தொற்றுநோயும், திசைதிருப்பல்களும். – வி.அன்பழகன்.

ஐரோப்பா, அமெரிக்கா என அனைத்து உலக நாடுகளையும் கடுமையாக பாதித்துக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவிவருகிறது.

இப்போது இந்தியாவிலும், தமிழகத்திலும் கொரோனாவைவிட ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது. என்னவென்றால் மார்ச் மாதம் 8ம் நாள் தில்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்ட இசுலமியர்களால் தான் தமிழ்நாட்டில் வைரஸ் தொற்று அதிகமாக பரவுகிறது என்பது தான் அந்த செய்தி. இதன் மூலம் நோயை எதிர்ப்பதற்கு மாறாக நோயாளிகளை எதிர்க்கும் கண்ணோட்டத்தை உருவாக்கி வருகிறார்கள்.

மதசிறுபான்மையினரான இசுலாமியர்கள் ஏற்கனவே மத்திய பாஜக அரசு கொண்டுவந்த நிரந்தர சமூக விலக்கலான CAA என்ற மக்கள் விரோத சட்டத்தை எதிர்த்து போராடி வந்தனர்.தற்பொழுது ஆளும் அரசின் இந்துத்துவ அறிவு ஜீவிகளாலும் அவர்களின் ஊடகங்களாலும் தமிழக சுகாதார துறையினாலும் தற்காலிக சமூக விலகலான கொரோனா வைரஸ் பிரச்சனையை எதிர்த்து தனித்து போராடி வருகின்றனர். இந்துத்துவவாதிகள் செய்து வரும் பொய் பிரச்சாரத்தை மக்களிடத்தில் வெளிப்படுத்தி மறைக்கப்பட்ட உண்மையை வெளிப்படுத்துவதற்கே இக்கட்டுரை.

மார்ச் மாதம் 8ம் தேதி தில்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட 2000 பேர் தான் கொரோனா தொற்று பரவக் காரணம் என்று கூறிக் கொண்டிருக்கும் எவரும் பிப்ரவரி மாதம் 21ல் நடைபெற்ற அமெரிக்க அதிபரின் குஜராத் வருகையை பற்றியும், பிப்ரவரி 24ல் கோவையில் நடைபெற்ற ஜக்கி வாசுதேவின் இந்து மத நிகழ்ச்சியை பற்றியும் பேசுவதில்லை ஏன்?. இவை இரண்டும் வெளிநாட்டினர் உட்பட இலட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் ஆகும். இங்கு ஏன் பிப்ரவரி நிகழ்ச்சிகளை பற்றி பேசுகிறேன் என்றால் இந்தியாவில் கொரோனா தொற்று சனவரியிலேயே உறுதி செய்யப்பட்டது என்பதால்…

சரி, பிப்ரவரி மாத நிகழ்ச்சிகளை பற்றி இங்கு பேச வேண்டாம், மார்ச் மாத நிகழ்ச்சிகளை பற்றி மட்டும் பேசுங்கள் என்று சொன்னால் டைம்ஸ் அப் இந்தியா (Times Of India) உள்ளிட்ட பத்திரிகையில் வெளியான மார்ச் மாத செய்திகளை இங்கு பட்டியலிடுகிறேன்.

இந்த மார்ச் 8ம் தேதி நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டை குறித்து சர்ச்சை பேசுகிறார்களோ அதே மார்ச் 8ம் தேதி குடியரசு தலைவர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட மகளிர் விருது வழங்கும் விழா குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. அடுத்தது மார்ச் 10ம் நாள் குஜராத்திலுள்ள கலுப்பூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட ஹோலி(Holi) பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. அடுத்தது தில்லியில் மார்ச் 12ம் நாள் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட சீக்கிய குரு ஒருவரின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த சீக்கிய குருவிற்கு கொரோனா தொற்று மார்ச் 26ல் உறுதி செய்யப்பட்ட செய்தி பின்னர் வெளிவந்தது.

அடுத்ததாக மார்ச் 15ம் நாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பா உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் மகள் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்பின் பிரபல பாடகி கனிகா கபூரின் பாடலுடன் கூடிய திருமண விழா ஒன்று நடந்து முடிந்தது. பின்னர் கனிகா கபூருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மார்ச் 8க்கு பிறகு நூற்றுக்கணக்கானோர் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இவ்வளவு நிகழ்ச்சிகள் நடந்திருக்கிறது. இதில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் நிகழ்ச்சிகளும் உண்டு. ஆனால் இவர்கள் யாரிடமும் காணப்படாத குறை எப்படி தப்லிக் ஜமாத் மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் மட்டும் காணப்படுகிறது என்று தெரியவில்லை.

மேலே குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் இரு பொருட்டே இல்லை என்கிற அளவுக்கு (சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கப்பட்ட) நிகழ்ச்சி ஒன்று சத்தமில்லாமல் நடைபெற்றது. பிரதமரின் ஊரடங்கு அமல்படுத்திய பிறகு உத்திரபிரதேச பாஜக முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையில் இராமர் கோவில் பூமி பூஜையில் கலந்துகொண்ட இந்துக்களுக்கு ஒரு நீதி வழங்குவதையும் இசுலாமியர்களுக்கு ஒரு நீதி வழங்குவதையும் மக்கள் எப்படி ஏற்பார்கள்?.

தமிழ்நாடு நோய் தொற்றுக்கு தப்லிக் ஜமாத் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இசுலாமியர்கள் காரணம் என்று கூறும் எவரும் உத்திரபிரதேசத்தில் பரவும் நோய் தொற்றுக்கு பூமி பூஜையில் கலந்துகொண்ட இந்துக்கள் தான் காரணம் என்று ஏன் கூறவில்லை?.

மேற்கூறிய செய்திகளில் இருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டியது இதை தான். மார்ச் மாதம் இந்தியாவின் தலைப்பு செய்தியாக இருப்பது கொரோனா தொற்றால் ஏற்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோரின் மரணம் என்பது தான். மக்களின் உயிர் விலை மதிப்பற்ற ஒன்று தான். அதற்கு முக்கியத்துவம் கொடுக்கத்தான் வேண்டும். ஆனால் மார்ச் மாத மரண செய்திக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஏன் பிப்ரவரி மாத மரணத்திற்கு முக்கியத்துவம் தரப்படவில்லை? என்பது தான் இப்போது கேள்வி. எந்த தில்லியில் நடைபெற்ற இசுலாமியர்கள் நிகழ்ச்சியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்களோ அதே தில்லியில் மத்திய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட மக்கள் விரோத சட்டமான சிஎஎ (CAA) எதிர்த்து இசுலாமியர்கள் போராடி வந்தனர். அவர்களின் அமைதி போராட்டத்தை கலவரமாக மாற்ற பாஜகவின் கபில் மிஸ்ரா தலைமையிலான CAA ஆதரவு குழு இசுலாமியர்களின் போராட்டத்திற்குள் நுழைந்து திட்டமிட்டபடி கலவரமாக மாற்றினர். அந்த கலவரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். அந்த செய்தி இன்று பேசப்படாமல் இருக்கிறது. காரணம் கொரோனா பற்றிய செய்தியின் தேவைக்கருதி என்பது புரிகிறது. அதைவிட நாம் அதிமுக்கியமாக புரிந்துகொள்ள வேண்டிய செய்தி இதுதான்.

இன்று மக்கள் சந்திக்கும் மரணத்திற்கு காரணமான கொரோனோவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் கொரோனா பலி முடிவுற்றுவிடும். ஆனால் நமது சமூகத்திற்கு தேவையான அதிமுக்கியமான மருந்து என்னவென்றால் தில்லி கலவரம் போன்ற ஏராளமான கலவரங்களை உருவாக்குவதற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய சாதி,மத மற்றும் முதலாளித்துவ பொருளாதார சித்தாந்தங்கள் தான். ஏனென்றால் அந்த சித்தாந்தங்கள் கபில் மிஸ்ரா போன்ற ஏராளமான வைரஸ் தொற்றுகளை உருவாக்கக் கூடியவை. எனவே இங்கு இருக்கும் கொரோனாவை விட கொடிய வைரஸ் நோயான இந்துத்துவா மற்றும் முதலாளிய பொருளாதார சித்தாந்தங்களுக்கு சரியான மருந்து பொதுவுடைமை சித்தாந்தங்களே! அந்த ஒரு மருந்து மட்டும் தான் எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல் நோயை முற்றிலும் குணப்படுத்தும் திறன் கொண்டவை. இதை உணர்ந்து இசுலாமிய சகோதரர்களுடன் வேறுபாடு கருதாது அவர்கள் உட்பட அனைத்து சமுகத்தினரும் ஒன்றிணைந்து கொரோனாவை கடந்து வேலை செய்யவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here