தீவிரவாதமும் அதை அழிக்க வேண்டிய அரசுகளும்…ஜெயசேகர்

தீவிரவாதத்தால் மரணித்த நம்முடைய ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம்.

அவர்களின் உயிருக்கு அரசு என்ன இழப்பீடு கொடுத்தாலும் அவர்களது குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு தான். அவர்கள் குடும்பங்களுக்கு நம்முடைய ஆழ்ந்த இரங்கலை மட்டுமே சொல்ல முடியும்.

இன்று மனித உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது பயங்கரவாதமும், மதவாதமும், இனவாதமும்தான். இதில் ஒரு நாட்டையோ அல்லது ஒரு சமூகத்தையோ குறை சொல்லுவது என்பது பிரயோஜனமில்லாதது. இன்று எவ்வளவோ தொழில்நுட்பம் இருந்தும் பாதுகாப்புக்கென்று எவ்வளவோ செய்தும் தீவிரவாதிகளை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என்றால் அந்த தொழில்நுட்பம் இருந்தும் என்ன பயன்?

தீவிரவாதிகளாக யாரும் பிறப்பதில்லை… உருவாக்கப்படுகிறார்கள். தீவிரவாதம் என்பது இன்று எல்லா இடங்களிலும் பரவிக்கிடக்கிறது. இதை அடையாளம் கண்டு வேரறுக்க வேண்டியது சட்டங்களின் மூலம் அரசுகள் செய்யவேண்டிய கடமை. ஆனால் இன்று இந்த அரசியல்வாதிகள் கேவலம் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி சீட்டிற்காக கொள்கைகளை புறம்தள்ளி விடுகிறார்கள். இவர்களின் கடந்தகால நடவடிக்கைகளையும் இப்போதய நடவடிக்கைகளையும் பார்த்தாலே போதும். இவர்களுடைய செயல்பாடுகள் என்ன மாதிரியானது என்று. தாங்கள் எந்த நோக்கத்திற்காக அல்லது கொள்கைகளுக்காக அரசியலில் குதித்தார்களோ?அதை மறந்தும் செயல்படுத்துவதில்லை. ஆனால் பணத்திற்காக மக்களுக்கு தீமை செய்யக்கூடிய திட்டங்களை ஓட்டு போட்ட மக்கள் வேண்டாம் என்று சொன்னாலும் அதையே நிறைவேற்றக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்றால் இவர்கள் யார்? அப்படி மக்களை அழிவின் பாதைக்கு கொண்டு செல்லும் இவர்களும் தீவிரவாதிகளே….

இன்னும் சொல்லப்போனால் தங்களின் வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்களை கலவரங்கள் வராதபடி காவல் காக்கக்கூடிய காவலர்களே, போராடும் மக்களை பொசுக்கென்று சுட்டுக்கொல்லுகிறார்கள் என்றால் இவர்களும் பயங்கரவாதிகளே…

மதத்தின் பெயரில் சக மனிதனையே கொலைசெய்யும் மனித மிருகங்கள் இருக்கும் வரை தீவிரவாதத்தை வேரறுப்பது கடினமான ஒன்றுதான். இன்னும் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கற்பழித்து கொடூரமான முறையில் கொலை செய்யும் மனித மிருகங்களும் பயங்கரவாதிகளே….

இன்று நேற்று அல்ல என்றுமே இந்தியாவில் சட்டம் என்பது பெரும்பாலும் ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாகவே இருந்துள்ளது. இப்படி இருக்கும் பட்சத்தில் நேர்மையாக இருக்கும் பலர் அதிகார வர்க்கத்தின் மூலம் பல கொடுமைகளுக்கு ஆளாகுகிறார்கள் மற்றும் மரணத்தைக் கூட தழுவி இருக்கிறார்கள். இப்படி இருக்கும் போது இவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் மனோநிலை எப்படி இருக்கும் என்பதை சொல்லவேண்டியது இல்லை.

தீவிரவாதத்தை மறைமுகமாக உருவாக்குவதும், பிறகு அழிப்பதும் அரசியல்வாதிகளேதான். என்று சரியான முறையில் சட்டத்தை செயல்படுத்தியும்,அரசும், அரசியல்வாதிகளும்,அரசு அதிகாரிகளும் சமூக அக்கறையோடு செயல்படுகிறார்களோ அன்றுதான் தீவிரவாதம் ஒழியும்…

ஜெயசேகர் கருங்கல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here