தேசியப் புலனாய்வு நிறுவனம்.(N.I.A)- அஸ்வினி கலைச்செல்வன்

சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967 அல்லது உபா சட்டம் (Unlawful Activities (Prevention) Act(UAPA), இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19-வது பிரிவு, பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், அமைப்பாகும் சுதந்திரம், ஒன்று கூடுதல் என்ற அடிப்படை உரிமைகளை இந்திய குடிமக்களுக்கு வழங்கியுள்ளது. இந்திய இறையாண்மையையும், ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில், அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய இந்த உரிமைகளை வரையறைக்குள் கொண்டு வர இந்திய அரசு முடிவெடுத்தது. இதன் அடிப்படையில், 1967-ஆம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச்சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

நவம்பர் 2008 -ம் ஆண்டில் நடைபெற்ற மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் பெரும் அதிர்வை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள போதுமான புலனாய்வு அமைப்பு இல்லாமல் போனது.அரசுக்கு போதிய சட்டங்களை இயற்ற ஒரு அமைப்பை உருவாக்க எண்ணியதை தொடர்ந்து, 2009-ம் ஆண்டு தீவிரவாத செயல்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க சிறப்பு அதிகாரம் கொண்ட தேசியப் புலனாய்வு முகமை (National Investigation Agency, NIA) சட்டத்தை நிறைவேற்றியது.இச்சட்டமானது நாடு முழுவதும் நடைபெறும் தீவிரவாத தொடர்புடைய குற்றங்களை மாநில அரசுகளின் அனுமதி இன்றியே கூட விசாரணைகள் மேற்கொள்ளும் அதிகாரத்தை இவ்வமைப்புக்கு அளித்தது. இதற்கு முதல் தலைமை இயக்குநராக ஆர்.வி. ராஜூ- வை நியமித்தது. அவரை அடுத்து எஸ்.சி.சின்ஹா தலைமை இயக்குநராகப் பணியாற்றி வந்தார். தற்போதைய தலைமை இயக்குநராகவுள்ள ஒய்.சி.மோடி 18.09.2017 முதல் பணியாற்றிவருகிறார்.

இச்சட்டம் கடந்த 10 ஆண்டுகளாக அமலில் இருக்கிறது. இச்சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட புலனாய்வு அமைப்பு பல வழக்குகளில்
புலனாய்வு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அவ்வழக்குகளும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. தற்போது அமலிலுள்ள இந்தச் சட்டத்தில் தேசியப் புலனாய்வு அமைப்பிற்குக் கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றியது. நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 278 உறுப்பினர்களும், மசோதாவுக்கு எதிராக 66 உறுப்பினர்களும் வாக்களித்தனர். பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு காரணமாக, என்.ஐ.ஏ.வுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையிலான சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வரக்கூடிய வழக்குகளில், முக்கியமாக நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமைக்குப் பிரச்சனை ஏற்படுத்துதல் தொடர்பான வழக்குகளில் மட்டுமே தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்க முடியும்.

இது வரையிலான சட்ட திருத்தங்கள்:

  1. The Unlawful Activities (Prevention) Amendment Act, 1969 (24 of 1969).
  2. The Criminal Law (Amendment) Act, 1972 (31 of 1972).
  3. The Delegated Legislation Provisions (Amendment) Act, 1986 (4 of 1986).
  4. The Unlawful Activities (Prevention) Amendment Act, 2004 (29 of 2004).
  5. The Unlawful Activities (Prevention) Amendment Act, 2008 (35 of 2008).

NIA வின் அதிகாரங்கள் :

  1. என்.ஐ.ஏ சட்டத்தின்படி ஒருவர் மீது சந்தேகம் இருந்தாலே, அவரைக் கைது செய்து விசாரணைக் கைதியாகச் சிறையில் அடைக்கலாம். மேலும், அந்த நபர் ஏன் கைதுசெய்யப்பட்டார், எதன் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டார் என்ற விவரங்களை FIR-ல் கூறவேண்டிய அவசியம் இல்லை.
  2. இச்சட்டத்தின் பிரிவுகள் இந்தியாவிற்கு வெளியிலிருந்து இந்தியாவின் நலனுக்கும் இந்தியர்களுக்கும் எதிராகக் குற்றச்செயலில் ஈடுபடும் எவருக்கும் பொருந்தும்.
  3. இச்சட்டத்தின்கீழ் இயங்கும் காவல் அலுவலர்களுக்கு, இந்தியாவிற்கு வெளியிலும் சென்று குற்றம்சம்பந்தமாக விசாரிக்கும் உரிமைகள், கடமைகள், பொறுப்புகள், சிறப்புரிமைகள் ஆகியவற்றைத் தருகிறது, இந்தச் சட்டத்திருத்தம்.

4.இச்சட்டத்தின்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குற்றமொன்றை வெளிநாட்டில் நிகழ்த்தினாலும், அதை இந்தியாவில் நடைபெற்ற குற்றமாகவே கருதி வழக்குப்பதிவு செய்யமுடியும்.

5.இக்குற்றங்களை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்படும்.

சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் :

முதலாவது அம்சத்தைப் பொறுத்தவரையில்,குற்றச்செயல்களில் ஈடுபடுபவரை எவ்வித முகாந்திரமுமின்றி கைது செய்யும் அதிகாரத்தை கொடுத்துள்ளதால்,குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி குற்றங்கள் குறையும் வாய்ப்பு உள்ளது.

இரண்டாம் அம்சத்தை பொறுத்தவரையில், உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை மட்டுமே கையாண்டு வந்த என்.ஐ.ஏ, தற்போது இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலமாக வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் பாதுகாப்புக்கும் பொறுப்பேற்கவுள்ளது. உதாரணமாக, வெளிநாடுவாழ் இந்தியர்களின் உயிருக்கோ, உடைமைக்கோ பாதிப்பு ஏற்பட்டால் நேரடியாக என்.ஐ.ஏ. அமைப்பால் களமிறங்க முடியும். இது, அந்தக் குறிப்பிட்ட நாட்டுடன் இந்தியாவிற்கு உள்ள ராஜாங்க ரீதியிலான ஒத்துழைப்பைப் பொறுத்தது என்று கூறப்படுகிறது.

மூன்றாவது அம்சத்தைப் பொறுத்தவரையில், குறிப்பான வழக்குகளில் பல்வேறு தரப்பில் அனுமதிபெற்றுச் சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்துவதற்கு, குறைந்தபட்சம் ஆறு முதல் 9 மாதங்கள்வரை ஆவதால், மத்திய அரசின் அனுமதியை மட்டும் பெற்றுக்கொண்டு விசாரணை நடக்கும் செஷன்ஸ் நீதிமன்றத்தையே சிறப்பு நீதிமன்றமாகச் செயல்படச் செய்யும் வகையில் இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்திருக்கிறது.

நான்காவதாக, என்.ஐ.ஏ-வால் விசாரிக்கத்தகுந்த குற்றங்களின் பட்டியலில் புதிதாகப் பல்வேறு பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆள்கடத்தல், கள்ள நோட்டு அச்சடித்தல், (இந்திய தண்டனைச் சட்டம் 370, 370A (1860)) ; தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் தயாரித்தல் அல்லது விற்பனை செய்தல் (ஆயுதச்சட்டம் (1959) பிரிவு 25 [1AA] ; இணையக் குற்றங்கள் (தகவல் தொழில்நுட்பச் சட்டம் (2000) பிரிவு 66F) ; வெடிபொருட்கள் தடுப்புச் சட்டம் (2000) ஆகிய பிரிவுகளை என்.ஐ.ஏ. விசாரிக்கும் குற்றப்பட்டியல்களில் சேர்த்துள்ளது.

இதுதொடர்பான குற்றங்களை விரைந்து விசாரிக்கும் வகையில் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும் இந்தச் சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது. 1908-ம் ஆண்டு வெடிபொருள்கள் தடைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றங்கள் ஆகியவை குறித்து விசாரணை நடத்தும் அதிகாரமும் என்.ஐ.ஏ அமைப்புக்கு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

சட்டத்திருத்த மசோதாவின் மூலம் இந்த அமைப்பு என்னவெல்லாம் செய்ய முடியும்?

புதிய குற்றப் பிரிவுகளைச் சேர்த்ததன் மூலமாகப் பல்வேறு வழக்குகளில் மாநில அரசின் அதிகாரத்தை, தேசியப் புலனாய்வு முகமையின் கையில் ஒப்படைத்திருக்கிறது மத்திய அரசு.

இந்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேசியப் புலனாய்வு முகமைக்கு சி.பி.ஐ-யைவிட அதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தின்படி, எந்த மாநிலத்திற்குள் நுழைவதற்கும், யார்மீதும் நடவடிக்கை எடுப்பதற்கும் தேசியப் புலனாய்வு முகமைக்கு முழு அதிகாரம் உண்டு. இதற்குக் குறிப்பான மாநில அரசிடமோ, நீதிமன்றத்திடமோ அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. இவர்களுக்குத் தேவையான போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டியது மாநில அரசின் கடமை என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

இணையக் குற்றப்பிரிவு (66F) என்.ஐ.ஏ.-வின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் இந்தப் பிரிவு பின்வருமாறுதான் ஆரம்பிக்கிறது. “ with intent to threaten the unity, integrity, security or sovereignty of India or to strike terror in the people or any section of the people by”. அதாவது, இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு அல்லது இறையாண்மையை அச்சுறுத்தும் நோக்கிலோ, மக்கள் அல்லது மக்களில் ஒருபிரிவினர் மீது பயங்கரவாதமான தாக்குதலை நிகழ்த்தும் நோக்கத்துடன் ஒருவர் செயல்படுவார் எனில், அவரை NIA கைது செய்து விசாரிக்கலாம். அரசுக்கு எதிராக யார் போராடினாலும், அரசை எதிர்த்து நின்றாலும் அவர்களை இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் கைதுசெய்து ஆண்டுக்கணக்கில் சிறையில் தள்ள வாய்ப்புள்ளது.

போராளிகள் மீதான அடக்குமுறைகளை தொடர்ந்து, அரங்கேறி வரும் நிலையில் இச்சட்டமானது போராளிகளே இல்லாத கைக்கட்டி வாய் மூடி கிடக்கும் அடிமை வாழ்க்கையை திணிக்கும் வகையில் அமைந்திருப்பது என்பதில் அச்சமேதும் இல்லை.

இந்தச் சட்டத்தின்படி ஒருவர் மீது சந்தேகம் இருந்தாலே, அவரைக் கைதுசெய்து விசாரணைக் கைதியாகச் சிறையில் அடைக்கலாம். மேலும் அந்த நபர் ஏன் கைதுசெய்யப்பட்டார், எதன் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டார் என்ற விவரங்களை FIR-ல் கூறவேண்டிய அவசியம் இல்லை. ஒருவர் இந்தியாவிற்கு எதிரான முழக்கம்கொண்ட ஒரு சிறிய காகிதத்தை வைத்திருந்தால்கூட அவரைக் கைதுசெய்ய இயலும்.

இவ்வதிகாரத்தின் மறைமுகப்போக்காக
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்திற்குள் தேசியக் கல்வி கொள்கையை எதிர்த்து முழக்கங்கள் கொண்ட துண்டு பிரசுரங்களை கொண்டு வந்ததாக பாபு மற்றும் பிரதாப் என்ற இரண்டு மாணவர்களை அக்கல்லூரி பேராசிரியர்களே மிரட்டவும் அடிக்கவும் காவல்துறையினரிடம் ஒப்புவிப்பதுமான நிகழ்வை கவனிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

NIA பட்டியலில் உள்ள குற்றத்தைச் செய்பவர், இந்தியாவிற்கு அப்பால் இருந்து குற்றத்தைச் செய்திருந்தாலும்,அந்தக் குற்றத்திற்காக இந்தியாவையோ அல்லது இந்தியர்களையோ பாதிக்கும்பட்சத்தில் இந்தச் சட்டம் பயன்படுத்தப்படும். குற்றவாளி இன்னொரு நாட்டிலிருந்தாலும் அதை விசாரிக்கும் சட்டம் நம்மிடம் இருந்தால் மட்டும் போதுமா?
அதற்கு அந்த நாடுகள் தகுந்த அனுமதியை அளிக்குமா? நம்முடன் நட்புறவில் இல்லாத நாடுகளில் இது எப்படிச் சாத்தியம்?
போன்ற அச்சங்களும் கேள்விகளும் எழுகின்றன. அதற்கு அரசு தரும் விளக்கம் அவ்வளவு நம்பிக்கை தருவதாகவும் இல்லை.

இந்நிலையில் என்.ஐ.ஏ. எவ்வகையிலும் தவறாகப் பயன்படுத்தப்படாது எனவும் ,என்.ஐ.ஏ. இதுவரை 272 வழக்குகளைக் கையில் எடுத்து,இவற்றில் 199 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.மேலும் 90 சதவிகித குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.ஆள் கடத்தல், கள்ள நோட்டு, ஆயுத தயாரிப்பு, விற்பனை, இணையவழி பயங்கரவாதம் ஆகிய குற்றங்களையும் என்.ஐ.ஏ. விசாரிக்கும். “இந்த மண்ணிலிருந்து பயங்கரவாதத்தை வேரோடு அகற்றுவோம். ‘பொடா’ சட்டம், பயனுடையது. ஆனால், வாக்கு வங்கி அரசியலுக்காக அதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ரத்து செய்துவிட்டது. ஆனால் நாங்கள் பயங்கரவாதச் செயல்களைச் செய்தவர்கள் யார், எந்த மதம், இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று பார்க்காமல் உறுதியான நடவடிக்கை எடுப்போம்” என்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

சட்டதிருத்தத்தின் பாதிப்புகள்:

ஒரு சாதாரண மனிதர் அரசாங்கத்தை எதிர்த்தால், அவரை இந்த சட்டத் திருத்தம் மூலம் தேசத் துரோகி, தீவிரவாதி’ என முத்திரை குத்தமுடியும். ஒவ்வொரு முறையும் இந்த அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும்போது நாம் ஏன் (எதிர்க்கட்சி) தேச விரோதி என்று அழைக்கப்படும் அபாயத்தில் இருக்கிறோம்? அரசாங்கத்துடன் உடன்படாத எதிர்க்கட்சிகளை, எதிர்க்கட்சியினரை, ஆளும் கட்சியின் ட்ரோல் (troll ) படையினர்தேச விரோதி’ என அழைக்கிறார்கள். அவர்கள் மத்தியில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் இன்னும் மோசமான பல விளைவுகளைச் சந்திக்க நேரிடும்”

இந்த UAPA சட்டம் இயற்றப்படும்போதே“சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு” எதிரான சட்டம் என்றே அறிவிக்கப்பட்டது. மிக முக்கியமாக “பிரிவினை” கோருவது அல்லது தேசத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்துவது (disaffection) பெற்றவை இதில் குற்றமாக்கப்பட்டன. பின் நாட்களில்“பயங்கரவாத நடவடிக்கைகளையும்(Terrorist activities) இதில் சேர்த்தது.அரசிற்கு எதிரான இயக்கங்களையும் “பயங்கரவாத இயக்கங்கள்” என அறிவித்துத் தடை செய்யும் அதிகாரத்தையும் இச்சட்டத்தில் சேர்த்தனர்.தற்போதைய திருத்தம் என்னவெனில் தனி நபர்களையும் இனி “பயங்கரவாதிகள்” என அறிவித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்பதே. lone wolf attack எனச் சொல்லப்படும் தனி நபர் பயங்கரவாதத் தாக்குதல்களென்கிற அடிப்படையில் இப்படித் தனிநபர்களைப் “பயங்கரவாதிகளாக” அறிவிக்கும் அதிகாரத்தை அரசு இச்சட்டத்தின் கீழ் பெறுகிறது. அது மட்டுமல்ல. இப்படி வரையறுக்கப்படும் தாக்குதல் இந்தியாவில்தான் நடக்கவேண்டும் என்பதல்ல. வெளிநாட்டில் நடக்கும் ஒன்றை வைத்தும் இக்குற்றச்சாட்டைச் சுமத்தி நடவடிக்கை எடுக்கலாம்.

எனவே ஆளும் அரசுக்கு எந்த ஒரு அமைப்பு அல்லது குழுவைப் பிடிக்கவில்லையோ அவர்கள் இதன் கீழ் பழிவாங்கப் படலாம். பசுவின் பெயரால் நடக்கும் கொலைகள், பழங்குடி அல்லது தலித்கள் மீதான தாக்குதல் என யார் அவற்றை எதிர்த்து நின்றாலும் அவர்களை அரசு இச்சட்டத்தின் மூலம் இவர் எந்நேரமும் தீவிரவாத இயக்கங்களின் கீழ் உள்ளவர்கள் அல்லது மக்களை அரசுக்கு எதிராக திசை திரும்பியவர்கள் எனச் சொல்லி ஆண்டுக் கணக்கில் ஒருவரை சிறையில் அடைக்கலாம்.இச்சட்டத்தின் மூலம் சுதந்திர இந்தியாவின் கருத்துரிமை எழுத்துரிமை பேச்சுரிமை எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படலாம்.

மக்களின் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் எந்தச் சட்டமும் நிலைத்ததாகச் சரித்திரம் இல்லை. தேசம் என்பது வெறும் கடலும் நிலமும் கொண்ட பரப்பளவு மட்டுமல்ல. அது அங்குள்ள மக்களின் ஆன்மாவையும் உணர்வுகளையும் உள்ளடக்கியது. மக்களுக்கு எதிராக அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கும் சட்டங்களை இயற்றுவதை பல்வேறு அமைப்புகளும் வன்மையாக கண்டித்து வருவதோடு இச்சட்டத்தை திரும்பி பெற வேண்டுமெனவும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. மக்களுக்கான மக்களாட்சியில் மனித உணர்வுகளுக்கு மதிப்பளிகாத எந்த சட்டமும் நிலைப்பெறாது. தேசப்பாதுகாப்பு என்ற போர்வையில் தேச மக்களின் கருத்துச் சுதந்திரத்தையும், அடிப்படையான போராட்ட உரிமைகளையும் பறிக்க நினைத்தால் தடா, பொடா போலவே இந்தச் சட்டமும் மக்களால் காணமல் போகும் என்பதே உண்மை.

“அநீதிகளுக்கெதிரான இந்தப் போர்
எங்களோடு தொடங்கவும் இல்லை,
எங்கள் வாழ்நாளோடு
முடியப்போவதுமில்லை” எனும் பகத்சிங்கின் வார்த்தைகளோடு எதிர்த்து நிற்போம்,அநீதிகள் அஞ்சி நடுங்கட்டும்.

அஸ்வினி கலைச்செல்வன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here