நிகழ்காலத்தில் கம்யூனிஸ்டுகளின் தேவை -இரா.சத்தியநாராயணன்.

1925 டிசம்பர் 25 புரட்சிகர எண்ணங்களை மனதில் ஏந்தி இளைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளால் கான்பூர் வெங்காய கிடங்கில் தொடங்கப்பட்ட கம்யூனிஸ்ட் இயக்கம் தனது ஆயுதப் பாதையை 1950களின் மத்தியில் கைவிட்டு  தேர்தல் சனநாயக பாதையில் இந்தியாவில் தொடர  முடிவெடுத்து அதன் வழி இன்றளவும் நடந்து வருகிறது. சுதந்திரத்திற்கு முன்னர் கட்சி வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க கையாண்ட பெவினன் வழக்கு, மீரட் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு போன்றவற்றில் இருந்து போராளிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் கட்சி தொடர்ச்சியான ஆயுதக் கிளர்ச்சியில் திரிபுரா, தெலுங்கானா மற்றும்  கேரள மாநிலங்களில் ஈடுபட்டே வந்தது.

        சுதந்திரத்திற்குப் பின்னான முதல் பொதுச் செயலாளராக பி.டி.ரணதிவே தேர்ந்தெடுக்கப்பட்டார், 1957 களின் பொதுத் தேர்தலில் கேரள மாநிலத்தில் நம்பூதிரிப்பாட்-இன்  தலைமையில் கட்சி தேர்தலை சந்தித்து உலக அளவில் சனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிச அரசாங்கம் என்ற பெருமையை அடைந்தது.

            அந்தக் காலத்தில் நிலவிய கருத்து மோதல்கள் கட்சி பிளவுபட காரணமாகவும், உலக வெளிப்புற சூழல் ஒரு காரணமாகவும் அமைந்தது. பின்னர் கட்சி வெவ்வேறு அமைப்புகளாக பிளவுபட்டு தற்போதைய சூழலில் வலுவிழந்த ஒர் நிலையில்  தோற்றமளிக்கிறது.

              சுதந்திரத்திற்கு முன்னர் இருந்த சூழலில்  வர்க்க பேதங்களை ஒழிப்பதை காட்டிலும் வெள்ளை ஆட்சியாளர்களிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது என்கிற ஒற்றை இலக்கில் கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் இயக்கத்துடனும் தனியாக பல அமைப்பின் மூலமும் களம் கண்டனர். அந்த சுதந்திரம் அரை நிலப்பிரபுத்துவ மனோநிலை கொண்ட நபர்களின் வசம் வந்த பிறகு அவர்கள் தலைமையில் கடந்த கால் நூற்றாண்டுகளாக அமையப்பெற்ற அரசானது வர்க்க வேறுபாடுகளை களைய முயற்சிக்காமல் அதனை வெவ்வேறு வடிவில் வளர்த்தே வந்திருக்கிறது. சாதிய கட்டுமானத்தில் புதையுண்டு கட்டமைக்கப்பட்டிருக்கிற இந்திய சமூகத்தில் சாதி ஒழிப்பை முன்னெடுக்காத வரை வர்க்க புரட்சி சாத்தியமில்லை என்கிற  புரிதல் கம்யூனிஸ்டுகளிடம் இல்லாத சூழல் இதுவரை இந்தியாவில் வர்க்க அரசியல் ஒழியாததற்கு  காரணமாகவும் இருந்து வருகிறது.

           சுதந்திரத்திற்குப் பின்னான இந்தியாவில் கல்வி, வேலைவாய்ப்பு,  பொருளாதார சூழல் மேம்பட்டிருந்தபோது மதநல்லிணக்கம், பிற மதத்தினர் சுதந்திரத்தில் தலையிடாத சகிப்புத்தன்மை ஆகியவை வளர்ந்து வந்தாலும் சாதிய மோதல் என்பது அதிகரித்தே வந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் முற்போக்கு இயக்கங்கள் தோன்றி வளர்ந்து தனது கருத்துக்களை பரப்பிய போதும் இத்தகைய சமூக சீர்கேடுகளை அவ்வியக்கங்களால் ஒழிக்க முடியவில்லை, மாறாக அவ்வியக்கங்கள் மிகுந்த பின்னடைவை சந்தித்தே வருகிறது.

          முதலாளித்துவமும், சகிப்பின்மையும் அளவுக்கு மீறி வளர்ந்து வரும் இந்த சூழலில் கம்யூனிச இயக்கங்களின் தேவையும் அதன் பிரச்சாரங்களும் மிகுந்த அவசியமாகின்றன. ஜனசங்கமும் அதன் கிளை  அமைப்புகளான பஜ்ரங்தள அமைப்புகளும் மனுதர்ம விதிகளையும் அதன் படிநிலைகளையும் வெவ்வேறான வடிவங்களில் பரப்பி வருகின்றன. அதன் ஒரு வடிவம் தான் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள்.

          அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல் போன்ற ஜனசங்க அமைப்புகளுக்கு எதிரான தலைவர்களையும் மத அரசியல்வாதிகள் தங்கள் அமைப்பு சாயத்தை அவர்களின் மேலும் பூசி அந்த மகத்தான தலைவர்களையும் தங்கள் அமைப்பின் மூலம் கபளீகரம் செய்ய முயற்சித்து வருகிறார்கள். மத அரசியல் அமைப்புகள் மக்களின் மனதில் வேரூன்றியுள்ள சாதிய எண்ணங்களை அணையவிடாமல் அதனை ஒருங்கிணைத்து வெற்றி பெறுவதன் மூலம் மத அரசியலை இந்திய மாகாணம் முழுமையும் பரப்பி வருகிறார்கள்.
உத்திரபிரதேசம், பீகார் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் எந்த ஒரு உட்கட்ட அமைப்பு, பெண் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் போன்ற முன்னேற்றங்களை செய்யாமல் வெறுமனே மத உணர்வுகளையும் சாதிய உணர்வுகளையும் பரப்புவதன் மூலம் மக்களின் அறிவு வளர்ச்சிக்கு மிகுந்த தடையாக இருந்து வருகிறது சாதிய -மத அரசியல் அமைப்புகள்.

            இத்தகைய சூழலில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தங்கள் உள் அமைப்புகளில் உள்ள குளறுபடிகளை களைந்து, தத்துவார்த்த ரீதியான தனது பிரச்சாரங்களை முன்னைவிட  வீரியமாக செயல்படுத்துவதன் மூலம்  இதனை மீட்டெடுக்க முடியும்.

கல்வி வளாகங்களில் தொடங்கி மக்கள் மன்றம் வரை நமது கம்யூனிஸ்டுகள் உழைக்க வேண்டிய நேரமிது..

*-இரா.சத்தியநாராயணன்.*
*திருவாரூர்.*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here