நாகை.திருவள்ளுவனை விடுதலை செய்.

மேட்டுபாளையத்தில் அருந்ததியர் மக்களின் குடியிருப்பை பிரிக்க கட்டப் பட்ட இருபது அடி உயர கருங்கல் சுவர் சரிந்து வீடுகள் மீது விழுந்ததில் 17 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த அநீதிக்கு எதிராக போராடிய அரசியல் ,மனித உரிமை செயல்பாட்டாளர்கள் காவல் துறையால் தாக்கப்பட்டுள்ளனர். தமிழ்புலிகள் அமைப்பின் தலைவர் நாகை. திருவள்ளுவன் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். செத்தவனுக்கு நீதி கோருவது கூட தடியடி நடத்தும் குற்றமாக பார்க்கும் காவல்துறை மனநிலை மிக மோசமானது.

ஏழையாய் பிறந்தற்காய் சாகும் மக்களின் அவலத்தை எதை எழுதி விவரிப்பது. குடியிருப்பிலிருந்து விரட்டப்படுவது, வீடுகளில் சமாதியாவது என நீளும் துயரம் பொது சமூகம் உணர்வு ரீதியில் அறியாதது.

கொத்துக் கொத்தாய் சாகும் இம் மனிதர்கள் ஏழைகளாய், உழைப்பாளர்களாய் பிறந்ததை தவிர எந்த பாவமும் அறியாதவர்கள். பொது புத்தியில் இவர்கள் வெறும் ஒரு நாள் செய்திதானா? என்றாவது ஒரு நாள் அவர்கள் இடத்தில் நம் சொந்த பந்தங்களை வைத்து கற்பனையாவது செய்துள்ளோமா?

நியாயம் கேட்க வந்த தலைவர்களை தாக்கி காவல் துறை இழுத்துச் செல்லும் காணொலி பார்த்தேன். மற்ற சாதிய தலைவர்களையும் இப்படித்தான் காவல் துறை நடத்தியுள்ளதா? நியாயம், சட்டம் என எல்லாவற்றிலும் பாகுபாடு காட்டும் செயல் நீடித்த தொடர் அநீதியை செய்கின்றது. இந்த மரணங்கள் விபத்துக்களல்ல. பாகுபாட்டால் நிகழும் மறைமுக கொலைகள். சாதியம் என்பதே கொலைகளுக்கான பின்னணி.

சம உரிமை,பாதுகாப்பு என எதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு செல்லவேயில்லை. அவர்களை மனிதர்கள் என்றோ, மனித உரிமை அவர்களுக்கு உண்டு என்றோ எப்போதும் அரசு கருதுவதில்லை அதன் தொடர்ச்சியே நீளும் மரணங்கள்.

அரசுக்கும் ,காவல் துறைக்கு இதுவோ சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டுமே. செத்தவர்களின் குடும்பத்திற்கோ உயிரின் வலி தெரிகின்றது. ஒரு கணம் இதனை சமூக பொருளாதார, வாழ்வாதார பிரச்சனையாக பார்த்தால், தடியடி,பொய் வழக்கு,மிரட்டல்,அடக்குமுறை இருக்காது.
அரசே அடக்குமுறையை கை விடு! மக்கள் போராளிகளைை விடுதலை செய்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here