ஒரு பெருங்கடலின் மௌனத்துக்குள்
உயிர்த்திருக்கும் முத்தென காத்திருக்கும் மனம் வாய்த்திருக்கவில்லை எவருக்கும்
ஒருபொழுதும்
வசப்படாத வானத்தின் நிறங்களை யாரின் தூரிகை வரைந்தவை.
நீளும் திசையெங்கும் விரியும் பறவைகளின் இரைத்தேடல் போல வாழ்க்கை ஏன் அமையவில்லை மனிதனுக்கு.
நீரற்றப்பெருவெளியில் வேர்மண்பற்றி காற்றசைக்கும் கடுங்கோடை சிறுசெடிகளின் மழைக்கான நம்பிக்கைகளில் ஒருதுளியேனும் உண்டா நம்மிடம்.
இந்த வாழ்க்கையை
சக மனிதனின் குரலை பகிர்ந்துக்கொள்ளாமல் முழுமையாய் நேசிக்க முடியாது எதையும்.
மாறிப்புரளும் இரவுபகல்களுக்கிடையில் நசுங்கி பிழைப்பதல்ல வாழ்க்கை
அது தேடலில் தொடங்குகிறது.
புதைமணலில் வாழ்வை கிளறும் புழுக்களின்
உயிர்த்தலை போல.
-பாரதி கவிதாஞ்சன்