நாடகம் நடத்தும் உச்சநீதிமன்றம்,நடிக்கும் நீதிபதிகள்.

புலம்பெயர் தொழிலாளர்களின் துயர் நிலை மற்றும் அவர்கள் படும் துன்பத்தை கண்டு உச்சநீதிமன்றம் 25.05.2020 அன்று தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து அவர்களின் இடர்பாடுகளை களையும் பொருட்டு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு விரிவான விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

பல கனவுகளுடன் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள நகரங்களுக்கு குடி பெயர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக தேசிய ஊரடங்கு மற்றும் மத்திய மாநில அரசுகளின் நிர்வாகத்திறனின்மையால் வேலை இழப்பு மற்றும் உண்பதற்கு கூட உணவின்றி பாதிக்கப்பட்ட நிலையில்  எஞ்சி இருக்கும் உயிரையாவது காப்பாற்றிக்கொள்ள தங்கள் சொந்த மாநிலங்களுக்கு கால்நடையாக பயணத்தை தொடர்ந்தனர்.

நிற்கதி ஆக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான மைல்களை கால்நடையாக கடக்கையில் அவர்களின் அடிப்படை தேவைகளான உணவு மற்றும் தண்ணீரைக் கூட பூர்த்தி செய்யாத அரசுகள் காவல்துறையின் மூலம் அடக்குமுறையை அநாதரவான தொழிலாளர்களின் மீது ஏவினர். இந்த நிகழ்வு தினந்தோறும் பத்திரிக்கையில் வெகுவாக பகிரப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நிலையில் கடந்த 31.03.2020 புலம்பெயர் தொழிலாளர்களின் இடர்பாடுகளை களைவதற்கு உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தலையிட மறுத்திருந்த நிலையே தொடர்ந்து நீடித்தது.

இந்தப் போக்கை வெகுவாக பல உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் விமர்சித்த நிலையில் 25.05.2020 அன்று பல்வேறு தரப்பட்ட மக்களிடம் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களின் இடர்பாடுகளை களைவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு கோரிக்கைகள் தொடர்ந்து வந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதியரசர் திரு அசோக் பூசன் தலைமையிலான 3 பேர் அமர்வு தானாக முன்வந்து வழக்கினை பதிவு செய்து மத்திய மாநில அரசுகள் புலம்பெயர் தொழிலாளர்களின் உணவு தங்குமிடம் மற்றும் அவர்களின் போக்குவரத்து போன்ற இடர்பாடுகளை போக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து உடனடியாக பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது இந்த வழக்கு நாளை மறுநாள் 28 மே 2020 அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அருண்காசி,வழக்கறிஞர்,தில்லி.