நம் வாக்கு விற்பனைக்கு அல்ல!! ……….S. மீனா. உளவியலாளர்


ஜனநாயக நாட்டில் மூன்று விஷயங்கள் மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரி மதிப்புடையது.
1.உயிர் 2. நேரம் 3.வாக்குரிமை.
பலநேரங்களில், உயிரின் மதிப்பு கூட பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் பாகுபாடுடன் நடத்தப்படுகிறது. நேரம் அனைவருக்கும் ஒரே மாதிரியானது என்றாலும் கூட, அதை பயன்படுத்துபவரின் திறமை மற்றும் பலன்களை பொறுத்து நேரத்தின் மதிப்பு மாறுபட்டுவிடுகிறது. ஆனால் ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பாமரன் என எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் சமமான உரிமையும், மதிப்பும் வழங்கும் ஒரே விஷயம் வாக்குரிமை. மக்களாட்சியின் மகத்துவமே, வாக்குரிமையின் அடிப்படை தத்துவமே “ஒவ்வொருவரும் ஒன்று என்றே எண்ணப்படுவார்கள், எவருமே ஒன்றுக்கு மேலாக எண்ணப்படுவது இல்லை” என்று ஜெர்மி பெந்தம் என்ற ஆங்கிலேய சட்ட நிபுணர் கூறியுள்ளார்.

ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்குமான தொடர்பை சமுதாய ஒப்பந்தம் என்றார் ரோம் அரசியல் தத்துவனி சிசிரோ. அதாவது, மக்களைக் காப்பாற்ற ஆட்சியாளன் ஒப்புக்கொண்டதால் அவனுக்கு மக்கள் பணிந்து நடக்கிறார்கள் என்பது இதன் உட்கருத்து. இந்த சமுதாய ஒப்பந்தத்தின் அடையாளம்தான் ஆட்காட்டி விரலில் வைக்கபடும் மை. இந்த மை மூலமாக ஒருவரை ஆள கை காட்டுகிறோம்.

ஒவ்வொரு குடிமகனும் வாக்கு செலுத்திவிட்டு தன் விரலை உயர்த்தி காட்டும் போது பெருமையும், பூரிப்பும் அடைகிறான். அந்த பெருமை, மகிழ்ச்சி நமக்கு சும்மா கிடைத்து விடவில்லை. அதன் பின்னால் மிகப்பெரிய தியாகங்களும், போராட்டங்களும் உள்ளது.

 

1920- ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் வாக்குரிமை அனைவருக்கும் இல்லை. குறிப்பாக பெண்கள் வாக்களிக்கவே முடியாது. மொத்த இந்தியாவில் 62 லட்சம் பேர் மட்டுமே வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டு இருந்தார்கள். மொத்த பிரிட்டிஷ் இந்தியாவின் மக்கள் தொகையில் வாக்காளர்கள் 2.75 சதவிகிதம் மட்டுமே. இப்போ நம் நாட்டின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 90 கோடி. இந்த முறை புதிய வாக்காளர்களில் பெண்கள் 4.35 கோடி, ஆண்களின் எண்ணிக்கை 3.80 கோடி.

 

சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக 1951-52 -ல் நடைபெற்ற பொதுதேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 17.3 கோடி. இதில் 8 கோடி பேர் பெண்கள். வாக்கு செலுத்தும் வயது 21 ஆக இருந்தது. இந்த பெண்களுக்கான வாக்குரிமை பற்றி கூடுதல் INFORMATION என்னவென்றால் 1917-ல் தொடங்கப்பட்ட WOMENS INDIA ASSOCIATION இக்கோரிக்கையை முன்னெடுத்தது. 1919-ல் கொண்டு வரப்பட்ட மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் அம்சமும் இடம்பெற்றது. 1920-ல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து 1921-ல் சென்னை, பம்பாய் மாகாணங்களில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. இப்படி பல படிகளை தாண்டி நாம் பெற்ற வாக்குரிமை 1988-ல் அனைவருக்கும் 21 வயதிலிருந்து 18 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே, ஒரு ஜனநாயக நாட்டின் எதிர்காலத்தை, வளத்தை, வளர்ச்சியை கட்டமைப்பு செய்யும் வாய்ப்பை, பொறுப்பை சரியான தலைவர்களுக்கு வழங்கப்படும் பொழுதுதான் தேசம் சரியான வளர்ச்சி பாதையில் பயணிக்க முடியும். அப்படி ஒரு தலைமையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை நமக்கு வாக்குரிமை வழங்குகிறது.
நம் அரசியல்வாதிகள் பணக்காரர்களிடம் இருந்து பணத்தையும், ஏழைகளிடமிருந்து ஓட்டையும் வாங்கி லாவகமாக அரசியல் செய்து வருகின்றனர்.

நேர்மையான மக்களால்தான் நேர்மையான தலைவர்களை தேர்வு செய்ய முடியும். ஆகையால் எல்லோரும் பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிப்போம், தவறாமல் வாக்களிப்போம்,
நம் வாக்கு விற்பனைக்கு அல்ல!!

S. மீனா. உளவியலாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here