போதைய சங்க உறுப்பினர்கள் ஏற்கனவே ஐவர் குழு மூலமாக எழுப்பப்பட்ட தொழில் தாவா மற்றும் இதர நடவடிக்கைகளை கையில் எடுத்து செயல்படத் துவங்கியது. ஆனால் நிர்வாகம் தொழிலாளர்களை வெளி மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்வது, தொழிலாளர்கள் விருப்பத்திற்கு மாறாக டீம் லீடர் எனக்கூறி பதவி உயர்வு வழங்குவது, தற்காலிகப் பணி நீக்கம் மற்றும் பணிநீக்கம் உள்ளிட்ட தன்னிச்சையாக நடவடிக்கைகளை
மேற்கொண்டு வந்தது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்தும் உரிய தீர்வு காண கோரியும் பல்வேறு சட்ட நடவடிக்கைகளை சங்கம் மேற்கொண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு தற்போது மத்தியஸ்தம் என்ற நிலையில் உள்ளது.

இதற்கிடையே ஏற்கனவே ஐவர் குழு மூலமாக நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கையுடன் சில கூடுதல் கோரிக்கைகளையும் இணைத்து கடந்த June 2019 ஆண்டு நிர்வாகத்திடம் வழங்கியது. மேலும் போனஸ் மற்றும் சில
கோரிக்கைகளும் நிர்வாகத்திடம் முன்வைக்கப்பட்டது. மேற்படி எதிலும் தீர்வு
நிலையை எட்டாத நிர்வாகம் தற்போது நீதிமன்றத்தில் நடைபெறும் மத்தியஸ்த
பேச்சுவார்த்தையில் அனைத்து பிரச்சனைகளையும் பேசி தீர்ப்பதாக கூறி விட்டு தற்போது ஊதிய உயர்வு பிரச்சனைகளை தொழிலாளர் துணை ஆணையர் அவர்கள் முன்னிலையில் விவாதிக்க இருப்பதாகவும் கூறியுள்ளது.
பிரான்ஸ் நாட்டை தாயகமாகக் கொண்ட ரெனால்ட் நிறுவனத்திலும், ஜப்பான் நாட்டை தாயகமாகக் கொண்ட நிசான் நிறுவனத்திலும் தொழிற்சங்கங்கள் நியாயமாக செயல்பட எந்த தடைகளும் இல்லை. ஆனால் இங்கு பெருவாரியான
தொழிலாளர்களை ஆதரவாக கொண்டு அமைதியாகவும், பொறுமையாகவும்
செயல்பட்டு வரும் எங்களது சங்கத்தை அரவணைத்து நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முன்னெடுக்க முயற்சிகளை மேற்கொள்ளாமல் தொழிற்சங்கத்தின் வலிமையை குறைக்கவும், தொழிற் சங்கத்தின் மீதும் நிர்வாகிகள் மீதும் தொழிலாளர்களுக்கு
அதிருப்தி ஏற்படுத்தும் முயற்சிகளை நிர்வாகம் செய்து வருவது ஏற்புடையதல்ல.

முன்னாள் நிர்வாகிகளோ அல்லது அவர்களது ஆதரவாளர்களோ யாரேனும் பெரிய பெரிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருந்தாலும் கூட முன்னாள் நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று அவர்கள் மீது பெரிய நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளாமல் அவர்களது பணியை பாதுகாப்பதில் தீவிரம் காட்டுகிறது. ஆனால் அதேவேளையில் சாதாரணமான தொழிலாளி அவரது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி கேள்வி எழுப்பும் போது அதற்கான தீர்வை கொடுக்காமல் மேற்படி தொழிலாளி மீது
உண்மைக்கு மாறான புகாரை  சுமத்தி நடவடிக்கை எடுப்பது அல்லது
ஏதேனும் சிறிய குற்றச்சாட்டுக்கு உள்ளானாலும் கூட மேற்படி தொழிலாளி மீது பெரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தீவிரம் காட்டுவது உள்ளிட்ட செயல்களில் நிர்வாகம் ஈடுபடுகிறது..

உதாரணமாக:
நமது நிறுவனத்தில் SOS மற்றும் PROCEDURE களை பின்பற்றி
தொழிலாளர்கள் பணிகளை செய்ய வேண்டும் என்ற நிலையில் சில
மேற்பார்வையாளர்கள் தங்களது தேவைகளுக்கு ஏற்ப மேற்படி விதி முறைகளை தளர்த்துவது மற்றும் விதிகளை மீறி தொழிலாளிகளை பணிகளை மேற்கொள்ள நிர்பந்திப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதும் நடைபெறுகிறது. அவ்வாறு
விதியை மீறி பணிகளை செய்ய இயலாது என்று நியாயமாக கேள்வி எழுப்பும்
தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக பணியிடத்தை மாற்றுவது, விடுப்பு அனுமதி மறுப்பது, வேண்டுமென்றே ஊதிய இழப்பை ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவது வாடிக்கையாகி வருகிறது.

தற்போது பழிவாங்கும் நோக்கில்  திரு லோகேஸ்வரன் என்கிற தொழிலாளி நிர்வாகத்தால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தொழிற்சங்கம் பொறுமையாகவும், அமைதியாகவும் செயல்பட்டு வருவதை
சாதகமாக எடுத்துக்கொண்டு நிர்வாகம் தொழிலாளர்கள் மீது மேற்கொண்டு வரும் மேற்படி தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை ஆட்சேபித்து 24-09-2020 அன்று பட்டினிப் போராட்டத்தை இந்த தொழிற்சங்கம் கையில் எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் கடந்த 09-07-2020 முதல் 17-07-2020 வரை 3300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அணிந்து
கொண்டு பணியையும், மிகை நேர பணியையும் செய்து வந்துள்ளனர்.
மேற்படி அமைதியாகவும் பொறுமையாகவும் நிறுவனத்தில் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் எமது சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தை கையிலெடுக்கும் சூழலுக்கு தள்ளப்படலாம் அவ்வாறு ஒரு சூழல் ஏற்படுமாயின் அதற்கு முழு காரணம் நிர்வாகமும் நிர்வாகத்தின் மேற்படி செயல்களுமே ஆகும்.

நிசான் தொழிலாளர் சங்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here