தீயவைகளை…பாராதே!..கேளாதே!..பேசாதே!- இரத்தின.சவரிராஜ்

தீயவைகளை…பாராதே!..கேளாதே!..பேசாதே!..இது காந்தியின் பார்வை.நாம் காந்தியின்  குரங்குகள் அல்ல!.ஆனால் நமது பார்வைதான் என்ன?
சமூக அவலங்கள், கொடுமைகள்,அநீதிகளை   கண்டு கண்ணிருந்தும் குருடர்களாய்,
காதிருந்தும் செவிடர்களாய், வாயிருந்தும் ஊமைகளாய் வெந்ததைத் தின்று விதி வந்தால் செத்துப்போகும் ஜந்துக்களாக வாழ்வது தான் வாழ்க்கையின் லட்சியமா.?

தெளிவான கருத்தாக,
‘ஒரு மனிதன் தனக்காகவே உழைத்து தன்னல வழியில் நடப்பானாயின் அவர் ஒருவேளை ஓங்குபுகழ் அறிஞராகலாம், மாபெரும் ஞானியாகலாம், உன்னத கவிஞராகலாம், ஆனால் அவரால் ஒரு நாளும் முழுநிறைவான மனிதனாக முடியாது.

     வாழ்க்கையில் நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பாதை மனித குலத்திற்காக மிக அதிகமாக உழைக்கும் வாய்ப்பைத் தருவதாய் இருக்குமானால், எவ்வளவு கொடிய இன்னல் வரினும்  நம்மை தலைவணங்க செய்துவிட முடியாது. ஏனென்றால் அவை அனைவரின் நன்மைக்காகவும் செய்யப்படும் தியாகங்கள் ஆகும்.

        அப்போது நாம் அடையும் மகிழ்ச்சி கோடிக்கணக்கானவர்களை சாரும். நமது செயல்கள் மௌனமாய் வாழ்ந்து கொண்டிருந்தாலும் நிரந்தரமாய் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது சாம்பலின் மீது உன்னதமானவர்களின் கண்ணீர் துளிகள் சூடாய் வந்துவிழும்.
– காரல் மார்க்ஸ்.

வாழ்க்கையை பற்றி…முழுநிறைவான வாழ்க்கை பற்றி…..லட்சிய வாழ்க்கை பற்றி…. இதைவிட எளிமையாக துல்லியமாக யாரும் சொல்லிவிட முடியாது.

‘எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு’,என்பதற்கேற்ப நம்மில் பலருக்கு எண்ணங்கள் இருக்கிறது,ஆனால் துணிவுதான் இல்லை. தேடல் இருக்கிறது ஆனால் லட்சியங்கள் இல்லை.
இலட்சியமில்லா வாழ்க்கை..
குறிக்கோள் இல்லாத செயல்கள்..
புயலுக்கு இரையான பாய்மரக்கப்பல் போல  அல்லவா விளங்கிவிடும். எனவேதான் நாம் ஒரு திசையை, ஒரு வழியை, ஒரு பயணத்தை தேடி தேடலில் ஐக்கியமாக முயல வேண்டும்.
‘தேடுங்கள் கிடைக்கும்’ என்பதன் பொருள் தேடினால் கிடைக்கும் என்பதே. ஆனால் நாம் நமக்காக ஒரு தளத்தை ,களத்தை தேர்வு செய்த பிறகும் கரைகளில் தேங்கிக் கிடப்பது ஏன்.?
கட்டுமரங்களாகட்டும், கப்பலாகட்டும் துறைமுகங்களில் உறங்கத்தான் முடியும். அலைகடலில்தான் பயணிக்க முடியும்.  நாம் இன்னும் கரையோரத்தில் கைகட்டி நின்று கொண்டு எத்தனை நாளுக்கு அலைகளை ரசித்துக்கொண்டிருக்க போகிறோம்.?

A rough sea makes a good sailors! கடலின் பேரலைகளை மீறி,  அதன் பெருவெளிக்குள் சீறிப்பாயும் கப்பலை செலுத்தும் மாலுமியை போல அதிர்வலைகளை உருவாக்காமல், துணிச்சலுடன் பயணிக்காமல் “நமது நேரிய பார்வைகளை” மண்ணில் நனவாக்குவது சாத்தியமே இல்லை!.
நமது தேடல்களை, பார்வைகளை அர்த்தமுள்ளதாக, சமூக பிடிப்புள்ளதாக, துணிவுமிக்க போராட்ட பார்வைக்கு துணிய வேண்டும்.அந்த துணிவு மிக்க பார்வை எனக்குள்ளும்! நமக்குள்ளும்!
நமக்கு வெளியேயும் ஆசான் மார்க்சின் பார்வை கொண்டு,அவரது தோள்களின் மீது ஏறி நின்று பார்க்க துணிவோம்.சரியான திசைவழி பயணிப்போம்!..

ரத்தின.சவரிராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here