தைவான்,தென்கொரியா உலகுக்கு வழிகாட்டுகிறது.- விஷ்ணுராம்.

சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கரோனா இப்போது 199 நாடுகளில் பரவி இதுவரை 30000 மக்களை பலிவாங்கியதோடு  7 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைப் பாதித்துள்ளது. இத்தாலியில் மட்டும் 10000- க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர், அமெரிக்காவில் மட்டும் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்களைக் கடந்து செல்கின்றது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் மூன்று நோயாளிகள் கேரளாவில் ஜனவரி 29 ஆம் தேதி  பதிவாகியுள்ளது, இது கேரள அரசாங்கத்தால் நன்கு கட்டுப்படுத்தப்பட்டது.  மார்ச் தொடங்கும் வரை வேறு யாரும் பாதிக்கப்படவில்லை.

இன்று இந்தியாவில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளன. 20 பேர் இறந்துள்ளனர். இவ்வேளையில் இந்நோயை கட்டுப்படுத்த இந்திய அரசாங்கம் பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு போதுமான அளவு மாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் உழைக்கும் மக்களை பொருளாதார சிக்கலுக்குள் ஆளாக்குகிறது.

இவ்வேளையில் இந்நோயை எதிர்கொள்வதற்கு உலகிற்கே முன்னோடியாய் விளங்குகிய தாய்வான், கியூபா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், ஹாங்காங்கை பார்த்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும்

பெரிதும் பாதிக்கப்பட்ட இத்தாலி நாட்டுக்கு கியூபா அரசு 52 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அனுப்பிவைத்து உலக நாடுகளின் பாராட்டுகளை வாங்கியது. கம்யூனிஸ்ட் நாடாகிய கியூபாவின் இத்தகைய பெருமிதமிக்க செயலை முதலாளித்துவத்தை அடிப்படையாகக்கொண்ட அமெரிக்க அரசாங்கம் பொய் குற்றச்சாட்டு கூறியது மட்டுமல்லாமல் கியூபாவின் உதவியை நாட கூடாது என்று உலக நாடுகளுக்கு கூறிவந்ததனையடுத்து அமெரிக்காவின் நட்பு நாடாகிய பிரேசில், பொலிவியா, ஈக்வேடார், எல்சல்வடார் போன்ற நாடுகள் அங்கு பணிபுரியும் கியூப மருத்துவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பியது. எனினும் கியூபாவின் உதவியை நாடிய இத்தாலி ,வெனிசுலா, நிகாரகுவா, சூரிநாம், ஜமைக்கா, கிரெனடா, பெலிச் ஆகிய நாடுகளுக்கு கியூபா அதனுடைய மருத்துவர்களை அனுப்பிவைத்து உதவியது. மற்றும் பெரிய நாடுகளால் திருப்பி அனுப்பப்பட்ட இந்நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளடக்கிய கப்பலை கியூபா அரசாங்கம் தன் நாட்டிற்கு வரவேற்று சிகிச்சை அளித்தது. இப்படிப்பட்ட செயல்களுக்கு கியூபா உலகநாடுகளின் பாராட்டுகளை வென்றது.


கம்யூனிஸ்ட் நாடான கியூப நாட்டில் கல்வி நிறுவனங்களும் மருத்துவமனைகளும் அரசாங்கத்தால் மட்டுமே நடத்தி வரப்படுகிறது. தரமான கல்வியும் மருத்துவமும் அந்த மக்களுக்கு பல ஆண்டுகளாக இலவசமாகவே வழங்கி வரப்படுகிறது.

சைனாவுக்கு வெறும் 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாய்வான் அரசாங்கம் உலக நாடுகளுக்கு பெரும் பாடத்தை புகட்டி உள்ளது. சீனாவில் நோயை கண்டு அறியப்பட்ட பத்தாவது நாளில் தாய்வானில் இந்நோயின் தாக்கம் தொடங்கியது. தாய்வான் அரசாங்கம் இதனை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக வுஹான் நகரத்தில் இருந்து வரக்கூடிய அனைத்து விமானங்களையும் ரத்து செய்தது மட்டுமல்லாமல், சீனாவிலிருந்து தாய்வானின்  வந்திருந்த அனைத்து மக்களையும் தனிமைப்படுத்தி பரிசோதனைக்கு உள்ளாக்கியது. நோய் உள்ளவர்கள் கண்டறியப்பட்டார்கள். அவர்களுடன் தொடர்பு கொண்ட மற்றவர்களையும் தனிமைப் படுத்தியது. அந்நாடு உடனடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் முகக் கவசத்திற்கு தடைவிதித்து மலிவான விலையில் மக்களுக்கு கிடைக்குமாறு செய்தது. பிப்ரவரி மாதத்தில் தாய்வான் 65 லட்சம் முகக்கவசங்களையும் 85,000 லிட்டர் சானிட்டைசர்களையும் 25,000 தெர்மாமீட்டர்களையும் பள்ளிக்கூடங்கள் , கல்லூரிகளுக்கு வழங்கியுள்ளது.

2003 இல் நடந்த நோய் தாக்கத்தினால் விழித்துக்கொண்ட தாய்வான் அரசாங்கம் விமான நிலையங்களில் தனது பரிசோதனையை வலுப்படுத்தியது. வெளிநாடுகளில் இருந்து பயணித்த அத்தனை பயணிகளும் அந்நாடு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தது. தாய்வான் அரசாங்கத்தின் மருத்துவ காப்பீடு அந்நாட்டின் 99% மக்கள்தொகைக்கு பயனளிக்குமாறு பார்த்துக் கொண்டதால் அந்நாட்டு மக்கள் எந்தவித தயக்கமும் அச்சமும் இல்லாமல் மருத்துவமனைக்கு செல்ல முடிந்தது. இலவச பரிசோதனை செய்வது மட்டுமல்லாமல் நோய் இருப்பதை கண்டறிந்த உடன் அவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ சேவையை இலவசமாக வழங்கியது தாய்வான் அரசாங்கம். நோயிடம் இருந்து பாதுகாக்கும் விழிப்புணர்வுகளை தொலைக்காட்சி மூலமாகவும் வானொலி மூலமாகவும் பரப்பி வந்தது மட்டுமல்லாமல் பெற்றோர்களை பிள்ளைகளின் உடல்நிலை பற்றி பள்ளிக்கூடத்துக்கு தெரிவிக்குமாறு ஆணை பிறப்பித்தது மற்றும் அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் நுழைவதற்கு முன் காய்ச்சல் பரிசோதனை செய்வது என பல்வேறு திட்டங்களை தீட்டி வந்ததால் தாய்வானில் வெறும் இரண்டு பேர் மட்டுமே உயிரிழந்திருக்கின்றனர்.

தென் கொரிய அரசாங்கம் தன் நாட்டின் செயல்பாடுகளை முடக்காமல் கரோனாவுடன் போரை நடத்தி வருகிறது. இந்த இரு நாடுகளும் ஊரடங்கு உத்தரவு ஏதேனும் பிறப்பிக்காமல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களையும் இயல்பாகவே நடத்தி வருகின்றது. இதனைப் பார்த்து வியந்த அமெரிக்க அரசாங்கம் தென் கொரியாவிடம் தமக்கு மருத்துவ கருவிகளை வழங்கி உதவி புரியுமாறு கேட்டுக்கொண்டது. உலக சுகாதார துறையின் தலைவரான தெட்ரொச் அட்ஹனொம் தென்கொரியாவை கண்டு அனைத்து நாடுகளும் கற்றுக் கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொண்டார். ஜனவரி மாதத்தில் தென்கொரியா தனது ஆராய்ச்சிகளை வலுப்படுத்தி வகைகளை வைத்து பரிசோதனை செய்வதற்கான கருவிகளை தயாரிக்க ஆரம்பித்தது. இதனால் அந்த நாட்டால் பெருவாரியான  மக்களை பரிசோதிக்க முடிந்தது. அவர்களில் நோய் உள்ளவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த முடிந்தது. தென்கொரிய அரசாங்கம் தனிமைப்படுத்திய நபர்களை கண்காணிப்பு கேமராக்கள், கைப்பேசி மற்றும் கிரெடிட் கார்ட் பரிமாற்றங்கள் ஆகியவற்றை வைத்து கண்காணித்து வந்தன.

ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரும் இத்தகைய பாதையை பின்பற்றி பெரு வாரியான மக்களை பரிசோதித்து நோய் உள்ளவர்களை தனிமைப் படுத்தியது. ஹாங்காங் அரசாங்கம் வெகு முன்பாகவே டிசம்பர் 31, 2019 இல் தனது மருத்துவ பாதுகாப்பு துறைக்கு எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து அத்துறை காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படும் மக்களைக் கண்டறிவதும் சீனாவிலிருந்து வந்த பயணிகளை பரிசோதிப்பதும் என பல வழிகளில் பாதுகாப்பை பலப்படுத்தியது.

மேலும் தென்கொரியா, ஹாங்காங் சிங்கப்பூர் ஆகிய இம்மூன்று நாடுகளிலும் தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் உணவகங்கள் அனைத்தும் திறந்தே இருந்தன. சிங்கப்பூரில் ஒரு படி மேலாக பள்ளிக்கூடங்கள் கூட மூடவில்லை. “தனது குழந்தைகள் பாதுகாப்பான இடங்களில் இருப்பதை அறிந்து இந்நோய்க்கு எதிராகப் போராடுகின்ற எங்களது போராளிகள் உறுதியாக இருப்பார்கள்” என சிங்கப்பூரின் கல்வி அமைச்சர் ஆங் ஏ குங் கூறுகிறார்.

இந்நோய்க்கு எதிரான போரில் கவனிக்கவேண்டிய ஆசிய கண்டத்தில் இன்னொரு முக்கியமான நாடு ஜப்பான். தென் கொரியாவை விட இரண்டு மடங்கு மக்கள் தொகையைக் கொண்ட நாடான ஜப்பான் சீனாவிடம் மிகுந்த நட்புறவை கொண்டது எனினும் தென் கொரியாவைவிட பல மடங்கு குறைவான எண்ணிக்கையிலேயே அந்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்து தனிமைப்படுத்தி நோயின் சமூக பரிமாற்ற நிலையை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியது

இந்நோய்க்கு எதிரான போரில் இந்திய நாட்டில் கேரள மாநிலம் தனித்து விளங்குகிறது. மாநிலத்தின் முதலமைச்சரான பினராய் விஜயன் பல நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் சிறைச்சாலைக்குள் கைதிகளை வைத்து முகக் கவசங்கள் தயாரிப்பதும், அந்நாட்டு சிறு குறு தொழிற்சாலைகளை வைத்து செய்திகளை தயாரிப்பதும், வயதானவர்களின் ஓய்வூதியத்தை முன்பே வழங்கியதும், மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததும், வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு உணவு அளிப்பதற்கு 20,000 கோடி நிதி ஒதுக்கியதும் எனப் பல்வேறு திட்டங்களை தீட்டி கேரள மாநிலம் இந்தியாவிற்கு முன்னோடியாக இருக்கிறது.

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு காரணம்  மருத்துவ பரிசோதனை மிகவும் குறைவாக செய்யப்பட்டிருப்பது முக்கிய காரணமாகும். கொரோனா வைரசை கண்டறியும் பரிசோதனை  செய்வதற்கு இந்தியாவில் கருவிகளோ  பரிசோதனை நிலையங்களோ  போதிய அளவு இல்லை. இந்தியாவின் 130 கோடி ஜனத்தொகைக்கு தினந்தோறும் சுமார் 2000 மக்கள் மட்டுமே பரிசோதனைக்கு உள்ளாகிறார்கள். ஆனால் வெறும் 56 லட்ச மக்களை கொண்ட மிகவும் சிறிய நாடாகிய சிங்கப்பூர் ,அதன் ஜனத்தொகைக்கு ஒரு நாளுக்கு 38,000 மக்களை  பரிசோதிக்கிறது. உண்மையான பாதிப்பினை கண்டறிய வேண்டுமானால் நாம் பரிசோதிப்பதை அதிகரிக்க வேண்டும், இல்லையெனில் இன்னும் உண்மையான  பாதிப்பின் வீச்சு தெரியாமல் இத்தாலி போன்று பெரும் ஆபத்தில் முடிந்துவிட வாய்ப்பிருக்கிறது.

இந்தியாவின் ஊரடங்கு உத்தரவு, நோயை கட்டுப்படுத்துவதற்கு உதவாது என்று இந்தியாவின் தலைசிறந்த தொற்றுநோய் வல்லுனரான ஜெயப்பிரகாஷ் முள்ளியில் கூறியுள்ளார். மேலும் இச்செயல் இந்தியாவின் பொருளாதாரத்திற்கும் உழைக்கும் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ஆன ரகுராம் ராஜன் கூறியுள்ளார். மே மாதத்திற்குள் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் மரணம் அடைவார்கள் என வல்லுநர்கள் கூறுகையில் ஜூலை மாதத்தில் நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் கூட இல்லாமல் போய்விடும் என அச்சப்படுகிறார்கள். இந்தியாவில் 1000 பேருக்கு சராசரி அளவாக 0.5 படுக்கைகளை இருக்கின்றன இது உலக சுகாதார துறை பரிந்துரைக்கும் குறைந்தபட்சத் தேவையான அளவைவிட குறைவானது.  தமிழ்நாட்டின் அளவு 1.07 ஆக இந்தியாவின் சராசரி அளவைவிட இரண்டு மடங்கு இருக்கும்பட்சத்தில் சில வடமாநிலங்களில் படுக்கையின் அளவு நாட்டின் சராசரி அளவைவிட மிக மிகக் குறைவாக இருக்கிறது, பிஹாரில் 0.11 ம் , உத்தரபிரதேசத்தில் 0.38 ம், குஜராத்தில் 0.33 ம் , ஜார்கண்டில் 0.33 ம், சட்டீஸ்கரில் 0.37 ம் , ஹரியானாவில் 0.44 ம் , மத்திய பிரதேசத்தில் 0.43 மாக இருக்கிறது. இந்நிலையில் இவ்வளவு குறைவான அளவில் படுக்கைகளை வைத்திருக்கும் இந்தியா இந்நாட்டுக்கு முன்பாகவே இந்நோயின் தாக்கத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள ஆரம்பித்த சிங்கப்பூர், தாய்வான், ஹாங்காங் , தென் கொரியா, ஜப்பான் மற்றும் கியூபா போன்ற நாடுகளின் திட்டங்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கேரள மாநிலத்தின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் பின்பற்றி இந்நிலையிலிருந்து வெகுவிரைவில் வெளிவர வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here