தெருக்களில் புரட்சியை துவங்குவோம்- அபராஜிதன்

தமிழகம் முழுவதும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் தேர்தல் கால பிரச்சாரங்கள் நேற்றோடு முடிந்துவிட்டது.மக்களுக்கு பணம் வழங்கும் பிரச்சாரம் சத்தமில்லாமல் இன்று இரவு வரை நீடிக்கும்.

ஆளும்கட்சிக்கு எதிர்த்து வாக்களிப்பவர்கள்,கொள்கைகளுக்காக வாக்களிப்பவர்கள்,கட்சிக்காக வாக்களிப்பவர்கள்,சாதிக்காக வாக்களிப்பவர்கள்,பணத்துக்காக வாக்களிப்பவர்கள் என்று இந்த ஐந்து வகைப்பாடுகள்தான் மிகவும் முக்கியமானவைகள்.
இவர்களை நோக்கித்தான் பிரச்சாரங்கள் களை கட்டுகின்றன.இந்த பிரச்சாரங்களை நம்பியும் ,நம்பாமலும் வாக்களித்தவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வாய்மூடி,கைகட்டி தாம் தேர்ந்தெடுத்தவர்களின் அதிகாரத்திற்கு தம் எதிர்காலத்தையே பணயம் வைத்துவிட்டோம் என்பது புரியும்போதுதான் வேதனையும் துக்கமும் அடைகிறார்கள்.

ஒரு கட்சி அல்லது ஆட்சி மீது ஏற்படும் கோபம் , பணம் பெற்றுக்கொண்டு வாக்களிப்பது இவை இரண்டும் தேர்தல் முடிவுகளை சடுதியில் பாதித்துவிடுகிறது. ஆனால் வாக்களிக்குமுன் கடந்தகாலத்தை நிதானத்தோடு அணுகுவதும்,நிகழ்காலத்தை தெளிவாக அலசுவதும்,எதிர்காலத்தை தொலைநோக்கு பார்வையில் அணுகுவது என்ற முறைப்படி வாக்குகள் செலுத்த மக்கள் தலைப்படுவார்கள் என்றால் நிச்சயமாக நாட்டின் தலைவிதியை மாற்றி அமைக்கலாம்.

 

 

 

தேர்தல்கள் கடந்து செல்கின்றன, ஆனால் மக்கள் பிரச்சனைகள் அப்படியே உள்ளன. காரணம் மக்கள் பிரச்சனைகளுக்கான தீர்வு தேர்தலில் இல்லை.தேர்தல் ஆட்சி மாற்றத்தை மட்டுமே குறிக்கிறது.ஆனால் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்களிடம் ஓரே மாதிரிதான் நடத்துக்கொள்கிறது என்பதை காலப்போக்கில் புரிந்துக்கொள்கிறோம். அதற்காக எந்த எதிர்வினையும் புரியமுடியாதபடி அன்றாட பிரச்சனையில் உழலும்,சிக்கிக்கொண்டிருக்கும் சாமானிய மனிதனாகிய என்னால் என்ன செய்ய முடியும் என்ற அங்கலாய்ப்புகள்தான் எப்போதும் நாம் கேட்பது. இதை நன்றாக புரிந்து கொண்டிருப்பதில்தான் அரசியல் கட்சிகளின் ,அரசியல்வாதிகளின் வாழ்வும் வளமையும் பொதிந்து கிடைக்கிறது.

உடனே நாம் லட்சக்கணக்கில் திரண்டு போராட வேண்டும் என்பதில்லை.முதலில் நம் தெருவில் நடக்கும் பிரச்சனைகளுக்காக முகம் கொடுக்க வேண்டும். தெருவில் நடக்கும் அரசியல் சாதாரணமானதல்ல,அதுதான் அரசியல் உலகிற்கான அச்சாணி.நாம் எதிர்ப்பு தெரிவிக்க துவங்கிவிட்டோம் என்பதே அவர்களுக்கு அபாயசங்குதான்.இந்த அபாயசங்கு பல தெருக்களில் ஒலிக்க துவங்கினால் அரசியல்கட்சிகள் தங்களுக்கான ஆபத்தை கண்டுகொள்ளும் ,நாம் நமது நண்பர்களையும் கண்டுகொள்ளலாம்.

போராடி நம் உரிமைகளை பெறும்போதுதான் அதன் உண்மையான பலன்களை நாம் கண்டுகொள்ள முடியும் என்பதோடு அந்த பலன்களையும் பெற முடியும் .அந்த உரிமைகளையும் நம்மிடமிருந்து யாரும் பறித்து சென்றிடவும் முடியாதபடி பாதுகாக்கவும் இயலும்.

தேர்தலுக்கு பிறகுதான் நமக்கான உண்மையான பணி காத்திருக்கிறது என்ற தெளிவோடு வாக்களிக்க செல்லுங்கள்.தேர்தல் நாளை முடிவடைந்துவிடும்.நமது வாழ்க்கைக்கான போராட்டமோ நெடியது.

நாளை நமது தெருக்களில் ஒலிக்க விடப்படும் அபாயசங்குகள் மக்கள்விரோத ஆட்சிகளுக்கு முடிவு கட்டும் மக்கள் புரட்சியாக மாறட்டும்

அபராஜிதன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here