தெலுங்கானா என்கவுண்டர்-இதுதான் தீர்வா?- துளசியம்மாள்.


தெலுங்கானாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி எரித்துக் கொல்லப்பட்ட மருத்துவர் பிரியங்கா கொலையில் சம்பந்தப்படுத்தப்பட்ட குற்றவாளிகள் சம்பவம் நடந்த அதே இடத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட, தெலுங்கானா போலீசாரின் என்கவுண்டர் கொலை ‘பூக்கள் தூவி’ பரவலாக பாராட்டப் பெற்று வருகிறது.

“ஆறுவது சினம்” என்ற ஔவையாரின் ஆத்திச்சூடி அறிவுரைக் கேற்ப, நிதானமாக சிந்திக்க தயாராவதற்கு முன்பே, உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஆட்பட்ட நிலையில் “ரௌத்திரம் பழகு” என்ற பாரதியாரின் புதிய ஆத்திசூடிக்கு பொருத்தி, “போர்த்தொழில் பழகு” என்ற பாரதிதாசனின் ஆத்திச்சூடி அறிவுரைக்கு பழகி, ஒரு கொலைக்கு மாற்றாக இன்னொரு கொலையை ஆராதிக்க பெரும்பாலோர் தயாராகி விட்டனர்.

‘என் மகளின் ஆன்மா சாந்தியடையும்’ என்று மகளை பறிகொடுத்த தந்தை, பழி வாங்கிய உணர்வோடு, ஒரு விதமான ஆறுதலை பெற்றுள்ளது புரிந்து கொள்ள முடிகிறது. “பாலியல் குற்றத்துக்காக மற்றவர்களுக்கும் இதுபோல் கொல்லப்படுவார்களா.? என என்கவுண்டரில் கொல்லப்பட்ட சென்னகேசவுலுவின் கர்ப்பிணி மனைவி ரேணுகா கதறி அழுதபடி எழுப்பியுள்ள கேள்வியின் உண்மை சுடத்தான் செய்கிறது.

குற்றவாளிகளின் பின்னணியை பொறுத்தே என்கவுண்டர்கள் நடத்தப் படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

உத்தர பிரதேசத்தில், உனாவ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்டார். இன்னொரு பெண் வழக்கை நடத்துவதற்காக நீதிமன்றம் செல்லும் வழியில் வழிமறித்து எரிக்கப்பட்டுள்ளார். 90 சதவீத தீக்காயங்களோடு டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு என்ன ஆனது.?

மேற்கண்ட நிகழ்வுகளில் யாரும் என்கவுண்டரில் கொல்லப்படவில்லை என்பதை எப்படிப் புரிந்துகொள்வது.? பொள்ளாச்சியில் பல பெண்களை வன்புணர்வு செய்ததுடன், மறைமுகமாக பல பெண்களின் தற்கொலைக்கு காரணமானவனுக்கு ஒரு நீதி.!

ஆசிரமம் ஒன்றை நடத்தி பாலியல் அத்து மீறல்களை அரங்கேற்றியதுடன், குழந்தைகளைக் கூட விட்டு வைக்காது, வழக்கு என்றவுடன் வெளிநாடு தப்பியவனுக்கு ஒரு நீதி!!

நாட்டில் எப்போதுமே, பணம் படைத்தவர்களுக்கும், அரசியல் பலம் படைத்தவர்களுக்கும், விசாரணையும் நீதியும் ஒரு மாதிரியாகவும், ஏதுமில்லா சாமானியர்களுக்கு ஒரு மாதிரியாகவும் தான் அமைகிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு என்கவுண்டர்கள் தீர்வாக முடியாது. சட்டத்தை சரியாக, விரைவாக, சமமாக, முறையாக குறித்த கால வரையறைக்குள் முடித்திடும் வகையில் வகையில் விசாரணை செய்து நீதி வழங்கவேண்டும். அதிகபட்ச தண்டனையை அனைவருக்கும் ஒரே மாதிரியாக வழங்க வேண்டும்.

அதை விட முக்கியமானது, ‘அவன் ஆம்பளைங்க.. அவன் அப்படித்தான் இருப்பான்’ – என்கின்ற ஆணாதிக்க சிந்தனையால் துருப்பிடித்த மூளைகளுக்கு முதலில் வைத்தியம் பார்க்க வேண்டும். மாறாக மனக்கிளர்ச்சியால், ‘என்கவுண்டர் கொலை’ ஆதரிப்பது, போலீசாரையே நீதிபதி ஆக்குகின்ற பைத்தியக்காரத்தனமான செயலாகும்.

‘என்கவுண்டர் நடவடிக்கையை சட்டபூர்வமாக்க வேண்டும்.
போலீசாரின் துப்பாக்கி காட்சிப் பொருளல்ல.
என்கவுண்டர் மிகச் சரியான தீர்ப்பு’என அள்ளித் தெளிக்கப்படும் நெய், மக்களின் கோபாவேசத்தை தணிக்க உதவலாம். ஆனால், ‘காமுகர்களை கொல்ல போலீசுக்கு உரிமை வழங்கியதைப் போல, சீருடை காமுகர்களை கொல்ல யாருக்கு உரிமை வழங்குவது.? என்ற கேள்வி தொக்கி நிற்கத்தான் செய்யும்.

பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள அவர்களுக்கு துப்பாக்கிகள் வழங்குவதை பற்றி யோசிக்கலாம். அது நிச்சயம் பெண்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொடுக்கும். ஆனால் அதைச் செய்ய நிறைய தைரியம் வேண்டும் மற்றவர்களுக்கு.

-துளசியம்மாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here