தொழிலாளர்களின் வாழ்நிலை- ராம்பிரபு.

“மிகை வேலையாலேயே சாவு”. ஆம், 20 வயதான ‘மேரி ஆன் வாக்லி’ என்ற தையற்கார பெண்ணைப் பற்றிய செய்திதான் இது. தொடர்ச்சியாக 16 1/2 மணி நேரம், பல காலங்களில் 30 மணிநேரம் கூட வேலை செய்ய நேரிடும். தளர்ந்துபோன உழைப்பு சக்தி அவ்வப்போது திராட்சை ரசம் அல்லது காப்பி மூலம் மீட்கப்படும். உயர்குடி சீமாட்டிகளுக்காக பகட்டான உடைகளை தயாரிக்கும் நிறுவனத்தில், இந்தப் பெண்ணுடன் 60 பெண்கள் வேலை பார்த்தனர். ஒவ்வொரு அறையிலும் 30 பேர் வேலை செய்தனர். அவர்களுக்கு வேண்டிய காற்றில் 1/3 பங்கு மட்டுமே அந்த அறையில் கிடைத்தது. அங்கேதான் அவள் 26 1/2 மணி நேரம் தொடர்ச்சியாக வேலை செய்தாள். படுக்கையறை பலகைகளைக் கொண்டு பொந்துகளாக பிரிக்கப்பட்டிருந்தது அவர்களது வாழிடம். ஒவ்வொரு பொந்திலும் இரண்டு பேர் உறங்க வேண்டும். உடல்நலம் குன்றிப்போன மேரிஆன் வாக்லி ஒருநாள் இறந்துபோனாள். பரிசோதித்த மருத்துவரின் அறிக்கை “மிகவும் நெரிசலான வேலையறையிலும், காற்றோட்டமில்லாத படுக்கையறையிலும் நெடு நேரம் வேலை செய்ததால் அந்தப் பெண் இறந்து போனதாக தெரிவித்தார். விசாரணை அதிகாரி மருத்துவருக்கு பாடம் புகட்டும் விதமாக தீர்ப்பு வழங்கினார் “இறந்து போன பெண் வலிப்பு நோயினால் இறந்திருக்கிறாள். ஆனால் மிகவும் நெரிசலான வேலையறையில் மிதமிஞ்சிய வேலையால் அவளது மரணம் துரிதமாக்கப்பட்டது என அஞ்சக் காரணம் உண்டு” எனக் கூறியது அந்த்த் தீர்ப்பு.

இது இங்கிலாந்தில் 1863-ல் நடந்தது.

(மூலதனம் பக்கம் _345,346)

இது போன்ற தீர்ப்புகளை சமீப காலங்களில் பல இடங்களில் கேள்விப்பட்டிருப்போம்

நிகழ்காலத்தில் இதுபோன்ற உழைப்பு சுரண்டல்கள் நடந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். அதுவும் இதுபோன்ற நோய் தொற்று காலங்களில் நிரந்தரமற்ற அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க உரிமை என்பது தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

ஒரு ஒப்பந்த இளம் தொழிலாளியிடம் உரையாடிய போது கிடைத்த தகவல்கள்தான் இது.

“அமேசான்” என்ற நமக்கு பரிச்சயமான பெயர்தான் ஆன்லைனில் பொருட்களை விற்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம். இந்நிறுவனம் பூந்தமல்லியில் இருந்து திருவள்ளுர் செல்லும் சாலையில் திருமழிசை அருகில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் பொருட்களை சேர்த்து வைக்க அங்கே மிக பெரிய வைப்பறை உள்ளது. சென்னை மற்றும் புறநகரின் வாடிக்கையாளர்களுக்கு இங்கிருந்துதான் பொருட்கள் அனுப்பப்டுகின்றன. மிகப் பெரிய வாகனங்களில் கொள்முதல் செய்து எடுத்து வரப்படும் பல்வேறு பொருட்களை பிரித்து அனுப்பும் பணிகள் இங்கிருந்துதான் நடைபெறுகிறது.

மூன்று ஷிப்டுகளில் சுமார் 700 தொழிலாளர்கள் வரை வேலை செய்கின்றனர். 19 வயது முதல் 25 வயதுள்ள தொழிலாளர்கள்தாம் அதிக அளவில் உள்ளனர்.

ஒருநாளைக்கு 400 முதல் 600 ரூபாய் வரை மட்டுமே சம்பளம் தரப்படுகிறது. பணிக்கு வரும் தொழிலாளர்கள் வீட்டிலிருந்தே உணவு எடுத்து வருகின்றனர். நிறுவனம் உணவிற்கான எந்த ஏற்பாடும் செய்வில்லை. உணவு இடைவேளை மட்டுமே விடப்படுகிறது. தேனீர் இடைவேளை எதுவும் கிடையாது. வேலை துவங்கியது முதல் முடியும் வரை மூச்சு திணறும் படியான வேலைச் சுமைகள் தொழிலாளர்களுக்கு தரப்படுகின்றன. வேறெந்த பாதுகாப்பு வசதிகளும் தொழிலாளர்களுக்கு செய்துதரப்படவில்லை.

ஜுன் 19 முதல் 30 வரை அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு நாட்களில் பல தொழிலாளர்கள் நிர்வாகம் ஏற்பாடு செய்து தந்த அறைகளில் தங்கி பணிபுரிந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் எதுவும் செய்யப்படவில்லை. முறையான உணவுகள் தரப்படவில்லை. காற்றோட்டம் குறைவான சிறிய அறைகளில் 5 முதல் 6 தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்துள்ளனர். பணிமுடிந்த பின்னரும் கூடுதல் நேரங்கள் (இது OT கணக்கில் வராத வேலை நேரம்) பணிபுரிய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

“அத்தியாவசிய பொருட்கள் முதல் உல்லாச வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் வரை தினந்தோறும் விற்பனை செய்பப்டுகிறது. இதை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தொழிலாளர்களின் நிலை பற்றி தெரியுமா?” என ஆதங்கப்பட்டார் அந்த இளம் தொழிலாளி.

எந்தப் பொருளின் பயன்பாட்டையும் அனுபவிக்கும் பயனாளிக்கும், அந்த பயனுக்கு பின்னால் இயங்கும் தொழிலாளர்களின் நிலை பற்றி தெரியாது என்பதுதான் உண்மை. விரக்தியிலிருந்த அந்த தொழிலாளியிடம் தொழிலாளர் வர்க்கம் என்ற முறையில் நம்முடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டோம்.

இது போன்ற பல்வேறு துறைகளிலும் சுரண்டல்களை தமது “தலைவிதியாக” தொழிலாளர்கள் கடந்து போகின்றனர். இவர்களுடைய பிரச்சனைகள் வெளியில் யாருக்கும் தெரிவதில்லை.

தொழிலாளர் வர்க்கத்தில் முன்னேறிய பிரிவின் தோழர்கள் இதுபோன்ற தொழிலாளர்களின் பிரச்சனைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அனைத்து வகையான சுரண்டல்களையும் அம்பலபடுத்த ஒன்றிணைய வேண்டும்.

வேலை நேரம் அதிகரிப்பு போன்ற பல்வேறு தொழிலாளர் சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.

தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வாழ்க்கை நிலை பின்னோக்கி தள்ளப்படும் நிலை உருவாகி கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்திற்கும் மிகப்பெரிய நெருக்கடிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. பலநூறு ஆண்டுகள் போராடி பெற்ற உரிமைகளை காப்பாற்ற முயலாமல் பல்வேறு தொழிற்சங்கங்கள் சங்கத்தொழிலை சிறப்பாக கவனித்து வருகின்றன.

தொழிலாளர்கள் நாம் இனியும் விழித்துக் கொள்ளாவிட்டால் சொற்ப கூலிக்கு 20, 30 மணி நேரம் தொடர்ச்சியாக வேலை செய்ய வேண்டி வரலாம்.

“மனுசன தவற எல்லாத்தையும் ஆன்லைனில் வித்துறானுங்க” என்று நம்மிடையே விடைபெறும் போது அந்த இளம் தொழிலாளி கூறியபோது “நாமும் சந்தையில் இப்போது ஒரு பண்டம்தான்” என்று எனக்கு சொல்லத் தோன்றியது.

ராம்பிரபு.