தொழிலாளர் வர்க்கம் – முதலாளித்துவத்தின் விலங்குகளை உடைத்தெறியும் முன்னணிப்படையே- ஜெ.பாலாஜி.


சாதாரண அடிமட்ட தொழிலாளர்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் தங்களின் மனதில் தோன்றும் அடிப்படை கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.
முதலாளி என்பவர் தன் மூலதனத்தை அதாவது பணத்தை முதலீடு செய்யும் போது அதற்கான லாபத்தை எதிர்பார்ப்பது நியாயமானதுதானே என்ற எண்ணம் தோன்றும்.

முதலீடு செய்யும் முதலாளியிடம் ஊதியம் கேட்க மட்டும்தான் முடியும் எவ்வாறு அவனுக்கு லாபமே வரக்கூடாது என்று எண்ண முடியும் என்ற எண்ணம் அடிப்படையானது தான்.
ஆனால் இந்த அடிப்படை சித்தாந்தத்தின் காரணம் நமக்கு அடிப்படையாக புகட்டப்பட்ட போதனைகளும் அடிப்படைக் கல்வியும் தான். சிறு வயது முதல் வாங்குவதன் மூலமும் விற்பதன் மூலமும் பெறப்படும் லாபம் ஒன்றே அடிப்படையான ஒன்று என்ற தவறான கல்வி முறையே இதற்கு அடிப்படையான காரணம்.

கல்விமுறை மட்டுமின்றி எந்த ஒரு பொருள் வாங்கினாலும் பெற்றாலும் அதனால் நமக்கு என்ன லாபம் இருக்கிறது, என்ற மனப்பான்மையை நமக்குள் ஊட்டிவிட்டானர் .இதுவே காலப்போக்கில் வழக்கமாக மாறிவிட்டதும் இல்லாமல் வணிகத்தின் அடிப்படை சித்தாந்தம் ஆகவே மாறிவிட்டது.மேலும் இந்த முதலாளித்துவம் நம் போன்ற உழைக்கும் மக்களை வர்க்கமாக ஒன்று சேர விடாமல் கண்காணித்துக் கொள்வதற்கு இந்த இலாப சித்தாந்தமும் ஒரு முக்கிய காரணம். இதனடிப்படையில்தான் தொழிலாளி வர்க்கத்திற்குள் ஊதிய ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தி வர்க்கப் பிரிவினையை, ஏற்றத் தாழ்வை உருவாக்கி வைத்துள்ளது.

உதாரணத்திற்கு ஆயிரம் தொழிலாளிகள் உள்ள ஒரு தொழிற்சாலையில் 100 தொழிலாளர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு சலுகைகள் சுதந்திரம் கொடுத்து மற்ற 900 தொழிலாளிகளை வாட்டி வதக்கி வேலை வாங்குகின்றனர். இந்த 900 தொழிலாளர்கள் அந்த நூறு தொழிலாளர்களை போல் சுதந்திரமும் சலுகைகளும் நமக்கு கிடைக்க வேண்டும் என்று, வர்க்க விழிப்புணர்வின்றி முதலாளிகளின் எலிப்பொறிக்குள் தாமும் சிக்கிக் கொள்கின்றனர்.

அதுமட்டுமின்றி தற்போதைய சமூகத்தில் நாம் எப்பொழுது உயர்ந்த நிலைக்குச் செல்வது வீடு, வாகனம், உணவு, ஆடம்பர வாழ்க்கை, சினிமா, பொழுதுபோக்கு போன்ற சிற்றின்பங்கள் சிறைக்குள் சிக்கி தாமும் ஒரு குட்டி முதலாளியாக எவ்வாறு மாறுவது என்ற முதலாளித்துவத்தை நோக்கி செல்லும் வகைக்கு தற்போதைய முதலாளித்துவம் நம்மை மாற்றி விட்டது.
நமக்குள் வட்டி, லாபம், சொத்து, சேமிப்பு, போன்றவற்றின் மூலம் தொழிலாளியை தொழிலாளியே சுரண்டும் நிலைக்கு கொண்டு வந்து விட்டனர்.

எனவே தான் தற்போதைய தொழிலாளிகளின் மனநிலை முதலாளித்துவ சித்தாந்தத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. நம்மை அந்த மனநிலைக்கு தற்போதைய முதலாளித்துவம் தள்ளிவிட்டது.

நம் பள்ளிகளில் படித்த அடிப்படை கல்வி
பொருள் விற்ற விலை – வாங்கிய விலை = லாபம், என்று நமக்கு சொல்லித் தரப்பட்டுள்ளது. நூறு ரூபாய் கொடுத்து ஒரு பொருள் வாங்கி அதை 120 ரூபாய்க்கு விற்றால் 20 ரூபாய் நமக்கு லாபம் என்ற உழைப்புச் சுரண்டலை சிறுவயதிலிருந்தே நம் அடிப்படை கல்வியினில் புகுத்தி விட்டனர். எந்தத் தொழிலாளிக்கும் உற்பத்தி செய்யும் பொருளின் மதிப்பு (விலை) எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்பதை பற்றிய தெளிவு கற்றுக் கொடுக்கப்படவில்லை. ஒரு பொருளின் உற்பத்தி விலை, உற்பத்திக்கான கூலி, பொருளின் மதிப்பு முதலாளிக்கு கிடைக்கும் லாபம் போன்ற அடிப்படை கல்விகள் தொழிற்சங்கங்களின் மூலம் தொழிலாளர்களுக்கு புகட்டப்பட வேண்டும்.
வேலைநிறுத்தம், ஊதிய உயர்வு, தொழிற்சங்கங்களின் சந்தா தொகை,
நிர்வாகத்தின் விரோத செயல், இவைகளை தாண்டி தொழிலாளர்களுக்கு அடிப்படை அரசியல் கற்றுக் கொடுக்கப்படவேண்டும். இதைத்தான் மார்க்சும், ஏங்கல்சும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு அரசியல் கற்றுத்தரும் பாடசாலைகள் ஆக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

ஒரு தொழிலாளிக்கு தன் நிர்வாகம் மட்டுமே எதிரிகளாக சித்தரிக்கப்பட்டு அவர்களின் பிடியில் இருந்து நம்மை காக்க அரசிடம் போய் நிற்கின்றனர் ஆனால் அந்த அரசு முதலாளிகளின் கைக்கூலி தான், தற்போதைய அரசுதான் முதலாளிகளாக இருக்கின்றது என்ற அடிப்படை அரசியல் இன்னமும் பல தொழிலாளர்கள் புரிந்து கொள்ள இயலாத நிலையில்தான் உள்ளது. நாம் நிர்வாகத்தையும் முதலாளித்துவத்தையும் எதிர்ப்பதற்கு முன்பு அரசு எனும் இயந்திரத்தை தொழிலாளி வர்க்கம் எதிர்த்து போராடி கைப்பற்றினால் தான் நமக்கான அரசு அமையும் என்பதை நிகழ்த்திக் காட்டியவர். தோழர் லெனின்.
ஆக நமக்கான எதிரி யார் என்பதை புரிந்துகொண்டு அடிப்படை அரசியலும், அரசியல் பொருளாதாரமும், வர்க்க உணர்வையும் புகட்டி தொழிலாளி வர்க்கத்தை அறிவுப்பாதையை நோக்கிக் செல்ல வைப்பதே மிகப்பெரிய வர்க்கப் புரட்சி என்பது என் கருத்து…
ஜெ.பாலாஜி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here