இந்திய தேசிய தேர்வு பணியாளர் முகமை- அஸ்வினி கலைச்செல்வன்.

தேசிய பணியாளர் தேர்வு முகமைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், தேசிய பணியாளர் தேர்வு முகமை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய பணியாளர் தேர்வு முகமை என்றால் என்ன?

மத்திய அரசின் பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்வதற்காக நாடு முழுவதும் ஒரே தகுதித் தேர்வு நடத்துவதற்காக தேசிய தேர்வு முகமை ஏற்படுத்தப்படுகிறது.
20 வகையான பொதுத்துறை நிறுவனங்களை இந்த தேசிய தேர்வு முகமையின் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.இதன் மூலம் இதுவரை 50 பணியாளர் தேர்வுக்கள் நடத்தப்பட்ட நிலையில் இனி அது ஒரே ஒரு தேர்வாக மாற உள்ளது. முதல்கட்டமாக ரயில்வே, வங்கி மற்றும் பணியாளர் தேர்வு ஆணையத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு இந்த தேர்வு முறை அமல்படுத்தப்படுகிறது.ஆண்டுக்கு இருமுறை தேசிய அளவிலான தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில் ஒருவர் பெறும் மதிப்பெண் 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தகுதித் தேர்வை எழுதலாம். இதில் அவர் பெறும் அதிகபட்ச மதிப்பெண்ணே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.மத்திய அரசின் குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ ஆகிய தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கும் இந்த தகுதித் தேர்வு மதிப்பெண் பொருந்தும். தேசிய தேர்வு முகமையை டெல்லியில் அமைக்க 1517 கோடியே 57 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.முதல்கட்டமாக 117 மாவட்டங்களில் மொத்தம் 1000 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.இதன்மூலம் தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் வெளிமாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய சிரமம் இருக்காது.

தேசிய பணியாளர் தேர்வு முகமை, அமைக்கும் முடிவு என்பது, சுதந்திர இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தீர்ப்பாகும். இதன் மூலம், வேலைக்கு ஆட்கள் எடுப்பது, வேலைவாய்ப்பு, பணி நியமனம் ஆகியன எளிதாகும். பொது தேர்வு அடிப்படையில் தயாராகும் தரவரிசை பட்டியல் மூன்றாண்டுகள் செல்லுபடியாகும். இதனை வைத்து, தங்களின் திறமை மற்றும் தகுதிக்கு ஏற்ப, பல்வேறு துறைகளில் வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வங்கிகள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு துறைகளில் பணியாளர்களை நியமிக்க தேசிய பணியாளர் தேர்வு முகமை (என்ஆர்ஏ) என்ற புதிய அமைப்பை அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

தற்போது வங்கிகள், ரயில்வே உட்பட மத்திய அரசின்பல்வேறு துறை பணிகளுக்கு அவற்றுக்கென உள்ள தேர்வு அமைப்புகள் தனித்தனியாக தேர்வுகளை நடத்தி வருகின்றன. வேலை தேடுபவர்களும் ஒவ்வொரு தேர்வுக்கும் தனித்தனியாக விண்ணப்பித்து வருகின்றனர். தேர்வுக் கட்டணத்தையும் தனித்தனியாக செலுத்துவதால், அவர்களுக்கு செலவு அதிகரிக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுகளை எழுத வேண்டி இருப்பதால், அவர்களுக்கு பயணச் செலவு ஏற்படுவதுடன், நேரமும் வீணாகிறது.

இதை கருத்தில்கொண்டு, பல்வேறு மத்திய அரசு பணிகளுக்கு பொதுவான ஒரே தகுதிதேர்வு மூலம் ஆள் எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, தேசிய பணியாளர் தேர்வு முகமையை (என்ஆர்ஏ) அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மத்திய அரசு துறைகள் தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளும்.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தேசிய பணியாளர் தேர்வு முகமையை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்துக்குப் பின்னர், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவு. வேலை தேடுபவர்கள் பொதுவான ஒரே தகுதித்தேர்வு எழுதினால் போதும். இதனால், எண்ணற்ற தேர்வுகளை எழுதுவதால் ஏற்படும் செலவையும், நேர விரயத்தையும் மிச்சப்படுத்தலாம்.

பல ஆண்டுகளாக இளைஞர்கள் மத்திய அரசுக்கு இந்த கோரிக்கையை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் என்ஆர்ஏ சார்பில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இதன்மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ளவர்களுக்கும் பெண்களுக்கும் அதிக பலன் கிடைக்கும். அவர்கள் எளிதில் தேர்வு மையங்களுக்கு செல்ல முடியும். மத்திய அரசின் 20 துறைகளுக்கு இதன்மூலம் ஆட்கள் தேர்வு செய்து நியமிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறும்போது, “ஆண்டுக்கு 2 முறை என்ஆர்ஏ சார்பில் தேர்வுகள் நடத்தப்படும். பட்டதாரிகள், இன்டர்மீடியட், 10-ம் வகுப்பு வரை படித்தவர்கள் என ஒவ்வொரு பிரிவினருக்கும் தேர்வுகள் நடத்தப்படும். தொடக்க காலத்தில் வங்கிகள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இந்தஎன்ஆர்ஏ மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

மத்திய அரசு பணிகளுக்காக ஆண்டுதோறும் 2.5 கோடிமுதல் 3 கோடி பேர் விண்ணப்பிக்கின்றனர். இவர்களுக்காக பொதுவான தகுதித் தேர்வு நடத்துவதன் மூலம் அவர்கள் ஒரேமுறை தேர்வு எழுதினாலே போதும் என்றநிலை ஏற்படும். என்ஆர்ஏ தேர்வில் வெற்றி பெற்றவர்களின் தகுதி, அடுத்த 3 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். இந்தி, ஆங்கிலம் மட்டுமல்லாமல் மேலும் 12 மொழிகளில் தேர்வுகள் நடத்தப்படும்.

அநேகமாக அடுத்த ஆண்டில் இந்த NRA செயல்படத் தொடங்கும். NRA வின் தலைமையகம் டெல்லியில் அமையும்.எதிர்காலத்தில் தனியார் துறைகளையும் இந்த என்ஆர்ஏ-வில் சேர்க்கமாநில அரசுகள் ஆலோசிக்கலாம்” என்றார்.

அச்சங்கள்:
இது இந்தியை திணிக்கும் ஒரு இலைமறை காயான சட்டமாகவும், மாநில பணியாளர் தேர்வாணையத்தின் சுதந்திர தன்மையை பறிக்கும் அப்பட்டமான திட்டமாகவும் உள்ளது.

பொதுவான தேர்வு முறைகளுக்கு ஏற்ப நாடு முழுவதும் நடைபெறும் ஒரே தேர்வு முறைகளும் பாடத்திட்டங்களும் ஒவ்வொரு மாநிலத்தின் வேறுபட்ட தன்மைகளுக்கு ஏற்புடையதல்ல.
மாநிலங்களுக்கு உள்ள உரிமைகளை பறிக்கும் போக்கின் தொடர்ச்சியாக பா.ஜ.க அரசு இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.